போலீஷ் கவிஞர் செஸ்லாவ் மிலோஸ், 93, போலந்து நாட்டில் கிரகோவ் நகரில் தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட இல்லத்தில் 2004 ஆகஸ்ட் 14ஆம் நாள் காலமானார். அவர் பெற்ற பல பாராட்டு களில் நோபல் பரிசும் ஒன்று. செஸ்லாவ் மிலோஸ் நம் காலத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர் என்பதை நான் தயக்கமின்றிச் சொல்வேன் என்கிறார் நோபல் பரிசு பெற்ற ஜோசப் பிராட்ஸ்கி, "போலீஷ் மொழிக்கான நளினத்தின் பிரம்மாண்டத்தை அவரது கவிதைகளிலி ருந்து உரித்து அதை அம்மணமாக்கினா லும் பைபிள் மாந்தர்களுக்கு மட்டுமே இணையாகச் சொல்லக்கூடிய தீவிரமான தயக்கமற்ற மனதின் இறுக்கத்தை நாம் எதிர்கொள்வோம்' என்கிறார். நோபல் பரிசு பெற்ற மற்றொரு எழுத்தாளர் ஸீம்ஸ் ஹீனி தனது கருத்தைத் தெரிவிக் கும்போது, "மிலோஸ் சிறந்த கவிஞர். இருபதாம் நூற்றாண்டில் தனக்கொரு இடத்தைப் பிடித்துள்ளார் என்றால், ஒவ்வொரு மொழியிலும் கவிதை என்ற சொல் விழிப்படையச் செய்கின்ற தீவிர மும் மகிழ்ச்சிக்குமான பசியை போக்கு பவையாக இவரது கவிதைகள் இருப்ப தால்தான். இந்த உடலால் வாழ்கின்ற இனிமைக்கு திடீரென நாம் உயிர்ப்பு கொள்ளும் கணங்களின் மீது நம்பிக்கைக் கொள்ள உதவுகிறார். இருந்தும் நமது சமகால வாழ்க்கையின் அங்கமாக இருப்பதற்கான பொறுப்புகளிலிருந்தும் தண்டனைகளிலிருந்தும் நம்மை அவர் விடுவித்துவிடுவதும் இல்லை'.

மிலோஸ் கவிதைகளை 2003ம் ஆண்டு ஹிந்தியில் நான் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். கிரகோவ் ஜகெய்லோ னியன் பல்கலைக்கழக ஹிந்தி அறிஞர் முனைவர் லெனடா செக்லங்கோ உதவி யுடன் அதைச் செய்தேன். குவா கர் என்ற தலைப்பில், மிலோஸ் தேர்வு செய்து அங்கீகரித்த 70 கவிதைகளின் மொழி பெயர்ப்பை இருமொழி நூலாக வாணி பிரகாசன் பதிப்பித்தது. நான் அவரது கவிதைகளை மொழிபெயர்த்துக்கொண் டிருந்தபோது அவரது இல்லத்தில் இந்தப் பேட்டி எடுக்கப்பட்டது. அவர் இதமான மனநிலையில் இருந்தார். இந்தியாவில் அவரது படைப்பு மீதான ஆழ்ந்த கவ னிப்பும் அதன் விரிவும் கண்டு வியந்தார். துயருறு முதுமையில் உடல்நடுக்கம் கண்டிருந்தது. அவரது கவிதைகளில் ஒன்றின் இந்தி மொழிபெயர்ப்பை என்னைப் படிக்கும்படி சொன்னார். கவி தையின் ஒலி மாறுபட்டும் அழகாகவும் இருப்பதைக் கண்டார். அவரது பழைய நண்பர் ராஜா ராவ் பற்றி விசாரித்தார். ஹிந்தி எழுத்தாளர் அஜேயவை கலி போர்னியாவில் தாம் சந்தித்ததைக் குறிப் பிட்டார். இந்தியாவுக்கு வரமுடியாம லேயே போனதற்கு வருந்தினார். அவ ரால் ஒரு வாரத்துக்கு மேல் இந்தியப் பயணத்துக்காக ஒதுக்க முடியாது. இந்தியாவில் ஒரு வாரம் மட்டுமே தங்கி இருப்பதென்பது பரிதாபகரமானது என்று அவர் எண்ணியிருந்தார்.

நான் அவரைச் சந்தித்தபோது அவரது செவித்திறன் குறைந்திருந்தது. என் கேள்விகளைச் சத்தமாகப் படிக்கச் சொன்னார். அளவான குரலில் அதற்குப் பதில் அளித்தார். பின்னர் பேட்டியின் பிரதியை சிறு மாறுதல்களுடன் அனு மதித்தார். விளக்கு மந்தமாக ஒளிரும் அந்த வரவேற்பு அறையில் அந்தப் பிற்பகலின் பின்பகுதி பல வகையிலும் நிறைவாக இருந்தது. அவரது கனத்த குரல், ஸ்லாவிக் தொனி, அவருடைய பெரிய உருவம், சுற்றிலும் இருந்த பெரிய புத்தக அலமாரிகள், அவற்றில் இருந்த உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட அவரது நூல்கள். மரணத் தின் மிக நெருக்கமான நேரத்தில், அவர் அதைச் சொல்லவோ அல்லது எவ்வகை யிலும் குறிப்பால் உணர்த்தவோ இல்லை என்றாலும், அவர் படைப்புகள் நிலைத்து வாழும் என்று அவர் அறிவார் என்ற உளப்பதிவுடன் வெளியே வந்தேன்.

வாஜபேயி: இன்றைய உலகின் மூத்த கவிகளில் ஒருவர் என்ற முறையில் 20ம் நூற்றாண்டின் கவித்துவ பயணத்தை, தனிப்பட்ட முறையிலும் பொதுவாக வும், எவ்வாறு சுருக்கமாகச் சொல் வீர்?

மிலோஸ்: பல பரிசோதனை ஓட்டங் களையும் முன்னோடி இயக்­கங்களை யும் நாம் கண்டுள்ளோம். ஆனால், உண்மையில், நீடித்த பங்களிப்பாக நிலைப்பவர் தனிப்பட்ட நபர்கள் தான், ஆராவாரப் பிரகடனங்களும் கூச்சல் போக்குகளும் அல்ல.

