விருதுநகர் மாவட்டம் பனையடிப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த கம்மவார் சமூக நலச் சங்கத்தின் செயலாளர் மகாலட்சுமி என்பவர், இறுதி ஊர்வலத்தின்போது தங்களது தெருக்களைச் சிலர் பயன்படுத்தக் கூடாது என்றும், பொதுச் சாலையையோ வழக்கமான பாதையையோ அவர்கள் பயன்படுத்த உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுவைச் சமர்ப்பித்திருந்தார்.
இதில் பின்வருமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. “இறுதி ஊர்வலத்தைத் தங்களது தெருக்கள் வழியாக நடத்தக் கூடாது என்று சொல்வது அரசமைப்புச் சட்டக்கூறு 15-க்கு எதிரானது. இறுதி ஊர்வலத்தின்போது ஊராட்சிக்குச் சொந்தமான தெருக்கள், சாலைகள் போன்றவற்றைச் ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரும் பயன்படுத்தலாம். தங்களது தெருக்களின் வழியாக இறுதி ஊர்வலம் நடத்துவதால் பொது அமைதி கெடுவதாக மனுதாரர் தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல. தங்களது சங்க உறுப்பினர்களின் நலன் சார்ந்து செயல்படாமல் பாகுபாட்டைத் தூண்டிவிடும் இதுபோன்ற மனுக்கள் மூலம் தங்களைத் தரம் தாழ்த்திக் கொள்ளக் கூடாது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றால் அது கிராம மக்களின் நல்லிணக்கத்திற்கு எதிரானதாக ஆகிவிடும்” என்று தீர்ப்பளித்து மனுவைத் தள்ளுபடி செய்ததோடு மனுதாரருக்கு ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களை அனைவரும் பயன்படுத்துவதற்கான போராட்டம் நடத்தப்பட்டு நூறாண்டுகள் கடந்தும், வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் தெருக்களில் நுழையக் கூடாது என்று நீதிமன்றத்திற்குச் செல்லும் அவலமான சூழல் இன்னும் நிலவி வருகிறது. இது பெரியாரின் தேவையை இன்றும் வலியுறுத்துகிறது.
இதை ஒரு பிரச்சினையாக்கி நீதிமன்றத்திற்கே சென்றார்கள் என்றால், அந்த மனுதாரர் எந்த அளவிற்கு ஜாதி என்னும் மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பார். இதனை ஒரு வழக்காக அந்த வழக்கறிஞரும் எடுத்துக் கொண்டுள்ளாரே? அரசமைப்பையும் சேர்த்துக் கற்றவர்தானா அந்த வழக்கறிஞர்? இப்படி ஒரு வழக்கைத் தொடுப்பது அரசமைப்புச் சட்டத்திற்கும், ஏன் மனித மாண்பிற்குமே எதிரானது என்று அந்த வழக்கறிஞருக்குத் தெரியாதா? நீதிமன்றம் நியாயமாக இவ்வழக்கை எடுத்த வழக்கறிஞருக்கும் சேர்த்து அபராதம் விதித்திருக்க வேண்டும்.
எவ்வளவோ முற்போக்கான நிகழ்வுகளைத் தமிழ்நாடு சாதித்திருந்தாலும், இது போன்ற நிகழ்வுகள், பெரியாரிய இயக்கங்கள் இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டிய தேவையையே நினைவூட்டுகின்றன.
- கருஞ்சட்டைத் தமிழர்