வீரமணி உரிமை கோர அவரிடம் எந்த சான்றும் இல்லை - உயர்நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு
‘குடிஅரசு’ உள்ளிட்ட பெரியார் ஏடுகளுக்கும் பெரியார் படைப்புகளுக்கும் கி.வீரமணி பதிப்புரிமை கோரும் உரிமை கிடையாது. அதற்கான ஆவணங்கள் அவரிடம் ஏதுமில்லை. பெரியார் நூல்கள் மக்கள் அரங்கிற்கு வந்துவிட்டது என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிடுவதற்கு எதிராக, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பெரியார் நூலை வெளியிடும் பதிப்புரிமை தமக்கு மட்டுமே உண்டு என்றும், பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுவது தமது பதிப்புரிமையில் குறுக்கிடுவதாகும் என்றும் கூறி, பதிப்புரிமையில் குறிக்கிட்டதால் ரூ.15 லட்சம் தமக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் வழக்கில் கோரி இருந்தார்.
பெரியார் திராவிடர் கழகம் 2008 செப்டம்பர் 17 ஆம் தேதி குடிஅரசு தொகுப்புகளை வெளியிடத் திட்டமிட்டிருந்ததற்கு இடைக்காலத் தடை கோரியிருந்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, அப்போதுள்ள நிலையே நீடிக்க (Status Quo) உத்தரவிட்டார். தடைகோரிய மனு உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சந்துரு, குடிஅரசு தொகுப்புகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்றும், மனுதாரர் (வீரமணி) தமக்கு பதிப்புரிமை உண்டு என்பதை நிரூபிக்கவில்லை என்றும் கூறி 27.7.2009 இல் தீர்ப்பளித்தார். இத் தீர்ப்பை எதிர்த்து கி.வீரமணி, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. இரண்டு நீதிபதிகள் விசாரணையை தங்களால் நடத்த இயலாது என்று கூறி விட்டனர்.
வழக்கு முடிந்து விடாமல் இழுத்தடிக்கப்பட வேண்டும் என்பதிலேயே வீரமணியின் தரப்பினர் ஆர்வமாக இருந்தனர். மீண்டும் மீண்டும் வழக்கைத் தள்ளி வைக்கும் கோரிக்கையையே வீரமணி வழக்கறிஞர்கள் முன் வைத்தனர். இறுதியாக இந்த வழக்கை மேல்முறையீட்டு அமர்வு நீதிபதிகள் எப்.எம். இப்ராகிம் கலிஃபுல்லா, என். கிருபாகரன் ஆகியோர் விசாரணைக்கு தலைமை நீதிபதியே உத்தரவிட்டார். இந்த அமர்வு முன் முழுமையான விசாரணை நடந்தது. விசாரணை முடிந்து நீதிபதிகள் தீர்ப்பை தள்ளி வைத்த பிறகு, கோடைகால விடுமுறை வந்து விட்டது.
விடுமுறைக்குப் பிறகு கடந்த 9 ஆம் தேதி நீதிபதிகள், தங்கள் தீர்ப்புகளை வழங்கினர். நீதிபதிகள் அறையில் வழக்கறிஞர்கள் முன்பு நீதிபதிகள் தீர்ப்பினை அறிவித்தனர். நாடு முழுதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தீர்ப்பு பதிப்புரிமை வழக்கில் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகிறது. கழக சார்பில் வழக்கறிஞர் எஸ். துரைசாமி, இளங்கோவன், மூத்த வழக்கறிஞர் ஆர். தியாகராஜன், கிளேடிஸ் டேனியல் ஆகியோர் வாதிட்டனர். நீதிபதிகள் - வீரமணி தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதங்கள் எல்லாவற்றுக்கும் விரிவான, சட்டப் பூர்வமான பதில்களை முன் வைத்து மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர். வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் முக்கிய பகுதிகள் :
‘குடிஅரசு’ தொகுப்புகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுவதற்கு தடை கோரி, மனுதாரர் (கி.வீரமணியும்) தொடர்ந்த இந்த மேல்முறையீட்டு மனு, தம்மையும் இணைத்துக் கொள்ள தஞ்சை இரத்தினகிரி தாக்கல் செய்த மனு இரண்டையும் சேர்த்தே, இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது. மனுதாரர்கள், எதிர் மனுதாரர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்களின் கருத்துகளை இந்த நீதிமன்றம் உன்னிப்பாக பரிசீலித்தது. இரு தரப்பிலும், பல ஆவணங்கள் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டன. அவைகளையும், நீதிமன்றம் உன்னிப்பாகப் பரிசீலித்தது. இந்த வழக்கில் மனுதாரர் கோரிய இடைக்காலத் தடை மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் (நீதிபதி சந்துரு) தீர்ப்பும் உன்னிப்பாக பரிசீலிக்கப்பட்டது.
