அது கடுமையான கோடை காலத்தின் உச்சி. அந்த இளைஞர் தனக்குப் புதிதான அந்த மாவட்டத்தின், மாவட்ட நிர்வாகியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் விட்டு வந்த, அவர் மிகவும் நேசித்த, சிறிய, அருகாமை மாவட்டம் பற்றிய நினைவுகள் அகலாதவராக அவர் இருந்தார். அங்கு அவர் வேலையில் இரண்டு ஆண்டுகளைப் பயனுள்ள வகையிலும் மகிழ்ச்சியாகவும் கழித்திருந்தார். ஆனால் அதே நேரத்தில் தனது புதிய பொறுப்புக்களின் சவால்களை மிகவும் ஆவலுடன் தயாராகவே எதிர்பார்த்திருந்தார். அது மிகப்பெரிய, மிகவும் சிக்கலான, அரசியல் ரீதியாக நுட்பமான பொறுப்பாகும்.

அந்த மாவட்டத்தின் மக்களைப் பற்றியும் அதன் பிரச்சனைகளைப் பற்றியும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் பொறுப்பேற்றுக்கொண்ட ஓரிரு நாட்களிலேயே அதைச் சுற்றிப்பார்க்கத் தொடங்கினார். அது ஒரு வறட்சிக் காலமாக இருந்தது. சில நேரங்களில் ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபடுத்தப்படும் அளவுக்கு நிவாரணப் பணி முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தது. எனவே, இயல்பாகவே அவருடைய தொடக்கக் கட்ட பயணக் காலத்தின் பெரும்பகுதி இந்த நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதற்கே ஒதுக்கப்பட்டது.

அவர் அங்கு கண்டது அவரைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒவ்வொரு திட்டப் பணியிலும் சொல்லிவைத்தது போல், தொடர்ச்சியாக, உண்மையில் நடந்திருந்த கட்டுமானப்பணிகள் ஆவணங்களில் காட்டப்பட்டிருந்ததற்கும் மிக மிகக் குறைவாகவே இருந்தன. அவை வெளிப்படையாகவே, துணிச்சலுடன் செய்யப்பட்டிருந்ததை அவர் கண்டார். ஒதுக்கீடுகளில் பெரும் தொகைகள் மோசடியாக அபகரிக்கப்பட்டிருந்தது அவருக்குத் தெளிவாகவே தெரிந்தது. அன்றாட வருகைப்பதிவுகள், செய்யப்பட வேலை, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தொகைகள் ஆகியவை போலியாகத் தயாரிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இந்தப் பதிவேடுகளில், வேலை செய்ததாகக் கூறப்பட்டவர்கள் அங்கு இருக்கவில்லை, தொழிலாளர்களின் பெயர்கள், கைரேகைகள் போலியாகத் தயாரிக்கப்பட்டிருந்தன. இந்த வேலைகளில் பெரும்பகுதி, கிராமங்களில் ஏற்கனவே உள்ள குளங்களின் ஆழத்தை அதிகரிப்பது, பலப்படுத்தப்படாத மண் சாலைகளைப் பலப்படுத்துவது ஆகிய மண் சார்ந்த வேலைகளாகவே இருந்தன. இவற்றில், ஒரு மழைக் காலத்திற்குப் பிறகு, செய்யப்பட்ட அல்லது செய்யப்படாத வேலைகளின் அளவுகளை சரிபார்ப்பது என்பது மிகவும் கடினமாகும்.

இந்த அமைப்புக்கு புதியவர்

அந்த மாவட்ட நிர்வாகியின் பயணத்தில், அவருடைய கவலையும் கோபமும், ஒவ்வொரு திட்டம் பற்றியும் விளக்கமாக அவர் மேற்கொண்ட விசாரணைகளும், பதிவு ஆவணகளை ஆய்வு செய்ததும், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடம் நீண்டநேரம் அவர் பேசிக்கொண்டிருந்ததும் அவருடன் வந்திருந்த அதிகாரிகளைத் தர்மசங்கடதிற்கு ஆளாக்கின. தொழிலாளர்கள் வெளிப்படையாகப் பேசாவிட்டாலும், இளவயதினராக இருந்ததாலும் அனுபவம் குறைந்தவராக இருந்ததாலும் அவரிடம் இதை அவர்கள் முன்வைத்தனர்.

