நமது வேதம், சுவாமி, பூசை, வணக்கம் முதலியன சம்பந்தமான விஷயங்கள் இப்படி இருக்கின்றனவென்றால், இந்த லட்சணத்தில் இம்மாதிரி சுவாமியினாலும் கோயிலினாலும் - நமது சுயமரியாதை எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறது என்பதோடு, நமது பணம் எவ்வளவு செலவு ஆகியது என்பதையும் கவனித்துப் பாருங்கள். சென்னை மாகாணத்தில் மாத்திரம் இந்துமத சம்பிரதாயப்படிக்கு ஏற்பட்ட கோயில்களுக்கும் மடங்களுக்கும் வருடம் ஒன்றுக்கு 2 கோடி ரூபா வரை வரும்படி வருகிறது. 2 கோடி ரூபா வரும்படி வந்தால், மக்களுக்கு எத்தனைக் கோடி ரூபா செலவு ஆகும்?

இன்னும் உற்சவவாதிகள், சுவாமிக்கும் அம்மனுக்கும் கலியாணம்; சுவாமி தாசி வீட்டுக்குப் போதல்; ஒரு காலைத் தூக்கி ஆடுதல்; நரியைக் குதிரையாக்குதல் முதலிய திருவிழாக்களுக்கு 10 மனு (மடங்கு) எடையுள்ள சுவாமியை 200 டன் எடையுள்ள தேரில் வைத்து 10 ஆயிரம் பேர் இழுப்பதும், அதனை 5 ஆயிரம் பேர் வேடிக்கை பார்க்க பல இடங்களிலிருந்து வருவதும் ஆகிய காரியங்களுக்கு ஆகும் செலவுகளும் - சுவாமிகளுக்கு அபிஷேகம், பூசை, சதிர், பாட்டுக் கச்சேரி, நகை நட்டு, பாவாடை, புனுகு, சவ்வாது, பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ முதலிய செலவுகளுக்கெல்லாம் சேர்த்து, இந்து மதச் சுவாமிகளின் பூசைக்கும் உற்சவங்களுக்கும் மாத்திரம், தென்னிந்தியாவில் வருடத்திற்கு 25 கோடி ரூபாவுக்கு குறைவில்லாமல் செலவாகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த 25 கோடி ரூபாவும் நாம் சுயமரியாதை அற்றுக் கிடக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்துவதற்கும், தினம் தினம் நமக்கு ஞாபகப்படுத்துவதற்கும் செய்யும் செலவேயல்லாமல் இதனால் வேறு என்ன பலனை அடைகிறோம்?

சுவாமி, பூசை, உற்சவம் இவைகளில் நமது யோக்கியதையும் சுயமரியாதைக் கேடும் இப்படி இருப்பதோடு, இந்துமதச் சடங்கு என்னும் பேரால் நமது தலையில் எவ்வளவு பளுவைச் சுமத்தி, நமது பணத்தை எவ்வளவு கொள்ளை கொண்டு, நமது பிறப்புரிமையான சுயமரியாதையை எவ்வளவு தூரம் நசுக்கி இருக்கிறார்கள் என்பதை கவனிப்போம். இந்து மதம் என்பதாக ஒன்றை நாம் ஒப்புக் கொள்வதால், நமது நிலை பிறவியிலேயே இழிவானதாகவும், இந்து மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்வோரிலேயே ஒரு வகுப்பாருக்கு நாம் அடிமைகளாகவும், வைப்பாட்டி மக்களாகவும், கடவுளாலேயே உண்டாக்கப்பட்டவர்கள் ஆகிறோம். நம்மை இழிவாய்க் கருதுபவர்கள் காலிலே விழுந்து கும்பிடுபவர்களாகிறோம்.