வாஜபேயி: அப்படி நிலைத்தவர்கள் என்று நீங்கள் கருதும் சிலரது பெயர்களைச் சொல்ல இயலுமா?

மிலோஸ்: அண்மையில், கிரகோவ் நகரின் வைடாவ்நிக்டு லிட்ராக்கி பதிப்பகம் நான் மொழிபெயர்த்த டி.எஸ். எலியட்டின் தி வேஸ்ட் லாண்ட் மற்றும் வில்லியம் பட்லர் யீட்ஸின் தி டவர், செய்லிங் டுவின் பைசாண்டியம் ஆகியவற்றைப் பதிப் பித்தது. உலக இலக்கியத்துக்கு இந்தக் கவிஞர்களுடையதை நிலைத்த பங்க ளிப்பாக நான் கருதுகிறேன்.

வாஜபேயி: மற்ற மொழிகளில், போலிஷ், ருஷ்யன், பிரெஞ்ச் போன்ற மொழிகளில் உள்ளவர்கள் பற்றி . . .

மிலோஸ்: நல்லது . . . போலீஷ் மொழியில் அது வேறு விஷயம். மற்ற மொழிகளில் என் கணிப்பு . . . பிரெஞ்ச் மொழியில் . . . பிரெஞ்சில் பிலெய்ஸ் சென்ட்ரார், ருஷ்ய மொழி யில் ஓசிப் மெண்டல்ஸ்டாம்.

வாஜபேயி: இருபதாம் நூற்றாண்டைப் போன்ற ஒரு அராஜகமான நூற்றாண் டில் கவிதையை வாழ அனுமதித் திருப்பது எது?

மிலோஸ்: என் கணிப்பில் கவிதை வாழ்க்கைக்கானதாக, மரணத்துக்கு எதிரானதாக இருக்கிறது. அது வாழ் வோடும் நம்பிக்கையோடும் எப்போ தும் தொடர்பு கொண்டிருக்கிறது.

வாஜபேயி: கவிதை தன் வளர்ச்சியில் மனிதத் தன்மையை இழந்துவிட் டதா? (கவிதைகளில்) முன்பிருந் ததைப் போன்ற அதன் மானுடப் பெருமை, அதன் அழிவின்மையை அறிவித்தலில் . . .

மிலோஸ்: நல்லது . . . இருபதாம் நூற் றாண்டில் துன்பத்துக்கு எதிரான நீடித்த போராட்டத்தை நாம் கண்டுள் ளோம். இந்த வளர்ச்சியில் உலக அழ கின் சில அலங்கார ஆடைகளைக் கவிதை இழந்துள்ளது. விழுமியங் களைக் காப்பதற்காக உலக அழகிற்கு அணிசேர்க்கும் சில விஷயங்களைக் கவிதை விட்டுவிட வேண்டிய தாயிருந்தது.

வாஜபேயி: நீங்கள் உங்கள் கவிதை

களில் தீமை மற்றும் துன்பப்படுதல் இரண்­டையும் சமாளிக்க முயன்றுள்ள தாகச் சொல்லப்படுகிறீர்கள். தீமை உருவாக்கக்கூடிய மிகப் பெரியதும் நம்மை அழுத்துவதுமான ஒரு கட்ட மைப்பு, மனிதத் துயரத்தை ஒரு விதத்தில் முக்கியமற்றதாக, பொருளற் றதாக மாற்றிவிடுகிறதா?

மிலோஸ்:...என்னளவில், துன்புறுதல் தான் என் கவிதையின், என் "வெல்­டான்ஸ்சவுங்' கவிதை யின் மையம். ஆனால், மனிதத் துயரங்களில் மட்டுமே நான் அதிகம் கவனம் செலுத்த மாட்டேன். என் சிந்தனையில் கீழ்திசை நாடுகளின் கூறுகள் இருப்பதாக எண்ணுகிறேன். குறிப்பாக, எல்லா உயிரினங்களுக்கும் துன்புறும் திறனைப் பரவலாக்குவ தில். இந்தப் பண்புக் கூறு, கிறிஸ்துவ மரபுகளின்படி, மனிச்சியன் ஆகும். ரோமன் கத்தோலிக்க மதம் . . . என்றே தோன்றுகிறது. அது என்னை ஓரளவு சமயபேதமுள்ளவானாக்குகிறது.

வாஜபேயி: புதிய வழிகளில் துயரங் களைப் பிரதிபலிக்கும் புதிய வழி களை உரு­வாக்குவதில் உங்கள் கவிதை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதா?

மிலோஸ் : போரின்போது, வார்ஸா நகரம் நாஸிகளின் ஆக்கிரமிப்பில் இருந்தபோது, உலகம் என்ற தொடர் கவிதையை எழுதியிருந்தேன். உலகைப் பற்றி ஒரு குழந்தையின் பார் வையைப் போன்றன அவை. ஒரு வகையில், வில்லியம் பிளேக்கின் தாக்கம் இல்லாமலேயே இந்தக் கருத்தை அடைந்தேன். அந்த நேரத் தில் அது எனக்குப் புரியவில்லை. ஆனால், பிளேக்கின் அறியாமையின் பாடல்கள் மற்றும் அனுபவத்தின் பாடல்கள் போல ஒருவிதத்தில் அந்தக் கருத்தும் ஒன்றாக இருந்தது. ஆக, நாஸி ஆக்கிரமிப்பின்போது நான் அறியாமையின் பாடல்களை எழுதி னேன். ஒரு மாற்றாக, மீட்பின் தேட லாக. விழுமியம் பொதுவாக மதிப் பிழந்ததைத் தடுத்தாட்கொள்ள அதை எழுதினேன். ஒரு குழந்தைப் பார்வை யால் உலகை புனர்வாழ்வளிக்கச் செய்யும் செயலாக அது இருந்தது. அது சிறுவர் நூல்களைப் போல சிறு வடிவத்தில் எழுதப்பட்டிருந்தது.

வாஜபேயி: மானுட கண்ணியத்தின் வித்துக்கு இடமும் குரலும் தருவதாக உங்கள் கவிதை இருப்பதாகத் தோன் றுகிறது. இந்த மானுட மீட்டெடுத்த லுக்கான செயல், உங்கள் கவிதைக்கு ஒரு ஆன்மிக அர்த்தத்தையும் மதச்சார் பற்ற சிறப்பியல்புகளால் எதிர்பாராத அவற்றுக்கு அறியவராத முக்கியத்து வத்தைத் தருகிறதா?