அவர் பார்த்துக் கொண்டிருப்பது ஒன்றும் புதியது அல்ல என்றும், உண்மையில் பல பத்தாண்டுகளாக நடந்து கொண்டிருப்பது தான் என்றும் அவர்கள் அவரிடம் பொறுமையாக விளக்கினர். ஏறத்தாழ ஒவ்வொரு ஆண்டும், பருவமழைக்குப் பின்னர் கரீப் அறுவடையில், வறட்சி இருப்பதாக அரசியல் ரீதியாக அறிவிப்பதற்குத் தகுந்த வகையில் கிராம நிர்வாக அலுவலரின் அறிக்கைகளும், பயிர் மதிப்பீடுகளும் தீவிரமாகத் தயாரிக்கப்பட்டு, பெரும் அளவில் நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டன. நிவாரணப் பணிக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பெரும் பகுதி நடைமுறைப் படுத்தும் துறைகளால் திருப்பி விடப்பட்டு, போலியான வருகைப் பதிவேடுகள் தயாரிக்கபடும் என்பது எழுதப்படாத ஆனாலும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட மரபாக இருந்து வந்தது. இந்த நிதிகள் பல்வேறு மட்டங்களில் உள்ள அரசாங்க அதிகாரிகள் பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகியோரால் பகிர்ந்து கொள்ளப்பட்டன. மிக அண்மைக்கால ஆண்டுகளில் பெரும் அளவிலான பணிகள் நடைமுறைப்படுத்தப் படுவதற்காக நேரடியாக பஞ்சாயத்து மட்டங்களில் பொதுமக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. எனவே அவர்கள் தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள ஏதுவாக , இப்பொழுது இந்த வேலைகளில் அரசாங்க அதிகாரிகளின் தலையீடுகள் இல்லை. இது எல்லா இடங்களிலும் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும், எல்லோருக்கும் இது தெரியும், எல்லோரும் இதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று அவர்கள் அவரிடம் தெரிவித்தார்கள்.

இது இப்படி இல்லை என்றால், ஒவ்வொரு ஆண்டும் வறட்சி ஆண்டாக அறிவிக்க வேண்டும் என்ற கூச்சலிடுவதற்குப் பின்னால் என்ன நியாயம் இருக்க முடியும்?அந்த மாவட்ட நிர்வாகி தன்னை விட மூத்தவரும் மிகவும் அனுபவம் வாய்ந்தவருமான அருகாமை மாவட்ட சகாவிடம் பேசினார். அந்த அளவுக்குப் போகாதீர்கள், அதில் நீங்கள் எதுவும் செய்துவிட முடியாது என்று அந்த மூத்த அதிகாரி அறிவுரை கூறினார். அதைப்பற்றி நீங்கள் மிக மோசமாக எண்ணினால், மழைக்காலத்திற்கு முன்னதாக சிறிது காலத்திற்கு இருக்கக் கூடிய எஞ்சிய வறட்சிகாலத்தில் இந்த நடைமுறைகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். ஆனால் நீங்கள் அங்கு வேலையில் சேர்வதற்கு முந்தைய காலக்கட்டத்தின் பழைய விடயங்களைத் தோண்டாதீர்கள்.

ஆனால் அவர் தோண்டுவது என்று முடிவு செய்தார். அந்த மாவட்டத்தில் அவர் வேலையில் சேர்ந்த 15 நாட்களுக்குள், அனைத்து வறட்சிப் பணிகளும் குறித்து உடனடியாக ஒரு முழு அளவிலான விசாரணை நடத்தப்போவதாகவும் வர இருக்கும் மழைக் காலத்திற்குள் அதை முடிக்கப்போவதாகவும் அறிவித்தார்.

அவரது அறிவிப்புக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது என்று அவர் எதிர்பார்த்தார், ஆனால் அவரது அறிவிப்பை உடனடியாக வரவேற்ற பெரிய புயலுக்கு அவர் தயாரிப்புடன் இருக்கவில்லை. அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த,அந்த மாவட்டதின் மூத்த அரசியல்வாதிகள், அவரது அறிவிப்பை, பொதுமக்கள் பிரதிநிதிகளின் பெருமைமீதும் அந்தஸ்துமீதும் தொடுக்கப்பட்ட வன்முறையான, அவமானகரமான தாக்குதல் என்று வர்ணித்தனர். ஒவ்வொருநாளும் செய்தித் தாள்களின் முதல் பக்கங்கள் இந்தப் பிரச்னை மீது சூடான விவாதங்கள் நடந்தன. அவை அந்த மாவட்ட நிர்வாகியின் செருக்கையும் ஜனநாயக விரோத ,மக்கள் விரோதப் பண்பையும் கண்டிக்கும் உள்ளூர் அரசியல்வாதிகளின் அறிக்கைகளை மட்டுமே தாங்கி வந்தன. அவ்வப்போது நேர்காணல்களில் அவருடைய கருத்துக்களைக் கேட்டிருந்தும் கூட அந்த மாவட்ட நிர்வாகியின் தரப்புக் கருத்துக்கள் எதுவும் அந்த செய்தித் தாள்களில் இடம்பெறவில்லை. அவருக்குத் தெள்ளத் தெளிவாகத் தோன்றிய ஒரு பிரச்னை இவ்வளவு மோசமாக திசைதிருப்பப்பட்டது குறித்து அவர் வியப்படைந்தார். தலையங்கங்களும், ஆசிரியருக்கு கடிதங்களும் மட்டுமே அவருக்கு ஆதரவாக இருந்தன.

