நளினியை விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசு கூறிவிட்டது. அரசின் முடிவு சட்டப்படி சரியானதே என்று சென்னை உயர்நீதி மன்றமும் உறுதி செய்து விட்டது. இது நளினிக்கும் அவர் குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியளித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் நளினியின் விடுதலைக்காகத் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்கள் - படைப்பாளிகளிடம் கையெழுத்தியக்கம் நடத்திய என்னைப் போன்ற மனித உரிமை ஆர்வலர்களுக்கு இந்த முடிவு அளித்துள்ள அதிர்ச்சி இன்னும் பெரிது!
நளினியை இம்முறை விடுதலை செய்து விடுவார்கள் என்று நாங்கள் நம்பியிருந்தோம். ஐந்நூறுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் - படைப்பாளிகள் கையொப்பமிட்ட விண்ணப்பத்தோடு 19.7.2008இல் மாண்புமிகு முதல்வரைச் சந்தித்த போது அவர் எங்களிடம் இந்தியப் பிரதமருக்கும் சோனியா அம்மையாருக்கும் நளினியை விடுதலை செய்வதில் மறுப்பில்லை என்றால் எனக்கும் மறுப்பில்லை என்று உறுதியாகச் சொன்னார். அவர் எங்களைத் தில்லி சென்று அவ்விரு தலைவர்களையும் பார்க்கச் சொன்ன போது, இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 161இன் படி இது உங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டதே என்று நாங்கள் எடுத்துரைத்தோம்.
நளினியை விடுதலை செய்ய இந்திய அரசுத் தரப்பலிருந்து எதிர்ப்போ மறுப்போ வரவில்லை என்பதும், அவரை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்பதும் உயர்நீதிமன்ற வழக்கில் தெளிவாக வெளிப்பட்டு விட்டது. எனவேதான் இம்முறை நளினியை அரசு விடுதலை செய்து விடும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தோம்.
நளினி விடுதலை தொடர்பான சட்டச் சிக்கலை யெல்லாம் உயர் நீதிமன்றம் அலசித் தீர்வு கண்டுள்ள நிலையில், அரசு எடுத்துள்ள முடிவின் சட்டவகைச் செல்லுபடித் தன்மையைக் குறித்துக் கேள்வி கேட்பது இக்கட்டுரையின் நோக்கமன்று!
ஆயுள் தண்டனை அல்லது வாழ்நாள் சிறைத்தண்டனை என்பதற்கான சட்ட வரையறைதான் அரசின் முடிவுக்கும் உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கும் அடிப்படையாக உள்ளது. “ஆயுள் என்றால் ஆயள்”; அதாவது ஆயுள் சிறைத்தண்டனை என்றால் உயிருள்ள வரை சிறையிலடைத்தல் என்று பொருள். உயிருள்ள போது விடுதலை செய்தால் அதற்கு முன்விடுதலை (premature release) என்று பெயர். ஆயுள் சிறைத் தண்டனைக் கைதிக்கு விடுதலை கோரும் உரிமை கிடையாது. அவரை விடுதலை செய்வதோ விடுதலை செய்ய மறுப்பதோ அரசின் உரிமை.
தண்டனையின் நோக்கம் பழிக்குப் பழியும் வஞ்சம் தீர்ப்பதும் (revenge and retribution) என்றிருந்த காலம் போய், திருந்தச் செய்வதும் மறுவாழ்வளிப்பதுமே என்று மாறியுள்ள நிலையில், ஒருவரைச் சாகும் வரை சிறையில் அடைத்து வைப்பது இந்த நோக்கங்களுக்கு எப்படி உதவும்? என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு விடையாக வந்ததே முன் -விடுதலைத் திட்டம். ஆயுள்தண்டனைக் கைதி யானாலும் திருந்தவும் மறுவாழ்வு பெறவும் வாய்ப்பளிக்கும் வகையில் குறிப்பிட்ட காலம் (ஏறக்குறைய 14 ஆண்டுகள்) கழித்து முடித்த பின் விடுதலை செய்வதற்கான திட்டம் இது.
ஆயுள் தண்டனைக் கைதி முன்-விடுதலைக்குத் தகுதி பெற்றுள்ளாரா என்று ஆராய்ந்து அரசுக்கு அறிவுரை சொல்வதற்குச் சிறைக்குச் சிறை அறிவுரைக் கழகம் உள்ளது. அறிவுரைக் கழகத்தின் பரிசீலனைக்கு உதவியாக நன்னடத்தை அலுவலர், உளவியல் வல்லுநர் போன்றவர்களிடமிருந்து அறிக்கைகள் பெறப்படுகின்றன.
நளினி தொடர்பாகவும் இந்த நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. ஆனால் அறிவுரைக் கழகப் பரிசீலனை சட்டவிதிகளின்படி முறையாக நடைபெறவில்லை என்று காரணங்காட்டி நளினி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றம் அவரது வழக்கை ஏற்று முறைப்படி அறிவுரைக் கழகப் பரிந்துரை பெற அரசுக்கு ஆணையிட்டது. இந்த ஆணையின்படி மீண்டும் அறிவுரைக் கழகம் அமைக்கப்பட்டு இப்போதைய முடிவு வந்துள்ளது நளினியை விடுதலை செய்ய முடியாதென்று!