பெரியாரின் சிந்தனைகளான குடிஅரசு தொகுப்புகளை வெளியிட தடைகோரும் மனுதாரர் சார்பில் (கி.வீரமணி) முதன்மையாக எடுத்து வைத்த வாதம், தங்களுக்கு மட்டுமே பதிப்புரிமை உள்ளது என்பதாகும். 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின், சட்டப் பிரிவுகளின் கீழ், அவர் இந்த உரிமையை கோருகிறார். எதிர் மனுதாரர்களான கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் இந்தத் தொகுப்புகளை வெளியிடுவது, தமக்குரிய பதிப்புரிமையில் குறுக்கிடுவதாகும் என்றும், எனவே குடிஅரசு கட்டுரைகள், சுய மரியாதை இயக்க தொடர்பான எழுத்துகள், நூல்கள், வெளியீடுகள் எவற்றையும் வெளியிடும் உரிமை அவர்களுக்குக் கிடையாது என்றும், அவர்கள் வெளியிடுவதற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் (கி.வீரமணி) கோருகிறார். அத்துடன், இதற்காக ரூ.15 லட்சம் தமக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதும் அவரது கோரிக்கையாகும். மனுவில் நீதிமன்றத்திடம் முதன்மை கோரிக்கையாக, தமக்குரிய பதிப்புரிமையை மனுதாரர் குறிப்பிடும் மனுதாரர், மனுவின் உள்ளடக்கத்தில், வேறு ஒன்றைக் குறிப்பிடுகிறார்.
அதாவது 1983 ஆம் ஆண்டில் தம்மால் நியமிக்கப்பட்ட புலவர் இமயவரம்பன் தலைமையிலான குழுவினர் ‘குடிஅரசு’இதழ்களிலிருந்து தொகுத்த பெரியாரின் கட்டுரைகள் தொகுப்பை, யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று, (Stealthily removed) அதே தொகுப்பையே அவர்கள், நூலாக அச்சிட்டு வெளியிட இருப்பதாகக் கூறுகிறார். பெரியார் நூல்களுக்கு தமக்கு மட்டுமே பதிப்புரிமை உண்டு. அதில் குறுக்கிடுவதை அனுமதிக்கக்கூடாது என்பதே வழக்கில் மனுதாரரின் முதன்மையான கோரிக்கை. ஆனால், திருச்சியில் தம்மால் நியமிக்கப்பட்ட குழுவினர் தொகுத்தவற்றை தெரியாமல் எடுத்துச் சென்று, வெளியிட்டுவிட்டதாக தனது வழக்கு மனுவில் கூறுகிறார். இதில், தனக்குரிய பதிப்புரிமையை, எந்தக் குறிப்பான ஆவணத்துக்குக் கோருகிறார் என்பதை திட்டவட்டமாகக் கூறவில்லை.
பதிப்புரிமை சட்டத்தின்படி (பிரிவு 17) ஒரு நூலின் பதிப்புரிமைக்கு உரியவர், அந்த நூலை எழுதியவர்தான். அதே நேரத்தில் வேறு ஒரு இதழிலோ செய்தித்தாளிலோ அதன் உரிமையாளர் கீழ், வேலை செய்யும் எழுத்தாளர், அந்த பத்திரிகையில் எழுதிய படைப்புகளுக்கான பதிப்புரிமை, அதன் உரிமையாளருக்கே உண்டு. அப்படித்தான் பதிப்புரிமை சட்டம் உட்பிரிவு (17(ய)) கூறுகிறது. எழுத்தாளர், தனது எழுத்துக்கு பதிப்புரிமை கோர வேண்டும் என்றால், அதற்காக தனியாக உடன்படிக்கை ஒன்றை உரிமையாளருக்கு எழுதிக் கொடுத்திருக்க வேண்டும். அத்தகைய உடன்படிக்கை ஏதும் இல்லாதபோது, உரிமையாளருக்குத்தான் பதிப்புரிமை போய்ச் சேரும். பதிப்புரிமை சட்டத்தின் அடுத்த பிரிவு (எண்.18), பதிப்புரிமைக்குரிய ஒருவர், எழுத்து மூலமாக, அந்த உரிமையை முழுமையாகவோ, பகுதியாகவோ, பதிப்புரிமையை வழங்க வேண்டும் என்று கூறுகிறது.