அவருடைய அறிவிப்புக்குப் பிறகு குறுகிய காலத்திலேயே, மூத்த அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், அடங்கிய அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு ஓன்று அந்த மாவட்ட நிர்வாகியைச் சந்தித்து, அந்த விசாரணையை உடனடியாக ரத்து செய்யுமாறு கோரியது. இவ்வளவு பெரிய அளவில் பொதுப்பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறபோது, அந்தப்பணம் பயனுள்ள வழியிலும் நேர்மையான வழியிலும் செலவழிக்கபட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள பொதுமக்களுக்கு உரிமை இருக்கிறது என்று அந்த மாவட்ட நிர்வாகி வலியுறுத்தினார். மிக நேர்மையான அதிகாரி கூட தணிக்கையிலிருந்து விலக்குக் கேட்க முடியாது, மாறாக அவர் அதை வரவேற்க வேண்டும்.

பஞ்சாயத்துப் பணிகளில் மட்டுமல்லாது அனைத்துத் துறைகளின் பணிகளிலும் விசாரணை நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அது ஒரு எதேச்சாதிகாரமான அல்லது வேடிக்கையான முடிவு அல்ல, பல பணிகளில் நிவாரண நிதிகள் தவறாகக் கையாளப் பட்டிருப்பதற்கான முதலேற்பு ஆதாரங்கள் ஏராளமாக இருந்ததை அவர் நேரடியாக கண்டிருந்தார். ஒரு விசாரணைக்கு எதிரான அவர்களது வன்முறைக் கூச்சலால், பொதுமக்கள் பிரதிநிதிகள் உணமையில் தங்கள் மீதான குற்றச் சாட்டுக்களை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருந்தார்கள். விசாரணை முடிவிலிருந்து பின்வாங்குவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று அவர்களிடம் அவர் நாசூக்காகவும் அதேநேரத்தில் உறுதியாகவும் கூறிவிட்டார், அதற்கு மாறாக அவர்களுடைய எதிர்ப்பு காரணமாக, அந்த விசாரணையை இன்னும் பெரிய உத்வேகத்துடனும் ஆழமாகவும் நடத்துவது என்று அவருடைய தீர்மானம் அதிகரித்தது.

அந்த சந்திப்பு ஒரு கூச்சலில் முடிந்தது.

அந்த மாவட்ட நிர்வாகி முன்பு பணியாற்றிய அருகாமை மாவட்டத்தில் அவருடைய வரலாறு பற்றி அறியவ்ந்ததும் எதிர்ப்பாளர்களின் சீற்றம் அதிகரித்தது. அங்கு இது போன்ற வறட்சிப் பணிகள் தொடங்கிய முதலாவது மாதத்திற்குப் பிறகு அவர் ஒரு விசாரணை நடத்தியிருந்தார், அந்த விசாரணை முடிவில் 40 க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் எதிராக குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டன,அதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு,அவர்கள் மீது நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குளங்களை ஆழப்படுத்துவது, மண் சாலைகளைச் செப்பனிடுவது போன்ற பயனளிக்காத, சரிபார்க்க முடியாத பணிகள் தடை செய்யப்பட்டன. அதன் விளைவாக எஞ்சிய அந்த வறட்சிக் காலத்தில் இது போன்ற கசிவுகள் கட்டுப்படுத்தப்பட்டன, முதல் முறையாக அந்த நிவாரண நிதிகள் மூலமாகப் பயனளிக்கக் கூடிய, 1000 கிராமக் குளங்கள் உள்ளிட்ட ஏராளமான சமுதாய சொத்துக்கள் உருவானதைக் காண முடிந்தது.

