நானும் எனது நண்பரும் சென்னை திருவான்மியூரில் நடந்த ஹிந்து ஆன்மிக மற்றும் சமுக பணிகளின் கண்காட்சிக்கு (Hindu spiritual and service fair 2009) சென்றிருந்தோம்.
நுழைவுவாயிலில் வித்தியா மந்திர் பள்ளிக் குழந்தைகளின் அழகிய வரவேற்புடன் கண்காட்சி அரங்கிற்குள் நுழைந்தோம். தினமலர் தனது ஆன்மிக மலர் சிறப்பு இதழ் வெளியீடுகளை வருகையாளர்களுக்கு இலவசமாய் தந்துகொண்டிருந்தது. அருகே பிரிட்டானியா(Britannia) நிறுவனம் இலவசமாக குளிர் பானங்களும், பிஸ்கட்சும் கொடுத்துக் கொண்டிருந்தது. பரத நாட்டிய நெளிவுடன் கரம் கூப்பி வருகையாளர்களுக்கு சந்தனமும், குங்குமமும் கொடுத்துக் கொண்டிருந்தனர் இரண்டு இளைஞர்கள்.
முதல் காட்சியகதில் ஒன்று முதல் ஏழு வகுப்பு படிக்கும் சிறு குழந்தைகளுக்கான நன்னெறி புத்தகங்களும் மற்றும் ஆசிரியர் கையேடுகளும் ஆங்கிலத்திலும், தமிழிலும் பரப்பி வைக்கப்பட்டு, பாடத்திட்டங்கள் பற்றிய விளக்கங்களை வருகையாளர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தனர்.
ஹிந்து கடவுளர்கள் பற்றியும், ஹிந்து, பாரத கலாச்சாரப் பெருமை பற்றியும் குழந்தைகளுக்கான நன்னெறி பாடத்திட்டங்கள் எந்தெந்த பள்ளிகளில் நடைமுறையில் உள்ளன போன்ற விளக்கங்கள் தரப்பட்டிருந்தது. 20 நாட்களில் ஸமஸ்கிருதம் இலவசமாக கற்றுத் தருவதற்கான காட்சியகம் ஒன்று விறுவிறுப்பாக முன்பதிவு செய்து கொண்டிருந்தது.
குழந்தைகளுக்கான பாடத்திட்டங்கள் எனத் தொடங்கி பல்வேறு சேவை அமைப்புகளின் அரும் பணிகள், கல்விப் பணி, பெண்கள் அமைப்புகள், மதச்சடங்குகள், செத்துப் போனவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய காரியம் செய்யும் அமைப்புகள் என பல அமைப்புகள், மடங்கள், ஸமிதிகள், பத்திரிக்கைகள், திருக்கோயில்கள், பல்வேறு ஆன்மிக குருக்களின் ஆன்மீக சொற்பொழிவுகள், போதனைகள் என இந்து அமைப்புகளின் பொதுவான எல்லா முரண்களையும் கடந்து நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் காட்சியகம் வைத்திருந்தனர்.
பல 'ஆனந்தா' சாமிகளின் தொடற்சொற்பொழிவுகளுடன், உலகலாவிய ஆசிரமங்களின் சேவைகளும் காட்சிகளாக வைக்கப்பட்டிருந்தது. இந்து முண்ணனி, பஜ்ரங்தள், சிவசேனா, ராம் சேனா, ஆர்.எஸ்.எஸ் போன்ற தீவிரவாத நம்பிக்கை அமைப்பினர்களின் காட்சியகம் எதுவும் இல்லை.
ஆர்.எஸ்.எஸ்- ன் பெண்கள் பிரிவின் காட்சியகத்தில் வரலாற்றுச் சுவடுகளின் இந்து பதிப்புகள் ஹிந்து ராஜ்ஜியத்தின் ஆதாரங்களாக எடுத்து வைக்கப்பட்டிருந்தன.