மிலோஸ்: என்னளவில், அந்தக் கருத்து புனிதமான கவிதையாக இருக்க வேண்டும் என்பதுதான் அதை நான் செய்ய இயலும் என்று அதற்குப் பொருளல்ல, ஆனால் அதுதான் என் கொள்கை. அதற்காகத் தான் நான் கவிதையை மதிக்கிறேன், குறிப்­பாக ஒரு கவிஞன் ஒரு புனிதமான பகு தியை எழுத இயலுமானால். மேலும், பைபிளில் மொழி பெயர்ப்பு செய்து கொண்டிருப்பதும் அந்தக் காரணத்துக் காகவே எனலாம். உயர்ந்த பாணி மற்றும் அந்த மொழியைத் தேடி, நான் அடித்துச் சொல்வேன், புனிதமான மொழி.

வாஜபேயி: பத்தாண்டுகள் நாடு கடத் தப்பட்டு வாழ்ந்திருக்கிறீர்கள்.

மிலோஸ்: ஆமாம், நாற்பது வருடங் களுக்கு பெர்க்லேயில் வாழ்ந்தேன்.

வாஜபேயி: இந்த வலி மிகுந்த சூழல்தான், சர்வாதிகாரத்தின் தீமை யையும் ஆன்­மிகத்தின் வெறுமையை யும், குரூரத்தையும் அதேவேளையில் ஜனநாயகத்தின் சுதந்திரத்தையும் உணர, விவாதிக்க, கண்டடைய உங்களுக்கு அனுகூலமான நிலையை அளித்ததா?

மிலோஸ்: உங்களுக்குத் தெரியும்... என் கவிதையை வெளியிட இயலா மல் நான் பாரிஸில் இருந்தபோது சில வேளைகளில் நான் உரைநடைக்குத் திரும்ப நிர்ப்பந்­திக்கப்பட்டேன். சர்வாதிகாரத்துக்கு எதிரான ஒரு நூலை எழுதினேன். தி கேப்டிவ் மைன்ட். சர்வாதிகார முறைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு அது எனது பங்களிப்பு என்றே நான் சொல்ல வேண்டும். யுத்த காலத்தில் நான் தொகுத்த நாஸி எதிர்ப்பு படைப்புகளுக்கு இணையாகவும் இருக்கக் கூடும். ஆக, இருபதாம் நூற்றாண்டின் கொந்தளிப்பில் நானும் அங்கம் வகிக்க முயன்றிருக்கிறேன். அதுதான் என் படைப்புத் தொழிலின் முக்கிய மான அங்கம் என்று பொருளல்ல. ஆனாலும் என்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளுக்கு நான் கல்நெஞ்சனாக இல்லை என்பதை இது நிரூபிக்கிறது.

வாஜபேயி: சொந்த மொழியின் மண் ணுக்கு அப்பால் நாடு கடத்தப்பட்டு வாழ்ந்திருக்கிறீர்கள். இது உங்கள் மனதில் பிரச்சினையைத் தோற்றுவித் ததா அல்லது இந்தத் தொலைவு சாதகமானதை வழங்கியதா?

மிலோஸ்: ஏகப்பட்ட பிரச்சினைகள். ஆனால் என் மொழியுடன் எந்தச் சிரமத்தையும் நான் பெற்றிருக்க வில்லை. என் மொழியில் நான் நன்றாக நிலைத்திருந்தேன். ஆகவே வேற்றுமொழியில் எழுதுகின்ற கேள் வியே எனக்கு எழவில்லை. சொல்வ தாக இருந்தால், பிரெஞ்ச், ஆங்கிலத் தில் என்னால் எழுதியிருக்க முடியும் என்றாலும் நான் என் மொழியோடு நிறுத்திக்கொண்டேன்.

வாஜபேயி: பல ஆண்டுகளுக்கு முன்பு, உங்கள் கவிதைக்கான அகண்ட வடிவத்துக்காக ஏங்கினீர்கள். நீங்கள் குறுங்கவிதை அல்லது அதிக நீளமற்ற கவிதைகளையே பெரும்பாலும் எழுதியிருக்கிறீர்கள். அகண்ட வடிவம் என்று எதைக் குறிக்கிறீர்கள். அதை உங்களால் அடைய முடிந்துள்ளதா?

மிலோஸ்: ஓரளவுக்கு. ஆனால், இலக் கிய உத்திகள் மாறும் ஒரு கட்டத்தின் ஊடாக நாம் வாழ்கிறோம், அண்மைக் காலமாக வாழ்ந்து வந்துள்ளோம் என்றே கருதுகிறேன். உதாரணமாக, அறிவார்ந்த கவிதைகள் சாத்தியமாக இருக்கிறது. சில கவிதைகள் சில நேரங் களில் கட்டுரைகள் போல, தத்துவக் கட்டுரைகள் போலத் தொனிக்கின் றன. தவிர, நாவலுக்கும் ஆய்வுரைக் கும் இடையிலான எல்லைப் பகுதி மறையப் பார்க்கின்றது. ஆக, ஏராள மான மாற்றங்களும் ஒரு சில வடிவ நெளிவுகளும் ஏற்பட்டு இருக்கின் றன. பல பரிசோதனை இலக்கிய உத்திகளை நான் கையாளுகிறேன். நான் மூன்று ஆய்வுரைகள் எழுதியி ருக்கிறேன். நெறி குறித்த ஆய்வுரை, கவிதை குறித்த ஆய்வுரை, மெய்ஞ் ஞானம் குறித்த ஆய்வுரை....

வாஜபேயி: உங்கள் கவிதையில் சொல் கிறீர்கள், "துயரத்தின்போது தேவைப் படுவன கொஞ்சம் ஒழுங்கும் அழ கும்தான்...' நம்முடைய கெட்ட காலங் களில், கவிதை ஓர் ஒழுங்கையும் அழ கையும் கொண்டு வருமா, எவ்வாறு?

மிலோஸ்: ஆமாம், வலிந்து எழுதப் பட்ட சில கவிதைகளும்கூட அதைச் சாதிக்­கின்றன என்றே கருதுகிறேன். உதாரணமாக, ரோஸ்விச்ஸ் கவிதை களைப் போல.