பாதியில் முடிந்து போன அந்த கூட்டத்திற்குப் பிறகு, அந்த மாவட்ட நிர்வாகி உடனடியாக விசாரணைக்கான மாவட்ட அதிகாரிகளின் குழுக்களை அமைத்தார். நேர்மையானவர்கள் என்று அவருக்கு நம்பிக்கையளித்த அதிகாரிகள் சிலரை அவர் தேர்ந்தெடுத்தார். விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாதிரிப் பணிகள் பற்றி தன்னிடம் சரிபார்த்துக் கொள்ளும்படி அவர்களிடம் கூறினார். மழைகாலம் தொடங்குவதற்கு முன்பாக விசாரணைகள் முடிவடையுமாறு பார்த்துக் கொள்வதற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றையும் அவர் தயாரித்தார். இந்த விசாரணையில் தனக்கு உதவக கூடிய தனது மாவட்ட சகாக்கள் அனைவரையும் கொண்ட ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அச்சம் இன்றியும் பாரபட்சமின்றியும் பணியாற்றுமாறு அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். இந்த விசாரணை அவருடைய முன்முயற்சியால் மட்டுமே தான் துவக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும் ஆதலால் இந்த விசாரணையில் அவருடைய உத்தரவின் காரணமாக் அவருக்கு உதவியாக இருக்கும் ஒருவருக்கும் பாதிப்போ பின்விளைவுகளோ இருக்காது என்று அவர்களுக்கு அவர் உறுதியளித்தார்.

விசாரணையின் முதல் அடியில், அனைத்துத் துறைகளிலிருந்தும் அனைத்து பஞ்சாயத்துக்களிலிருந்தும் வருகைப் பதிவேடுகளை வரவழைக்க அவர் முடிவு செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த வளர்ச்சித் துறைக்குப் பொறுப்பான அதிகாரியிடம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அனைத்து வருகைப் பதிவேடுகளையும் உடனடியாகப் பறிமுதல் செய்யுமாறு மாவட்ட நிர்வாகி உத்தரவிட்டுள்ளதாக அந்த வளர்ச்சி அதிகாரி அனைத்துப் பஞ்சாயத்துக்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.

இன்னொரு சர்ச்சை

அந்த சுற்றறிக்கையில் ‘கைப்பற்றுவது’ (இந்தியில் ஜப்தி) என்ற சொல்லின் பயன்பாடு உடனடியாக ஒரு புதிய புயலைக் கிளப்புவதற்கு கருவியானது. கைப்பற்றுவது என்ற சொல் அந்த மாவட்ட நிர்வாகியின் தப்பெண்ணத்தையும் செருக்கையும் நிரூபிக்கிறது என்று பல அரசியல்வாதிகளால் அறிவிக்கப்பட்டது. அது எங்களது குற்றத்தை விசாரணைக்கு முன்கூட்டியே அனுமானிப்பதாக் இருக்கிறது, நாங்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப் படுகிறோம் என்றார்கள் அவர்கள். அந்த மாவட்ட நிர்வாகியோ தாம் ஒன்றும் கௌரவம் பார்க்கக் கூடியவர் அல்ல என்றும் அந்த சுற்றறிக்கையின் வாசகத்தை ‘கைப்பற்றுவது’ என்பதற்கு பதிலாகக் ‘கோருவது’ என்று மாற்றுவதற்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் அது சுற்றறிக்கையின் உள்ளடக்கத்தை மாற்றாது என்றும் கூறினார். இது அவரை விமரிசித்தவர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. அவர்கள் அவர் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விசாரணையைக் கைவிடவேண்டும் என்று விரும்பினர்.

அவர்கள் மனப்போக்கு இறுதியாக மாற்றம் கண்டதா?

நாட்கள் செல்லச் செல்ல, அரசியல்வாதிகளின் வெளிப்படுத்தும் சீற்றம் அந்த மாவட்டத்தின் அரசாங்க அதிகாரிகளாலேயே திட்டமிட்ட முறையில் தூண்டிவிடப்பட்டு, இயக்கப்படுகிறது என்பதை அந்த மாவட்ட நிர்வாகி மெல்ல மெல்ல உணர்ந்து கொண்டார். எடுத்துக்காட்டாக, அந்த வளர்ச்சி அதிகாரி வேண்டுமென்றே ‘கைப்பற்றுவது’ என்ற சொல்லை சுற்றறிக்கையில் சேர்த்துவிட்டு, அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யுமாறு உள்ளூர் அரசியல்வாதிகளைத் தூண்டிவிட்டுள்ளார். அந்த மாவட்ட நிர்வாகி நடத்திய போராட்டத்தில் ஏறத்தாழ அவர் மட்டுமே தன்னந்தனியராக இருந்துள்ளார். குறுகிய காலத்தில் அவருக்கு நெருங்கிய நண்பராகி விட்டிருந்த இளம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மட்டுமே புயல் வீசிய அந்த நாட்களில் அவருக்குப் பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருந்துள்ளார்.