பர்மா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை என எல்லைக் கோடுகள் நீண்ட அகண்ட பாரத்தின் வரைபடங்கள், அந்த நாடுகளின் பழங்காலப் பெயர்கள், முகலாயர்களினால் எத்தனை கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளது என்ற ஒரு நீண்ட பட்டியல், அதை மீட்டெடுப்பதற்கான ஆயத்தங்கள், திட்ட வரைவுகளின் விபரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. சென்னையில் இன்னும் எத்தனை கோயில்கள் மீட்டெடுக்க வேண்டும் என்ற பட்டியலில் சாந்தோம் சர்ச் இருந்தது கண்டு கொஞ்சம் கலக்கம் வந்தது. அது ஒரு காலத்தில் மாரியம்மன் கோயிலாக இருந்தது என்ற இந்து நம்பிக்கை ஆதாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தது.
ஆர்.எஸ்.எஸ்-ன் பெண்கள் சமிதியின் ஸாகா போர்ப் பயிற்சியின் விளக்கத்தில் என்ன என்ன தற்காப்பு கலைகள் கற்றுத் தரப்படுகிறது, தமிழ்நாட்டில் நடந்த வால், சிலம்பம் ஸாகா பயிற்சிகள் பற்றியும் அதில் கலந்து கொள்ளும் ஆர்வமிக்க பெண்கள், மாணவிகள் பற்றியும் வருகை புரிவோரின் இந்து உணர்வுகளைத் தூண்டும் விதமாக இளம் பெண்கள் மூலமாக விளக்கம் தரப்பட்டது. மத மாற்றத்தின் கொடுரத்தைப் பற்றியும் அதனை முறியடிக்க வேண்டிய முன் திட்டங்கள் பற்றியும் விளக்கப்பட்டது.
இஸ்லாமிய, கிருஸ்துவ, நாத்திக எதிப்பும், காழ்ப்புணர்ச்சியும் ஒவ்வொரு காட்சியகத்திலும் காண முடிந்தது. இந்த மாநாட்டிற்கு பொதுமக்களிடம் ஆர்வம் இல்லாவிட்டலும் புகழ் பெற்ற முண்ணனி திரைப்பட நட்சத்திரங்களின் கூட்டங்களைப் பார்க்க முடிந்தது. இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பர்மா, நேபாளம் ஆகிய நிலப்பரப்புகளை உள்ளடக்கிய அகண்ட பாரத இந்து ராஜ்ஜியம் காணப்படுமாம் அதற்காக இங்கு உள்ள எல்லா மக்களும் மதங்களைக் கடந்து இந்துக்களாக வாழ வேண்டும், இராமனை வணங்கி ஒவ்வொருவரும் இராமனாகவே வாழ வேண்டும் என்று உணர்வுடன் இந்த மாநாட்டு அரங்கினை விட்டு வெளியில் வரும்படியாக அமைக்கப்பட்டிருந்தது.
இந்த மாநாட்டினை நடத்தியவர்கள் GFCH (Global foundation for civilization ) என்ற அமைப்பினர். இதன் தொடக்க விழா கடந்த 2008 ஆம் ஆண்டு, ஜனவரி 22 ல் நடத்தப்பட்டது. இது புத்த மதம், இஸ்லாமிய மதத்தலைவர்கள், கிருஸ்துவ தலைவர்கள், இந்து தலைவர்கள் என எல்லா மதத்தின் ஆன்மிகத் தலைவர்களின் சமய நட்புறவு சங்கமமாக தொடங்கப் பெற்றது. முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் கூட கலந்து கொண்டிருந்தார். ஆனால் அதன் அப்பட்டமான உள் நோக்கம் தெளிவான தேசிய நீரோட்டத்தில் இந்துத்துவா எனும் நச்சினை கலக்கும் முயற்சியேயன்றி வேறொன்றும் இல்லை.
கடந்து வந்த ஒரு காட்சியகத்தில் கூட விஞ்ஞானத்துடன், சம காலத்துடன் ஒத்துப் போகின்ற விசயங்கள் ஒன்று கூட இல்லை. ஒரு காட்சியகத்திலும் சமய நல்லுறவு சொல்லப்படுவது மாதிரி எந்த விசயமும் இல்லை.
