man_face_400

       காதுகளைத் தாண்டி உப்பிப்போன கன்னங்களையும், தலையில் முடியற்றதும், உப்பிப்பருத்த வயிற்றைக் கொண்டதும், கால்கள் அற்றதுமான பூதங்கள் கடலுக்குள் மூழ்கி உயர்ந்த அலைகளுடன் தலையை தரையில் அடித்து ஓஓஓ... என இரையும் கடற்கரைப் பிரதேசத்து சிறுவனின் நினைவில்; மழைக்கால பேரிரைச்சலைக் கொண்ட கடலின் அலைகள் சிறுவனின் நண்பனின் கடற்கரை ஓரத்து வீட்டிற்குள் புகுந்திருந்தது. நண்பனின் தங்கை இருண்ட அறை ஒன்றின் யன்னல் கம்பியை ஒற்றைக் கையால் பற்றி அந்தரத்தில் தூங்கியபடி முகத்தில் இருள் கவிந்து கிடக்க, வெண்பற்கள் மட்டும் ஒளிர இளித்துக் கூச்சல் இடுகிறாள்.

நண்பனின் வீட்டாருக்கும் அவனுக்கும் பொதுவில் தேவையற்ற பொருட்கள் வீட்டு முற்றத்தில் தென்னை மர அடியில் முட்டியபடி வெண்நுரையுடன் இரையும் உப்புக்கரிக்கும் கடல் அலைகள் மீது மிதக்கிறது. சற்றுமுன் நண்பனின் தந்தை புன்னகையுடன் சைக்கிளில் மழைநீர் செஞ்சகதியாக்கி இருந்த கிறவல் வீதியில் சென்றிருந்தார். எனவே, இப்பிரதி நிகழக்கூடிய சாத்தியப்பாடுடைய ஒரு பிரதேசமாக, ஒரு நகரை அண்டிய சினிமா படத் தயாரிப்பாளர்கள் தவறவிட்ட கடற்கரைப் பிரதேசமாகவோ அல்லது உலகின் எந்த ஒருமொழி பேசப்படும் பிரதேசத்திலும் இப்பிரதி இயங்கக் கூடிய சாத்தியப்பாடுடையதாக இருக்கலாம்.

அந்தப் பொருள் மீதான அவனது கவன ஈர்ப்பானது, ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தும் பீதியுடனே இருந்தது. புதிய கொப்பி ஒன்றில் கவலையீனமாக ஊற்றப்பட்ட மய்யானது, கொப்பித் தாள்களில் ஊறி உலகப்படம் போல் வியாபித்துச் செல்வதானதொரு பீதியே அவனைப் பதற்றப்பட வைத்தது. எனினும் அந்தப் பொருள் மீதான கவனக்குவிப்பை அவனால் விட்டுவிட முடியாதிருந்தது. அது அவனை அச்சுறுத்துவதாக இருந்தபோதிலும், தன் மீது கவிந்துள்ள இனம் புரியாத சுமையை அல்லது அழுத்தத்தை அது அகற்றிவிடக்கூடிய பொருளாகவே அதனை அவன் கருதினான். எனவேதான் பதற்றத்திற்கும், அச்சத்திற்கும் இடையில் தன் மீது எந்தவிதமான கவனிப்போ பார்வையோ பதியப் படக்கூடாது எனும் கவலையுடன், அவன் அணிந்திருந்த காற்சட்டையின் பக்கற்றுக்கள் ஈய்ந்து கிழிந்து விடக்கூடிய தன்மை கொண்டவை என்பதை உணர்ந்திருந்தபோதும், கனதியான அந்தப் பொருளை தன் காற்சட்டை பக்கற்றுக்குள் போட்டுக் கொண்டான்.

தன் மீது கவிந்துள்ள அழுத்தமானது இவையாக இருக்கலாம் என அவன் சிந்தித்த போதும், பின்னாளில் அவன் மீது கவியக்கூடிய சாத்தியப்பாடுடைய ஆதிக்கம் பற்றியும் நீங்கள் ஆராயலாம்.

