ஆர்குட் என்ற இணையத்தளத்தில் "உலகத் தமிழ் மக்கள் அரங்கம்' எனும் வலைப்புலம், கடந்த இரண்டு ஆண்டுகளாக 4000த்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் இயங்கி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் பணி நிமித்தம் சென்று வாழும் தமிழ் இளைஞர்களைப் பெருமளவில் உறுப்பினராகக் கொண்டிருக்கும் உலகத் தமிழ் மக்கள் அரங்கம், சமூகப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் குருதிக் கொடை, "கற்பிப்போம் திட்டம்' மூலம் ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி உதவி; விபத்தில் காயமுற்றவர்களுக்குத் தேவையான முதல் உதவிகள் போன்றவற்றை "உலகத் தமிழ் மக்கள் அரங்கம், அறக்கட்டளை மூலம் செய்து வருகிறது. சசிகுமார் (சென்னை), உமா சங்கர் (மலேசியா), சத்யா (சிங்கப்பூர்), மதிபாலா (இந்தோனேசியா), பிரின்ஸ், சிறீதர் (சென்னை) ஆகியோர் இந்த அரங்கத்தின் நிர்வாகிகளாக உள்ளனர்.

பெரியார் – அம்பேத்கர் சிந்தனைகளையும், தமிழ் உணர்வையும் அரங்கத்தின் மய்ய உணர்வோட்டமாக உறுப்பினர்கள் முன்னெடுத்து வரும் நிலையில், "பெரியார் கொள்கையைக் கடைப்பிடிக்கும் பகுத்தறிவு கிராமம்' எனும் பெயரில் ஒரு செய்தியை நார்வே நாட்டில் வாழும் விஜயசங்கர் என்ற உறுப்பினர் அறிமுகம் செய்துள்ளார். பெரியார் கொள்கையை நாம் பேசிக் கொண்டிருக்கும் சூழலில், அதை நடைமுறைப்படுத்தும் ஒரு கிராமமா என்ற ஆவல் உந்தித் தள்ள, அரங்கத்தின் பதினைந்து உறுப்பினர்கள், கடந்த சனவரி மாதத்தில் அக்கிராமத்திற்குப் பயணமாயினர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகிலுள்ள "செக்கடிக்குப்பம்' எனும் இக்கிராமத்தில் கோயிலோ, மத அடையாளங்களோ, மூட நம்பிக்கை சார்ந்த செயல்களோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் கல்வி கற்று வருகின்றனர். சிலம்பம் உள்ளிட்ட கலைகள் பெண் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கப்படுகின்றன. சிலம்பத்தில் மாநில அளவில் தேர்ச்சிப் பெற்றவர்களும் தேசிய அளவில் பங்கு பெற்றவர்களும் இவ்வூரைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். குடிப்பழக்கம் முற்றாக ஒழிக்கப்பட்டிருக்கிறது.

கிராமத்தின் நுழைவில் பொது நிகழ்வுகளுக்கென கட்டப்பட்டிருக்கும் "உலகத் தமிழினத்தின் முதல் தலைவன் ராவணே அசுரன் அரங்கம்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் திறந்தவெளி அரங்கம், இக்கிராமத்தின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறது. ஊரின் பொது விழாக்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் சீருடை போல, கருப்பு உடைகளையே அணிகின்றனர். மதம், கடவுள், மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட்ட கிராமமாக இருப்பதால், பிற கிராமங்களைவிட மக்களிடையே ஒற்றுமையும், கூட்டுணர்வும் சிறந்து விளங்குகின்றன. இச்சிறப்புகளை உள்ளடக்கி இக்கிராமத்தை உருவாக்கியவர் "பெரியவர்' என கிராமத்தினரால் அன்போடு அழைக்கப்படும் பெரியார் பெருந்தொண்டர் அர்ச்சுனன் என்பவரே.

மேலும், இக்கிராமக் குழந்தைகளைத் தாய்மொழிப் பற்றோடும் அறிவோடும் வளர்த்தெடுக்க, தாய்த் தமிழ்ப் பள்ளி ஒன்றைத் தொடங்கியுள்ளனர். இப்பள்ளிக் கூடத்திற்கென சொந்தக் கட்டடம் இல்லாததால், அரசு அனுமதி பெற இயலவில்லை. பெரியாரின் கொள்கை வழி சிறந்தோங்கும் இச்சின்னஞ்சிறு கிராமத்தின் வளர்ச்சியில் பங்கு பெற, "உலகத் தமிழ் மக்கள் அரங்கம்' இணையத் தளத்தில் கூடி விவாதித்து முடிவெடுத்தது. அதன்படி, அரங்க உறுப்பினர்கள் ஒரு லட்சம் ரூபாயை உடனடியாகத் திரட்டி, 50 பேர் கொண்ட குழுவாக, சென்னையிலிருந்து செக்கடிக்குப்பம் கிராமத்திற்குச் சென்று 1.2.2009 அன்று பயணித்து கிராமப் பெரியவர் அர்ச்சுனன் அவர்களிடம் வழங்கினர்.

மேலும் இன்னும் ஓராண்டுக்குள் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக்கூடப் பணிகளையும் நூலகம் ஒன்றுக்கான கட்டடத்தையும் உருவாக்கித் தரும் பொறுப்பையும் உலகத் தமிழ் மக்கள் அரங்கம் ஏற்றுள்ளது. இதற்கான முழு நிதியையும் சிங்கப்பூரில் பணிபுரியும் இந்துமதி அவர்களின் குடும்பத்தார் ஏற்றுக் கொண்டுள்ளனர். தனது குடும்பத்தைப் போல, ஒரு கிராமமே சுயமரியாதை உணர்வில் பூத்துக் குலுங்குவதற்கு, இந்துமதி போன்றவர்கள் செய்ய விழையும் இத்தார்மீகப் பொறுப்புணர்விலும், வரலாற்றுக் கடமையிலும் தான் பெரியார் வாழ்கிறார்.

Pin It