அடுத்த இரண்டு வாரங்களில், விசாரணை சூடு பிடித்தது. வியக்கத்தக்க விளைவுகள் வந்து கொட்டிய வண்ணம் இருந்தன. அந்த மாநிலத்தில் போது வாழ்க்கையில் மிகவும் மதிக்கத்தக்க நபர்களில் ஒருவராக இருந்த, அந்த மாவட்டத்தின் மிக மூத்த அமைச்சர் அந்த நேரத்தில் அந்த மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தார். அவரது வழக்கப்படி, பின்னிரவில் ஏராளமான உள்ளூர் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் அவர் சந்தித்த பின்னர், அந்த அமைச்சர் பயணியர் விடுதியில் உள்ள தனது அறையில் தன்னை வந்து சந்திக்குமாறு அந்த மாவட்ட நிர்வாகிக்குச் சொல்லியனுப்பினார்.

அந்த மாவட்ட நிர்வாகி அறைக்குள் நுழைந்ததுமே, அவரிடம் ஆழமான எள்ளல் நிறைந்த குரலில், எத்தனை கோடி ரூபாய் ஊழலை நீங்கள் கண்டுபிடித்தீர்கள் என்று அந்த அமைச்சர் கேட்டார். அவரது பண்பாடில்லாத, வெளிப்படைப் பகைமை உணர்வுடன் கூடிய கேள்வியை சற்றும் எதிர்பாராத அந்த மாவட்ட நிர்வாகி, சாதாரணமான குரலில், கோடிகளை எட்டவில்லை அய்யா, விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் விசயம் மொசாமக் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம் என்று பதிலளித்தார்.

அதற்குப் பின்னர் நடந்த 15 நிமிட கோபங்கொண்ட குற்றசாட்டுக்ளைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த மாவட்ட நிர்வாகி மௌனமாகவே இருந்தார். ஒரே ஒரு கட்டத்தில் மட்டும், என்னுடைய கடமை என்று நினைத்ததை மட்டுமே நான் செய்தேன் என்று நியாய பூர்வமாக இடைமறித்துக் கூறினார்.

அந்த சந்திப்பு முடிவு எதுவும் இல்லாமல் ஒரு மோசமான நிலையில் முடிந்தது உணமைதான். ஆனால் அது அந்த மாவட்ட நிர்வாகியை அவ்வளவு ஒன்றும் கலங்கச் செய்யவில்லை, ஏனென்றால் அதைவிட மோசமான ஒரு நிகழ்ச்சி ஒரு சில நாட்களில் நடந்தது. நீர்ப்பாசனத் துறையைச் சேர்ந்த ஒரு இளம் பொறியாளர் அவரது அறையின் கூரையில் தூக்கில் தொங்கியதாகச் செய்தி வந்தது. அவர் ஒரு விதவைத் தாயின் மூத்த மகன், அந்தக் குடும்பத்தின் ஒரே உழைக்கும் நபர். அவருடைய தற்கொலைக் குறிப்பில், தனது மேலதிகாரிகளின் வழிகாட்டுதலால் தனது பொறுப்பில் இருந்த நிவாரணப் பணிகளில் நிறையத் தவறுகள் செய்துவிட்டதாகவும் தாம் அம்பலப் படுவதையும் விசாரிக்கப்படும் அவமானத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், எனவே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இதற்கிடையில், செய்தித்தாள் அறிக்கைகளில் கூச்சலும் பக்கச்சார்பும் அதிகரித்தன. அவ்வப்போது அந்த மாவட்ட நிர்வாகிக்கு தலையங்கப் பக்கத்தில் மட்டும் ஆதரவு கிடைத்தது. அந்த மாவட்ட நிர்வாகியே இடையில் வந்த ஒரு எள்ளல கவிதையை மிகவும் ரசித்தார்.

அதிகாரத்தில் உள்ள எல்லோருக்கும், அதிகாரிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும், பணம் சேர்ப்பது பிறப்புரிமை,  விசாரணையின் மூலம் ஜனநாயகத்திற்கு எதிராக மாவட்ட நிர்வாகி மாபெரும் அநீதி இழைத்துள்ளார் என்று அந்தக் கவிதை கோபத்துடன் அறிவித்தது.

 இந்தியில் அந்தக் கவிதையின் பின்பாட்டு பின்வருமாறு இருந்தது.

மஸ்டர் ரோல், பாய், மஸ்டர் ரோல்! கரே கலெக்டர் பிஸ்டெர் கோல்!’