வெண்பழுப்பு நிற முடிகள் எப்போதும் நெற்றியில் சுருண்டு தொங்க திரியும் கணக்கு வாத்தி, பள்ளிக்கு வரக்கூடாது, வந்தாலும் அடிக்கக் கூடாது என பிள்ளையார் கோயில் உடைந்த தேங்காய்ச் சில்லுத்துண்டை தன் வெண்ணிற மேல் அங்கிக்குள் மறைத்துக் கொண்டு சென்ற நாட்களிலேயே அவனுக்கு அதிகம் அடி விழுந்தது. அவன் தன் பிராபத்தனை மீதும், கடவுள் மீதும் மிகச் சிறிய வயதிலேயே நம்பிக்கையை இழந்திருந்தான். தன்னிடம் அந்த அபாயகரமான பொருள் இருப்பதை தன் கணித ஆசிரியர் தெரிய வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டவும் அது காரணமாக அமைந்திருந்தது.

பாடசாலையின் தேநீர் இடைவேளையின்போது அவனைச் சூழ சக மாணவர்கள் நிற்கும் சந்தர்ப்பத்தில் மிக அலட்சியமாக அந்தப் பொருளை வெளியில் எடுக்க விரும்பினான். அவர்கள் அது பயன்படுத்தும் ஆயுதம் பற்றித் தங்களுக்கு தெரிந்ததைக் கூறுவார்கள். ஒருவன் எல்.எம்.ஜி. ரவுன்ஸ் எனச் சொல்வான். இன்னொருவன் எஸ்.எல்.ஆர். இனுடையது எனச் சொல்வான். ஒவ்வொருவனும் ஒவ்வொரு பெயர் சொன்ன பிற்பாடு அவர்கள் சொல்லாத துப்பாக்கியின் பெயர் சொல்லி மிக அலட்சியமாக அதன் பயன்பாடு தனக்கு மிகப் பரிட்சியமானது என்கின்ற தொனியில் மீண்டும் அந்த ரவுன்சை தன் காற்சட்டைப் பையில் போட விரும்பினான். இதன் மூலம் கணித ஆசிரியருக்கு அவன் மர்மமானவன் என்பதை மாணவர்கள் மூலம் தெரியப்படுத்த விரும்பினான்.

பொதுவாகவே, கணித ஆசிரியர் அவனுடைய வகுப்பின் மீது தீராத பகை கொண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதிகாலைக் கனவொன்றில் அந்த வகுப்பு மாணவர்கள் செவ்விந்தியர்கள் போல் உடை அணிந்து கையில் பொல்லுகள் தடிகளுடன் தன்னை துரத்தியதாகவும், பயந்து எழுந்து ஓடியதில் தன்தோள் மூட்டு கதவில் இடிபட்டதால் தனக்கு தீராத வலி இப்போதும் இருப்பதாக அவர் அவர்களை கடுமையாகத் தண்டிக்கும்போது தெரிவித்திருக்கிறார். எனவே, தன்னிடம் ரவைகள் இருப்பது அவருக்கு தெரிய வருமானால், வேப்பமரத்தின் கீழும் கோயில்களிற்குள்ளும் இருக்கும் கரிய நிற சாமிகள் எல்லாம் கண்ணில் இருந்து சிகப்பு நிறச் சுவாலைகள் ஒளிர, கனவில் தத்தமது ஆயுதங்களுடன் அவரை விரட்டக்கூடும் என தனக்குள் ஒரு குறுகுறுப்புடன் புன்னகைத்தான்.