வாஜபேயி: விருப்பமில்லா பொருளி­ லிலிருந்து சேகரிப்பது எதை? ஏதுமில்லை, மேன்மையின் அழகை அழகு பற்றிய கருத்து நம் காலத்தில் பொருத்தமற்றதாக மாறிப்­போகா விட்டாலும், ஒருவித சந்தேகப் பொருளாக மாறியிருக்கவில்லையா?

மிலோஸ்: என் வாழ்க்கை முழுவதும் நான் அழகியலை எதிர்த்து வந்துள் ளேன். அழகினால் மயக்கப்பட்ட கவி தையை நான் எப்போதுமே ஒரு வகை யில் சந்தேகமாகவே பார்த்து வந்தி ருக்கிறேன். தேர்வு செய்ய வேண்டிய கட்டத்தில் பற்றற்ற, தூய அழகை ஒரு வழியில் ஏற்க சம்மதிப்பேன்.

வாஜபேயி: அனைத்து விழுமியங்க ளும் நீர்த்துவிட்ட இக்காலத்தில் விழுமியங்­களும் பாடுபொருளும் தடையற்று கலந்து வெளிப்படுவதற் கான ஒரு பரப்பைக் கவிதை எவ்வாறு உருவாக்க இயலும்?

மிலோஸ்: விழுமியங்கள் நீர்த்துப் போனதாக நான் நம்பவில்லை. பெரி தும் பேசப்படுகிற பின்நவீனத்துவம் குறித்து நான் பச்சாதாபம் கொண்டதே யில்லை. விழுமியம் நீர்த்தது என்பது ஒரு வகை வழக்கமாகப் பேசப்படும் சொல்லாக இன்று இருக்கிறது. இந்த விஷயத்தில் நான் மிக கவனமாக இருக்கிறேன்.

வாஜபேயி: ஒரு கவிஞராக, மெண்டல்­ ஸ்டம் வார்த்தைகளில் சொல்வதெ னில், உங்கள் கவித்திறனைப் பயன் படுத்தி மனிதமற்ற ஒரு கருத்தாக் கத்தை உமது வாசகன் நம்பும்படி எப்போதாகிலும் செய்ததுண்டா?

மிலோஸ்: ஆமாம். மயக்குபவர்களாக மாறும் ஆர்வத்தூண்டுதலுக்குக் கவி ஞர்கள் ஆளாகிறார்கள். வழக்கமாக, சாத்தானின் தூண்டுதல் முகஸ்துதி யாக வடிவம் கொள்கிறது. ஒரு இளம் கவிஞன் அவனைப் பற்றி, மக்கள் பேசுவது பற்றி அதிக உணர்வுமயமாக இருப்பான். இளம் கவிஞனாகச் சில புரட்சிகர கவிதைகள் எழுதியபோது நான் இதை அனுபவித்திருக்கிறேன். இந்தக் கவிதைகள் பாராட்டுகளைப் பெற்றன. ஏனெனில், அவை புரிந்து கொள்ள எளிமையாக இருந்தன. அவற்றில் ஒருவிதத்தில் வெளிப்படை யான பாடுபொருள் இருந்தது. ஆனால் அதன் பிறகு, நான் அவமானமடைந் தேன். அதுபோன்ற மயக்குதல்களை கையாள்வதை விட்டுவிட்டேன்.

வாஜபேயி : கருத்தியல்படி பேசினால், நீங்கள் மார்க்ஸியம், ஹெகலியனிசம் இவற்றுடன் மற்போரே நடத்தியதாகத் தோன்றுகிறது. மார்க்ஸ், ஹெகல் ஆகியோர் குறித்த பெரும் விவாதத்து டன் உங்கள் கவிதைகள் அமைந் துள்ளன எனச் சொல்லப்படுகின்றது. இதை ஏற்கிறீர்களா, இதை விரிவாகப் பேச விரும்புகிறீர்களா?

மிலோஸ்: நான் இடதுசாரி கருத்து களால் தூண்டப்பட்டுள்ளேன். வலது சாரி கருத்துகளால் எப்போதுமே தூண்டப்பட்டதில்லை. ஒரு நேரத்தில் மார்க்ஸைவிட ஹெகலால் அதிகம் தூண்டப்பட்டேன். ஹெகல் கருத்துகளில் எந்த அளவுக்குத் திளைத்திருந் தேன் என்றால், என்னை (அதிலி ருந்து) காப்பாற்ற கருத்தியலுக்கே சம்பந்தம் இல்லாமல், என் குழந்தைப் பருவத்தை ஒரு நாவலாக எழுத வேண்டியிருந்தது.

வாஜபேயி: மார்க்ஸ் குறித்து என்ன சொல்கிறீர்...

மிலோஸ்: நல்லது, நீங்களே அறிவீர், அது சிக்கலான ஒன்று. வாழ்வின் தொடக்க நாளிலேயே, சோவியத் யூனி யன் பற்றியும் அந்த அரசின் மனித மற்ற தன்மை பற்றியும் அறிவேன். ஆகவே, நான் ஒரு சோஷலிஸ்ட்டாக இருந்தேன். ஆனால் ஒருபோதும் கம்யூனிஸ்ட்டாக இருக்கவில்லை. என் மார்க்ஸிய தூண்டுதல்களும் அதனால் எல்லைக்குட்பட்டிருந்தன.

வாஜபேயி: நம் காலத்தில் சமயக் கற்பனைகள் குறைந்துவிட்டதாக ஒரு முறை புலம்பியிருக்கிறீர். ஆனால், புனிதத்தின் கடந்தகால நினைவு களைக் கேள்விக்கு உட்படுத்த நீங்கள் சொன்னதாகக் கூறப்படுகிறது. இது கவிதையின் பன்முகப் பார்வையின் ஓர் அங்கமா, வேண்டுமென்றே செய்த முரணா அல்லது ஒத்த நிகழ்வா?

