கள்ளக்குறிச்சியில் சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்த மாணவி ஸ்ரீமதியின் வழக்கு விசாரணையில் இரண்டாம் முறையாக பிணக்கூராய்விற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தனது ஆய்வறிக்கையை விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. இந்த இரண்டாவது பரிசோதனை பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.

srimathi postmortem report 602இரண்டாவது அறிக்கையின் படி மாணவியின் உடலில் பல்வேறு காயங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. முதல் அறிக்கையில் இல்லாத காயங்கள் பற்றிய குறிப்புகள் இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கின்றன. எலும்பு முறிவு ஏற்பட்ட தடயங்கள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த விவரங்கள் போராடிய பொதுமக்களின் கேள்வியை நியாயப்படுத்துவது போலவே அமைந்திருக்கிறது. மாணவியின் மரணச்செய்திக்கு பின்பான மக்களின் சனநாயகப் போராட்டத்தை காவல்துறை நிராகரித்தது.

திமுக அரசிடமிருந்து எவ்வித நெருக்கடியும் எழாத நிலையில், காவல்துறை வழக்கினை பதிவு செய்வதில் வெளிப்படுத்திய அலட்சியம் மக்கள் போராட்டத்தினை தீவிரப்படுத்தியது. இந்தப் போராட்டங்கள் அதிதீவிர நிலையில் பள்ளி மீதான வன்முறையாக மாறவும் செய்தது. இந்த வன்முறையை சாதகமாக்கிக் கொண்ட காவல்துறை தனது தவறினை மறைத்திட வன்முறையாளர்கள் மீது தனது ஆர்வத்தினை திருப்பியது. மாணவியின் உடற்கூராய்வில் பலவேறு வலிமையான தடையங்கள் கிடைத்தபோதிலும் அதன் மீதான காவல்துறையின் நடவடிக்கைகள் வலிமையற்றதாக இருந்தது.

இதுமட்டுமல்ல, உடற்கூராய்வும் முறையான வழிமுறைகளின்படி நடைபெறாமல் சமரசம் செய்யப்பட்டதாக இருந்தது. இந்நிலையிலேயே இரண்டாவது பிணக்கூராய்விற்கான தேவை எழுந்தது.

இந்நிலையில், நேற்று (25-08-2022) அளிக்கப்பட்ட இந்த அறிக்கை மேலதிக சந்தேகங்களை உறுதிப்படுத்துகிறது. முதலில் நடந்த பிணக்கூராய்வில் பதிவு செய்யப்படாத தடயங்களை இரண்டாவது ஆய்வு வெளிப்படுத்துவதால் காவல்துறையின், மருத்துவத் துறையின் நேர்மை கேள்விக்குள்ளாகிறது. ஒரு இளம்மாணவிக்கு நிகழ்ந்த இந்த கொடூர மரணத்தை குறித்து ஏன் அதிகார வர்க்கம் நேர்மையாக நடக்க மறுக்கிறது எனும் கேள்விக்கான பதில் என்னவாக இருக்க முடியும்?

கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியின் இந்துத்துவ பள்ளி பின்னனியே இந்த அதிகார வர்க்கம் தடுமாறும் நிலைக்கு தள்ளி உள்ளது. இந்துத்துவ மதவெறி அமைப்புகள் அதிகார வர்க்கத்தின் மீது செலுத்துகின்ற ஆதிக்கம் அதிர்ச்சியை கொடுக்கிறது. இந்த ஆதிக்கம் சட்டவிரோதமானது. இந்த சட்டவிரோத கட்டமைப்பினை கேள்வி எழுப்பி, வேரறுக்க வேண்டிய திமுக அரசு தனது கடமையை நிறைவேற்றாத நிலையையே இச்சம்பவம் எடுத்துரைக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் குற்ற விவரங்கள் வெகுமக்களுக்கு மட்டுமல்ல, அரசிற்கும் பலவேறு எச்சரிக்கை செய்தியை கொடுக்கிறது. இந்துத்துவ ஆதிக்கத்தின் கீழ் இயங்கும் அதிகாரவர்க்கத்தினர் தமிழ்நாட்டு அரசின் புற்றுநோயாக பரவும் முன்னர் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

- மே பதினேழு இயக்கம்

Pin It