அதன் மொழிபெயர்ப்பு பின்வருமாறு பொருள்பட்டது:

‘வருகைப் பட்டியல் சகோதரரே, வருகைப் பட்டியல்! மாவட்ட நிர்வாகி பெட்டி படுக்கையைத் தூக்கும் நேரம் வந்து விட்டது!’

இறுதியாக, அவர்களுடைய எதிர்ப்பின் உச்சக்கட்டமாக, அனைத்துக் அரசியல் கட்சிகளையும் சேர்ந்த, ஏறத்தாழ மாவட்டத்தின் அனைத்து பஞ்சாயத்துத் தலைவர்களுமாக 500 பேர், ஆளும் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் அந்த மாவட்ட நிர்வாகியின் கொடுங்கோன்மைக்கு எதிராக முழக்கங்கள் இட்டவாறு நகர் வழியாக அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் தங்களுடைய அணிவகுப்பை ஆட்சியர் அலுவலகத்தில் முடித்துக் கொண்டனர். அங்கு அவர்கள் மாவட்ட நிர்வாகியைச் சந்திக்கவேண்டும் என்று கோரினர். அவர் அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தார். அவருடன் அவரது நண்பரான காவல்துறைக் கண்காணிப்பாளரும் உடன் இருந்தார். மீண்டும் உரத்த முழக்கங்களிடையே, விசாரணை என்ற பெயரில் அவமதிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து பஞ்சாயத்துத் தலைவர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை அவரிடம் கொடுத்தனர். 

அது எதிர்பாராத, முற்றிலும் முன்னெப்போதும் நடந்திராத அதிரடியாக இருந்தது. அடுத்த நாள் காலையில் மாநிலத்தின் அனைத்து செய்தித்தாள்களும் தலைப்புச் செய்திகளாக விரிவான கருத்துரையுடன் இந்தச் செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டன. மாநில முதலமைச்சரிடமிருந்து தலைநகருக்கு உடனடியாக வருமாறு மாவட்ட நிர்வாகிக்கு அழைப்பாணை வந்தது. அவர் உடனடியாக ஒரு சிறப்பு விமானத்தில் கிளம்பிச் சென்றார்.

அவர் தாமதம் ஏதுமின்றி முதலமைச்சரின் அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். விமானப் பயணத்தின் போதே தாம் என்ன சொல்ல வேண்டும் என்பதை அந்த மாவட்ட நிர்வாகி கவனமாக மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். தனது குரலில் தற்காப்பு ஆவேசத்தின் தடயத்துடன் நேரடியாகச் சொன்னார்: ‘அய்யா, நீங்கள் விசாரணையை விலக்கிக் கொண்டால நான் எனது ராஜினாமாவை சமர்பிக்க வேண்டியிருக்கும். ’

முதலமைச்சர் மிகவும் சமரசப்படுத்துபவராகவும் ஆதரவாகவும் இருந்தது அவருக்கு ஆச்சரியமளித்தது. மாவட்ட நிர்வாகி நிதானத்திற்கு வந்தார். முதலமைச்சர் முழு கதையையும் கேட்டார். அவர் செய்தது முழுவதும் சரியான செயல் தான் என்று உறுதியாகக் கூறினார். அவருடைய கொள்கைப்பிடிப்புடன் கூடிய நிலையை அடிப்படையில் சமரசப் படுத்திக்கொள்ளக் கூடாது என்று உறுதியளிக்க வேண்டும் என்பது வரை கூறிக்கொண்டே போனார். மாவட்ட நிர்வாகி அதற்கு ஒப்புக்கொள்ளும் வரை தான் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார் என்றும் கூறினார்.

அரசியல் நிர்ப்பந்தங்கள்

இருப்பினும், அவர் தனது சொந்த வரையறைகளையும் அரசியல் நிர்ப்பந்தங்களையும் பற்றி கூறினார். அந்த மாவட்ட நிர்வாகி முழுவதும் தனது சொந்த முன்முயற்சியில் செயல் பட்டிருந்தாலும், தனது கட்சிக்குள் இருக்கும் பலம் வாய்ந்த எதிர்ப்பாளர்களை அவமதிக்கவும் அம்பலப் படுத்தவும் முதலமைச்சரின் மறைமுக ஒப்புதலுடன் தான் செய்திருப்பார் என்று அவர்கள் நம்புவார்கள், இருப்பினும் மாவட்ட நிர்வாகியின் நிலையை சமரசப் படுத்திக்கொள்ளாமல் தனது எதிர்ப்பாளர்களை திருப்திப்படுத்தும் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது என்று கூறினார்.

