கீற்றில் தேட...

நீண்ட நெடிய சிறை வாழ்க்கைக்குப் பிறகு ஆங் சான் சூச்சி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். மறுபடியும் அவர் சிறைப்படுத்தப்படமாட்டார் என்பதற்கு எந்தவோர் உறுதிமொழியும் இல்லாமலேயே! பர்மாப் படையாட்சியாளருக்கு அவர் அச்சுறுத்தலாக மாறின், எந்நேரமும் அவர் வீட்டிற்குள் அடைபடலாம். “சொல்லப் போனால் அவர் பேசத் தொடங்கியவுடனேயே, அவர்கள் அவரை மீண்டும் சிறையில் அடைப்பார்கள்” (As soon she speaks out, they will put her back in prison so to speak) - இப்படிச் சொன்னவர் யாரோ ஒரு பொதுமகன் அல்லர். பிலிப்பைன்சு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆல்பெர்ட்டோ ரோமுலோ ஆவார். இதுதான் இன்றைய மியான்மரின் (மியான்மர் - படையாட்சியாளர் பர்மாவிற்குச் சூட்டியுள்ள பெயர்) அரசியல் மெய்ம்மை.

ஏற்கெனவே இப்படித்தான் நடந்திருக்கிறது. 1989 சூலை 20இல் இராணுவச் சட்டத்தின் கீழ் ஆங்சான் சூச்சி தளைப்படுத்தப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார். பின்னர் 1995 சூலை 10இல் விடுதலை செய்யப்படுகிறார். ஆனால் மீண்டும் 2000 செப்டம்பர் 23இல் அவர் இல்லக் கதவுகள் இழுத்து மூடப்படுகின்றன. 19 மாதங்கள் கழித்துக் கதவுகள் திறக்கப்பட அவர் விடுதலைக் காற்றைச் சுவாசிக்கிறார். இம்முறை ஓராண்டு மட்டுமே பர்மிய மக்களை அவர் சந்தித்து உரையாட பர்மிய அரசு வாய்ப்பளிக்கிறது. 2003 மே 30 இல் டெபாயின் படுகொலையை (Depayin massacre) அடுத்து, படையினர் அவரைக் கைது செய்கின்றனர். இம்முறை மூன்று மாதங்களுக்கும் மேலாகக் கமுக்க இடத்தில் தனிமையில் வைத்து அவரைக் கொடுமை செய்கிறது படையரசு. அதன் பின்னர் பழையபடி அவர் வீட்டையே அவருக்குச் சிறையாக்குகிறது. ஏழாண்டுகளுக்குப் பிறகு அவர் இப்பொழுதுதான் வெளி உலகைக் காண்கிறார். ஏறத்தாழ இருபத்திரண்டாண்டுக் கால (1988 தொடங்கி) அரசியல் வாழ்க்கையில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேல் வீட்டுச் சிறையில் வாழ்ந்திருக்கிறார். நீண்ட காலம் சிறையில் இருந்த பெண் என்ற சிறப்பையும் பெறுகிறார்.

சொந்த வீட்டில்தான் சிறை வைக்கப்பட்டாலும் சொல்லொன்னாத் துன்பங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இரண்டே இரண்டு வேலைக்காரப் பெண்கள் மட்டும் உடன் தங்க அனுமதிக்கப்பட்டனர். அவருடைய மருத்துவர் அவ்வப்பொழுது அவரைப் பார்க்கலாம். அவர் கட்சியினர் உட்பட யாரும் அவரைப் பார்க்க இசைவளிக்கப் படவில்லை. 2008 மே 2 இல் வீசிய கொடிய புயலில் அவரது வீட்டின் கூரை அடித்துச் செல்லப்பட்டது. மின்சாரமும் இல்லாமல் இருளில் மூழ்கியது அவரது வீடு. அப்பொழுது மெழுகுவர்த்தியுடன்தான் அவர் பல இரவுகளைக் கழிக்க நேர்ந்தது.