சமுக,பொருளாதார தத்துவரீதியான விசயங்கள் ஒன்றுகூட இல்லை. எங்கு திரும்பினாலும் பார்ப்பன வாடை, கற்காலத்திற்கும் முற்காலத்திற்கும் கூட்டிச் சென்றிருந்தது. வரலாற்றுச் சான்றுகள், விஞ்ஞானச் சான்றுகளுக்குப் பதில், பெரும்பாண்மையோரின் நம்பிக்கை என்று நம்பிக்கைவாதங்களை மட்டுமே மேற்கோள் காட்டியது. இந்த நம்பிகைகள் எல்லாம் பார்ப்பனர்களின் உற்பத்தியே. அதைத் தான் பெரும்பான்மையினரின் நம்பிக்கை என்ற உறையிட்டு பரப்பி வருகின்றனர்.
இந்த நம்பிக்கைவாதங்கள் எல்லாத்தரப்பு மக்களிடமும் நேரடியான, மறைமுக பாதிப்புகளை உண்டு பண்ணுவது இந்திய துணைக்கண்டத்தில் பார்ப்பன ஆரிய ராஜ்ஜியம் காண்பதற்கான ஒரு வேலைத்திட்டமே.
வருணாசிரம கட்டமைப்புகள், சாதிய பேதங்கள், குலம் கோத்திர வர்க்கப் பிரிவுகள், தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என சாதியத்தின் பெயரால் மக்களைப் பிரித்து ஒதுக்கிய இதே பார்ப்பணர்கள் 'இந்து' எனும் மாய நூல் கொண்டு தேவைக்கேற்ப எல்லா இந்துக்களையும் இணைப்பது என்பது ராஜதந்திரமே. போதைக்கு அடிமையானவன் கூட போதை தெளிந்தவுடன், சுயநினைவு கொண்டு எதிரியின் பிடியிலிருந்து தப்பிக்க நினைப்பான். ஆனால் எந்த ஆரிய பார்ப்பான் தன் சமுக மனிதர்கள் மீது சாதிய அவமான அடையாளம் இட்டு தன் நிழல் கூட தனக்குப் பகையென சுயமரியாதையை இழக்க வைத்தானோ அவன் காலடியில் மிதிபடுவது பெரும் புண்ணியமாகக் கருதும் அவலம்.
தன் தேவைக்கேற்ப இணைப்பதும், அறுத்து ஒதுக்குவதும் தான் உண்மையில் “ஆரிய வித்தை”.
மானத்துடனும், வீரத்துடனும் வாழ்ந்து வந்த நம் மண்ணின் சொந்தங்களை மதத்தின் மயக்கம் கொடுத்து, சாதிய வண்ணம் பூசி சூழ்ச்சி செய்து நம் சகோதரர்களுக்கிடையே பகை வளர்த்து கடைசியாய் ஆரியனின் காலிலே விழவைத்து விட்டான்.
இந்து மாநாட்டில் நாடார் சமுக அமைப்பும் தன் பங்கிற்கு ஒரு காட்சியகம் வைத்து பார்ப்பனர்களின் நம்பிக்கைவாதத்திற்கு தனது பங்கினை செய்தது. ஒரு சமுகத்தினை தொட்டால் தீட்டு என்று சொன்ன பார்ப்பனன், இதே நாடர் சமுக மக்களை பார்த்தாலே தீட்டு என ஒதுக்கி வைத்ததை ஆரிய போதை மறக்கச் செய்துவிட்டது.
கல்விக் கண் திறந்த கர்ம வீரரை உயிருடன் கொளுத்த சதி செய்த இந்த பார்ப்பன உயர் காவிகளிடம் எப்படி இவர்கள் உறவு கொள்ளமுடிகிறது? ஆரிய தந்திரம் அதன் வேலையை திட்டமிட்டபடி செய்கிறது.