இன்னொரு சந்தர்ப்பமாக எப்போதும் அப்பாவிபோல் நடமாடிக் கொண்டு எதையுமே குள்ளத்தனமாக செய்யும் அவன் அண்ணன், கள்ளக் கரண்ட் எடுப்பதற்கு கொண்டு வந்த வயரை ஆமி ரவுண்டப் பண்ணினால் கைது செய்யலாம் என்ற அச்சம் காரணமாக, தந்தை அந்த வயர்களை கிடுகு மட்டை வேலிக்கும் மாட்டுக் கொட்டிலிக்கும் இடையான சந்தில் குழிதோண்டிப் புதைத்ததை அறிவான். எனவே, தன்னிடம் ரவைகள் இருப்பது நேரடியாக தந்தைக்கு தெரிய வருமானால், ரவுன்சுக்குப் பதிலாக மாட்டுக் கொட்டிலுக்கு பின்புறம்தான் புதைக்கப்படலாம் என்பதையும் அறிவான். ரவைகள் வைத்திருப்பது வேறொருவர் மூலம் தந்தைக்கு மறைமுகமாக தெரிய வருவதையே விரும்பினான். அவ்வாறான சந்தர்ப்பத்தில் தந்தை அவனை நேரடியாக கவனிக்காததுபோல் பாவனை செய்தாலும், மறைமுகமாக அவர் தீவிரமாக கவனிப்பதை இறுமாப்போடு எதிர்கொள்ளவே விரும்பினான்.

பின்னர் மழை நீர் ஓடி கருநீல நிற இரும்புத்தாது படிவுற்றுக் கிடந்த நீர் பீலியில் தன் கவனத்தைக் குவித்து நடந்தான்.

வாகை மரத்தடியை அவன் நெருங்கியபோது இடுப்பில் இருந்த வோக்கி டோக்கி சிகப்பு நிற ஒளிர்வுடன் கரகரத்தது. அவன் சட்டென்று வாகைமர வேலியுடன் பதுங்கினான். வலது கை இடுப்பில் இருந்து பிஸ்டலை உருவி எடுத்தது. கையை உயர்த்தி கழுத்துடன் பிஸ்டலை அணைத்துக் கொண்டான். இடது கையால் வோக்கியை ஓன் செய்து வாய்க்கருகில் கொண்டு வந்தான்... ஓவர்... ஓவர்... யேஸ்... ஓவர்... ஓவர்... ரிசீவ்... எனிமி... எனிமி... வோக்கியை இடுப்பில் செருகி விட்டு இடது கையையும் பிஸ்டலை நோக்கி கொண்டு போய்க்கொண்டே வேலியுடன் இன்னும் நெருக்கமாய்ப் பதுங்கினான். உள்ள எதிரிகள் முதுகு கடுக்கியது.

கம்பி வேலியின் கரல் கட்டிப்போன முள்ளோ அல்லது வாகை மரத்தின் மொக்கோ முதுகுடன் கடுமையாக அண்டிக் கொண்டிருப்பதை உணர்ந்தான். தமிழ் அல்லது ஆங்கிலப் படத்தில் வருவது போல் அவன் ஒட்டியிருந்த இடம், ஒரு தட்டையான மதில் சுவராகவோ அல்லது மரக்குற்றியாகவோ இல்லாதிருந்தது அவனுக்கு வருத்தத்தை அளித்தது. தான் ஒரு கேள்விக்குறிபோல் வளைந்து நிற்பதை உணர்ந்தான். மீண்டும் சிகப்புநிற ஒளிர்வுடன் வோக்கி கரகரத்தது... எனிமி... எனிமி... சேஞ் யுவர் பொசிசன்... ஓவர்... ஓவர்... ஆம் அவன் தன் நிலையெடுப்பை மாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தான். சொர... சொர... என்ற சத்தத்துடன் எதுவோ நிலத்தில் வீழ்ந்து தெறித்தது. தன் கால்களில் இளஞ்சூட்டுடன் தெறித்த சாணித்துகள்கள் கீழ்நோக்கி வழிந்து செல்வதைக் கண்டான்.

“அந்த எருமையை காலையில் இருந்து தேடுறன் எங்க தொலைஞ்சுதோ தெரியாது...'' எனிமி... எனிமி... டேஞ்சரஸ் எனிமி... சேஞ் யுவர் பொசிசன்... அவன் மூளை அவனுக்கு கட்டளை இட்டது. பழுப்பும், பசிய நிறமும் கலந்த நந்தியாவெட்டையின் இலைகளுக்கிடையில் அந்த வெண்ணிறப் பூக்களின் அசைவைத் தவிர எதிரில் அவனுக்கு எதுவும் புலப்படவில்லை. இரண்டு தாவு... ஒரு எட்டு... இன்னொரு ஜம்ப்... அவ்வளவுதான்... அவன் அந்தக் குறுக்கு வெட்டையைக் கடந்து பூவாழைக் குரோட்டன்களுக்குப் பின்னால் ஒரே கிடையாய் விழுந்து, தன் சேப்டி பிளேசை அடைந்துவிட முடியும் ஒன்...டு...திரி... இரண்டு எட்டு ஒரு தாவு இன்னுமொரு ஜம்ப்... அவன் கணிப்புத் தவறவில்லை.