இந்த இரு சட்டப் பிரிவுகளின்படி, ஒருவர் பதிப்புரிமை கோருவதற்கு இரு நிபந்தனைகள் உள்ளன. ஒன்று - ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஆசிரியர், தனக்கான பதிப்புரிமையை கோருவதற்கு, அந்த நிறுவன உரிமையாளருடன் ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். மற்றொன்று பதிப்புரிமைக்கு உரிய ஒருவர், தனது பதிப்புரிமையை வேறு எவருக்காவது தர விரும்பினால், அத்தகைய உரிமையை அவருக்கு எழுத்து மூலம் வழங்கியிருக்க வேண்டும். இதுதான் சட்டத்தின் நிலை. இந்த சட்டப்படி பார்த்தால், மனுதாரர், தனக்கு ஆதரவான ஆவணம் எதையும் சமர்ப்பிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், இங்கே மனுதாரர் குறிப்பிட்டுள்ள குடிஅரசு தொகுப்பு - மனுதாரரின் (கி.வீரமணி) படைப்புகளோ, எழுத்துகளோ அல்ல. அவைகள், 1925 ஆம் ஆண்டிலிருந்து ‘குடிஅரசு’ பத்திரிகையில் தந்தை பெரியார் எழுதியவை. மனுதாரரின் எழுத்துகளாக இல்லாத ஒன்றுக்கு, அவர், பதிப்புரிமை கோர முடியாது. பெரியாருடைய எழுத்துகளுக்கான பதிப்புரிமை பெரியாருக்குத்தான் உண்டு. இதில், இரண்டு கருத்துகளுக்கு இடமே இல்லை. தொகுக்கப்பட்ட ‘குடிஅரசு’ கட்டுரைகள், பெரியாருக்கு உரியவை என்பதை மனுதாரர், எதிர் மனுதாரர் இருவருமே ஒப்புக் கொண்டுள்ளனர்.
இப்போது அடுத்தக் கேள்வி என்னவென்றால், எழுத்தாளர் என்ற முறையில் பதிப்புரிமை பெற்றிருந்த தந்தை பெரியார், தனது பதிப்புரிமையை பதிப்புரிமை சட்டத்தில் கூறியுள்ளபடி (பிரிவு 17, 18)வேறு எவருக்காவது, எழுதிக் கொடுத்திருக்கிறாரா என்பது தான்.
பதிப்புரிமை சட்டத்தின் 18 ஆவது பிரிவின் கீழ்தான், மனுதாரர் தமது உரிமையைக் கோரியிருக்கிறார். அதாவது, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின், அதன் விதிகளில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறுகிறார். சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற பெயரில் தந்தை பெரியார் பதிவு செய்திருந்த சொசைட்டிக்கான விதிகளில், நூல்கள் வெளியீடு, துண்டுப் பிரசுரங்கள் வெளியீடு போன்ற ஆக்கபூர்வமான பணிகள் நிறுவனத்தின் செயல்பாடுகளாக இருக்கும் நிறுனத்தின் நோக்கத்துக்கு ஏற்ற வகையில், நூல்களை வெளியிடவும், விற்கவும், அச்சகம் நிறுவப்படும் என்று கூறப்பட்டுள்ளன. இந்த ‘சொசைட்டிக்கான’ பதிவில் கையெழுத்திட்டவர்களில் தந்தை பெரியாரும் ஒருவர். மேற்குறிப்பிட்ட விதிகளில், தந்தை பெரியாரின் குடிஅரசு பற்றியோ அல்லது அவரது மற்ற படைப்புகள் பற்றியோ குறிப்பிட்டு, எதையும் சுட்டவில்லை.
