கடந்த 2010 மார்ச்சு 10ஆம் நாள் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் சி.பி.எம்.கட்சியின் கிளைச் செயலாளர் தோழர் வேலுச்சாமி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஏன் கொலை செய்யப்பட்டார்? பின்னணி என்ன?

ஆராய்வதற்காகப் பள்ளிப்பாளையம் சென்றார்கள் குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம் - தமிழ்நாடு (சிபிசிஎல் - டிஎன்) அமைப்பின் உண்மையறியும் குழுவினர். இந்தக் குழுவினரின் அறிக்கை அந்தப் பகுதியில் நிலவும் கடுவட்டிக் கொடுமையை அறியத் தருவதாக உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறிக் கூடங்களும், பெரிய பஞ்சாலைகளும் வேலை தருகிற தொழில்களாக உள்ளன. இங்குதான் கந்துவட்டிக் கொடுமை கோரத் தாண்டவமாடுகிறது.

பள்ளிப்பாளையம், குமாரபாளையம், வெடியரசம்பாளையம், வெப்படை, அக்ரகாரம் போன்ற பகுதிகளில் சிறு விசைத்தறிக் கூடங்கள் கிட்டதட்ட 50,000 இருக்கின்றன. பெரிய பஞ்சாலைகள் 20க்கு மேல் இருக்கின்றன. இவற்றில் (1,50,000) ஒன்றரை இலட்சம் பேர் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். இவர்கள் வேலைக்குச் சேரும் பொழுது முதலாளிகள் கடனாக ஒரு தொகையைத் தருவார்கள். அந்தத் தொகையை வட்டியுடன் அவர்களின் சம்பளத்தில் பிடித்துக் கொள்வார்கள்.

வேலை செய்யும் தொழிலாளர்கள் அவர்களின் குடும்பத் தேவைக்கானப் பணம் வேண்டுமென்றாலும் முதலாளிகளே வட்டிக்குத் தருகிறார்கள். வாங்கிய தொகைக்குக் குறிப்பிட்ட தேதியில் வட்டி கட்ட முடிய வில்லை என்றால், ஒரு மணிநேரம் தள்ளிப் போனால் ரூ.50 முதல் ரூ.100 வரை அபராத வட்டியும், ஒரு நாள் தள்ளிப் போனால் ரூ.100 முதல் ரூ.200 வரை மீட்டர் வட்டியும் வசூல் செய்கிறார்கள். ஓரிரு நாள் தள்ளிப் போனால் கடன் வாங்கிய நபரை, ஓர் அறைக்குள் ப+ட்டி விடுவார்கள். எத்தனை நாளானாலும் கடன் வாங்கியவரின் மனைவியோ குடும்பத்தாரோ பணம் புரட்டி வந்து தந்தால்தான் விடுவார்கள். சில சமயம் வாங்கிய பணத்திற்குக் கடன் வாங்கியவரின் மனைவியைப் பிடித்துத் தனி அறையில் அடைத்து வைப்பதும் நடக்கிறது.

அடைத்து வைக்கப்பட்டவரின் குடும்பத்தாரையும், பெண்களையும் மிகவும் தரக்குறைவாகவும் இழிவாகவும் காதில் கேட்கக்கூசும் ஆபாச வார்த்தைகளாலும் திட்டி - அடிப்பதும் உண்டு இப்படி உடலாலும் உள்ளத்தாலும் துன்புறுத்துகிறார்கள். கடந்த 2006இல் வாங்கிய தொகைக்கான வட்டியைச் செலுத்த முடியாதவர்கள், ஒரு சிறுநீரகத்தை (கிட்னி) விற்று வட்டி கட்டுவதாகவும், இதில் கந்துவட்டிக்காரர்களுடன் சிறுநீரகத் தரகர்கள் சேர்ந்து செயல்படுவதாகவும் கூறுகிறார் சிபிஐ கிளைச் செயலாளர் தோழர் நல்லப்பன்.

குறிப்பாக 'கிட்னி கோபால்' என்ற தரகர்,  கடன் பாக்கியுள்ள நபர்களிடம் ரூ ஒரு லட்சம் பேசி, 50,000 ரூபாயை எடுத்துக் கொண்டு மீதித் தொகையைக் கடன் கட்டுவதற்குக் கொடுப்பார். கடந்த 2007ஆம் ஆண்டு பள்ளிப்பாளையம் செல்வராஜ் என்பவரின் மகள் வெங்கடலட்சுமி, வட்டிக்குப் பணம் பெறச் சென்ற போது அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து ஒளிப்படம் எடுத்துக்கொண்டு மிரட்டி அனுப்பியுள்ளார். இது குறித்து அவரின் மாமா வேலுமணி காவல்நிலையத்;தில் புகார் செய்த போது கிட்னி கோபாலுக்கு மும்பை உட்பட இந்தியா முழுக்கத் தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்தது, அவர் மீது சட்ட வழியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. இத்தகைய கந்துவட்டிக் கொடுமையின் நீட்சியாகவே பள்ளிப்பாளையம் சி.பி.எம். கிளைச் செயலாளர் வேலுச்சாமி கந்து வட்டிக்காரர் களால் 10.3.2010 இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்றும் தோழர் நல்லப்பன் தெரிவித்தார்.