இன்னும், நமது வாழ்நாள் முழுவதும் - அதாவது தாய்வயிற்றில் கருத்தரித்த நிமிடம் முதற்கொண்டு - நமது மதச் சடங்கு செலவைப் பாருங்கள்! சர்க்கார் நம்மிடம் வரிவசூல் செய்கிறார்கள். இதை அதிகமென்கிறோம். தவிர, நம்மிடம் வசூலிக்கும் வரியை நமக்காக செலவு செய்வதில்லை என்றும், இது நமது "சுயமரியாதைக்கு ஈனம்' என்றும் சொல்லி சர்க்காருடன் சண்டை செய்கிறோம். பாமர ஜனங்களை சர்காருக்கு விரோதமாய் கிளப்பிவிட்டு, பெரிய பெரிய சர்க்கார் உத்தியோகங்களைப் பார்ப்பனர்கள் பெற்று, நமது சுயமரியாதைக்கும் இவ்வுத்தியோகங்கள் மூலமாய் இழிவை ஏற்படுத்திக் கொள்கிறோம். ஆனால், மதத்தின் பெயரால் பார்ப்பனர் நம்மிடம் வசூல் செய்யும் வரியைப் பற்றி நாம் ஒரு சிறிதும் கவலைப்படுவதில்லை.

தங்கச் செம்பு, வெள்ளிச் செம்பு, வீடு, பூமி, கன்னிகை முதலிய தானங்கள், சமாராதனைகள், சாந்திகள் முதலிய காரியங்களில் ஆகும் செலவுகள் எத்தனை கோடி ஆகும் என்பதைக் கவனித்துப் பாருங்கள்! இதற்கு ஏதாவது பிரயோஜனமுண்டா என்பதை யோசியுங்கள்! இந்தச் செலவுகள் ஒருபுறம் நம்மைப் பிய்த்து பிடுங்கித் தின்னவும், இதன் மூலம் நமது பிறப்புரிமையாகிய சுயமரியாதை எவ்வளவு பாதிக்கப்பட்டு அடிமையாகி வாழ்கிறோம் என்பதையும் யோசியுங்கள்!

இப்படி எத்தனையோ விதமான தடைகள் செயற்கையிலேயே, அதாவது நமது அறிவீனத்தினாலேயே நம்மைச் சூழ்ந்து கொண்டு வாட்டுகின்றன. இவைகளைக் களைந்தெறிய வழி தேடுங்கள். பிறகு சுயராஜ்யம் தானாக வந்துவிடும். பார்ப்பானுக்குப் பணம் கொடுத்து அவன் காலில் விழுந்தால், நமது பெற்றோர்கள் மோட்சத்திற்குப் போவார்கள்; நமது பாவம் தீரும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஜன சமூகத்திற்கு சுயராஜ்யம் வேண்டுமென்பது யாராவது நம்பக்கூடிய காரியமா? வீணாக, அதாவது சில பார்ப்பனர்கள் பிழைக்க இந்துக்களாக இருப்பது போலவே, சில புரட்டுக்காரர்களும் பித்தலாட்டக்காரர்களும் அயோக்கியர்களும் பிழைக்க, "சுயராஜ்யம்' "சுயராஜ்யம்' என்று கத்தி ஏமாறாதீர்கள்!

சுயமரியாதை கண்டவிடம்தான் சுயராஜ்யமே தவிர, சுயராஜ்யம் என்பது ஒரு தனி வஸ்து இல்லை என்பதை உணர வேண்டும். ஆதலால், பிறப்புரிமை இன்னது என்பதும், அது இன்ன விஷயங்களால் தடைப்பட்டுள்ளது என்பதும், அத்தடைகளிலிருந்து விலக இன்னின்னது செய்ய வேண்டும் என்பதும், சுயராஜ்யம் என்பது இதுபோலவே மக்களை ஏமாற்றும் ஒரு புரட்டான மார்க்கம் என்பதும், "சுயமரியாதை கண்டவிடத்தில் உண்மையான சுயராஜ்யம் என்பது துலங்கும்' என்பதும் விளங்கியிருக்குமென்று நினைக்கிறோம்.

(குடிஅரசு - 9.1.1927)

Pin It