மிலோஸ்: இல்லை. தொழில்நுட்பம் தான் சமயக் கற்பனையை எல்லைப் படுத்­துவதாக நான் கருதுகிறேன். உண்டு, இல்லை என்ற இரண்டுக்கும் இடையே சமநிலையை தக்கவைத்து இருக்கிறேன் என்ற உண்மைக்கு நான் வருந்துகிறேன். உதாரணமாக, எனது சமீப கவிதைத் தொகுப்பின் தலைப்பு "இரண்டாவது வெளி'. நாம் இரண் டாவது வெளியை இழந்துவிட்டதற் காக, நாம் அனுபவிக்கும் விஷயங்க ளின் தன்மைக்காக அக்கவிதைகள் வருந்து­கின்றன. ஏனெனில், சமயக் கற்பனையின் மீது தொழில்நுட்பத் தின் நெருக்குதல் காரணமாக நாம் ஓரே சூழலில் இருக்கிறோம் நம்பிக் கைவாதியாகவும் அவநம்பிக்கை வாதியாகவும்.

வாஜபேயி: பாவத்தின் நிழலிலான பாலுணர்வுக் கவித்துவம், பாவ உணர்வு அற்ற பாலுணர்வுக்கவித் துவம் இந்த இரு சொற்தொடர்க ளும் காதலைக் கையாளும் உங்கள் கவிதைகளில் இடம்பெறுகின்றன. அப்படியெனில், நீங்கள் ஏன் கிறிஸ் துவ பார்வையிலான காதலிலிருந்து ஒரு விதத்தில் நீங்களே தள்ளி நிற்கிறீர்கள்.

மிலோஸ்: நான் கத்தோலிக்க கல் வியைப் பெற்றவன். பாவம் என்ற கருத்து என்னுள் ஆழமாக வேரூன்றி உள்ளது. ஆக, காதலை பாவ உணர்வி லிருந்து முற்றிலுமா விடுவிக்க என் னால் பிரிக்க முடியாது, தனியே பிரிக்க என்னால் இயலவில்லை. அது ஒரு மோசமான தாக்கமாக இருக்கக் கூடும். மோசமானதுதான்...

வாஜபேயி: முதல்பாவத்தின் குற்ற உணர்வு இல்லாத காதலுக்காக நீங்கள் ஏங்கியதுண்டா?

மிலோஸ் : ஒரு காலத்தில் என்னை ஒரு பரவசமான அவநம்பிக்கைவாதி என நானே என்னை வரையறுத்தேன்.

வாஜபேயி : ஓர் ஆழமான உணர்வில் உங்கள் கவிதைகள் மானுட நிலை விதி, துயரம், வேதனை, பாவமன் னிப்பு பற்றிய ஒருமைப்பாடாக உள் னன. அவை யாவுமே ஏதோ ஒரு வழி யில் ஒரு செவ்­வியல் கூறுகள் தான். இருந்தும், நீங்கள் நம் காலத்தின் மிகை உணர்வுக் கவிதைகளை (ரொமான் டிக்) நிலைநாட்டியவரா கவே கருதப் படுகிறீர்கள். அது எப்படி?

மிலோஸ்: காதல் உணர்வு கவிதை

களின் உணர்வானது போலிஷ் கவிதை களில் வலுவாக உள்ளது. மிகை உணர் வின் கவிதைகளின் தாக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட போலிஷ் கவி ஞர்களே கிடையாது என்றே கருதுகி றேன். எனது வேர்கள் மிகை உணர்ச்சிக் கவிதைகளில்தான் உள்ளன. குறிப் பாக, "மிக்கி விக்ஸி'யில். ஆக, மிகை உணர்ச்சிக் கவிதைகளில் தான் நான் மாசுபட்டேன் என்பதே வெளிப்படை.

வாஜபேயி: ஆனால், நீங்கள் ஒரு சிறந்த செவ்வியல் கவிஞர். நிஜத்தில் நீங்கள் நவீன செவ்வியலாளர் . . .

மிலோஸ்: உணர்ச்சிக் கவிதைகளை நீங்கள் எப்படி அர்த்தப்படுத்துகி றீர்களோ, அதைப் பொறுத்துள்ளது. உணர்ச்சிக் கவிதைகள் பல நிலை பெற்றுள்ளன.

வாஜ்பேயி: உங்கள் முயற்சியால்தான் இருபதாம் நூற்றாண்டின் முக்கிய மரபாக, போலிஷ் கவிதைகள் அங்கீ காரம் பெற்றன. குறைந்த கால அள வில், மற்ற மொழிகள், உரிமை கோர இயலாத உலகக் கவிஞர்கள் போலந் தில் அதிகம் தோன்றியதற்கான கார ணம் என்ன என்று கருதுகிறீர்கள்? உங்களோடு மேலும் மூன்று கவிஞர் கள் உள்ளனர். இஸட் ஹெர்பர்ட், டி.ரோஸ்விச்ஸ், ஸிம்போர்ஸ்கா.

மிலோஸ்: மிக நல்ல கேள்வி. அது போலந்து கவிதை வரலாற்றுடனும், நமது வரலாற்று அனுபவங்களுடனும் தொடர்பு கொண்டது. போலிஷ் கவிதை உலகில் நான் ஒரு விதமான வடிகட்டுதலைக் காண்கிறேன், வர லாற்று அனுபவங்களை வடிகட்டுதல். அது எந்த அளவுக்கு என்றால், ஸிம்போர்ஸ்காவின் எதிலும் ஒட்டாத கவிதைகள்கூட போர்களுடன் தொடர் பில்லாத அல்லது துயர அனுபவங்கள் (வரலாற்றுத் துயரம்) இல்லாத கவி தைகளும்கூட, அவற்றில் அடியோ டும் அனுபவங்களுக்காக மதிப்பு பெற்றுள்ளன. அப்படித்தான் அமெ ரிக்க விமர்சகர்கள் போலிஷ் கவிதைக் கூடத்தைப் பார்க்கின்றனர். சுருக்க மாகச் சொல்வதானால், சொந்த அனு பவங்களையும் வரலாற்று அனுபவங்களையும் கலவையாக்கி வெற்றி கண்ட கவிதைகளாகப் பார்க்கின்றனர். நீங்கள் குறிப்பிடும் கவிஞர்களுக்கும் இது பொருந்தும்.

வாஜபேயி: "பூமியின் இயற்கை அதிச யங்களுக்கும், இருபதாம் நூற்றாண்டு வரலாற்றில் அசுர செயல்களுக்கும் சாட்சி' என்ற உங்களது கவிதை, ஒரு ஆழமான பாதிப்படைந்த உணர்வில் ஒரு தவறுக்கு உடந்தையாக இருந்தது எனலாமா?

