சனவரி

60 சதவிகிதம் எடு; இல்லை கல்வியை விடு

இந்திய அரசின் சமூகநீதித் துறை செப்டம்பர் 24, 2007 அன்று இந்தியா முழுவதும் உள்ள பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டக் கல்லூரிகள் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் தலித் மாணவர்கள் (+2) மேல்நிலை இரண்டாம் ஆண்டு வகுப்பின் இறுதித் தேர்வில் 60 சதவிகிதம் மதிப்பெண் எடுத்திருந்தால்தான் மத்திய அரசின் உயர் கல்விக்கான (போஸ்ட் மெட்ரிக்) கல்வி உதவித் தொகையைப் பெற முடியும் என்று ஓர் அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை முற்றிலும் தலித் விரோதமானது. மேலோட்டமாகப் பார்த்தால் தலித் மாணவர்கள் நன்கு படிக்கவும், அறுபது சதவிகிதத்திற்கும் கூடுதலாக மதிப்பெண் பெற ஊக்குவிக்கிற, கட்டாயப்படுத்துகிற முயற்சிபோல இது தோற்றமளிக்கும். ஆனால், உண்மை அதுவல்ல. நூறுகோடி மக்களைக் கொண்ட நாட்டில் பல்வேறு சாதி, மத, பொருளாதார, புவியியல், தலைமுறை ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிற இந்தியாவில்/தமிழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களும் 60 சதவிகிதம் மதிப்பெண் பெறுவது என்பது எங்கும், எப்போதும் நடைமுறைச் சாத்தியமற்ற எதிர்பார்ப்பாகும்.

- அரங்க. குணசேகரன்

பிப்ரவரி

இலவச நிலங்கள் யாருக்கு?

தமிழகத்தின் மக்கள் தொகை ஆறரைக்கோடி. இதில் சுமார் முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு சொந்தமாக வீட்டுமனை இல்லை. இந்த 30 லட்சம் குடும்பத்தினரில் பெரும்பாலானவர்கள் தலித் மக்கள். சொந்த விவசாய நிலமில்லாத, குடியிருப்பு மனையுமில்லாத ஏழைகளுக்கு விவசாய நிலம் வழங்கப்பட்டிருந்தால், அதில் ஓர் அய்ந்து சென்ட் நிலத்தை தனது வீட்டுமனையாக மாற்றிக் கொள்ளத் தெரியாதவர்களல்லர் தமிழக விவசாயக் கூலிகள்.

அப்படியானால் ஏழைகளுக்கு இலவச நிலம் அளிக்கும் திட்டத்தில் நடந்தது என்ன? இலவச விவசாய நிலம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது? குடியிருப்பு மனையே சொந்தமாக இல்லாத பல லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ள தமிழகத்தில் வெறுமனே மூன்று லட்சம் குடியிருப்பு மனைப்பட்டா வழங்கிவிட்டு மேற்கு வங்கம், கேரளத்தோடு ஒப்பிட்டால் போதுமா? மூன்று லட்சம் குடும்பங்கள் போக எஞ்சிய பல லட்சக்கணக்கான வீட்டுமனை இல்லாத ஏழைகள் தற்போது எங்கே வசிக்கிறார்கள்? அவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே வீட்டுமனைப் பட்டா வழங்குவது ஒன்றே நிரந்தர தீர்வைத் தரும். அதற்கு நமது ஊராட்சிப் புறம்போக்கு, கோயில் புறம்போக்கு, நீர் நிலையும் தூர்ந்து, நீர் நிலையின் ஆயக்கட்டும் தூர்ந்து போன நகர்ப்புற விரிவாக்கப் பகுதிகள், வாய்க்கால் புறம்போக்குகள் ஆகிய நிலங்களில் வசிப்போருக்கு அவர்கள் வசிக்கும் இடங்களின் தரத்தையும் தேவையையும் மக்கள் குழுக்களின் மூலம் ஆய்வு செய்து வீட்டுமனைப் பட்டா வழங்குவதே இறுதித் தீர்வாக முடியும்.

– அரங்க. குணசேகரன்

பட்டியல் சாதியினருக்கான 18 சதவிகிதமும் பறையர், பள்ளர்களின் ஏகபோக குத்தகையல்ல. அதில் அருந்ததியர்களுக்கும் இதர பட்டியல் சாதியினருக்கும் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை அளித்தே தீர வேண்டும். தலித் இடஒதுக்கீடு அளவு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை மொத்த தலித் சமூகங்களும், பரந்த அளவிலான ஜனநாயக சக்திகளும் இணைந்து போராடிப் பெற வேண்டியதேயல்லாமல், அதை அருந்ததியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையுடன் முடிச்சுப் போடுவது நியாயமான வாதமாகாது.