கொஞ்சம் வசதி உள்ள குப்பனும், சுப்பனும் கருப்பனும் தான் யார் என்பதை மறந்து ஒரு விசுவாசமுள்ள அடிமையாய் ஆரிய பார்ப்பனுக்கு சேவை செய்வதில் பெருமை கொள்கிறான். மொத்ததில் அவன் ஒரு பூணூல் போடாத பார்ப்பானாய் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறான்.
ஆரிய மூடப்பழக்கங்களையும், பார்ப்பனிய சாதிகட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளையும் மறுத்த வரலாற்று நாயகர்களை எல்லாம் தேசியவாதம் என்ற பெயரால் இந்துத்துவாவின் நாயகர்களாக்கும் முயற்சியை இந்துத்துவா அமைப்பினர் காலம் காலமாக செய்து வருகின்றனர்.
வாழ்நாள் முழுவதும் தீவிர மத எதிர்ப்பாளராக இருந்து தனது மரண காரியங்களில் கூட மதச் சடங்குகள் இருப்பதை விரும்பாத மாவீரன் பகத்சிங், சுதந்திரத்திற்கான முன்னோடி நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், ஏறத்தாழ எல்லா தேசியத் தலைவர்களையும் ஹிந்துத்துவத்தின் காவி இளைஞர்களுக்கான அடையாளமாக்கிவிட்டனர். ஆர்.எஸ்.எஸ்ன் உறுப்பினர் அடையாள அட்டை மட்டும் தான் இல்லை, ஆனால் அவர்களின் புகைப்படங்களை எல்லாம் மிகவும் தாராளமாக அகண்ட பாரத கனவுக்குப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.
தேசப் பக்தியாளர்களை மதப் பற்றாளர்களாகவும், சுயராஜ்யத்திற்காகப் போராடியவர்களை எல்லாம் ராம ராஜ்ஜியத்தின் நாயகர்களாகவும் காண்பிப்பது எத்தனை அராஜகம். தன் வாழ்நாள் முழுவதும் சாதி எதிர்ப்புக்காகவும் தலித் மக்களின் விடுதலைக்காவும் பார்ப்பனிய இந்துத்துவத்தை எதிர்த்துப் போராடிய, சாதியக் கொடுமை தாங்காமல் தன்னுடன் சேர்த்து பல இலட்சம் தலித்களை இந்து மதத்தை விட்டு வெளியேறச் சொன்ன அண்ணல் அம்பேத்கர் அவர்களின் படங்களையும் இந்து ஆன்மிக மாநாட்டு காட்சியகத்தில் வைத்திருந்தது தான் மிகவும் கொடுமை.
பொதுக் குளங்களில் நாய், ஆடு மாடுகள் கூட தாகத்திற்காக தண்ணீர் குடிக்கலாம், ஆனால் ஒரு தலித் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று சொல்லும் இந்தப் பார்ப்பனர்கள் வாழும் நாட்டில் நான் ஒரு மிருகமாக பிறந்திருக்கக் கூடாதா என புலம்பிய அண்ணல் அம்பேத்கரின் படங்கள் இந்துத்துவதின் அடையாளமாக்கப்படுகிறது.
ஒரு தலித் பஞ்சாயத்து தலைவி சுதங்திர தினத்தில் தேசிய கொடியேற்றினாள் என்ற ஒரே காரணத்துக்காக அந்த ஊரின் பல உயர் ஜாதி இந்துக்களால் கொடூரமாக பாலியன் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறாள்.
தேசப் பற்று என்பது உயர் ஜாதியினருக்கு மட்டும் இருக்க வேண்டியதாம். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு உயர் சாதிக்காரன் எவனும் அப்படி செய்திருக்க வாய்ப்பு இல்லை எனத் தீர்ப்பளித்த சாதியப் பார்ப்பனர்கள் வாழும் நாட்டில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தலித் ஒருவனின் காலடி பட்டால் அந்த இடமே அசுத்தமாகிவிட்டது என ஹோமம் செய்யும் பார்ப்பனர்களும் இந்த நூற்றாண்டிலும் தலித்தாக பிறந்த காரணத்திற்காகவே, திண்ணியத்தில் மலம் திண்ண வைத்த கொடூர சாதிய வர்க்கவேறுபாடுகளும் நிறைந்த ஒரு நாட்டில் தலித் மக்களையும் தங்களின் ராம ராஜ்ய கனவுக்காக இணைக்கிறார்கள்.