ஆங் சான் சூச்சிக்கு இன்று அகவை 66. 1945 சூன் 19 இல் பிறந்தவர். அவரது குடும்பமே பர்மா வரலாற்றோடு பின்னிப் பிணைந்ததாகும். அவரது தந்தை ஆங்சான் பர்மா விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய தலைவர்களுள் ஒருவர். பர்மாப் பொதுவுடைமை இயக்கத்தைத் தோற்றுவித்ததிலும் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. பொதுமையருடன் ஏற்பட்ட முரண்பாட்டில் 'மக்கள் புரட்சிக் கட்சி'யைப் (People’s Revolutionary Party) பின்னர் உருவாக் கினார். இதுவே இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நிகர்மைக் (சோசலிசுட்டு) கட்சி யாக மாறியது. இரண்டாம் உலகப் போரின் போது நேதாஜியைப்.... போலவே வெள்ளையரை எதிர்க்கத் தம்மோடு இருபத்தொன்பது இளைஞர்களைச் சப்பானுக்கு அழைத்துச் சென்று படைப் பயிற்சி பெற்றார். அவரது அணி “முப்பது தோழர்கள்” என அழைக்கப்பட்டது. அதுவே “பர்மா விடுதலைப் படை”யாக உருவாகிச் சப்பானியரின் கீழ் “பர்மா பாதுகாப்புப் படை” என்ற பெயரைப் பெற்றது. 1943 இல் கொள்கையளவில் பர்மாவை விடுதலை பெற்ற நாடாகச் சப்பான் அறிவித்த பொழுது பாதுகாப்புப் படை, ‘பர்மா தேசியப் படை’ ஆனது.

ஆனால் சப்பானின் அறிவிப்பு வெறும் ஏமாற்றலே என்பதை விரைவில் புரிந்து கொண்ட ஆங் சான் பொதுவுடைமைத் தலைவர்கள் தகின் தா டுன், தகின் சோ ஆகியோருடனும், நிகர்மைத் தலைவர்கள் பா சுவே, கியாவ் நியைன் ஆகியோருடனும் கலந்துரையாடி 1944 ஆகசுட்டில் பாசிச எதிர்ப்பு இயக்கத்தை (Anti-fascist organization) உருவாக்கினார். பின்னர் இவ்வமைப்புப் பாசிச எதிர்ப்பு மக்கள் விடுதலைக் கழகம் (Anti fascist People's Freedom League) என விரிவாக்கம் பெற்றது.

பர்மா விடுதலைப் போராட்டம் பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. ஆங் சானுடனும், நிகர்மையினருடனும் பொதுமையினர் முரண்பட்டு கூட்டியக்கத்திலிருந்து வெளியேறுகின்றனர். தகின் சோ தலைமையி லானப் பொதுமை இயக்கம் தலைமறை வாகிறது. பழமை வாதிகளும் முரண் பட்டு வெளியேறு கின்றனர். 1947 ஏப்பிரலில் நடந்த அரசமைப்பு அவைத் தேர்தலில் ஆங் சானும் நிகர்மையினரும் பெரும் வெற்றி பெற்றுத் தங்கள் செல்வாக்கை மெய்ப்பிக்கின்றனர். ஆனால் பர்மா மக்கள் அனைவரும் அதிர்ச்சியுறும் வகையில் 1947 சூலை 19 அன்று ஆங் சானும் அவரது அண்ணன் பாவின் உட்பட அவரது தோழர்கள் பலரும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படுகின்றனர். இப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியவர், போருக்கு முந்தைய பர்மாவின் தலைமை அமைச்சராக இருந்த படு பிற்போக்குவாதியான ஊ சா ஆவார்.

பர்மாவே சோகத்தில் ஆழந்தது. அன்றிலிருந்து சூலை 19, ஈகியர் நாளாக (Martyrs day) போற்றப்படுகிறது. ஆங் சான் பர்மாவின் தந்தையெனப் போற்றப்படுகிறார். 1948 சனவரி 4 இல் பர்மா முறையாக விடுதலை பெற்ற நாடாக அறிவிக்கப்படுகிறது. சூச்சியுடைய தாயார் கின் ட்கி பர்மா அரசியலில் பரவலாக அறியப்பட்டவரே. புதிய பர்மா அரசின் தூதுவராக அவர் இந்தியாவிலும், நேபாளத்திலும் பணியாற்றி உள்ளார்.