வெதுவெதுப்பானதும் உரோமத்தின் மென்மையைக் கொண்டதும் சூடான எலும்புகள் முட்டுவதுமான ஒரு பொருள் மீது வீழ்வதை உணர்ந்தான். மனச் சுமையுடன் கூடிய தவிப்பில் நீல வானும், அலையும் வெண்பரப்பும் அவற்றுக்கிடையில் அச்சுறுத்தும் இரு கரிய விழிகளும், இளஞ் சிகப்பு நிற முரசுகளும் அதில் தெரியும் வெண்பழுப்பு நிறகூரிய பற்களையும் கண்டான். காதுகள் அடைத்து விடுவது போன்ற அலறலுடன் தான் இடர்ப்படுவதை உணர்ந்தான். தொடர்ச்சியான ஈனமான முனகலுடன் கூடிய ஊளையிடுதலே தனக்கு நேரவிருந்த விபத்தின் கடுமையை அவனுக்கு உணர்த்தியது. அவன் உடல் ஒருமுறை துடித்து அடங்க... உதடுகள் துடித்துக் கொண்டிருந்தது... “டேஞ்சரஸ் எனிமி... கெரி பல்லா... புடுக்குத் தப்பினது தம்பிரான் புண்ணியம்...''

15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தீர்க்கதரிசியானவன், வானத்தில் இருந்து ஒரு பயங்கரம் வரும், இரண்டு இரும்புப் பறவைகள் இரண்டு பெரிய கட்டடங்கள் மீதுமோதும்; உலகம் அழிவைத் தனதாக்கிக் கொள்ளும். மக்கள் பட்டினியால் சாவார்கள் என்ற தீர்க்க தரிசனத்துக்கு நீங்கள் செவி சாய்க்காது போனாலும், மழுங்கடிக்கப்பட்ட விதைகளின் உற்பத்தியுடன் இவ்வுலகமானது பச்சயத்தை இழக்கத் துணிந்துவிட்டது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அவன் அந்த ரவைகளை கண்டெடுப்பதற்கு சற்று முன்னான இந்த நிகழ்வு இங்கு பதிவு செய்யப்படுகிறது.

மாரிகால கடலின் ஓயாத இரைச்சலும்... கல்லில் உடுப்படிக்கும் சத்தமும்... அணில் பிள்ளையின் தித்... தித் சத்தமும் கேட்டுக் கொண்டு இருக்கும்போதும்... வளவு சத்தமில்லாமல் அமைதியாக இருக்கு மாப்போல் அவனுக்குட்பட்டது. மதியம் பெய்த மழைக்குப் பிறகு இப்போதுதான் மஞ்சள் வெய்யில் எறிக்குது... ஆனாலும் முகில்கலையாது மம்மலாய் இருந்தது. பாதத்திற்குள் நிலம் ஈரமாய் கசிவதை உணர்ந்தான். கிளுவைக்கும் கொய்யாவுக்கும் இடையில் வேலியில் வரியப்பட்டிருந்த பனைமட்டைகளுக்கிடையே விழும் மஞ்சள் வெய்யில் புற்தரையில் நீட்டு நீட்டு மஞ்சள் கீலமாக விழுந்து கிடந்தது... கரும் பச்சை நிறப் புற்கள் விறு... விறு... என்று வளர்ந்து வழித்தடத்தை எல்லாம் மூடிவிடும் போல் இருந்தது. மிக மெல்லியதாய் குளிர் காற்று உடல்மீது படர்ந்ததை உணர்ந்தான். திடீர் என்று காற்று பலமாக வீசிவிட்டு சட்டென்று ஓய்ந்தது. கிளுவையில் இருந்து சிழுநீர் அவன் உடல், உச்சந்தலை என்று கொட்டிற்று. சிழுநீர் விழுந்து உச்சிவிறைக்க, உடல்பதற, புடுக்கு விறைச்சு நிற்க, நெஞ்சுக் கூடு கொடுக அடித்தொண்டையால் தன்னிச்சையின்றிக் கத்தினான்.