‘இந்த உலகை ஆளப்பிறந்தவன் ஆரியன்' என்ற உலகப் பேரழிவாளன் ஹிட்லரின் இரத்த வாரிசுகள் தான் இன்று நம் நாட்டிலும் அகண்ட பாரத, இராம இராஜ்ஜிய வேலைத் திட்டங்களுடன் சதி செய்து வருகின்றனர். நாமும் நேரடியாகவும், மறைமுகமாகவும் சதிகளுக்கு ஆளாகிவருகின்றோம்.
அதைத்தான் இன்று L.K அத்வானி(L.K Advaநி) "அடுத்த தேர்தலின்போது கட்சியின் நிலை என்னவாகுமோ என்பது போன்ற குறுகிய எண்ணங்கள் எங்களது திடமான கண்ணோட்டத்தை குலைக்காது. மாறாக நூறு வறுடங்களுக்குப் பிறகும், ஆயிரம் வருடங்களுக்குப் பிறகும் ஒன்றுபட்ட அகண்ட பாரதமாக காணப்பட வேண்டும் என்ற கண்ணோட்டம் எங்களுடையது” என்று கூறுகின்றார்.
செயல் திட்டங்கள் என்றோ தீட்டப்பட்டுவிட்டது. அதை அடைய சதி வேலைகள் மட்டும் நடந்த வண்ணம் உள்ளது. இன்னும் சம நிலை அடையாத தலித், இசுலாமிய மக்களை முழுமையாக அழித்துவிட துடிக்கின்றன இந்த சங்க பரிவார அமைப்புகள்.
ஆரிய பார்ப்பன பண்டாரங்களின் சதிகள் எல்லைக்கோடுகளை தாண்டி இன்று பகுத்தறிவாளன் பெரியாரின் தேசத்தையையும் விட்டு வைக்கவில்லை. ஒரு காலத்தில் விந்தியமலையைத் தாண்டாத ஆரியம்தான் இன்று பெரியாரின் அரசியல், சமுதாய வாரிசுகளையும் விட்டு வைக்கவில்லை. எல்லாம் ஆரியமாகி விட்டது.
இன்று நேரடியாக ஆரியம் என்ற அலை தலைகாட்டாவிட்டாலும் அது அரசியல், கல்வி, பொருளாதார, மதச் சடங்குகள் என மக்களிடம் ஆழமாகப் பதிந்து விட்டது. நம்மையும் அறியாமல் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இன உணர்வினை மறந்து, ஆரியத்தின் சூழ்ச்சிகளுக்கு இரையாகின்றோம். இதில் நேரடியாக பாதிக்கபடுவது தலித்துகளும், இசுலாமியர்கள் மட்டுமே. எல்லா அரசியல் கட்சிகளாலும் நேரடியாகவே கூறுபோடப்படுவது இந்த இனங்கள் மட்டும் தான்.
தேர்தல் நேரங்களில் இதை நாம் நேரடியாகவே காணலாம். ஒன்றாய்ச் சேர்ந்தால் பெருங்கடலாகி இருக்கும். ஆனால் சிறுசிறு கால்வாய்கள் மூலமாய் எதிர் எதிராய் பிரிக்கப்பட்டு ஒன்றுக்கும் உதவாமல் வறண்டு போய் கிடக்கிறது. பல நூறு ரப்பர் ஸ்டாம்ப் கட்சிகளாய் தேசிய, மாநிலக் கட்சிகளின் காலடியில் பணப்பெட்டி வாங்க நாய்போல கிடக்கிறார்கள் இந்த இரு இனங்களின் போலித் தலைவர்கள்.