பர்மாவின் விடுதலைப் போராட்ட வரலாற்றைப் போலவே விடுதலைக்குப் பின்னரான வரலாறும் ஏற்றமும் இறக்கமும், மேடும் பள்ளமும் கொண்டது. பர்மாவின் மக்களாட்சி 1962 உடன் முடிவுக்கு வருகிறது. தளபதி நீ வின் படைக் கலகத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுகிறார். 1988 வரை 26 ஆண்டுகள் அவரது 'சோசலிச' ஆட்சி தொடர்கிறது. அவரது கட்சியின் பெயர் 'பர்மா நிகர்மைத் திட்டக் கட்சி' (Barma Socialist Programme Party) ஆகும். வணிகம், தொழில், ஊடகம் என அனைத்தையும் அரசுடைமையாக்குகிறார். சமூக வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார். தளபதி நீ வின்னின் நிகர்மை நாட்டின் வறுமையைப் போக்கவில்லை. அமைதியைக் கொண்டு வரவில்லை. மாறாக மக்களிடையே வெறுப்பையும் கொந்தளிப்பையுமே ஏற்படுத்தியது.

தொடக்கத்திலிருந்தே போராட்டங்கள் வெடித்தன. அவற்றை இரும்புக் கை கொண்டு ஒடுக்கியது படையாட்சி. 1962 சூலை 7இல் வெடித்த மாணவர் போராட்டத்தை 15 மாணவர்களைப் பலியிட்டு அடக்கியது பட்டாளம். 1974 இல் ஒன்றிய நாடுகள் அவை (UNO) முன்னாள் பொதுச் செயலர் ஊதாண்ட் அடக்கத்தை ஒட்டி எழுந்த போராட்டங்களும் துமுக்கி முனையில் அடக்கப்பட்டன. சனநாயக ஆதரவாளரான ஊதாண்ட் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் எனக் கோரி எழுந்த போராட்டங்களே அவை. பர்மாவின் மாபெரும் தேசியக் கவிஞர் தாகின் கோடவ் க்மாயிங் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியதற்காக 1976 மார்ச் 23 இல் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தளைப்படுத்தப்படுகின்றனர்.

எல்லாவற்றிற்கும் உச்சமாக அமைந்ததுதான் 1988 ஆகசுட்டு 8 இல் வெடித்துக் கிளம்பிய எழுச்சி. ஆயிரக்கணக்கான மக்களும் மாணவரும் கொல்லப்படுகின்றனர். ஆனால் கொதித்தெழுந்த மக்களைக் குண்டாந்தடிகளாலும், குண்டுகளாலும் அடக்க முடியவில்லை. நாடு முழுவதும் போராட்டம் தீயெனப் பற்றுகிறது. நிர்வாகம் நிலைகுலைந்து போனது. இந்நிலையைப் பயன்படுத்தித் தளபதி சா மாங் தலைமையிலான படை மற்றுமொரு படைக்கலகத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. அரசு சட்ட ஒழுங்கு நிலை நிறுத்தக் குழு (State Law and Order Council) அமைக்கப்படுகிறது. சா மாங் அதன் தலைவராகிறார். அவரே நாட்டின் தலைமை அமைச்சரும் ஆகிறார்.

8-8-1988இல் எழுந்த இம்மக்கள் போராட்டம் பர்மா வரலாற்றில் '8888 எழுச்சி' என அழைக்கப்படுகிறது. 8-8-88 என்பது நற்பயனைத் தரும் நன்னாளாகவும் (Auspicious day) பர்மிய மக்களால் கருதப்படுகிறது. ஆங் சான் சூச்சியுடைய அரசியல் நுழைவு இந்தக் கால கட்டத்தில்தான் நடைபெறுகிறது. இஃதொன்றும் திட்டமிட்ட நுழைவு அன்று. நேர்ச்சியாக நிகழ்ந்த ஒன்றே. நோயால் வாடியத் தாயைக் காணவே 1988இல் தாய்நாடு திரும்புகிறார். சனநாயக விழுமியங்களில் வளர்ந்த சூச்சி, தாய்நாட்டு மக்களின் சனநாயக எழுச்சியால் ஈர்க்கப்படுகிறார். 1988இல் ஆகசுட்டு 26இல் தலைநகரில் இலக்கக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் சனநாயக அரசமைக்க அறைகூவல் விடுக்கிறார். செப்டெம்பரில் புதிய படைக்குழு ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில் சனநாயகத்திற்கான தேசியக் கழகத்தைத் (National League for Democracy) தோற்றுவித்து அதன் பொதுச் செயலாளர் ஆகிறார். அதன் பின்னர் பர்மா வரலாற்றில் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்வுகள் விரைந்து அரங்கேறுகின்றன.