“மஞ்சள் வெய்யில் எரிக்குது

மாங்கொட்டை துடிக்குது

மச்சாண்ட புடுக்குத் தெறிக்குது...''

“தட்டினால் தப்பி வருவேன். தடவினால் தாலியைக் கழட்டிவை...'' என்று ஆண் நுளம்பு தன் மனைவியிடம் சொல்லி வருவதாக... நுளம்படிக்கப் பக்குவம் சொல்லித்தந்த பாட்டி இறந்து போனாள் எனும் இரவுநேர நினைப்பின்போது ஏற்படுவதான திகிலே கத்தியவுடன் அவனுக்கு ஏற்பட்டது. ஆனாலும் சட்டென்று அவன் தன்நிலை அடைந்தான். ராகினி வீட்டு டொயிலெட் கதவு திறந்து கிடப்பதும்... பத்தர் வீட்டு யன்னல் பூட்டி இருப்பதும்... தூரத்து தார்ரோட்டில் சிலர் தன் பாட்டில் இயங்குவதும்... அருகில் இருந்த ஒழுங்கை ஆள் அரவமற்றுக் கிடப்பதுமான முரண்பாடான விசயங்கள்தான் அடைந்த அச்சத்தில் இருந்து தன்னை விடுதலை அளித்து விட்டதாகவும் மகிழ்ந்தான். பின்னர் மழை நீர் ஓடி கருநீல நிற இரும்புத்தாது படிவுற்றுக் கிடந்த நீர் பீலியில் தன் கவனத்தைக் குவித்து நடந்தான்.

“ஆர்... சபேசனா... அய்யாச்சி இங்கொருக்கா வாய்யா...''

குரலில் இருந்த கனிவு காரணமாகவோ அல்லது அந்தக் குரலுக்குரியவரை இனங்கண்டு கொண்டதாலோ அவன் சிறிய திடுக்கிடலுடன் மட்டும், அழுத்தமான உளப்பாதிப்பு எதுவுமின்றி, விழிப்புக்கு செவிசாய்த்தான். வசந்திச் சித்தி குறுக்ககட்டி கிணத்தடியில் குந்தி இருந்து உடுப்புத் துவைக்கிறா, சிவராமும், சிறீறியும் வசந்திச் சித்தி பற்றி அதிகம் சிரிச்சுச் சிரிச்சு கதைப்பதை அவன் கண்டிருக்கிறான். வசந்திச் சித்தி வடிவுதான்.

“அய்யாச்சி... வாழைக்குப் போற தண்ணிய ஒருக்கா தென்னைக்கு மாற்றி விடய்யா...''

தன் ஆண்மையை நிலைநிறுத்திக் கொள்வதான அவாவே... தன் புயவலிமையை காட்டுவாதான பாசாங்குமற்று... இயல்பாகவே ஒரு கைதேர்ந்த விவசாயி யின் நுணுக்க பாவத்துடன் மண்ணைக் கோலி தண்ணீரின் திசையை மாற்றினான். இவற்றின் மீது எதுவித கவனமற்று தன் உடுப்புகளை துவைத்தபடியே வசந்திச் சித்தியின் உதடுகள் பிரிவதைக் கண்டான்.

“ஆற்ற புடுக்கையாச்சி தெறிச்சது...''

உளவியல் தாக்கமானது குறிபிட்ட வயது வகுப்பாயிடையிலேயே வகுக்கப்பட்டுள் ளது. நிமிடந்தோறும் மாற்றமடையும் யுத்தசூழலில் இந்த ஆயிடைகள் எந்தவித நிலையான, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தீர்மானமான முடிவுகளையும் சாராது இருப்பினும், உளவியல் ரீதியான தனிப்பட்ட பகுதி ஒன்றை சேர்த்துக்கொள்வது பிரதியை முழுமைப்படுத்தும் என்ற கற்பிதம் காரணமாகவும் இப்பகுதி சேர்க்கப்பட்டிருக்கலாம்.