மேற்குறிப்பிட்ட நிறுவனத்தை பெரியார் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ்தான் (Society Registration Act) அதுவும், 1952 ஆம் ஆண்டில் தான் (21.10.1952) பதிவு செய்துள்ளார். இதில் ஒன்றை கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது தொடரப்பட்டுள்ள வழக்கு 1952க்கு முன்பே 1925 முதல் 1949 வரை நடந்த ‘குடிஅரசு’வார ஏடு தொடர்பானதாகும். ‘குடி அரசு’ நிறுத்தப்பட்ட பிறகு, பெரியார் பதிவு செய்த நிறுவனத்தின் விதிகளில் குடிஅரசு பற்றியோ, அல்லது அது தொடர்பான பதிப்புரிமை பற்றியோ, தந்தை பெரியார் படைப்புகள் பற்றியோ, வெளியிட்ட நூல்கள் பற்றியோ, குறிப்பிட்டு எதையும் கூறவில்லை.
மனுதாரரின் வழக்கறிஞர் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் 22வது விதியை சுட்டிக்காட்டி வாதாடினார். இந்த நிறுவனத்தின் தலைவர் பெரியார், தனது பெயரிலும், நிறுவனத்தின் பெயரிலும்,ஏற்கனவே வாங்கிய சொத்துகளும், அதன் நிர்வாகக் குழு ஆயுள் உறுப்பினர்கள் நிறுவனத்துக்காக ஏற்கனவே வாங்கிய சொத்துக்களும், இந்த நிறுவனத்துக்கு உரிமையுடையதாகும் என்று அந்த பிரிவு கூறுகிறது. (இதன்படி ‘குடிஅரசு’ ஏற்கனவே பெரியாரால் வாங்கப்பட்ட சொத்து என்றும், எனவே அது நிறுவனத்துக்கு உரிமையாகிறது என்றும், வழக்கறிஞர் வாதிட்டார்). மேற்குறிப்பிட்ட பிரிவுகள், நிறுவனத்தில் உறுப்பினர்களுக்கான உரிமைகளைத் தான் (Status) வரையறுக்கின்றன. நாங்களும் விடா முயற்சியோடு துருவித் துருவி ஆராய்ந்து பார்த்த பிறகும்கூட, பெரியாரின் படைப்புகள், மனுதாரரின் நிறுவனத்துக்கு உரிமையுடையவை என்பதற்கு ஆதரவாக, எதையும், எங்களால் கண்டறியவே முடியவில்லை. (By any amount of Strenuous effort - we were not in a position to discern of any right in favour of the appellant - society)
1925 ஆம் ஆண்டிலிருந்து 1949 வரை ‘குடிஅரசு’ வெளிவந்த காலங்களில் அமுலில் இருந்தது 1914 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியில் வெளிவந்த பதிப்புரிமை சட்டமாகும். அதற்குப் பிறகு 1957 ஆம் ஆண்டில்தான் புதிய பதிப்புரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே ‘குடிஅரசு’க்கு 1914 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பதிப்புரிமை சட்டமே - சட்டப்படி பொருந்தக் கூடியதாகும்.
இரண்டு சட்டங்களில் உள்ள விதிகளும், பெரியாருக்கு வழங்கியுள்ள உரிமைகளை, இந்த வழக்கில் ஆராய வேண்டியிருக்கிறது. காரணம், மனுதாரரின் வழக்கறிஞர் திருச்சி வே. ஆனைமுத்து தொகுத்த “பெரியார் சிந்தனைகள்” நூல் தொகுதிக்கு பெரியார் அனுமதி வழங்கியதைக் குறிப்பிட்டுள்ளார். 1972 ஆம் ஆண்டில் பெரியார் அதற்கான அனுமதியை ஆனைமுத்து என்ற தனிமனிதருக்கு வழங்கியுள்ளார். இதை ஆனைமுத்து ‘பெரியார் சிந்தனைகள்’ தொகுதிக்காக தாம் எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார். இந்த ஆவணம், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதை கவனத்துடன் பரிசீலித்தோம். அதில், நாங்கள் அறியவருவது என்னவென்றால், தந்தை பெரியாரே ஆனைமுத்துவை அழைத்து, தனது பேச்சு எழுத்துகளைத் தொகுக்குமாறு கேட்டிருக்கிறார். அந்தத் தொகுப்பை உருவாக்க தனிப்பட்ட முறையில் தனது ஒப்புதலையும் வழங்கியிருக்கிறார்.
