'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டின் கருத்து கணிப்பு

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் பெரும் பான்மையான மக்கள் தீவிரமாக ஆதரிக்கிறார்கள் என்ற உண்மையை - 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு தமிழகம் முழுதும் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர் போராட்டத்துக்கும் தமிழ்நாட்டில் ஆதரவு இல்லை என்று பார்ப்பன ஊடகங்கள் செய்து வரும் பிரச்சாரம் பொய் என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு விடுதலைப் புலிகளையோ, ஈழத் தமிழர் போராட்டத்தையோ ஆதரிக்கும் ஏடு அல்ல.

ஆனாலும், அந்த ஏடே நடத்திய கருத்துக் கணிப்பு, இந்த உண்மைகளை தெளிவுபடுத்தியுள்ளது. 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு - 'சிஃபோர்' எனும் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை அக்.12, 2008 அன்று முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய ராணுவம் பயிற்சி தந்து, ஆயுதங்கள் வழங்குவதை தமிழ் நாட்டில் கணிசமான மக்கள் விரும்பவில்லை. இதனால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி கட்சியுடன் தி.மு.க. உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதே - கணிசமான தமிழர்களின் கருத்து.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு, அவர் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டால், இந்திய ராணுவம் உடனடியாக, பிரபாகரனை மீட்க, இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று பெரும்பாலோர் கூறுகிறார்கள்.

விடுதலைப்புலிகள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்றும், ஈழத் தமிழர்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப் புலிகள் தான் என்றும் பெரும்பாலான மக்கள் கூறுகிறார்கள். 40 சதவீத தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு நிதி உதவியும், பொருள் உதவியும் வழங்க விருப்பமுடன் உள்ளனர்.

சென்னை, கோவை, ஈரோடு, சேலம், மதுரை, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 1031 பேர் பல்வேறு தரப்பிலிருந்து தேர்வு செய்யப்பட்டனர். பேட்டி காணப்பட்டவர்களில் 45 சதவீதம் பேர் பெண்கள். கடந்த அக்டோபர் 6 ஆம் தேதியிலிருந்து 11 ஆம் தேதி வரை இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது என்பதால், இதுவே தற்போதைய தமிழர்களின் உணர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

• தமிழ் ஈழம் அமைய - பணமும் பொருளும் அளிக்கத் தயார் என்று 40 சதவீதம் பேர் கூறுகிறார்கள். தமிழ் ஈழத்தை ஆதரிக்க மாட்டோம் என்று 10 சதவீதம் பேர் மட்டுமே கூறுகிறார்கள். ஈழத் தமிழர்களுக்காக முழு அடைப்பு நடந்தால், அதில் பங்கேற்போம் என்று 10 சதவீதம் பேரும், தமிழ்நாட்டில் அடைக்கலம் தேடி வரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தருவோம் என்று 22 சதவீதம் பேரும், நியாயமான பிரச்னை தான், ஆனால், தங்களுக்கு இதில் ஆர்வம் இல்லை என்று 14 சதவீதம் பேரும் கூறுகிறார்கள்.

• பிரபாகரனுக்கு ஏதேனும் இலங்கை ராணுவத்தால் ஆபத்து நேருமானால், இந்திய ராணுவத்தை உடன் அனுப்பி பிரபாகரனை பாதுகாக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டில் பெரும்பான்மையோர் கருத்து. இப்படி கருத்து கூறியவர்கள் 31 சதவீதம்.

• அதேபோல், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்பதே பெரும்பான்மை தமிழர்களின் கருத்து. 51 சதவீதத்தினரின் கருத்து இதுவேயாகும். தடையை நீடிக்க வேண்டும் என்போர் 8 சதவீதம் மட்டுமே.

• விடுதலைப்புலிகள் இயக்கம் ஒன்று தான் ஈழத் தமிழர்களின் உண்மையான ஒரே பிரதிநிதி என்பதும், அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. விடுதலைப் போராளிகள் என்பதும் பெரும்பான்மைத் தமிழர்களின் கருத்தாக உள்ளது. 36 சதவீதத்தினர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளனர். பயங்கரவாதிகள் என்று கருத்துடையோர் 12 சதவீதம் மட்டுமே. மற்றவர்களுடன் இணைந்து தமிழர்களுக்காகப் போராடும் அமைப்பு என்று 22 சதவீதம் பேரும், சுதந்திரத்துக்காகப் போராடுவோர் என்று 30 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.

• இலங்கைப் பிரச்னையைத் தீர்க்க தமிழக அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு - இலங்கைக்கு ஆயுதமும், ராணுவப் பயிற்சியும் வழங்கி வரும் மன்மோகன்சிங் ஆட்சியிடம் தி.மு.க. உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதே பெரும்பான்மை தமிழர்களின் கருத்தாக உள்ளது.

34 சதவீதம் பேர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முழு அடைப்பு நடத்தலாம் என்று 10 சதவீதத்தினரும், சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று 12 சதவீதத்தினரும், ஈழத் தமிழர் பிரச்சினைக்காக சிறப்பு வரி விதித்து, தமிழர்களுக்கு உதவ முன்வந்தால், வரி கட்டத் தயார் என்று 10 சதவீதத்தினரும், பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்று 2 சதவீதத்தினரும் கருத்து கூறியுள்ளனர்.

• ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபாடு காட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பது சரி தானா என்ற கேள்விக்கு அது நியாயமானதே என்று பெரும்பான்மையான 44 சதவீதத்தினர் கருத்து கூறியுள்ளனர்.

Pin It