– அரங்க. குணசேகரன்: "உள்ஒதுக்கீட்டு நியாயங்கள்'

***

நான் பேசுகிறேன்

நறுக்கப்படுகிறது என் நாவு

முகம் இழக்கின்றன என் சொற்கள்

 

இன்னும் நான் பேசுகிறேன்

பறிக்கப்படுகிறது என் பேனா

கருச்சிதைகின்றன என் சொற்கள்

 

ஆயினும் நான் பேசுகிறேன்

முறிக்கப்படுகின்றன என் விரல்கள்

விசையிழக்கின்றன என் சொற்கள்

 

மேலும் நான் பேசுகிறேன்

பிடுங்கப்படுகின்றன என் கண்கள்

உயிர் இழக்கின்றன என் சொற்கள்

 

பின்னும் நான் பேசுகிறேன்

உயிர் விடைக்க

என் உடலே சொல்லாய் எழுகிறது

 

பேசாவிடில்

நான் சாவேன் 

– அழகிய பெரியவன்

ஒற்றுமை மாயை!

சுதந்திரத்திற்குப் பிறகான 60 ஆண்டுகளை எடுத்துக் கொண்டாலும், சேரியிலும் தீண்டாமையை அனுபவிக்கிற அருந்ததியர்களை மேம்படுத்த எவ்வித சிறப்பு நடவடிக்கைகளும்தலித் இயக்கங்களால் கூட மேற்கொள்ளப்படவில்லை. கால் நூற்றாண்டுக்கும் மேலாக பொறுமை காத்த அம்மக்கள் இன்றைக்கு தங்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கிளர்ந்தெழுகின்றனர். உடனே, ஒற்றுமைக் கூக்குரல்கள் நம்செவிகளை அடைக்கின்றன. சமூக ஏற்றத்தாழ்வுகளை அனுமதித்துக் கொண்டு, வாழ்நிலைகளில் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தையும் மறுத்துவிட்டு ஒற்றுமை போய் விடும் என்று கூச்சலிடுவது, அறிவு நாணயமற்ற செயல். சக மனிதர்களின் உரிமைகளைப் பேணும் போதுதான் ஒற்றுமை வலுப்படும். அருந்ததியர்கள் மீது தாக்குதல் நடக்கும்போது எங்கே போனார்கள் இந்த ஒற்றுமைவாதிகள்? ஒரு சாதிக்கு ஒரு கட்சி என்று ஆக்கி வைத்திருப்பவர்கள், ஒற்றுமை குறித்து வகுப்பெடுப்பது விந்தையிலும் விந்தை. "ஒற்றுமைக்கு குந்தகம் வந்துவிடும் என்பதால் இதை எதிர்க்கிறோம்' என்று மறைமுகமாகவும், நேரடியாகவும் கூறும் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர் பட்டியலிலும், கட்சியிலும் எத்தனை சதவிகிதம் அருந்ததியர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளித்துள்ளனர் என்பதை அறிவிக்க வேண்டும்! உள் இடஒதுக்கீடு கூடாது என்பவர்கள், அருந்ததியர்களை கரை சேர்க்க எத்தகைய மாற்றுத் திட்டங்களை வைத்திருக்கிறார்கள்?

 – தலையங்கம்

அடித்து நொறுக்கும் இளவழகி

சாதனை புரிந்தவர்களை : "மண்ணில் வந்த விண்மீன்' என்று பகட்டுக் கவிதை மொழியில் வாழ்த்திவிட்டுப் போய்விடுகிறார்கள் மக்கள். புறக்கணிப்புகள், ஏழ்மைச்சூழல், ஆணாதிக்கம், ஆதரவற்ற நிலை, அதிகாரத்தின் பாராமுகம், வஞ்சகக் குழிபறிப்பு என மனித இனத்தின் அத்தனை தீய குணங்களும் அவலங்களும் இவரைச் சூழ்ந்து அழுத்தின. ஆனால், தன்னை மூர்க்கமுடன் அழுத்தும் பாறையை உடைத்து முளைத்தெழும் விதையைப் போல அவர் நின்றார். இன்று அவர் இந்தியாவுக்கு உலக வாகையர் பட்டம் பெற்று வந்த 23 வயது நிரம்பிய ஓர் இளம் சாதனையாளர். இளவழகி கேரம் விளையாட்டு உலக வாகையர்!