ஆக, திரு. ஆனைமுத்து என்ற தனி நபரிடம், தனது எழுத்து பேச்சுகளைத் தொகுக்கும் வேலையை தந்தை பெரியார் ஒப்படைத்திருக்கிறார். அதுபோல மனுதாரரும் (கி.வீரமணி) தன்னிடம் பெரியார் ஏதேனும் பணியை ஒப்படைத்திருக்கிறார் என்பதற்கான ஆவணம் எதையும் சமர்ப்பிக்கவில்லை. தனது பேச்சுகளும், எழுத்துகளும் தொகுக்கப்பட வேண்டும் என்று ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்த பெரியார், அந்த வேலையை ஒரு தனி மனிதரிடம் ஒப்படைக்க முன் வந்த நிலையில், அதே போன்ற உரிமை தனக்கும் மனுதாரர் கோரினால், அப்படி பெரியார் ஒப்படைத்ததற்கான ஆவணத்தைக் காட்டியிருக்க வேண்டும். 1957ஆம் ஆண்டு பதிப்புரிமைச் சட்டத்தின்படி (பிரிவு 8), இத்தகைய எழுத்துபூர்வமான உரிமையைப் பெற்றிருந்தால் மட்டுமே, அதற்கு உரிமை கோர முடியும். எனவே - சட்டமும், மனுதாரருக்கு ஆதரவாக இல்லை.
2003 ஆம் ஆண்டு நவம்பரில் எதிர் மனுதாரர் (கொளத்தூர் மணி) ‘குடிஅரசு’ முதல் தொகுதியை வெளியிட்டார். அதில் முன்னுரையில் 1983 ஆம் ஆண்டு திருச்சியில் புலவர் இமயவரம்பன் தலைமையில் பெரியார் பற்றாளர்கள் தொகுத்ததை அப்படியே எந்த மாற்றமும் இன்றி வெளியிட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். மனுதாரர் சார்பில் இது ஒரு ஆவணமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்மனுதாரர்களே, புலவர் இமயவரம்பன் தலைமையிலான குழு தொகுத்ததையே வெளியிட்டுள்ளதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்று மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார். நாங்கள் ஏற்கனவே கூறியது போல், இது பெரியாரின் எழுத்துகள் தானே தவிர, மனுதாரரின் (கி.வீரமணியின்) சிந்தனையில் உதித்த படைப்புகள் அல்ல. எனவே பெரியாரின் எழுத்து-பேச்சு தொகுப்புக்கான பதிப்புரிமை மனுதாரருக்கு உள்ளதா என்பதே முடிவு செய்யப்படாத நிலையில், அத்தொகுப்பு தன்னுடையது அல்ல; பெரியாருடையது என்று மனுதாரரே ஒப்புக் கொள்ளும்போது, மனுதாரருக்கு பதிப்புரிமை கோரும் உரிமை கிடையாது. மனுதாரர் தனக்கு சாதகமாக சமர்ப்பித்த ஆவணங்கள் எதிலும் அவர் பதிப்புரிமை கோரும் உரிமையை எந்த வகையிலும் உறுதிப்படுத்தவில்லை.
‘விடுதலை’யில் பெரியார் எழுதியதை (2.10.1952) மனுதாரர் ஒரு ஆவணமாக சமர்ப்பித்துள்ளார். அதில் இவ்வாறு பெரியார் எழுதியிருக்கிறார்:
“அப்போது ஸ்தாபனத்திற்கு உள்ள சொத்துக்கள் என்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது ஒரு லட்ச ரூபாய் தான். அதாவது சில கட்டிடங்கள், 2 அச்சு நிலையங்கள், 2 பத்திரிகைகள், புத்தகங்கள் உரிமைகள், ரொக்க நிதிகள் ஆகியவை. அன்றைய நிலவரப்படி” -என்று குறிப்பிட்டுள்ளார்.
இதில், பெரியார் குறிப்பிட்டுள்ள சொத்துக்கள் என்பதில் பெரியார் நூல்களின் பதிப்புரிமையும் அடங்கும் என்று மனுதாரர் கூறுகிறார். இதை ஏற்க முடியாது. பெரியாரின் பேச்சும், கட்டுரைகளும், சொத்துகள்தான் என்பதற்கான குறிப்பான சட்ட ஆவணம் இல்லாத வரை, மனுதாரரின் வாதத்தை ஏற்க இயலாது. நேரடி தொடர்பில்லாத ஒரு குறிப்பை (Remote References) மட்டும் அடிப்படையாகக் கொண்டு மனுதாரர் உரிமை கோருகிறார். இதை பொருத்தமான ஆவணமாக அங்கீகரிக்க முடியாது.