கொதிக்கும் சுண்ணாம்புக் கலவைப் பின்னணியில் சுருட்டுக் கடைக்காரர் ரவுண்டப்போல கிடக்கு என்று கிடுகு மடைவேலிக்குப் பின்னால் மறைந்து மறைந்து போய்க்கொண்டே கைகள் இரண்டையும் தலைக்கு மேல் தூக்கி உதறி... உதறி... கத்தக் கத்திப்போனார். நெஞ்சு விறைச்சுப்போக திடுக்கிட்டு கோழிக் குடிலின் உச்சியில் இருந்து உருண்டு சேற்றுக் குழிக்குள் வீழ்ந்தான். சேற்றில் இருந்தும் ரவுண்டப்பில் இருந்தும் தப்புவதற்கான வகையற்று தவித்தான். அம்மாவின் குரல் முகில்களுக்குள்ளோயோ அல்லது கரிபிடித்த குசினிச் சிமினிக்குப் பின்னால் இருந்தோ அசரிரீ... போல் ஒலித்தது... “டேய்... பள்ளிக்குப்போற மாதிரி புத்தக பேக்க தூக்கிட்டுப் போடா...'' பரிட்சயமானது போல் தோற்றம் தந்ததும் ஆனால் அவனுடைய வீட்டு முற்றமும் அல்லாததாகவும் இருந்த இடத்தில் இருந்து அவன் தெருவை நோக்கி ஓடினான். ஆனால் வந்து சேர்ந்த அந்த வீதியும்

அவனுக்கு பரிச்சயமான கிரவல் வீதியாக இல்லாமல் புல்லும்... புதரும்... தென்னை மரங்களும் நிறைந்த மணல் பாதையாக கிடந்தது... நிறையப் பேர் துப்பாக்கியுடன் யூனிபோம் போட்டு நின்றார்கள். அதில் அவனும் துப்பாக்கியுடன் யூனிபோம் போட்டு நிற்பதைக் கண்டான்.

ஒருவரும் கவனிக்காத போதும் பரிட்சயமற்ற புதிரான பாதைகளில் அலைவது அவனுக்கு பயப்பீதியை உண்டு பண்ணியது. திடீர் என்று ஒரு புதிர் பாதைமுன் சென்றி தோன்றியது. அவன் புத்தகப் பையில் இருந்து ரவுண்சை கீழே போடுவது எனத் தீர்மானித்தான். திடீர் என்ற விறைச்சுப்போன முத்தப்பாவின் முகத்தில் அவருக்கு சொந்தமில்லாததும் யாருடையதோ இறுகிப்போன குரல் கட்டளை இடுவதுபோல் கரகரத்தது... “செக் பொயின்டுக்கு முன்னால் நிண்டு புத்தக பேக்கத் திறக்கக் கூடாது. ஒருத்தர் செக்பொயின்டுக்கு முன்னால நிண்டு வெத்திலபோட இடுப்பில் இருந்து வெத்தில பேக்க உருவினவராம். அவர் இடுப்பில இருந்து துவக்க எடுக்கிறதா நினைச்சு சுட்டுப்போட்டாங்களாம்.'' சென்றியைச் தாண்டிச் சென்று ரவுன்சை கீழே போடுவது எனத் தீர்மானித்தான்... பின்னால் யானை பிளிறுவது போலே அல்லது ஆகாய விமானம் இரைவதாகவோ மிகப் பயங்கரமான உறுமலும் அலறலும் சேர்ந்தான சத்தம் கேட்டது. இரண்டு ரவுன்ஸ் இணைஞ்சு ஆங்கிலப் படத்தில் வர்றதுபோல் இரண்டு கூர் முன்னால் நீட்டிக் கொண்டு பளபளப்பா மினிங்கிக் கொண்டும் ஒரு ஜீப் வேகமாக வந்தது. அவன் கூர்ந்து பார்த்தான். கணக்கு வாத்தி முன்சீற்றில் வேட்டி கட்டி குதிச்சு குதிச்சு கத்தினார். “அவன்தான் அவன்தான்'' கால்கள் தள்ளாடின. பாதைகள் விட்டு விட்டு தோன்றியது. ஜீப்பும் திடீர் திடீர் என்று மறைந்து மறைந்து தோன்றியது. ஆனாலும் அச்சுறுத்தும் உறுமல் தொடர்ந்து கேட்டபடி இருந்தது. ஓட முடியாத அளவுத் தொண்டை காஞ்சு போனது.