 – அழகிய பெரியவன்

சில்லரையை வைத்துக் கொள்ளுங்கள்

பொதுச்சமூகத்தில் நிலவும் பிற்போக்குத் தனமான கருத்துகளையும், மொழிப் பயன்பாட்டில் உள்ள தவறான பொருள் தரும் கேலிச் சொற்களைத் தவிர்ப்பதிலும் உரிமைகளை அளிப்பதிலும்தான் இதற்கான மாற்றங்கள் தொடங்கும். நம்மிடையே பிற்போக்குத் தனமான எண்ணற்ற பழமொழிகளும், சொலவடைகளும் உள்ளன. "குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த மாதிரி', "செவிடன் காதில் ஊதிய சங்காய்', "நொண்டிச் சாக்கு', "ஊமை ஊரைக் கெடுக்கும்' இப்படி இருக்கின்றவற்றை கூச்சமும், குற்ற உணர்வுமின்றி பயன்படுத்துகிறோம். இம்மாதிரியான சொல் வழக்கை நாகரிக சமூகம் தவிர்க்க வேண்டும். "ஊனம்' என்பது முன்ஜென்ம வினை, பாவம் ஆகியவற்றால் வருவது என்கிற கருத்துகளை மாற்றிக் கொள்ள வேண்டும். தொற்று நோய்களாலும், விபத்து மற்றும் காயங்களாலுமே உடல் குறைபாடுகள் ஏற்படுகின்றன. உலக வங்கியின் அறிக்கை, பெருகி வரும் மருத்துவ வசதிகளால் தொற்று நோய் மூலம் உருவாகும் ஊனம் ஒப்பீட்டளவில் குறைந்து வந்தாலும், காயம் மற்றும் விபத்து மூலம் உருவாகும் ஊனம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டுகிறது.

– அழகிய பெரியவன்

உத்தப்புரம் : உடைக்க முடியாத ஜாதி!

உத்தப்புரம் செல்லும் வழியெங்கும் ஊருக்கு ஊர் இருக்கும் முத்துராமலிங்கத் தேவர் சிலை, அந்தப் பகுதியில் சாதியின் இருப்பையும் ஆதிக்கத்தையும் புரிய வைக்கின்றன. எத்தனையோ சாதிய வன்கொடுமைகளையும், அடக்குமுறைகளையும் நாள்தோறும் சந்திக்கும் அலுப்பும் சோர்வும் வேதனையும் பொதுவாகவே அங்கு தலித் மக்களிடம் அப்பியிருக்கிறது. பள்ளிக்கூடம், பால்வாடி, தண்ணீர் தொட்டி, கோயில், கிணறு என இரண்டிரண்டாக இருக்கும் எல்லாமும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஜனநாயகத்தைப் பார்த்து சவால் விடுகின்றன. சுவர் தகர்த்து திறக்கப்பட்ட புதுப்பாதையில் காலடி எடுத்து வைக்கும்போது, பிடுங்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட பல்லில் படக்கென்று பரவும் கூச்சம் போல் உடல் குறுகுறுக்கிறது. இது என்னுடைய நாடு, ஊர் என்ற உரிமையை விட என்னை அடிமைப்படுத்திய, அடிமைப்படுத்தும் மனிதர்கள் வாழும் மண் என்ற விரக்தியால் உண்டான குறுகுறுப்பு. சுவரை இடிக்க வேண்டும் என்று வந்தவர்கள், சுவரை இடிக்கக் கூடாதென்று வந்தவர்கள், வேடிக்கை பார்த்து நின்றவர்கள்... எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க... வீடுகளைத் துறந்து மலையடிவாரத்துக்கு விரைந்தனர் ஆதிக்க சாதியினர். ஆம், இம்முறையும் தலித்துகளின் சமத்துவப் போராட்டத்திற்கு எதிராக கோபித்துக் கொண்டு மலையேறியது ஜாதி.

– மீனா மயில்

எது தகுதி? எது திறமை?