இந்த விரிவான முன்னுரையுடன், அந்த விசாரணையை அவரிடமிருந்து எடுத்து ஒரு மூத்த விசாரணை ஆணையரிடம் கொடுக்கலாம் என்று முன்மொழிந்தார். இந்த இடைப்பட்ட பாதையை அந்த மாவட்ட நிர்வாகி ஒப்புக்கொள்வாரா என்று கேட்டார். அத்தகைய ஒரு முன்மொழிவின் நோக்கம் அந்த விசாரணையைத் தோற்கடிப்பதாவே தெரிவதாக அந்த மாவட்ட நிர்வாகி பதிலளித்தார். விசாரணை நடத்துவதற்கு தவறான மனிதரைத் தேர்ந்தெடுப்பதும் மழைக்காலத்திற்கு முன்பாக முடிக்காமல் தாமதப்படுத்துவதும் மொத்த நடவடிக்கையையும் பொருளற்றதாக்கிவிடும்.

இருப்பினும், அந்த விசாரணை அச்சமற்ற, சுதந்திரமான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர்கள் மழைக்கு முன்பாக விசாரணையை முடிப்பார்கள் என்றும் தாம் உறுதியளிப்பதாக முதலமைச்சர் வாக்குக் கொடுத்தார். அந்த மாவட்ட நிர்வாகிக்கு தனது ஒப்புதலை வழங்க மறுப்பதற்குக் காரணம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

முதலமைச்சர் தனது சொல்லைக் காப்பாற்றினார். விசாரணை ஆணையம் அறிவிக்கப்பட்டது,விசாரணை மாவட்ட நிர்வாகியின் கரங்களில் இல்லை என்று அறிந்து, உள்ளூர் அரசியல்வாதிகள் நிம்மதியடைந்தார்கள், பரபரப்பான பஞ்சாயத்துத் தலைவர்களின் கூண்டோடு ராஜினாமா திரும்பப் பெறப்பட்டது. பத்திரிக்கைகளிலும் போது மேடைகளிலும் நடந்த குற்றச்சாட்டுகள் ஓய்ந்தன. அந்த மாவட்ட நிர்வாகி தனக்குப் பிடித்தமான துறைகளில் மாவட்டத்தின் வளர்ச்சிக்குத் திட்டமிடுவதில் தன்னை மூழ்கடித்துக் கொண்டார்.

விட்டுக்கொடுக்காத நேர்மை கொண்ட மரியாதைக்குரிய மூத்த அதிகாரிகளின் குழு ஓன்று விசாரணை ஆணையத்திற்கு நியமிக்கபபட்டது. அடுத்த மாதம் அவர்கள் தங்கள் விசாரணையைத் தொடங்குவதற்கு அந்த மாவட்டத்தில் முகாமிட்டார்கள். அவர்களின் விசாரணைக்கு மாவட்ட நிர்வாகிக்குக் கிடைத்ததை விடக் கூடுதலான ஆதாரங்கள் கிடைத்தன. அந்த மாவட்ட நிர்வாகி தனியாக நடத்தியிருந்தால் சாத்தியமாகியிருப்பதை விட விரிவான அளவுக்கு அந்த விசாரணை இருந்தது. விசாரணையின் முடிவுகள் அந்த மாவட்ட நிர்வாகி கற்பனை செய்திருந்ததை விட மோசமான சேதம் ஏற்பட்டிருந்ததைக் காட்டின. சில பணிகளில் எண்பது விழுக்காடு கட்டுமான வேலைகள் நடந்திருக்கவே இல்லை. அந்த ஆண்டு, அந்த மாவட்டத்தில், நிவாரணப் பணிகளில் செலவழிக்கப்பட்டிருந்த 18 கோடி ரூபாய்களில் ஏறத்தாழ 10 கோடி ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இந்தப் பணத்தில் ஒரு ரூபாய் கூட பஞ்சத்தில் பட்டினி கிடந்த கிராமத்தவர் ஒருவருக்கும் சென்று சேரவில்லை, பத்துக் கோடி ரூபாயில் ஒரு அங்குல சமூகச் சொத்துக் கூட உருவாக்கப்பட்டிருக்கவில்லை. அந்த விசாரணை அறிக்கை மாநில அரசாங்கத்துக்குச் சமர்ப்பிக்கபட்டது. . அதன் ஒரு நகல் மாவட்ட நிர்வாகிக்கும் வழங்கப்பட்டது. ஒவ்வொரு குறிப்பான அறிக்கையிலும் தொடர்புள்ள அரசாங்க அதிகாரிகள் மீதும் பஞ்சாயத்துத் தலைவர்கள் மீதும் தனித் தனியாக காவல் துறை மூலம் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்ய அந்த மாவட்ட அதிகாரி தானாகவே முடிவு எடுத்தார், ஏனென்றால் மீண்டும் செய்யப்படும் எந்தத் தாமதமும், வருகின்ற மழை அனைத்துச் சான்றுகளையும் அடித்துச் செல்வதற்கு விட்டுவிடும்.

