பழைய முறை - முன்னோர் முறை என்று சொல்கின்ற இந்நிகழ்ச்சிக்கு, அதைக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய சொல் தமிழில் ஒன்று கூட இல்லை. இருக்கிற கல்யாணம், விவாகம், தாரா முகூர்த்தம், கன்னிகாதானம் என்கின்ற சொற்கள் வடமொழிச் சொற்கள் என்பதோடு, அவை இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய சொற்களும் அல்ல. இந்நிகழ்ச்சிக்கு நாம் தோன்றிய பின் தான் - நாம் "வாழ்க்கை ஒப்பந்தம்' என்கின்ற இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய சொல்லை ஏற்படுத்தினோம். இந்நிகழ்ச்சிக்குத் தமிழில் ஒரு பெயர் இல்லை என்பதோடு, இதற்குப் பொதுவான ஒரு முறையும், சடங்கும் கிடையாது. நம்மிடையே நடைபெறும் இச்சடங்குகள் என்பவையும், இந்நிகழ்ச்சிக்குப் பார்ப்பனரால் ஏற்பாடு செய்யப்பட்டு நம்மிடையே புகுத்தப்பட்டவையேயாகும்.

பெண்ணடிமைக்கு இருக்கிற சக்தி, உலகமெல்லாம் பெண்களை அடிமைப்படுத்தி இருக்கிறது. வெள்ளைக்காரன் பெண்களை இழிவாக நடத்துகின்றான். துலுக்கன் பெண்களுக்கு உறையே போட்டு விடுகின்றான். அவனெல்லாம் நடப்பில் இழிவுபடுத்துகிறான் என்றால், நமக்கிருக்கிற ஆதாரம் இலக்கியம், தர்மம் எல்லாம் பெண்களை இழிவுபடுத்துவனவாக இருக்கின்றன என்பதோடு, மொழியும் பெண்களை இழிவுபடுத்துவதாகவே இருக்கிறது. பெண்ணைக் குறிக்க "அடி', "அவள்' என்ற சொற்கள் இருக்கின்றனவே தவிர, மரியாதைக்குரிய சொற்கள் எதுவும் இல்லை. ஆண்களுக்கு மட்டும் அய்யா, அவர்கள் என்று சொற்கள் இருக்கின்றன. இலக்கியம், தர்மம் செய்தவன் இன்றைக்கு எதிரே இருந்தால், உதைக்க வேண்டுமென்றுதான் தோன்றுகின்றது. பெரிய சமுதாயக் கோளாறை மாற்ற வேண்டுமானால், பெரும் புரட்சி செய்துதானாக வேண்டும்.

அய்ம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் வரும் ஒரு பாடலில் பெண்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “எவ்வளவு பணக்காரனின் மனைவியாக இருந்தாலும், இந்திரன் மகளாக இருந்தாலும் அவள் கையில் பத்து ரூபாய் கொடுத்தால் போதும் சம்மதித்து விடுவாள்'' என்கின்றான். கணவன் எவ்வளவு அழகானவனாக இருந்தாலும், கலையில் வல்லவனாக இருந்தாலும், பிறன் மேலேயே அவள் எண்ணம் செல்லும் என்று எழுதி இருக்கின்றான்.

வள்ளுவன் பெண் தன் கணவனைத் தொழ வேண்டுமென்று சொன்னானே தவிர, ஆண் தன் மனைவியைத் தொழ வேண்டுமென்று சொல்லவில்லை. அவ்வை, பெண் புலவராக இருந்தும் அவள் "தையல் சொல் கேளேல்' பெண் சொல்லைக் கேட்கக் கூடாது என்கிறாள். இப்படி எந்தப் புலவரை, இலக்கியத்தை, நீதி நூலை, புராண - இதிகாசங்களை எதை எடுத்தாலும் அவை பெண்களை இழிவுபடுத்துவதாகவும், அடிமைப்படுத்துவதாகவுமே இருக்கின்றன.

காதலர் வாழ்வு மறைந்து, கணவன் - மனைவி வாழ்வு வந்ததும் பெண்களின் சுதந்திரம் மறைந்து விட்டது. பெண் என்றால் அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு உள்ளவளாக இருக்க வேண்டும். அதுதான் சிறப்பு என்று வாழ்வு முறையாக்கப்பட்டு விட்டதால், பெண்கள் மனித சமுதாயத்திற்குப் பயன்பட முடியாமல் போய்விட்டனர். இனியாவது தாய்மார்கள், பெண்களை அறிவு பெற முடியாமல் மூடி வைப்பதைத் தடுக்க வேண்டும். ஆண்கள் பெண்களுக்கு உரிமை கொடுக்க முன்வந்தால் கூட, பெண்கள் அதனை ஏற்பதாக இல்லை. காரணம், நாம் அவர்களை அடக்கி ஒடுக்கி அறிவு பெற முடியாமல் செய்வதாலேயே ஆகும். ஆண்களைப் போலப் பெண்களும் தங்கள் வாழ்க்கைக்கேற்ற ஊதியம் பெறும்படியான தொழிலைச் செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும். 20 வயது வரைப் படிக்க வைக்க வேண்டும். தங்கள் துணைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர்களிடமே விட்டு விட வேண்டும்.

இந்த ஜோசியம், சகுனம், பொருத்தம் என்பவை எல்லாம் மனிதனின் முட்டாள்தனமான மூடநம்பிக்கையேயாகும். தாலி கட்டுவது என்பதும் அதுபோன்ற மூட நம்பிக்கைகளில் ஒன்றுதானாகும். தாலி கட்டுவதே "அறுப்பதற்காக!' பெண்களை முண்டச்சி (விதவை)களாக்க, சகுனத் தடையாக்கவேயாகும். வயதுப்படிப் பார்த்தால் ஆண்தான் முன் சாக வேண்டும்; அதன்பின் தான் பெண் சாக வேண்டும். திருமண அமைப்பு முறையானது அப்படி அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆணை விடப் பெண் வயதில் குறைவாக இருக்க வேண்டும் என்கின்ற முறை இருப்பதால், ஆண் முதலில் சாகவும் பெண் தாலியறுக்கவுமான நிலை ஏற்படுகின்றது. மற்றப்படி தாலியால் எந்தப் பயனுமில்லை. ஆணின் அடிமை என்பதைக் காட்டக் கூடிய அடிமைச் சின்னமே தாலியாகும்.

இந்த நிகழ்ச்சி சடங்கு நிகழ்ச்சியல்ல; பிரச்சார நிகழ்ச்சி. சடங்கு நிகழ்ச்சியென்றால் இங்கு பானை, சட்டி, அம்மி எல்லாமிருக்கும். மக்களுக்கு விஷயங்களை எடுத்துச் சொல்லிபிரச்சாரம் செய்வதற்கு ஒரு வாய்ப்பாக இந்நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. மணமக்களாக இருக்கிற இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து "நாங்கள் துணைவர்களாகிவிட்டோம்' என்று சொன்னால் போதும்.

(விடுதலை - 17.6.1969)

Pin It