மிலோஸ்: நான்தான் உங்களிடம் கேட்கவேண்டும். இந்து மரபிலிருந்து மிகவும் மாறுபட்ட மரபிலிருந்து வரும் கவிஞரான நீங்கள், வரலாற்றின் அசுர சக்திகள் குறித்து ஒருவேளை வேறுவிதமாகக் காண்பீர். ஏனெனில், அத்தகைய இயற்கையைப் பல நூற்றாண்டுகளாக நீங்கள் அறிவீர், அசுர சக்திகளுக்குப் பலகோடி பேர் பாதிக்கப்பட்டதை அறிவீர். ஆகவே, எமது நூற்றாண்டின் அசுரத் தனத்திற் கும் பலகோடி ஆண்டுகளான இயற் கையின் அசுரத்தனத்திற்கும் வேறு பாடிருப்பது பெரிய விஷயம் அல்ல.

வாஜபேயி: "ஆதலால் தேவை கருதி சூன்யம், இருத்தல் எதன் பக்கமும் இல்லை கவிதை' என்று, உங்களு டைய, "புக் ஆப் லூமினஸ் திங்க்ஸ்' முன்னுரையில் அற்புதமாக எழுதியி ருக்கிறீர்கள். ஆனால் தனிப்பட்ட முறையில், இக்கட்டான தருணங்க ளில், சூன்யத்தை நோக்கி எதிர் விசையால் இழுக்கப்பட்டீர்களா?

மிலோஸ்: இல்லை... ஏனெனில், அதைக் கண்ணியமற்றதாக உணர்ந் துள்ளேன்.

வாஜபேயி: பௌத்தர்கள் எதிர்விசை உங்களின் சூன்யமாக (ஏதுமற்றதாக) மாற்றிக் கொள்ளுதல் கருத்தைக் கொண்டுள்ளனர்...

மிலோஸ்: புரிந்துகொண்டு பதிலளிக் கும் அளவிற்கு நான், பௌத்தத்தை அறியவில்லை.

வாஜபேயி: இந்தியா உங்களுக்குக் குறிப்பாக எதையாவது அர்த்தப்படுத்துகிறதா? "ராஜாராவுக்கு' கவிதையில் உங்கள் தொலைவை நெகிழ்வுடன் குறிப்பிட்டிருக்கிறீர்கள். உங்களது மற்ற கவிதைகளில் சில படிமங்கள் பெரும்பாலும் பௌத்தம் சார்ந்ததாக உள்ளன. இந்தியாவுடனான உங்கள் தொடர்பு பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மிலோஸ்: கபீரின் சில கவிதைகளை நான் மொழிபெயர்த்ததைச் சொல்லி யாக வேண்டும். கபீரின் கவிதைகளை ஆங்கிலத்தில் வித்தியாசமானதாகக் கண்டேன். தாகூர் மொழிபெயர்த்த அக்கவிதைகள் ஆங்கில மொழியில் அபத்தமாக இருந்தன. ஆனால் மற்ற மொழிபெயர்ப்புகளைக் காட்டிலும் அதிக உண்மையானதாக இருந்தது. அதனால், மொழிபெயர்ப்பின்போது தாகூரின் ஆங்கில மொழிபெயர்ப் பையும் பயன்படுத்திக்கொண்டேன். வடிவம் குறித்து என்னால் ஊகிக்க மட்டுமே முடிந்தது. ஏனெனில் அக் கவிதைகள் ஆங்கிலத்தில் இருந்தன. ஆனால் கபீர் ஒரு குறிப்பிடத்தக்க மரபு. அவர் (எதற்கும்) பிரதிநிதியாக இருப்பதில்லை. ஆக, கபீர்தான் இந்தியாவுடனான என் தொடர்பு. மற்றபடி எனக்கு இந்தியா என்பது எல்லாவற்றிலும் ஒருமை காணுதல் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கா கவும் வருந்தும் உணர்வுகொண்ட மரபு (கொண்டுள்ள) நாடு. ஆக, அதுதான் என் தொடர்பு. இந்த உணர்வு என் வாழ்வு முழுதும் இருந் துள்ளது. ஆகவே இது மிக நெருக்க மான தொடர்பு, வெறும் மேலெழுந்த வாரியானது அல்ல.

வாஜபேயி: உங்கள் நோபல் பரிசு உரையில், "என் கவிதைகள் அறிவார்ந்­ தவை. இருண்ட காலத்தில் அமைதி மற்றும் நீதியின் ஆட்சிக்கான ஏக்­ கத்தை வெளிப்படுத்துபவை' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இருபது ஆண்டு ­களுக்குப் பின்னர், இந்த ஏக்கம் நிறைவேறாமலேயே இருக்கின்றதா அல்லது நிறைவேறியுள்ளதா? குறைந் தது கவிதைகளிலாவது.

மிலோஸ்: உங்களுக்குத் தெரியும். சர்வ வல்லமை படைத்த இரு ஆட்சிகளைக் கடந்து வாழ்ந்தவன் நான். ஆறு வயதில் ருஷ்ய நகரத்தில் ருஷ்யப் புரட்சியைக் கண்டேன். வளர்ந்த மனிதனாக 1933இல் நாஸி ஆட்சியைக் கண்டேன். இரண்டின் வீழ்ச்சியையும் நான் பார்த்தேன். என்னை ஒரு நம்பிக்கைவாதியாக மாற்ற இதுவே போதும்.

வாஜபேயி: உங்கள் கவிதைகள் "மொழிபெயர்ப்பிலும்கூட ஒரு கவிதை மகிழ்ச்சியையும் வழிகாட்டு தலையும் தரும் என்ற பழைய எதிர் பார்ப்புகளை பூர்த்தி செய்கின்றன' என்று ஸீமஸ் ஹீனி குறிப்பிடுகிறார். இதைச் செய்ய நீங்கள் முற்பட்ட துண்டா? மகிழ்வு தரல் மற்றும் வழிகாட்டுதலில் உங்கள் கவிதை வெற்றியடைகிறது என்று அறிந்தி ருக்கின்றீர்களா?