கந்து வட்டிக்காரர்கள் சிலர் பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாத அஜிதா என்பவரின் மகள் அகிலாவை (18) மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்பெண்ணை மிரட்டியே காணொளி (வீடியோ) படமும் எடுத்து இணையத்தளத்தில் உலவவிட்டுள்ளனர். 'ப்ளுடூத்' மூலமாகவும் கைப்பேசியில் பலருக்கும் அனுப்பி அப்பெண்ணைக் களங்கப்படுத்தி உள்ளனர். இந்த ஈனச் செயலைச் செய்தவர்கள் இந்தப் பகுதியிலே கட்டப் பஞ்சாயத்தும் கந்துவட்டித் தொழிலும் செய்யும் சிவக்குமார், இரவி(எ) ஆமையன், மிலிட்ரி கணேசன் உள்ளிட்ட கும்பல்தான் என்கிறார் சி.பி.எம். பள்ளிப்பாளையம் ஒன்றியச் செயலாளர் தோழர் அசோகன்.

வெப்படையில் உள்ள பெரிய மில்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தறிப்பட்டறைகள் அனைத்திலும் குழந்தைத் தொழிலாளர்கள் நீக்கமற நிறைந்துள்ளனர். பள்ளிப்பாளையத்தைச் சுற்றி 25 கிலோமீட்டர் வரையுள்ள சங்ககிரி, ஈரோடு, எடப்பாடி, குமாரபாளையம், திருச்செங்கோடு போன்ற பகுதிகளிலிருந்து குழந்தைகளை வரவழைத்து டபுளிங் எனப்படும்  நூல்களைத் திரிக்கும் வேலையும், நூல் போடும் வேலையும் செய்ய, பெரிய தொழிலாளர்களுக்கு இணையாக நாள்தோறும் 12 மணிநேரம் 'சிப்ட்'; முறையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

உங்களுக்குப் படிக்க விருப்பமா? என்று அவர்களிடம் கேட்டதற்குப் “படிக்க விருப்பம்தான் ஆனால் குடும்பத் தேவைக்காக வாங்கிய கடன் இருக்கிறதே! பாடுபட்டு வேலை செய்தால் தினமும் 100 ரூபாய் தருகிறார்கள். கடனை அடைத்தால்தான் படிப்பைப் பற்றி யோசிக்க முடியும்”; என்றார்கள்.

7 வயது முதல், குழந்தைத் தொழிலாளர்கள் பஞ்சாலை மற்றும் தறிப்பட்டறைகளில் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு சம்பளம் ரூ100 முதல் 125 வரை. ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் வருவது தெரியும் போது பணி செய்யும் பஞ்சாலைகளில் இதற்கென்றே தரைக்கு அடியில் கட்டப்பட்டுள்ள பதுங்கு அறையில் பதுங்கிக் கொள்ளும் வசதியுடன் பல பஞ்சாலைகள் இருக்கின்றன.

பஞ்சாலைகள், விசைத்தறிக் கூடங்கள் இவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு விபத்து நடந்தால் உரிய இழப்பீடு எதுவும் கொடுக்கப்படுவதில்லை. இத்தகைய பரிதாப நிலைமை வெளியில் தெரியாமல் இருப்பதற்கு, இருட்டடிக்கப்படுவதற்கு முதலாளிகள்  ஃபேக்ட்ரி இன்ஸ்பெக்டர் இவர்களின் கூட்டு நடவடிக்கையே காரணம்.

பள்ளிப்பாளையம், குமாரபாளையம், வெப்படை, வெடியரசம்பாளையம், டி.வி.எஸ்.மேடு, ஆவரங்காடு, கொக்கராயன் பேட்டை, அக்;ரகாரம் போன்ற பகுதிகளில் உள்ள 'டபுளிங்  யூனிட்';, பஞ்சாலைகள், விசைத்தறிக் கூடங்கள் அனைத்திலும் கொத்தடிமை முறை, குழந்தைத் தொழிலாளர் முறை நிலவுகிறது. இவற்றில் சிலவற்றின் பெயர்கள்: வடிவேல் பட்டறை, கோலா பஞ்சாலை, இராஜகுரு, செந்தூரம், சேரன், மல்லிகா, வேலாத்தாள் சம்பூரணலட்சுமி.

கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் 1961 - அதீத வட்டி தடைச் சட்டம் - கந்து வட்டி தடைச் சட்டம் 2003 - தொழிலாளர் நலச் சட்டம் ஆகிய சட்டங்கள் இருந்தும்  எல்லாம் ஏட்டளவில்தான். இங்கு காவல்துறையும் நிர்வாகத் துறையும் அரசு இயந்திரமும் கந்து வட்டிக் கும்பலுடன் கை கோத்துக் கொண்டு கூட்டாகச் செயல்படுகிறது.

தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும், பணி ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும், முதலளிகளுக்கும் ஃபேக்ட்ரி இன்ஸ்பெக்டருக்கும் இடையிலான கூட்டு இணைவைத் தகர்க்க அதிரடி நடவடிக்கை வேண்டும். தொழிலாளர்களுக்கான கூட்டுறவு சேமிப்பு மற்றும் கடன் மையம் உருவாக்கப் படவேண்டும். தொழிற்சங்கங்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். விசைத்தறி உரிமையாளர்கள் அவர்களின் உறவினர்கள் கந்து வட்டியில் ஈடுபடுவதைத் தடுக்க, உரிமையாளர்களின் உரிமம் பறிக்கப்பட வேண்டும்.

குழந்தைகளைத் தொழிலாளர்களாக வைத்திருக்கும் பஞ்சாலைகள், விசைத்தறிக் கூடங்கள் 'டபுளிங் ய+னிட்' போன்றவற்றில் உடனடியாகத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு அதன் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிமையாளர்கள் கைது செய்யப்பட வேண்டும். இதுவே கந்துவட்டிக் கொடுமை யைத் தீர்க்க உதவும்  என்கிறார்கள் ஆய்வு செய்த உண்மையறியும்  குழுவினர்.

Pin It