தலித் அமைப்புகளுக்கும், இசுலாமியர்களுக்கும் பொதுவான எதிரிகள் இருந்தபோதும், அவைகள் அடித்துக் கொண்டு அழிந்துபோவது தன் சொந்த இன மக்களுடனே என்பது தான் மிகவும் வேதனையான விசயம். இந்த லட்சணத்தில் எப்படி சமுக விடுதலை வாங்க முடியும்?
சமுகத்தில் புறக்கணிக்கப்பட்டு, இன்றும் இரண்டாம் தர மக்களாய் வாழும் இந்த இரு இனங்களும் குழு அரசியல் புரிவதில் இருந்து விலகி ஒன்றாக இணையவிடாமல் தடுப்பது எது? அது நம் அறிவுக்கு புலப்படாத ஆரிய சூழ்ச்சிதான்.
அரசியல் வல்லுனர்களின் கணிப்பு, தேர்தலின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்கள் தலித்துகளும், இசுலாமியர்களும் தான் என்கிறது. இந்த சூத்திரஙகள் தெரிந்து கொண்டு காங்கிரசும், கம்யூணிஸ்டுகளும், இன்னும் மாநிலக் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு இந்த இரு இனங்களையும் கூறு போட்டுக் கொண்டு கட்டி அணைக்கின்றன.
போதாக் குறைக்கு தேர்தலில் மரணத் தோல்வி அடைந்த பி.ஜே.பியும் கூட இராகுல் காந்தி ஸ்டைலில் தலித் வீடுகளுக்கு விசிட் அடிப்பது, சாப்பிடுவது போன்ற புது யோசனைகளை தனது மனுதர்ம கொள்கைகளுக்கு மாறாக, தயங்கியபடி ஓட்டுப் பிச்சைக்காக செய்ய வேண்டியுள்ளது. இன்னும் ஒரு படி மேலே போய் வாழ்நாள் எதிரியான இசுலாமியர்களை பி.ஜே.பி எதிரியாகப் பார்க்கவில்லை என்றும் அறிக்கை விடும் நிலை உள்ளது.
ஆனாலும் வாங்கிய ஓட்டுகளுக்காவது இந்த இரு சமுக மக்களுக்கு ஏதாவது செய்தார்களா என்றால் எதுவும் இல்லை. மணி மண்டபம் கட்டுகிறேன், சிலைகள் வைத்து கவுரவிக்கிறோம், சாலைகளுக்குப் பெயர் வைக்கிறோம். அவ்வளவுதான். நாமும் திருப்தி கொள்கிறோம்.
ஈரோட்டுப் பள்ளியில் பகுத்தறிவு கற்றவர்களின் வீடுகளில் இன்று பார்ப்பன உறவுகள். திராவிடம் பேசி ஏமாற்றியது நின்று போய், அரசியல் சதுரங்கத்தில் குடும்பக் காய் நகர்துவதில் முழு நேரம் செலவிடபடுகிறது.
தன் மரணம் வரைக்கும் தொடர்ந்து சாதிய, ஆரிய எதிர்ப்பு செய்தது மட்டுமல்லாமல் மரணத்திற்குப் பிறகும் திராவிடப் பிரச்சாரங்கள் தொடர உருவாக்கப்பட்ட தந்தை பெரியாரின் சொத்துகள் இன்று வாரிசுடமையாக்கும் முயற்சியில் இருப்பதால், யாருக்கும் பெரியாரின் கொள்கைளைப் பிரச்சாரம் செய்ய விருப்பம் இல்லை. அப்படி பெரியாரின் கொள்கைகள் பரவலாக்கினால் நாடு முழுவதும் தீவிர இளைஞர்கள் திராவிட கலகங்களுக்குள் வருவர், அப்படி வந்தால் கொஞ்ச நாளில் கேள்விகள் கேட்பார்கள், இத்தனை கோடி சொத்துகளை நாம் ஆளவே முடியாது என்பதால் பெரியாரின் கொள்கை பிரச்சாரங்களே வேண்டாம் என விட்டுவிட்டார்களோ என நினைக்கத் தோன்றுகிறது. சொத்துகளை காக்கும் பெரியார் இயக்கம் இனி சமுக உரிமைக்காக போராடவா போகிறது?.