அறிவுரைக் கழகம் காட்டியிருப்பவையும் அரசு ஏற்றுக் கொண்டிருப் பவையுமான காரணங்களை விவாதத்துக்கு உட்படுத்துவதில் தவறில்லை. ஏனென்றால் விடுதலை மறுக்க அதிகாரமளிக்கும் அதே சட்டம்தான் விடுதலை கொடுக்கவும் அதிகாரமளிக்கிறது. மனிதநேயமும் கருணையும் சட்டத்திற்குப் பகையல்லவே! “ஆயுள் என்றால் ஆயுள்தான்”; என்ற கோட்பாட்டை இந்திய உச்ச நீதிமன்றம் வகுத்துரைத்தது கோபால் கோட்சே வழக்கில்தான் என்பது அனைவரும் அறிய வேண்டிய செய்தி!
மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற கோபால் கோட்சே (தூக்கிலிடப்பட்ட நாதுராம் கோட்சேயின் சகோதரர்) 14 ஆண்டுகள் கழித்து முடித்ததும் தம்மை விடுதலை செய்யவேண்டும் என்று மகாராஷ்டிர அரசுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கு அது! அவரது வாதத்தை உச்சநீதி மன்றத்தின் அரசமைப்பு ஆயம் (Constitution bench) ஏற்க மறுத்து விட்டது. ஆனால் மகாராஷ்டிர மாநில அரசு (காங்கிரஸ் ஆட்சிதான்), அதே கோபால் கோட்சேயை சில ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்தது. விடுதலைக்குப் பின் அமெரிக்க சஞ்சிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “காந்தியைக் கொன்ற குற்றத்துக்கு நான் வருத்தப்படவில்லை” என்றார் கோபால் கோட்சே!
மகாத்மா காந்தி கொலை வழக்குக் குற்றவாளியிடம் மராட்டிய காங்கிரசு அரசு காட்டிய கருணையை இராசீவ் காந்தி கொலைவழக்குக் குற்றவாளியிடம் தமிழக திமுக அரசு காட்டவில்லையே! ஏன்? நளினியை முன்- விடுதலை செய்யக் கூடாது என்பதற்கு அறிவுரைக் கழகம் தெரிவித்துள்ள காரணங்களில் பழிவாங்குவதும் வஞ்சம் தீர்ப்பதுமான நோக்கங்களே ஓங்கி நிற்கின்றன. திருந்தச் செய்வதும் மறுவாழ்வளிப்பதுமான நோக்கங்கள் மருந்துக்கும் இல்லை என்பதே உண்மை!
முன்னாள் பிரதமர் இராசீவ் காந்தியைக் கொன்றது ஒரு கொடுங்குற்றம் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதன் நோக்கம் என்ன? பத்தொன்பது ஆண்டுகள் சிறையில் சித்ரவதைப்பட்ட ஒரு பெண்ணை விடுதலை செய்ய மறுப்பதற்கு இது ஒரு காரணம் என்றால், இன்னும் 20-30 ஆண்டுகள் கழிந்த பிறகும் - எத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் - இந்தக் காரணம் இப்படியேதான் இருக்கப் போகிறது. அப்படியானால் முன்விடுதலை குறித்த பரிசீலனை என்பதே அபத்தமல்லவா?
கொல்லப்பட்டவர் முன்னாள் பிரதமர் என்பதும், அவரைக் கொன்றது பெருங்குற்றம் என்பதும் வருங்காலத்தில் எப்போதாவது மாறவோ, மறையவோ போகின்ற உண்மைகளா? முன்-விடுதலை மறுப்புக்கு இது ஒரு காரணமாக இருக்க முடியும் என்றால், மற்றக் காரணிகளை அறிவுரைக் கழகம் கருதிப் பார்த்திருக்கவே தேவையில்லையே!
இராசீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஒரே விதமான குற்றம் புரிந்ததாகத் தண்டிக்கப்படவில்லை என்பதை அறிவுரைக் கழகம் கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. நேரடியாகக் கொலைச் சதியில் ஈடுபட்டவர்கள் அழிந்து போய் விட்டார்கள். அறியாமலே உடன் இருந்தவர்கள் மட்டுமே அகப்பட்டுள்ளனர். இவ்விடத்தில் ஒன்று குறிப்பிடப் படவேண்டும். பெரும்பாலான பொதுமக்கள் - அறிவு ஜீவிகள் உட்பட நளினி கொலைச் சதியில் ஈடுபட்டவர் என்றும் கொலையாளிகளில் ஒருவர் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மை அதுவன்று!
திருபெரும்புதூர் போய்ச் சேரும் வரை என்ன நிகழப் போகிறது என்பதே நளினிக்குத் தெரியாது என்பதே உண்மை! உச்ச நீதிமன்ற நீதிபதி திரு தாமஸ் தனது தீர்ப்பில் இதையும் ஒரு காரணமாகச் சொல்லித்தான் இவருக்கு மரண தண்டனை தேவையில்லை என்கிறார். இந்த உண்மையை அறிவுரைக் கழகமோ, அரசோ கருத்தில் கொள்ளாதது ஏன்?