முற்புதற்களுக்கிடையில் வகுப்பு மொனிட்டரும், கணக்கு வாத்தியும் குந்தி இருந்தார்கள். திடீர் என்று அவனுக்கு முன்னே வானத்தை முட்டுவதுபோலே உயர்ந்த கோபுரம் தோன்றியது. சுவர்கள் அவனை விழுங்கி உள்ளே துப்பியது. அவன் புல்தரையில் புரண்டான். அவன் முதுகில் சொர... சொர... என நீர் ஊற்றப்பட்டு நனைவதை உணர்ந்தான். வெத்தல போட்ட வாயுடன் பிரிந்சிப்பல் தோட்டத்திற்கு தண்ணி அடிக்கிறார். உடம்பில் மெல்ல குளிர் பரவுவதை அவன் உணர்ந்து திடுக்கிட்டு முழிச்சுப் பார்த்தான். உடம்பெல்லாம் நனைந்து போய் கிடந்தது. தலைமாட்டில் வைத்திருந்த தண்ணிச் செம்பு உருண்டு போய்க் கிடந்தது. நிமிர்ந்து மேசையைப் பார்த்தான். குளத்தில் கழுத்தளவு தண்ணியில் எருமை தலையை மட்டும் மேலே தூக்கிக் கொண்டு அமைதியாக நிற்குமாப் போல மேசையில் புத்தக பேக் அமைதியாகக் கிடப்பது இருட்டில் தெரிந்தது.

விடிந்ததும் முதல் வேலையாக குசினிக்குப் பின்னால் குழி கிண்டி ரவுன்சைத் தாக்க வேண்டும் என நினைத்தான். ஊர் முழுவதும் நாய் கண்ட மாதிரியும் குரைத்தது. விடிய ரவுண்டப் போட்டாலும் போடு வாங்கள் என்ற நினைப்பு உடம்பெல்லாம் கூடுதலாய்ப்பரவி நடுங்குவதை உணர்ந்தான். 

****

வி.கவுரிபாலனின் கதைகள் தன்னியல்பான தீவிரமும் நேரடித்தன்மையும் கொண்டவை. வாழ்வியத்தின் பகுதிகளாக உயிரோட்டத்துடன் அமைந்திருப்பவை. இதன் போக்கில்தான் இவரது கதைக்களம் அமைகிறது. வாழ்க்கைப் போராட்டமும் சாவும் இங்கே அக்கம் பக்கமாக நிறுத்தப்படுகின்றன. சபிக்கப்பட்ட மனிதர்களின் அன்றாடத் துன்ப துயரங்களைக் கடந்த ஒரு துன்பியல் இக்கதையின் பின்னணியில் உறைந்து கிடக்கிறது. கூர்நோக்கும், தெளிவான கண்ணோட்டமும், அசலான பாத்திரப்படைப்பும், இயல்பான உரையாடல்களும் கொண்ட இக்கதை கவுரிபாலனுக்கேயுரிய நடையில், கண்முன் விரியும் காட்சிகளாக முன்வைக்கப்படுகின்றன.

இவருடைய கதையில் ஒரு குறிப்பிட்ட மனநிலை இறுதிவரை காப்பாற்றிக் கொண்டு செல்லப்படுகிறது. வன்முறையான ஒரு சமூகச் சூழலின் எதார்த்தத்தை எதிர்கொள்ளும் ஒரு தமிழ் மனதின் நிலை அது. இம்மனநிலை பதற்றமாக, இயலாமையை, தவிப்பாக கதைக்குள் வியாபகம் கொள்கிறது.

Pin It