உண்மையான பிரச்சனை என்பது வறுமை, கல்வியறிவின்மை, பிற்படுத்தப்பட்ட நிலை என்ற பாலைவனத்தில் என்றும் இருந்திராத அல்லது அதிலிருந்து வெகு காலத்திற்கு முன்பே வெளியேறிவிட்ட வகுப்பினருக்கும்,இன்னமும் அந்தப் பாலைவனத்திலிருந்து சோலைக்குள் செல்லத் துடிக்கும் வகுப்பினருக்கும் இடையிலானாதே. இவ்வுலகில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள அருகிலுள்ள பொது நூலகத்திற்கு நடந்தே சென்று ஒரு செய்தித் தாளை வாசித்தாக வேண்டிய சூழலில் உள்ள மரபினாலும் சமூகத்தினாலும் மிகவும் கீழாகப் பார்க்கப்படுகின்ற பட்டியல் சாதியினர், பழங்குடியின வகுப்பினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த ஒரு குழந்தை, இத்தகைய அனைத்துப் பாதகங்களுக்கு இடையிலும் படித்து போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தேவையான 40 அல்லது 50 சதவிகிதத்தைப் பெறுகிறார்கள் என்றால், அந்தக் குழந்தைக்கு இருப்பது திறன் இல்லையா?

- நீதிபதி ஓ. சின்னப்ப ரெட்டி

சமூக வாழ்க்கைக்கான கல்வி

இன்றைய கல்வி முறையானது, ஒரு மனிதன் பிழைக்க உதவக் கூடியதாக இருக்கிறதே அன்றி வாழ வழி செய்வதாக இருப்பதில்லை. பிழைப்பு என்பது பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதற்கு சமூகத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. எந்த ஒரு மனிதனின் திறனும் அவன் பெற்றிருக்கும் புகழ் மற்றும் பொருளாதார வளர்ச்சி இவற்றை வைத்தே மதிப்பிடப்படுகின்றன. ஒருவருக்கு ஏதேனும் தனித்திறன் இருப்பின் உடனடியாக "இத்தனை திறனை வைத்துக் கொண்டு ஏன் சும்மா இருக்கிறாய்? அதை வைத்து தொழில் செய்யலாமே? பொருள் ஈட்டலாமே?'' என்ற கேள்விகள் எழும் அளவிற்கு, “இத்திறனை பிறருக்கு பயன்படுமாறு பயன்படுத்தலாமே'' என்ற வினா எழுவதே இல்லை.

- பூங்குழலி

வரலாறு என்பது அறிவியல் பூர்வமான வரலாறாக இருந்திருக்குமேயானால், யாருமே தங்களை "ராஜபரம்பரை' என்று சொல்ல வெட்கப்படுவார்கள். தேவேந்திர குல வேளாளர்கள் ராஜராஜனை சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனால், அவன் நானூறுக்கும் மேற்பட்ட பெண்களை, அவர்களின் விருப்பம் பற்றி கவலைப்படாமல் அழைத்துக் கொண்டு வந்து சூடுபோட்டு "தேவரடி'யார்களாக மாற்றிய கொடுமைக்காரன். இத்தகைய வரலாறுகளையெல்லாம் சொன்னால், யாரும் மன்னர்களை சொந்தம் கொண்டாட மாட்டார்கள்.

 – ஆ. சிவசுப்பிரமணியன்: "ராஜபரம்பரை என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்பட வேண்டும்'

சூலை

மாஞ்சோலை : நூற்றாண்டுப் போர்

இன்று மாஞ்சோலையில் இருக்கும் எல்லா வளங்களையும் வசதிகளையும் உருவாக்கியது இந்த மக்களே! வாகனங்கள் வந்து போகும் சாலைகளையும், வசிக்க வீடுகளையும், குடி தண்ணீர், மின்சார இணைப்புகளை இப்படி நிறுவனத்தாருக்கும் தங்களுக்கும் தேவையான அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் தலித் மக்களே உருவாக்கினர். 1952 இல் தொழிற்சாலைக்கு ஜெனரேட்டர் வந்துவிட்டது என்றாலும் மின்சாரம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது 70களில்தான். ஆரம்பப் பள்ளிக் கூடமும், சின்னதாக ஒரு மருத்துவமனையும், ஒரேயொரு பேருந்து மட்டும் வந்து போகுமளவிற்கு நிலைமை மாறியது. ஓட்டு வீடுகள் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளாக மாறின. கும்பல் கும்பலாக குடும்பம் நடத்திய நிலைமை மாறி குடும்பத்துக்கு ஒரு வீடு என வழங்கப்படுகிறது. இந்த வீடுகள் நிறுவனங்களுக்கு சொந்தமானவை.

மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், மற்ற இன்றியமையாத பொருட்கள் எல்லாமே கீழிருந்துதான் வந்தாக வேண்டுமென்பதால் நிறுவனமே மளிகைக் கடை நடத்தியது. வாரம் ஒரு முறை காசு கொடுத்து இங்கே வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். தவிர, வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை மக்கள் வீட்டு முன்பு இருக்கும் நிலத்தில் அவர்களே பயிரிட்டு பயன்படுத்தி வந்தனர். 1970களிலிருந்து இருந்த 55 ரூபாய் கூலியில் காசு மிச்சம் பிடிக்க முடிந்தவர்கள் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்தனர். காலப்போக்கில் சிலர் டீக்கடைகள், சின்னதாக மளிகைக் கடைகளும் கூட நடத்தினர். இவையெல்லாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் நிகழ்ந்த சின்னச்சின்ன மாற்றங்களே தவிர வளர்ச்சியல்ல.

– மீனாமயில்

சமூகம் பல்வேறு பாரம்பரிய கலைகளால் அடையாளம் காணப்படுகிறது. அதில் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள், பால் ரீதியான பாகுபாடுகள் என்கிற கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தச் சமுதாயச் சிதைவிலிருந்து எங்களை மீட்டெடுத்து, ஒன்றிணைப்பைக் கொண்ட, பன்மைத் தன்மை கொண்ட, வித்தியாசங்களைக் கொண்டாடுகின்ற சமுதாயமாக மீளுருவாக்கம் பெற்று வளர்வது எங்களுடைய தேவையாக உள்ளது. சி. ஜெய்சங்கர்: "பன்மைத் தன்மை கொண்ட சமூகமாக மீண்டெழுகிறோம்'

ஆகஸ்ட்

வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே...

தலித் மக்களின் நெடுநாள் கோரிக்கைகளை அலட்சியப்படுத்திவரும் அரசைக் கண்டிக்கும் கிறித்துவ, முஸ்லிம் அமைப்புகளும் தாங்கள் நடத்திவரும் கல்வி நிறுவனங்களில், காலங்காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்குகின்றனவா என்று சுயபரிசோதனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. அறிவாளிகளும், திறமையாளர்களும் மட்டும்தான் அரசு நிர்வாகத்துக்கும், ஆட்சிப்பொறுப்புக்கும் வேண்டும் என்றால், அங்கே பிரதிநிதித்துவம் என்கிற ஜனநாயகக் கருத்துக்கு இழுக்கு நேரும் என்கிறார் அம்பேத்கர். இடஒதுக்கீடு என்பது பிரதிநிதித்துவமே அன்றி வேறல்ல. இந்நிலையில், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தலித்துகளுக்கு இந்த 60 ஆண்டுகளாகப் போதிய பிரதிநிதித்துவத்தை ஏன் வழங்கவில்லை?

– அய். இளங்கோவன்

பாகுபாட்டை சந்திக்கும் பிரிவினர்

பிற்படுத்தப்பட்டவர்களிடையே உள்ள கூடுதல் ஏழ்மையும், தேவையும் நிறைந்த பிரிவினர் பயன்பெறும் வகையில் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்கிற நிலை, பிற்படுத்தப்பட்டவர்களை விடவும் தலித் மற்றும் பழங்குடியினருக்கு எந்த விதத்திலும் பொருந்தாதது அல்ல. இந்த இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் அலகைக் கொண்டு வந்து பொருத்தி விட ஒரு சாக்காக இருந்துவிட முடியாது. ஏனெனில், தற்போது இருப்பவற்றுக்குள் கிரீமிலேயரை நீக்கிவிடுவது என்பது, அரசுப் பணிகளில் தலித்துகள் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் பிரதிநிதித்துவம் என்பதே இல்லாத தன்மையை உருவாக்கிவிடும். சமத்துவமின்மையையும் சுரண்டலையும் உற்பத்தி செய்யும் சமூகப் பொருளாதார அமைப்பில் மாற்றங்களையும், அடிப்படை நிலச் சீர்த்திருத்தங்களையும் செய்யாமல் எந்த விடுதலையும் இருக்க முடியாது என்றே பிற்படுத்தப்பட்டவர்களாகிய நாங்களும் நம்புகிறோம். பிற்படுத்தப்பட்டவர்களைப் பிடித்துள்ள அனைத்து நோய்களையும் தீர்க்கின்ற சர்வரோக நிவாரணியாக இடஒதுக்கீட்டை நம்புகிற ஒன்றுமறியாதவர்களின் உலகத்தில் நாங்களில்லை. இடஒதுக்கீட்டை வறுமை ஒழிப்புத் திட்டமாக நாங்கள் பார்க்கவில்லை. மண்டல் குழு தலைவரான பி.பி. மண்டல், தனது மண்டல் குழு பரிந்துரைகளில் நிலச்சீர்திருத்தத்தையும் ஒன்றாகச் சேர்க்க மறக்கவில்லை. எனவே சி.பி.எம். வலியுறுத்துவதை ஏற்கனவே நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