மேலே விவரித்தவாறு சா மாங் தலைமை அமைச்சராகிறார். 1989இல் பர்மா, மியான்மர் எனப் பெயர் மாற்றம் பெறுகிறது (பர்மா என்பது பாமர் என்ற சொல்லிருந்து உருவானதாகும். பாமர் என்பது மியான்மர் என்ற சொல்லின் பேச்சு வடிவமாகும். இவ்விரு சொற்களுமே வரலாற்றில் அந்நாட்டின் பெரும்பான்மை பர்மன் அல்லது பாமர் மக்களைக் குறிக்கும் சொற்களாகும்.) 1974இன் அரசமைப்பை மாற்ற அரசமைப்பு அவையை அமைக்க படையாட்சி திட்டமிடுகிறது. 1990இல் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட்ட சனநாயகத்திற்கான தேசியக் கழகம் (National League for democracy) படையாட்சி கலக்கமுறும் வகையில் மாபெரும் வெற்றியைப் பெறுகிறது. பதிவான வாக்குகளில் 89மூ வாக்குகளையும், நாடாளுமன்ற மொத்த இருக்கைகளான 492இல் 392 இடங்களையும் அது கைப்பற்றுகிறது. ஆனால் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள மறுத்த படையாட்சி சூச்சியைத் தளைப்படுத்தி வீட்டுக் காவலில் இருத்துகிறது. இதன் பின்னரான வரலாறு அனைவரும் அறிந்ததே.

முதல் படையாட்சிக் காலத்தில் (1962-1988) நடைபெற்ற '8888 எழுச்சியை’ப் போலவே இப்போதைய படையாட்சிக் காலத்திலும் 2007 ஆகசுட்டு 15இல் பெரும் போராட்டம் வெடித்துக் கிளம்புகிறது. இப்போராட்டத்திற்கான உடனடிக் காரணம் எரிபொருள் விலையேற்றமே. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான புத்த பிக்குகள் பங்கேற்கின்றனர். இப்போராட்டமும் ஈவிரக்கமின்றி நசுக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர். இப்போராட்டத்தின் போது நூற்றுக்கணக்கான புத்த பிக்குகள் சூச்சி சிறை வைக்கப்பட்டுள்ள வீட்டிற்கு முன் திரண்டு அவருக்கு மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. சூச்சி வெளிவுலகினரைச் சந்தித்த ஓரிரு முறைகளில் இதுவும் ஒன்று.

இப்பொழுது சூச்சி விடுதலை செய்யப்பட்டுள்ளார். தேர்தல் ஒன்றும் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் 80மூதிற்கும் மேலான இருக்கைகளைப் படையாட்சியாளருக்கு ஆதரவான ஒன்றிய ஒருமைப்பாட்டு வளர்ச்சிக் கட்சியே (Union Solidarity and Development Party USDP) பெற்றுள்ளது. இதில் ஒன்றும் வியப்படைவதற்கில்லை. இப்பொழுதைய பர்மா ஆட்சி அமைப்பில் எந்தத் தேர்தலும் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது, கொண்டுவரவும் முடியாது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பணியிலுள்ள படை அதிகாரிகளுக்கு (ளுநசஎiபெ யசஅல ழுககiஉநசள) 25மூ இடங்கள் நிலையாக ஒதுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தைத் தன் கட்டுக்குள் கொண்டுவர இன்னொரு சரிபாதி இடங்களைக் கைப்பற்றினாலே போதுமானது. இந்நிலையில் விடுதலை பெற்றுள்ள சூச்சி சனநாயகத்தை மீட்டெடுக்க என்ன செய்யப் போகிறார்? ஆட்சியாளருடன் இணங்கிய அமைதிப் பாதையா? போராட்டப் பாதையா? அண்டை நாடுகளான இந்தியாவும், சீனாவும் ஆட்சியாளருடன் அவர் இணங்கிப் போவதையே விரும்புகின்றனர்.