மற்றொரு எதிர்மனுதாரர் (கோவை இராம கிருட்டிணன்) ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ (21.08.2008) இதழுக்கு அளித்த பேட்டியில் திருச்சியில் புலவர் இமயவரம்பன் தலைமையிலான குழு தொகுப்பையே தாங்கள் வெளியிட்டிருந்ததாக கூறியதை, இங்கே மனுதாரர், தமக்கு சார்பாக சமர்ப்பித்துள்ளார். இந்த ஆவணமும் மனுதாரரின் (வீரமணியின்) பதிப்புரிமையை ஏற்பதற்கோ, அங்கீகரிப்பதற்கோ எந்த வகையிலும் உகந்தது அல்ல. அந்தப் பேட்டியில் கூறப்பட்டுள்ள செய்திகூட, மனுதாரர் (கி.வீரமணி) தந்தை பெரியார் பேச்சு எழுத்துகளை வெளியிடாமல் இருந்ததைத்தான் குறிப்பிடுகிறது.
1983 ஆம் ஆண்டு புலவர் இமயவரம்பன் தலைமையில் ‘குடிஅரசி’லிருந்து தொகுக்கப்பட்ட பெரியார் எழுத்து பேச்சுகளுக்கு மனுதாரர் தமக்கு பதிப்புரிமை கோருவதால் இப்போது அமுலிலுள்ள 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின் பிரிவுகளை நாங்கள் பரிசீலித்தோம். அதில் 52(1)(எம்) பிரிவு - பதிப்புரிமை கோர முடியாத சில செயல்பாடுகளை பட்டியலிட்டுள்ளது. இதன்படி, ஒரு செய்திப் பத்திரிகை அல்லது இதழ் அல்லது பருவ இதழ்களில் வெளிவரும், அன்றாட பொருளாதாரம், அரசியல், சமூகம் அல்லது மதம் தொடர்பான கட்டுரைகளை மீண்டும் மறு வெளியீடாக வெளியிடுவது பதிப்புரிமையில் குறுக்கீடுவதாகாது என்று கூறுகிறது. அந்த கட்டுரைகளை ஆசிரியர், பதிப்புரிமைக்கு உட்பட்டது என்று வெளிப்படையாக அறிவிக்காதவரை, மறு வெளியீடு செய்யும் உரிமை உண்டு என்று, அந்த பிரிவு கூறுகிறது. ‘குடிஅரசு’ஒரு செய்திப் பத்திரிகை தான். இந்த சட்டப்படி அதில் வரும் கட்டுரைகளை மீண்டும் வெளியிடுவதற்கு பதிப்புரிமை கேட்க முடியாது. தனது எழுத்துப் பேச்சுகளுக்கு பதிப்புரிமை எதையும் தந்தை பெரியாரும் எழுதி வைக்கவில்லை.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சில விதிகளைக் காட்டி, மனுதாரர் தனது பதிப்புரிமைக்கு உரிமை கேட்டது பற்றி, ஏற்கனவே, விரிவாக விளக்கி இருக்கிறோம். எனவே ‘குடிஅரசு’செய்தித்தாள் என்றாலும் சரி அல்லது வார இதழ் என்றாலும் சரி,எப்படி அழைத்தாலும், அதில் வெளிவந்துள்ள தனது கட்டுரைகளை எவரும் வெளியிடக்கூடாது என்று பெரியார் உரிமை கோரியிருந்தார் என்பதற்கான ஆவணமோ, சட்டபூர்வமாக ஏற்கக் கூடிய சான்றுகளோ எதுவும் இல்லாத நிலையில் ‘குடிஅரசு’ இதழில் பெரியாரின் பேச்சு-எழுத்துகளை வெளியிட முன் வந்துள்ள எதிர் மனுதாரர்கள் மீது எந்த குற்றமும் காண முடியாது. (Therefore, there being no other document or legally acceptable material to show that Thanthai Periyar reserved his right of production of any of his articles published in the news paper or in the Weekly Magazine Kudiarasu, no fault can be found with the respondents when they want to publish the collection of the speeches and articles of Thanthai Periyar Published in the Weekly Kudiarasu) தந்தை பெரியாரின் படைப்புகளை எதிர்மனுதாரர்கள் (கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன்) வெளியிடுவதற்கான பாதுகாப்பை பதிப்புரிமை சட்டத்தின் 52(1)(எம்) பிரிவு தெளிவாக வழங்குகிறது.
