(உத்தப்புரத்தில் உள்ள தலித் மக்கள் தங்கள் ஊரில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் நுழைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை மறுக்கப்பட்டிருந்தது. 10.11.2011 அன்று, தலித் மக்கள் கோயிலுக்குள் நுழைந்தனர். உள்படம்: தலித் மக்கள் கோயிலுக்குள் நுழைவதை கண்டு பொறுக்காமல் அலறித் துடித்து கண்டனம் தெரிவிக்கும் ஜாதி இந்துக்கள்)
அதனை விட்டுவிட முடியாது
அவ்வளவு சீக்கிரத்தில்
அதற்கென்ன இப்போதுதான் ஆகின்றன
இரண்டாயிரம் ஆண்டுகள்
இன்னும் எத்தனை யுகங்கள்
இருக்க வேண்டிய அற்புதம் அது
அதற்குள் என்ன அத்தனை அவசரம்
அதை அழித்துவிட
எப்படி முடியும் எங்களால்
அடிமைகளை இழந்துவிட
எப்படி முடியும் எங்களால்
எங்களுக்கு கீழானவர்கள் இல்லையென்று கூற
கத்துகிற எங்கள் குரலின் அதிகாரத்தை
ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்
ஒரே நேரத்தில் எங்களையும் உங்களையும்
சமமாக நாங்கள் படைத்த கடவுள்கள்
ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்
புரிகிறதா உங்களுக்கு
இப்போதே எவ்வளவோ செய்தாயிற்று
படிக்கிறீர்கள்
தேர்தலில் நிற்கிறீர்கள்
எங்களை ஆளுகிறீர்கள்
ஏன் எங்களுக்கே ஜாதி சான்றிதழ்கள் தருகிறீர்கள்
இன்னும் என்ன உங்களுக்கு தாகம்
அதை ஒழிக்க வேண்டாம்
அது இல்லை என்றால்
நீங்களும் நாங்களும் சமமென்றால்
அய்யோ வேண்டாம்
எங்களை குணமாக்காதீர்கள்
அந்த ஜாதி நோயோடே
நாங்கள் சாகிறோம்!