மிலோஸ்: ஸீமஸ் ஹீனி என் நல்ல நண்பர். என் கவிதையில் அவருக் கான ஒன்றைக் கண்டிருக்கிறார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. வட அயர்லாந்தில் உள்நாட்டுப் போர் பிரச்சினையில் அவர் சிரமப்பட்டார். என்னிடத்தில் என்னிடத்தில் மட்டு மல்ல, போலிஷ் கவிதைகளிடத்தில் அந்தக் கடினமான, துயரமான கேள்வி களைக் கையாளும் ஒரு வகையைக் (கவிதைகளில்) கண்டார். ஐரிஷ் பிரச்சினையுடன் ஒத்துப் போக உதவுகிற ஒன்றை அவர் எமது கவிதை களில் கண்டார். இதை நான் நெறிப் படுத்துகிறேன் என்று பொருளல்ல. சில அதிகார அடுக்குகளின் விளைவு இது. வரலாற்று அனுபவங்களால் புகுத்தப்பட்ட அதிகார அடுக்கு, கேள்விகளின் அதிகார அடுக்கு....

வாஜபேயி: மீண்டும் ஹீனி குறிப்பிடு ­கையில், உங்கள் கவிதைகளில், "மானுட கண்ணியத்துக்கும் உயிர்வாழ் தலுக்கும் கலாச்சார நினைவு அவசி யம் தேவையாக இருக்கிறது' என்று உணர்த்துவதாகச் சொல்கிறார். அதை ஒப்புக்கொள்கிறீர்களா?

மிலோஸ்: ஆமாம். அதை வலுவாக உணர்கிறேன். நான் பல ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டு வாழ்ந்தேன். இருப்பினும் என் மரபில் வேரூன்றி இருக்கின்ற மிக வலுவான உணர்வைப் பெற்றேன். நான் பிறந்த சிறிய மாவட் டமான லிதுவானியாவில் வேரூன்று வதிலிருந்து எனக்குச் சக்தி எழுந்தது. அவை எனக்கு இன்றும் மெய்யா னவை. என் மூதாதையர், அவர்தம் கல்லறைகள், மரபுகள். உதாரணமாக, என் மூதாதையர் பற்றிய குறிப்புகள் அடங்கிய 19ஆம் நூற்றாண்டின் தேவா லயப் புத்தகப் பிரதியொன்று அண் மையில் கிடைக்கப் பெற்றேன். ஆக, இவை மரபில் வேரூன்றி இருக்கின் றன. ஒரு சிறிய மாவட்டத்தைச் சேர்ந்த மரபு என்ற போதிலும். உண் மையில், என்னைச் சுற்றியிருந்த நவீன பாணிகள், கருத்துகளில் என்னை இழந்துவிடாமல் பிழைத்தி ருக்க இவை உதவின.

வாஜபேயி: "மானுடத் துயரத்துக்குப் போதுமான கவனம் செலுத்தப்பட ­வில்லை' என்பதாகக் கருதுகிறீர்களா? அதாவது...ஆழமாகவும் தவிர்க்க முடி­யாமலும் உங்கள் கவிதை தழுவி யுள்ள துயரங்களை...

மிலோஸ்: என்னை நானே கண்டிப்ப தாக இருந்தால், அது என் கவிதைக ளில் மானுடத் துயரத்தை அதிகம் உள்­வாங்கி முன்வைக்க இயல வில்லை என்பதற்காகத்தான் இருக் கும். நாம் மீண்டும் மரபு குறித்த கேள்விக்கே திரும்பவோம். இப்போ தைய தருணத்தில், லுதுவானியாவில், நான் பிறந்த ஊரில் செஸ்லாவ் மிலோஸ் பிறந்த ஊர் பவுண்டேஷன் ஒன்று உள்ளது. ஒரு பழைய தானியக் களஞ்சிய அறை ஒரு கருத்தரங்க மண்டபமாக மாற்றப்பட்டுள்ளது. போலீஷ், லிதுவானியக் கவிதைகள் குறித்து கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. ஆக, இது என் கடந்த கால, என் குடும்பத்தின் கடந்தகால (நினைவுகள் மீதான) பற்றுதலின் மற்றொரு பக்கம்.

வாஜபேயி:

"என் நதியோர கிராமத்தில்

இனியொரு நாளும் மண்டியிடேன்

என்னில் கல்லாய் இருப்பது

கரைந்து விடும்படி...

கண்ணீர், கண்ணீரைத் தவிர

மீதமில்லை என்றாகாத படி . . .

இந்த வயதான காலத்தில் கல் கரைந்து வெறும் கண்ணீர்தான் மிஞ்சியது என்பதாய் உணர்கிறீர்களா?

மிலோஸ்: 52 ஆண்டுகளுக்குப் பின் னர் நான் பிறந்த ஊருக்குத் திரும்­ பினேன். நதியோரப் புற்களையும் மலர்களையும் பார்த்தேன். அது பற்றி கவிதை எழுதி­னேன். அந்தக் கவிதை "புல்வெளி' என நினைக்கிறேன். ஐம்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஊர் திரும்புதல் என்ற தொடர் கவிதையைச் சேர்ந்தது. கண்ணீரைப் பற்றியது

(சிரிக்கிறார்....)

வாஜபேயி: "தெருவோர நாய்' கவிதை தொடக்கத்தில், "ஆழமானதும் வாழ் வில் ஆழமாக உணரப்படுவதுமான ஒன்றை' கவிதை போல சமயநெறி வெளிப்­படுத்துவதில்லை என்று சொல் வதைப் போலத் தோன்றுகிறது. உங் களைப் பொருத்தவரை, இருபதாம் நூற்றாண்டில் மானுட நிலைமை பற் றிய உச்சபட்ச தகவல்களைக் கவிதை சேகரித்துள்ளது. இது நவீன இறையி யல் மீதான கவிக் கண்டனமா?

மிலோஸ்: இல்லை. கவிதையும் இறையியலும் ஒன்றாக இணைந் தவை என்று கருதுகிறேன். இறையி யல் என்பது மிகவும் சுருக்கமானது. ஆனால், கவிதையில் இறையிய லுக்குப் பாதை போட முடியும். ஒரு பாதிரியார் என்னைப் பற்றி எழுதிய புத்தகம், இறையியலுக்கு என் கவிதைகள் எவ்வளவு முக்கியம் என நிரூபிப்பதாக உள்ளது.

வாஜபேயி: உண்மையைச் சென்று சேரவும், தார்மீக குறைதீர்ப்பு மற்றும் ஆறுதலை வழங்கவும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வகையில், மரபுவழி மதத்துக்கு ஒரு மாற்றாக கவிதை இருக்கிறதா?

