அரசு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்து வதிலும், அரசு ஊழியர்களை முறைப்படி செயல்படத் தூண்டிய வகையிலும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சகாயம், மக்களிடையே பிரபலமானார். லஞ்சமும் ஊழலும் புரையோடிப் போய்விட்ட நம் சமூகத்தல் இப்படிப்பட்ட ஆட்சியர்கள் இருப்பது ஆட்சிக்கு அழகு என்று கருதப்பட்ட காலமெல்லாம் எப்பொழுதோ மறைந்துவிட்டது. மாறாக, இதுபோன்று மக்கள் அபிமானத்தைப் பெறும் ஆட்சியர்களை அரசியல் வாதிகள் எதிரிகளாகவே பாவிக்கிறார்கள்.

அதுவும் இந்தியாவிலேயே தனது சொத்தை தாமாகவே முன்வந்து வெளிப்படையாக அறிவித்த முதல் ஆட்சியரான சகாயம், மக்களுக்கு பணியாற்ற வாய்ப்புள்ள அனைத்து வகைகளிலும் செயல்பட ஆரம்பித்தார். இது அரசியல்வாதிகளுக்குப் பொறுக் குமா? இதோ, பயிற்சிக்காக முசௌரி செல்ல இருந்த நிலையில் பணி நிர்ணயிக்கப் படாத ஆட்சியராக அவர் மாறப்பட்டுவிட்டார். கிட்டத்தட்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியராக ஓராண்டுதான் அவர் பணி புரிந்துள்ளார்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முன்நின்றதுடன், கிராம மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு முன்னுரிமை கொடுத்து முன்னுதாரணமாய் திகழ்ந்த இவரைப் பற்றி கடந்த பூவுலகு இதழில் எழுதப் பட்டிருந்தது. அந்தக் கட்டுரை வெளியாகி ஒரு மாத இடைவெளிக்குள் இவர் மாற்றப் பட்டுள்ளார்.

இவர் மாற்றப்பட்டதற்கு லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகளும் ஊழல் அரசியல்வாதிகளும்தான் காரணம். சம்பந்தமில்லாமல் இவர் இப்படி திடீரென மாற்றப்பட்டுள்ளது லஞ்சம், ஊழலுக்கு அரசு துணை போவதையே காட்டுகிறது. இதை எதிர்த்து நாமக்கல் மாவட்ட மக்கள் பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகின்றனர். 14 பேர் தீக்குளிக்கும் போராட்டம், ஆட்சியர் மாற்றத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கம், தொலைநகல் அனுப்பும் போராட்டம், கடிதம் அனுப்பும் போராட்டம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களோடு தமிழகம் முழுக்க சமூக அக்கறை உள்ளவர்கள் இணைந்து மேற்கொண்ட உண்ணாநிலை போராட்டம் என எண்ணற்ற போராட்டங்கள் நாமக்கல் மாவட் டத்தில் நடந்து வருகின்றன.

ஆட்சியர் மக்களுக்காகச் செயல்படும் நிலையில், மக்கள் அவர்களுக்காக சாகக்கூடத் தயாராவார்கள் என்பதை இப்போராட்டங்கள் உணர்த்துகின்றன. மேலும் நேர்மையாகச் செயல்படுபவர்கள் மனதில் மிகப்பெரிய நம்பிக்கையையும் தைரியத்தையும் இப் போராட்டங்கள் ஏற்படுத்தியுள்ளன.

ஆட்சியர் மாற்றம் என்பது வழக்கமான ஒன்றே. ஆனால் சகாயம் இயல்பான முறையில் மாற்றப் படவில்லை. அரசு விதிப்படி கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களில் தங்கியே பணிபுரிய வேண்டும். மக்களை அலைக்கழிப்பதோ, லஞ்சம் வாங்குவதோ கூடாது. இந்த விதிமுறையை தீவிரமாக செயல்படுத்திய சகாயத்துக்கு எதிராக கிராம நிர்வாக அலுவலர்கள் திரண்டனர். அவரை மாற்றிய தீர வேண்டுமென்பதில் தீவிரம் காட்டி கடந்த 6 மாதங்களாகப் போராடி வந்தனர். இவர்களுக்குத் துணையாக ஊழல் அரசியல்வாதிகள் இருந்தனர். இந்த சூழ்நிலையில் ஆட்சியர் சகாயத்தை அரசு மாற்றியிருப்பது, அதுவும் உரிய பணி ஏதும் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது லஞ்சம் - ஊழலுக்கு அரசே துணைபோவது, அங்கீகரிப்பது போலிருக்கிறது.

எனவேதான் நாமக்கல் மாவட்ட மக்கள், சமூக அக்கறை கொண்ட அனைத்து அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆட்சியர் மாற்றத்துக்கு எதிராகப் போராடி வருகின்றனர். ஆட்சியர் மாற்றத் துக்குக் காரணமாக இருந்த அரசியல் வாதிகளுக்கு வரும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் சரியான படத்தைப் புகட்டுவார்கள் என்று நம்புகிறோம்.

(கட்டுரை ஆசிரியர் நாமக்கல் மாவட்ட அனைத்து விவசாயிகள், சமூக நல இயக்கங்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்)

Pin It