கொஞ்சமாவது சமுக அக்கறை கொண்ட முற்போக்காளர்களுக்குள்ளே இப்பொழுது பெரும் பிளவுகள். புலி ஆதரவு, ஈழ எதிர்ப்பு, நக்சல் ஆதரவு ,எதிர்ப்பு, திராவிட ஆதரவு, எதிர்ப்பு, தமிழ்த் தேசிய ஆதரவு, எதிர்ப்பு என்ற கடுமையான வாதங்களுக்குள் சிக்கி.. மாறி, மாறி காரித் துப்பிக் கொள்வதிலேயே தங்களின் எழுத்துக்களையும், சிந்தனைகளையும் வீணடிக்கும் அவலம் இருக்கின்றது.
இவர்கள் மட்டும் தான் அக்கறை கொண்ட விசயஙகளில் பிரச்சனைகளின் அடிப்படையில், முரண்களை மறந்து ஒன்றிணைந்தால் எத்தனை மாற்றங்கள் காணலாம். ஆனால் சும்மா விடுமா ஆரிய விசம்? இணைய தளங்களிலும், ஊடகங்களிலும் முற்போக்காளர்கள் மத்தியில் நடக்கும் ஒவ்வொரு கருத்துப் பரிமாற்றங்களும், விவாதங்களும் கடைசியில் கடும் சண்டையிலும், தனி நபர் தாக்குதல்களிலும் மிகவும் தரம் கெட்டு ஒருவரையொருவர் தூற்றிக் கொள்வதிலும் தான் முடிகிறது. அங்கும் முகம் தெரியாத ஆரிய நாகம் ஒழிந்து இருக்கும்.
இப்படியே இன்னும் 100 ஆண்டுகள் கழிந்தாலும் தலித்துகளும், இசுலாமியர்களும் சமுக, பொருளாதார வாழ்வியலில் எந்த முன்னேற்றமும் காண முடியாமல் பின்தங்கியே இருக்கக் கூடிய அச்ச நிலை உள்ளது. உண்மையில் இந்த இரண்டு சமுகங்களும் இணைந்தால் ஆட்சி அதிகாரங்கள் மாறிவிடும், தலித் இசுலாமிய அரசியல் நாடாளும். ஆனால் ஆரியத்தின் கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் இது நடைபெறாமல் பார்த்துக் கொள்வார்கள்.
கல்வியும், பொருளாதாரமும் சமுக உரிமையும் இந்த இரு இனங்களுக்கும் தூரத்து கனவாக்கி வைப்பதின் மூலம் என்றுமே அடிமையினமாகவே வைத்திருக்க முடியும் என்ற ஆரிய மனுக் கொள்கை வீரியமுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இனிமேலும் குழு அரசியலினை நம்பி வீண் போவதை விட்டு, ஒவ்வொரு தலித், இசுலாமியர்களும் தங்களின் குழந்தைகளுக்கு தனது உயிரை கொடுத்தாவது மேலான கல்வியையும், சமுகக் கலாச்சாரத்தையும் அவர்களுக்கு கிடைக்கச் செய்வதால் மட்டுமே உண்மையான சமுக, பொருளாதார மாற்றங்களைக் காண முடியும்.
சாதிய, மதக் குழு அரசியலை தூரமாய்த் தள்ளி விட்டு, உண்மையில் பின் தங்கிய சமுக மக்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சியில் அர்ப்பணித்துப் போராடும் அமைப்புகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டும். முற்போக்காளர்களும் பிரச்சனைகளின் அடிப்படையிலாவது இணைந்து இடைவெளியில்லா தொடர் கொள்கைப் போராட்டம் காணவேண்டும்.
பொதுவான எதிரியை அடையாளம் கண்டு தலித் இசுலாமியர்கள் இணைந்து நின்று போரடுவது காலத்தின் கட்டாயமாகும்.
- மால்கம் X இராசகம்பீரத்தான் (