– அசோக் யாதவ் 

செப்டம்பர் 

தீர்வுகளை தீவிரப்படுத்துக

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெறும் மதக் கலவரங்களைப் பட்டியலிட்டு, அதன் கொடூரங்களை உணர்வு ரீதியாக வெளிப்படுத்துவது மட்டுமே நம் பணியாக இருக்க முடியாது. வருமுன் காப்பதே "இந்துத்துவ' செயல்திட்டங்களை தவிடுபொடியாக்கும். தீர்வுகளை நோக்கி நாம் தீவிரமாக செயல்பட்டாக வேண்டும். அதற்கு கருத்தியல் ரீதியான புரிந்துணர்வே அடிப்படை. இந்து மதம் நீடித்திருக்கும் வரை, அதன் வெளிப்பாடுகளான ஜாதி மத வெறியை கட்டுப்படுத்திவிட முடியாது. அரசு மற்றும் அரசியல் கட்சிகள் முன்வைக்கும் தீர்வுகள், தேர்தல் ஈவுகளை மட்டுமே இலக்காகக் கொண்டவை. ஆக, இந்து பயங்கரத்தை வேரறுக்க, ஆழ்ந்த புரிதலுடன் கூடிய அம்பேத்கரிய – பெரியாரிய செயல்திட்டமே இன்றைய முதன்மைத் தேவை.

– தலையங்கம்

இந்துத்துவாவும் தலித் சிக்கலும்

இந்துத்துவ கருத்தியல், ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் நலன்களுக்காகவே இயங்குகிறது. அதில் தலித் நலன்களும் அடக்கம். அம்பேத்கர் முஸ்லிம்களுக்கு எதிரானவர், அவர் அவர்களது தேசப்பற்றை சந்தேகித்தார் எனப் பல அவதூறுகளை அவர்கள் பரப்பி வருகிறார்கள். பாகிஸ்தான் குறித்த எண்ணங்கள் என்கிற அம்பேத்கரின் கட்டுரையின் பல பத்திகளை மேற்கோள் காட்டி, அதற்கு தவறான விளக்கங்களையும் கொடுத்து வருகிறார்கள். அவரது புத்தகத்தை முழுவதுமாகப் படித்தால், எத்தனை நுட்பமாக அவர் பிரிவினை குறித்து ஆராய்ந்துள்ளார் என்பதை நாம் அறியலாம். காலமெல்லாம் இந்துத்துவாவையும் அதன் இயக்கத்தையும் தோலுரித்து அம்பலப்படுத்திய அம்பேத்கரையும் அவரது எழுத்துகளையும் – ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் மேற்கோள் காட்டி தவறான விளக்கங்களை அளித்து வருகின்றன. அம்பேத்கர் இப்படி தவறாக உருவகப்படுத்தப்படுவதை தலித் அமைப்புகள் போதிய அளவு கண்டிக்கவில்லை. குறுகிய கால அரசியல் நலன்களில் அவர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள். – ராம் புன்யானி

ஆபத்தான தத்துவம்

இந்து ராஜ்ஜியம் என்பது உண்மையில் நடைமுறைக்கு வருமேயானால், சந்தேகமின்றி இது நாட்டுக்கு ஏற்படப் போகும் மிகப் பெரிய ஆபத்தாகும்.இந்துத் தத்துவம் – சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு நேர் எதிரானது. அந்த அடிப்படையில் அது ஜனநாயகத்திற்கு எதிரானது. எப்பாடு பட்டாகிலும் இந்து ராஜ்ஜியம் தடுத்து நிறுத்தப்பட்டே ஆகவேண்டும். மதவாத ராஜ்ஜியத்திற்கும் எது வழிவகுக்கிறது? பிற நாடுகளில் இதுபோன்ற பெரும்பான்மை ராஜ்ஜியம் வருவதை எப்படித் தடுத்தார்கள்? அவர்கள் அரசியலில் மதவாத கட்சிகளை தடை செய்தனர்

– டாக்டர் அம்பேத்கர்

Pin It