மிலோஸ்: இல்லை. மதத்துக்குக் கவிதை மாற்றாக முடியாது. இருப்பி னும் இருபதாம் நூற்றாண்டின் தொடக் கத்திலிருந்து அத்தகைய பதிலியாகக் கவிதை மாறி வருவதைப் பார்த்து வருகின்றோம். நம்பிக்கை வலுவிழந் ததன் விளைவாக மதத்துக்கு மாற்றாக கவிதையை முன்­வைக்கும் போக்கு இருந்து வந்துள்ளது. இது ஐரோப்பிய கவிதைகளில் நிகழ்ந்­துள்ளது. இந்தியா வில் எப்படி என்று எனக்குத் தெரி யாது. ஆகவே, மதத்துக்கு மாற்றாக கவிதை மாறுகின்ற போக்கு உள்ளது. அத்தகைய பதிலியாக மாறுவது கவி தைக்கே மிக ஆபத்தானது. ஏனெனில் உள்ளதைவிட உயர்ந்த இடத்தை கவிதைக்கு அது வழங்கிவிடுகிறது.

வாஜபேயி: டபிள்யு.பி யீட்ஸ் பற்றி டி.எஸ்.எலியட் குறிப்பிடுகையில், "தாம் வாழ்ந்த கால வரலாற்றை தன் வரலாறாகவும் அவர்களைப் புறந் தள்ளிவிட்டு அந்தக் காலக்கட் டத்தைப் புரிந்துகொள்ள இயலாதபடி ஓர் அங்கமாகவும் உள்ள மிகச் சிலரில் ஒருவர்' என்று சொல்கிறார். இது உங்களுக்கும் பொருந்தும். இது உங் களிடம் ஒருவித அறவியல் நெருக்க டியை அல்லது சுமையைத் தந்துள்ளதா?

மிலோஸ்: தூண்டுதல் பற்றி முன்பு பேசினோம். என் காலத்திற்குப் பொறுப்பேற்கிற, காலத்தின் எதிர்பார்ப்புகளுக்காக வாழும் எழுத்தாளனாக என்னை நான் நினைத்த தருணங்கள் உண்டு. அதிர்ஷ்டவசமாக, எனக்கு இப்போது வயதாகிவிட்டது. அத்த கைய உணர்­வெழுச்சிகள் ஏற்படுவ தில்லை. எது செய்யப்பட்டுவிட் டதோ, அது செய்யப்பட்டுவிட்டது. அறவியல் பொறுப்புகளை உணர்ந்த போது அவை சிறு தெறிப்புகளாக இருந்தன. உதாரணமாக, 1943இல் வார்ஸா நகரம் எரிந்துகொண்டிருந்த போது அருகிலேயே மகிழ்ச்சியான சம்பவம் நடந்துகொண்டிருந்தது. சிறு மியர் குதிரையேறி விளையாடிக்­ கொண்டிருந்தனர். இது பற்றி கவிதை எழுதியிருந்தேன். ஆனால், வரலாறு பற்றிய பொறுப்பை உணர்ந்தேன் என்று அர்த்தமல்ல. இது ஒரு தூய்மையான அறவியல் விஷயம்.

வாஜபேயி: கவிதை என்பது உங்கள் வரிகளின்படி, "கடைசி அரண்' என் றால், இருபதாம் நூற்றாண்டின் கவிதை அதன் வலிமையில், தைரியத் தில், தாக்குப்­பிடிப்பதில் அதனை நிரூபித்துள்ளதா?

மிலோஸ்: கவிதையின் எதிர்காலம் குறித்து நான் அவநம்பிக்கை கொண் டி­ருக்கவில்லை. இருபதாம் நூற்றாண் டின் கவிதை தனது மீள் எழுச்சியை நிரூபித்­துள்ளது. என் மரணத்துக்குப் பின்னும் இது தொடரும். நல்லது, ஒருவர் பெக்கட்டை அவநம்பிக்கை வாதி என்று எடுத்துக்கொண்டால், பெக்கட்டின் அவநம்பிக்கையில், அதன் சந்தங்களில் ஆன்ம விடுதலை இருக்கிறது. சந்தம் என்பது மொழி யின் கடைசி அரண் என்று சொல் வீர்கள் என நினைக்கிறேன். ஆனால் மொழியின் சந்தம் என்பது, நீங்களும் ஒரு கவிஞர் என்பதால் உங்களுக்குத் தெரியும், மீட்சியின் வழியாகவும் இருக்கிறது.

வாஜபேயி: "ஓர் அடி முன்னால், ஓர் அடி பின்னால்' என்று உங்கள் கவிதை பற்றி போப்பாண்டவர் விவ ரிப்பதை, இன்றைய மதச்சார்பற்ற காலக்கட்டத்தில் கவிதையின் ஆன் மிகப் பங்கு என அங்கீ­கரிக்கப்பட்ட விவரணையாக அதை எடுத்துக் கொள்ள முடியுமா?

மிலோஸ்: ஆம், போப்பாண்டவர் என்னிடம் சொன்னார். அவருக்கு நான் பதில் சொன்னேன். "புனிதத் தந்தையே, இருபதாம் நூற்றாண்டில் சமயக் கவிதையை வேறு விதத்தில் எழுத இயலுமா?'

வாஜபேயி: அவர் என்ன சொன்னார்...

மிலோஸ்: அவர் சிரித்தார். ஆனால் என் சமயநெறி கட்டுரை நூல் அப்படியாக இருக்கிறது. ஏனெனில் அதில் நான் சாதக பாதகம் இரண்டையும் முன்வைக்கிறேன். ஒரு சுருக்கெழுத்தாளன் போல, மக்கள் உணர்வதை முன்வைக்கிறேன். ஏனெனில் அவை முழுதும் முரண்களாக இருக்கின்றன. அவர்கள் கத்தோலிக்கர் என்றாலும் அவநம்பிக்கையாளர் என்றாலும் அவர்களுக்கே உரித்தான முறையில் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையே இருக்கிறார்கள். அவநம் பிக்கையாளர்கள் நம்பிக்கைக்கான தூண்டுதலைப் பெறுகிறார்கள்.

******* 

அசோக் வாஜபேயி ஒரு கவிஞர். கலாச்சார விமர்சகர். முன்னாள் அரசு அதிகாரி.

நன்றி: த லிட்டில் மேகஸின்

Pin It