ஒரு சில நாட்கள் கழித்து, ஒரு நாள் காலை விழித்தெழுந்த அந்த மாவட்ட நிர்வாகி தூக்கக் கலக்கத்துடன் செய்தித்தாளை எடுத்தார். அடுத்த அரைமணி நேரத்திற்கு அவர் தோட்டத்தில் அமைதியாக, தனியாக அமர்ந்திருந்தார், பின்னர் தனது மனைவியை எழுப்ப வீட்டிற்குள் சென்றார். அந்த நாள் காலைச் செய்தித்தாள்கள் தான் மாற்றலாகியிருப்பதை அறிவித்திருப்பதாக அவரிடம் கூறினார். ஒரேநாளில் அந்தப் பெண்மணி மூட்டை முடிச்சுக்களைக் கட்டியிருந்தார்.

அந்த மாவட்டத்தில் அவர் வேலையில் சேர்ந்து மூன்று மாதங்கள் தாம் ஆகியிருந்தன. ஏராளமான மக்கள் அவரைச் சந்திக்க வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் அந்த மாவட்டத்திலிருந்து வந்த சாதாரண மனிதர்களாக இருந்தனர். அவர் முன்பு பணியாற்றியிருந்த அருகாமை மாவட்டத்து அதிகாரிகள் பலரும் கூட வந்திருந்தனர்.

இது தகுதியானது தானா?

அந்த மாநில தலைமைச் செயலகத்தில் அந்த விசாரணை அறிக்கை புழுதி படிந்து கிடந்தது. எடுத்த முயற்சிக்குப் பலன் இதுதானா?கடைசியில் நீங்கள் எதைத் தான் சாதித்தீர்கள்? என்று பின்னர் அவரது நண்பர்கள் பலர் அவரிடம் கேட்டார்கள்.

அவருக்குத் தெரியாது. அந்த மாவட்டதிற்காக அவர் மேற்கொண்ட பல திட்டங்களை முடிக்காமல் விட்டுச் செல்வது குறித்து அவர் பெரும் வேதனை அடைந்தார்.

அவர் அந்த மாவட்டத்தை விட்டுச் சென்ற பிறகும் நீண்ட காலம் அவரது நெஞ்சின் ஆழத்தில் எண்ணற்ற பிற கேள்விகளும் நிறைந்திருந்தன. நமது அமைப்பு முறையில் ஊழல என்பது தவிர்க்க முடியாததா? அதை எதிர்த்துப் போராடுவது என்பது வீண் வேலையா? பிறரது ஊழலை கட்டுப்படுத்த முயற்சி செய்யாமல், தனிப்பட்ட முறையில் நேர்மையாக இருந்தால் மட்டும் போதுமா? தனது சொந்த பதவிக் காலக் கட்டதிற்கான ஊழலை மட்டும் கட்டுப்படுத்த முடிந்தவரை முயற்சி செய்யுமாறு தனது மூத்த சகா கூறிய அறிவுரையைக் கேட்டிருக்க வேண்டுமா? உள்ளூர் அதிகார அமைப்பில் இருந்த ஒவ்வொருவரும் தனக்கு எதிராக ஓன்று சேர்ந்தது ஏன்? வேறுமாதிரி செயல்பட்டிருந்தால் தனது நோக்கங்களை தாம் எட்ட முடிந்திருக்குமா? ஊழலையும் ஏழை மக்களுக்கு எதிரான அநீதியையும் தீர்மானகரமாகக் கையாள மிகுதியும் நிரந்தரமான வழியில் ஏதாவது செய்ய முடியுமா? அநீதிக்கும் ஊழலுக்கும் எதிராக ஏன் தனித்தே போராட வேண்டியிருக்கிறது?

இந்த தேடுதலுக்குரிய கேள்விகள் அளிக்கும் வேதனைக்கு அவருக்குப் பதில் கிடைக்கவில்லை. இருப்பினும், அவர் ஒரு விசயத்தைப் ப்ற்றி அவர் உறுதியாக உள்ளார். அவருக்குக் காலத்தால் பின்னோக்கிச் செல்ல இன்னொரு வாய்ப்பு இருந்தால், மாறுபட்ட முறையில் செய்ய விரும்புவதற்கு அவருக்கு எதுவும் இருந்திருக்காது.

*** 

ஹர்ஷ் மந்தர், தி இந்து 12. 06. 2011

தமிழில் - வெண்மணி அரிநரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)