இன்று உலக அரசியலில் புவிசார் அரசியல் தாக்கம் பற்றி பெரிதும் பேசப்படுகிறது. ஈழ விடுதலைப் போராட்டம் கண்டுள்ள பெரும் பின்னடைவிற்கு இப்புவிசார் அரசியலும் ஒரு காரணம் என்பதை நாமறிவோம். இந்தியா, சீனா புவிசார் அரசியல் நலன்களை மிகத் திறமையாகப் பயன்படுத்தி இராசபட்சே வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தைத் தோற்கடித்துள்ளார். இலக்கக்கணக்கான மக்கள் படுகொலையுடன் அவர்களுடைய சனநாயக வேட்கையும் ஆழக்குழி தோண்டிப் புதைக்கப் பட்டுள்ளது.

ஏறத்தாழப் பர்மாவின் கதையும் இதுவே. ஈழவிடுதலைக்கு எதிராக வினையாற்றிய அதே ஆற்றல்கள்தான் பர்மாவின் சனநாயகப் போராட்டத்திற்கு எதிராகவும் செயல்படுகின்றன. ஒன்று சீனா, இன்னொன்று இந்தியா. சீனா பர்மாவைத் தன் பாதுகாப்பு நோக்கத்திலும் பொருளாதார நோக்கிலும் பாதுகாக்கப்பட வேண்டிய சொத்தாகக் கருதுகிறது. பர்மாவின் காட்டு வளமும், இயற்கை எரிவளியும், கைட்ரோகார்பன் (Hydrocarbon) மூலவளங்களும் சீனாவிற்கு எவ்வளவு முகாமையானதோ அதுபோலவே இந்திய மாக்கடல் வணிக வழித்தடத்திற்கும் அந்நாடு மிகவும் தேவையானது. மேலும் சீனாவிற்கும் பர்மா தன் எல்லையை ஒட்டிய நாடாகவும், இந்தியா எல்லையை ஒட்டிய நாடாகவும் அமைந்துள்ளது. இவ்வகையில் படைப் பாதுகாப்பு நோக்கிலும் அது முதன்மை பெறுகிறது.

இந்தியாவும் பர்மாவை அவ்வாறே கருதுகிறது. இந்தியாவிற்கும் அதன் இயற்கை வளங்கள் தேவை. தேசிய விடுதலைப் போராட்டங்கள் கொழுந்து விட்டெரியும் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோராம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து ஆகியவை பர்மாவை ஒட்டியே அமைந்துள்ளன. பர்மாவின் மீது சீனாவின் செல்வாக்கும் அதனை அச்சுறுத்துகிறது. மேலும் கீழை நாடுகளுடனான தொடர்பிற்கும் இந்தியா விற்கும் பர்மாவே வாயிலாக அமைந்துள்ளது.

சுருங்கக் கூறின் பொதுமைப் புரட்சியாளர் 'மாவோவின் சீனா'வும், 'அகிம்சாமூர்த்தி காந்தி'யின் இந்தியாவும் பொதுமை நெறியிலும் அற வழியிலும் நடைபயிலவில்லை. கொடிய தன்னல வெறிகளே அவற்றை வழி நடத்துகின்றன. நாடுகளின் விரிவாக்கக் கனவுகளே அவற்றின் வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைக்கின்றன. நிகர்மய அணியின் வீழ்ச்சிக்குப் பிறகு உலகமாயமாக்கல் உருவாக்கியுள்ள ஆதிக்கப் போட்டியின் விளைவு இது. இதில் தேசிய விடுதலைப் போராட்டங்களும், சனநாயகப் போராட்டங்களும் காவு கொள்ளப் படுகின்றன. இவையனைத்தும் புவிசார் அரசியல் என்னும் பட்டாடையில் மூடப்படுகின்றது. நாடுகளின் தன்னல வெறிக்கான அரசியல் தத்துவப் பெயரே புவிசார் அரசியல் என்பதாகும்.

பர்மாவின் சனநாயகப் போராட்டத்திற்கு அமெரிக்காவும் பிற மேலை நாடுகளும் ஆதரவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய ஒபாமா பர்மாவின் சனநாயக மீட்சிக்கு இந்தியா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இவ்வாறே ஈழத் தமிழர்களுக்கும் மேலை நாடுகள் ஆதரவாக இருப்பதாக ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. உண்மை அதுவன்று. மேலை நாடுகளின் பர்மா சனநாயகத்திற்கான ஆதரவும், ஈழ மக்கள் மீதான கரிசனையும் கூட பொருளாதார அரசியல் நலன் அதாவது புவிசார் அரசியல் நலன், சார்ந்தே எழுகின்றன.

