ஓர் அரைநூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளெல்லாம் சன்று புரட்சியாளர் அம்பேத்கர் பற்றிப் பேசியும் பாடியும் மக்களிடையே எழுச்சியூட்டி வந்தவர் மூர்த்தி தாத்தா. 1924 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் அகரஞ்சேரி கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவருக்கு பிறந்தது முதலே தெளிவான கண்பார்வை இல்லை. பள்ளிக்கூடத்தின் வாசலைத் தொடாதவர் என்றாலும் அம்பேத்கர் என்ற பல்கலைக் கழகத்தில் பயின்றதால் எந்தத் தத்துவத்தையும் இவரால் புரிந்து கொள்ள முடியும்.

இளமைக் காலம் முதலே "அம்பேத்கர் கலைக்குழு'வின் வாயிலாகவும், "கிராம வாலிபர் சங்கம்' மூலமாகவும் அடிமை விலங்கை உடைப்பதற்காக அம்பேத்கரின் தத்துவத்தை தலித் இளைஞர்களிடையே விதைத்து வந்த தாத்தா, இந்தியக் குடியரசுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பல ஆண்டுகளாய் அம்பேத்கர் கருத்துகளை சிறு சிறு நூல்களாக அச்சிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டி வந்தõர்.

தன்னுடைய இளம் வயதில், தென்னாற்காடு மாவட்டம் கோழிப்பாக்கம் அருகில் உள்ள பகண்டை என்னும் கிராமத்தில் நடந்த சாதிக் கொடுமையைத் தடுத்து நிறுத்தி, சாதி வெறியர்கள் சிறைக்குச் செல்லும்வரை ஓயாதவர். சாதிச் சண்டைகள் வந்து விடக்கூடாது, தலித் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தள்ளாத வயதிலும், தன் வீட்டில் இருப்பதையே விரும்பாமல் நாள்தோறும் ஏதாவது ஒரு கிராமத்திற்குச் சென்று களப்பணியாற்றி சமூகத்தின் இசைக்குரலாய் விளங்கிய மூர்த்தி தாத்தா மார்ச் 13, 2013 அன்று இயற்கை எய்தினார்.

தமிழ் தலித் அரசியலில் முக்கியப் பங்காற்றியவர் மூர்த்தி தாத்தா. தலித் விடுதலைக்காய் பாடுபட்ட தளபதி கிருஷ்ணசாமி அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றியவர். அவர் தமிழ்நாடு ஷெட்யூல்டு காஸ்ட் பெடரேஷனின் தமிழகத் தலைவராக இருந்த காலங்களில் மட்டுமில்லாமல் அவருக்குப் பிறகும் தான் இறக்கும் வரை தலித் மேடைகளில் பாடி வந்தார்.

moorthy_thatha_400அவருடைய பாடல்கள் கர்நாடகம், மும்பை போன்ற மாநிலங்களில் எல்லாம் புகழ் பெற்றவை. தலித் விழாக்கள், போராட்டங்கள் எதுவாயினும் அதை எந்த தலித் இயக்கம் நடத்தினாலும் பங்கேற்கும் பண்பாளர்.

மூர்த்தி தாத்தா 2004 ஆம் ஆண்டு "தலித் முரசு'க்கு அளித்த பேட்டி தலித் வரலாற்றில் ஒரு முக்கியப் பதிவாகும். அதில் அவர், “எங்கெல்லாம் அம்பேத்கரின் பிறந்தநாள், நினைவுநாள் விழா கொண்டாடவில்லையோ அங்கெல்லாம் "ஜாதி நாய்' ஆதிதிராவிடனைக் கடிக்கும். அம்பேத்கர் பெயரைச் சொல்ற இடத்துல ஜாதி நாய் வராது. ஆகவே, அம்பேத்கர் பெயரை யார் சொல்கிறார்களோ அவர்களே விடுதலை வீரர்கள். அம்பேத்கர் பெயரைச் சொல்லாதவர்கள் அடிமைகள்; அடிமை வேலை செய்ய ஆசைப்படுகிறவர்கள். அம்பேத்கர் எழுதிய ஒரு துண்டு அறிக்கையைப் படித்தால் தேசபக்தி வரும். வேறு எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் ஜாதி பக்திதான் வரும். அந்த ஜாதி பக்தி வந்தா, நாம பாடுபட்டு வாங்கிய சுதந்திரம் நம்மகிட்ட வராது என்று சொன்னார் அம்பேத்கர்.

“இந்து மத பக்தி, சாதி பக்தியோடு இருந்தால், சுதந்திரம் நமக்கு இல்லையென்று அர்த்தம். அம்பேத்கர் சொன்னது இன்று உண்மையாகி விட்டது. இன்று நம் மக்களிடத்தில் சாதி பக்தி வளர்ந்ததால், தலித்துகளுக்கு சுதந்திரம் இல்லை. அதனால்தான் தலித் மீது வன்கொடுமைகளை ஏவுகிறார்கள். அம்பேத்கர் எழுதிய சட்டம் மட்டும் நமக்கு இல்லையென்றால், தலித்துகள் வாழும் பகுதியை ஒவ்வொரு மாவட்டமாக "கான்ட்ராக்ட்டு'க்கு விட்டுவிடுவார்கள். இன்றைக்கு இந்தியாவில் நம்மைப் பாதுகாத்து வைத்து இருப்பது அம்பேத்கர் எழுதிய நாடாளுமன்றச் சட்டம்தான். இன்று நடைமுறையில் பார்த்தால், உன் சாதி பெரிசு, என்சாதி பெரிசு என்று போட்டிப் போட்டுக் கொண்டு சாதிச் சண்டை, மதச்சண்டைகளை ஏற்படுத்திக் கொண்டு சாதி வெறி பிடித்தவர்களாக இந்துக்கள் வளர்ந்து வருகிறார்கள்'' என்று குறிப்பிட்டிருந்தது இன்றளவும் பொருத்தமாக இருக்கிறது.

அம்பேத்கரியலும் பவுத்தமும் மட்டும் தான் தலித் விடுதலைக்கு வழி வகுக்கும் என்பதிலே மாறாத கருத்துக்கொண்ட மூர்த்தி தாத்தா அவர்களுக்கு "தலித் முரசு' வீரவணக்கம் செலுத்துகிறது.

Pin It