சொல்லப் போனால், ஏற்கனவே 2003 நவம்பரில் 1925 ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ தொகுப்பையும், 2006 செப்டம்பரில் 1926 ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ தொகுப்புகளையும் எதிர்மனுதாரர்கள் வெளியிட்டுவிட்டதாக கூறியுள்ளனர். இந்த வெளியீடுகளின்போது, மனுதாரர் (கி.வீரமணி) எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை. இதே சட்டப் பிரிவின் அடிப்படையில் ஏற்கனவே வழக்கை விசாரித்த நீதிபதி (நீதிபதி சந்துரு) கூறியுள்ள அதே கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். குடிஅரசு தொகுப்புகளை வெளியிடுவதற்கு சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லை!
இரண்டாவது எதிர் மனுதாரர் (கு. இராமகிருட்டிணன்) சார்பில் வாதிட்டவர் (கிளாடிஸ் டேனியல்), மற்றொரு சட்டப் பிரிவைச் சுட்டிக் காட்டினார். 1914 ஆம் ஆண்டின் பதிப்புரிமை சட்டம், ஒரு நூலாசிரியருக்கு பதிப்புரிமையின் காலத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி, அந்த எழுத்தாளர் தனது வாழ்நாள் முழுதும் பதிப்புரிமைக்கு உரியவர். அவர் இறந்து 25 ஆண்டுகள் வரையும் அவருக்கு பதிப்புரிமை உண்டு. இறந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு பதிப்புரிமை முடிவுக்கு வந்து விடுகிறது. இதுதான் 1914 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின் நிலை. இந்தப் பிரிவுக்கு 1957 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பதிப்புரிமை சட்டம் (79(5)) ஏற்பு வழங்கியுள்ளது. அதாவது 1957 ஆம் ஆண்டு புதிய பதிப்புரிமை சட்டம் வருவதற்கு முந்தைய காலத்தின் படைப்புகளுக்கு பதிப்பாளர் உரிமைகளுக்கான காலக்கெடு, ஏற்கனவே அமுலில் இருந்த சட்டத்திலுள்ளதே பொருந்தும் என்று வாதிட்டார். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.
மேற்குறிப்பிட்ட இரு சட்டப் பிரிவுகளின்படி பெரியார் எழுத்து பேச்சுகளுக்கான பதிப்புரிமை, அப்படியே பெரியார் பதிப்புரிமை எழுதி தந்ததாக ஏற்றுக் கொண்டாலும் கூட அது முடிவுக்கு வந்துவிட்டது என்பதே சரி. பெரியார் முடிவெய்தியது 24.12.1973. அதற்குப் பிறகு, 25 ஆண்டுகள் பதிப்புரிமை உண்டு என்று எடுத்துக் கொண்டாலும், 24.12.1998 அன்றோடு பதிப்புரிமை முடிவுக்கு வந்துவிட்டது. எதிர்மனுதாரர் (கொளத்தூர் மணி) ‘குடிஅரசு’ முதல் தொகுதியை வெளியிட்டதே 2003 நவம்பரில்தான். எனவே, சட்டரீதியாக பதிப்புரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே 24.12.1998-க்குப் பிறகு தந்தை பெரியாரின் படைப்புகள் மக்கள் அரங்கிற்கு வந்து மக்கள் சொத்தாகி விட்டன. (Therefore, when after 24.12.1998, the literary works of Thanthai Periyar have come into Public domain, even if there were any restrictions, the same would have ceased to operate after 24.12.1998) - என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
27 தொகுதிகளையும் கணினியில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தவுடன் கழகம் வெளியிடும் ‘குடிஅரசு’ 27 தொகுதிகளும் கணினியில் ஏற்றப்பட்டுள்ளது. ‘பிடிஎஃப்’முறையில் கணினியில் பதிவாக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளையும் ‘periyardk.org என்ற இணையதளத்துக்குச் சென்று படிக்கலாம்.
இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
- பெரியார் திராவிடர் கழகம்