சிறையில்; இருந்தபடி நளினி மேலும் படித்துப் பட்டங்கள் பெற்றதை, முன்-விடுதலைக்கு ஆதரவான ஒரு காரணியாக அறிவுரைக் கழகம் ஏற்றுக் கொள்ளாதாம்! கல்விமான்கள் நிறைந்த அறிவுரைக் கழகம் கல்வியை, அதிலும் பெண் கல்வியை இவ்வளவு அலட்சியமாகப் புறந்தள்ளியிருக்க வேண்டாம். இரண்டாவதாக, ஒரு சிறைக் கைதியின் கல்வி என்பதே அவரது மறுவாழ்வுக்கான ஆயத்தம் அல்லவா?
நளினி தன் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை, தன் செயலுக்கு வருந்த வில்லை என்று அறிவுரைக் கழகம் எந்த ஆதாரத்தின் பேரில் சொல்கிறதெனத் தெரியவில்லை. பிரியங்கா காந்தி நளினியைச் சிறையில் சந்தித்து விட்டு வந்த பின் நடந்த நிகழ்வுக்கு அவர் மிகவும் வருந்துகிறார் என்று கூறிய செய்திக்கு இது முரணாக உள்ளது. ஒருவர் எவ்வளவு மோசமான குற்றம் புரிந்தவராயினும் அவரை அச்சுறுத்தி வருந்தச் செய்வது மனித கண்ணியத்துக்கு மாறானது. மனித உரிமை, மனித கண்ணியம் என்ற பார்வைகளே அதிகார வர்க்கச் சிந்தனை முறைக்கு அப்பாற்பட்டவை போலும்!
சிறையிலிருந்து விடுதலையான பின் நளினி இராயப்பேட்டை பகுதியில் வசிக்கப் போவது சட்டம் ஒழுங்கிற்கு ஊறு விளைவிக்கும் என்று ஒரு காவல்துறை ஆய்வாளர் அறிக்கையிடுவதும், அதையும் அறிவுரைக் கழகம் ஒரு காரணமாகப் பட்டியலிடுவதும், அரசு அதை ஏற்றுக் கொள்வதும் பெரும் நகைப்புக்கிடமானவை மட்டுமல்ல, கேட்பவர்களை முட்டாள்களாகக் கருதுபவை! அவர் எங்கே வசிக்கிறேன் என்று சொன்னால் அது ஏற்புடையது என்று அரசு அறிவிக்க வேண்டும்!
நளினி விடுதலை என்பது ஒரு மனிதநேயக் கோரிக்கை! அற்பக் காரணங்களைக் கூறி அதை மறுப்பது தமிழக அரசுக்கும் - முதன்மையாக முதல்வர் அவர்களுக்கும் மாறாத அவப்பெயரையே ஏற்படுத்தும்! மனிதநேயத்தை அரசியலுக்காக மறுப்பது வரலாற்றுக் கறை! எல்லாம் சட்டப்படி நடக்கிறதா? என்று பார்த்தால் போதாது. அந்தச் சட்டத்தில் கருணை கலந்துள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
கருணையில்லாத சட்டம் காட்டு மிராண்டிகளை உருவாக்குமேயன்றி உயிர்ப்புள்ள ஒரு சமூகத்தை ஒருபோதும் உருவாக்காது! இப்போது கடைசியாக வந்திருப்பது ஒரு செல்பேசிக் கதை! தமிழகச் சிறைகளில் கைதிகளிடமிருந்து செல்பேசி கைப்பற்றப்படுவது புதிய செய்தியே அல்ல. இம்முறை நளினியிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக வந்துள்ள செய்தி மட்டும் சட்டப் பேரவையில் (காங்கிரசு) உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்டு அமைச்சர் விடையளிக்கும் அளவுக்குப் பெரிதுபடுத்தப்பட்டுள்ளது. செய்தியின் பின்னணியும் அது பரபரப்பாக வெளியிடப்பட்டுள்ள முறையும் ஐயப்பாடுகளுக்கு இடமளிப்பதாக உள்ளன.
நளினிக்கு முன ;விடுதலை கிடையாது என்பதற்கு மாபெரும் காரணங்களைக் கூறி அரசு மறுத்துள்ள நிலையில், நளினி மறுபரிசீலனை கோரி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், 19 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் பெண்ணுக்கு விடுதலை மறுத்ததை மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாகக் குறை கூறி வரும் நிலையில், தராசுக் கோலை மறுபக்கம் சாய்க்க செல்பேசிக் கதை புனையப்பட்டிருப்பது கண்கூடு!
எந்த ஆயுதமுமற்று நிராயுதபாணியாகச் சட்டத்தின் மூலம் போராடும் ஓர் அபலைப் பெண்ணுக்கு எதிராக ‘அரசு’ இவ்வளவு வன்மம் பாராட்டுவது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.