இச்சூழலில் பர்மா மக்களும், ஈழ மக்களும் தங்களை ஆதரிக்கும் நாடுகளற்ற ஏதிலிகளாகவே உண்மையில் உள்ளனர். ஆனால் இதைக் கண்டு கலக்கமுற வேண்டியதில்லை. ஏனெனில் நாடுகளின் நலன்கள் என்பன அந்தந்த நாடுகளின் ஆளும் கட்சிகளின், வர்க்கங்களின் நலன்களையே குறிக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வகுப்பாரைத் தாண்டி பரந்து பட்ட மக்கள் வாழ்கின்றனர். இம்மக்களிடையே மனித உரிமைகளுக்காகவும், சனநாயக விழுமியங்க ளுக்காகவும் குரல் கொடுப்போர், போராடுவோர் எண்ணற்றோர் உள்ளனர். வியட்நாம் விடுதலைக்கு அந்நாட்டு மக்களின் போராட்டம் மட்டும் காரணம் அன்று. வியட்நாமை விட்டு வெளியேறக் கோரி அமெரிக்க மக்கள் தெருக்களில் இறங்கி தங்கள் நாட்டிற்கு எதிராகவே போராடினார்கள். இங்கிலாந்து, பிரான்சு நாடுகளிலும் அமெரிக்காவிற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நடைபெற்றன. போர்முனையிலும் தோற்று, உலக மக்கள் முன்னிலையிலும் அம்பலப்பட்டு அமெரிக்கா வேறு வழியின்றி வியட்நாமை விட்டு வெளியேறியது.

இன்று ஈரான், ஆப்கானிஸ்தான் நாடுகளிலும் அமெரிக்காவிற்கும் பிற மேலை நாடுகளுக்கும் இந்நிலைதான் ஏற்பட்டு வருகிறது. இன்று ஆங் சான் சூச்சி விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கும் உலகளாவிய சனநாயக ஆற்றல்களின் அழுத்தங்களே மூலமுதற் காரணமாகும். பர்மா படையாட்சியை ஆதரிக்கும் இந்தியாவின் நிலையை, அமர்த்தியா சென் கடுமையாகச் சாடியுள்ளது இங்கே நினைவுகூறத் தக்கது.

எனவே ஆங் சான் சூச்சியும் அவரது மக்களும் சோர்ந்து போக வேண்டியதில்லை. படையாட்சியின் முன் மண்டியிடவோ இணங்கிப் போகவோ தேவையில்லை. ஈழ மக்களும் முள்ளிவாய்க்காலோடு அனைத்தும் முடிந்து போனதாக நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. சிங்களப் பேரினவாதத்தைச் சுமக்க வேண்டியதும் இல்லை. இந்தியாவும், சீனாவும் அவர்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்படலாம். ஏன் அமெரிக்காவும் மேலை நாடுகளும் கூட தங்கள் ஆதரவை மறுக்கலாம். சனநாயகத்திற்காகப் போராடும் பர்மா மக்களும், ஈழ விடுதலைக்காகப் போராடும் ஈழ மக்களும் அணி சேர வேண்டியது இவர்களோடு அன்று. உலகில் தங்களைப் போல் போராடும் பிற இன மக்களோடு கை கோர்க்க வேண்டும். தேசிய விடுதலை இயக்கங்களோடு அணி சேர வேண்டும். பொதுமையர்களோடு சுற்றுப் புறவியலாளர்களோடு இன்னபிற சனநாயக ஆற்றல்களோடு ஒன்றிணைய வேண்டும்.

இவ்வணிச் சேர்க்கையே பர்மாவிற்குச் சனநாயகத்தையும், ஈழ மக்களுக்குத் தேச விடுதலையையும் கொண்டு வரும். இவ்வணி சேர்க்கையின் முன் புவிசார் அரசியல் சூதாட்டங்களும் சதிராட்டங்களும் தோற்றுப் போகும். மக்களின் போராட்டங்களும் அவர்களின் ஈகங்களும் ஒரு நாளும் தோற்றுப் போகா! வெற்றியே பெறும். ஆங் சான் சூச்சியின் விடுதலை இந்த வரலாற்று உண்மையையே மீண்டும் மெய்ப்பிக்கிறது.