police_400சுவாசக் காற்றில் ஏறும் துயரம்
நெஞ்சடைத்துச் செல்கிறது

வலிகளின்மீதேறி உட்கார்ந்து கொண்டு
அழுது புலம்புகிறது பொழுது

அசைவின்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறது
வெறித்த கண்களுடன்
துன்பத்தின் பெருவெளியை வாழ்வு

அடிக்க நீளும் கொம்புகளும்
சுட நீளும் துப்பாக்கிகளும்
வெடிக்க வீசப்படும் குண்டுகளும்
அரசதிகாரத்தின் காவலாயுதங்கள்

யாராலும் பெற முடியாத
பதில்களைக் கொண்டதாகவே
இருக்கின்றன ஆட்சிகளின் இருக்கைகள்

கத்திக் கதறி அழும் குழந்தையைப்
போன்றதாக மாறிவிட்டன
உரிமைகளைப் பேசும் நாவுகள்

அடித்து மிரட்டவும்
சுட்டுத் தள்ளவும்
வெடித்துத் துரத்தவும்
சிறையில் திணிக்கவும்
எப்போதும் தயார் நிலையில்
அரசு எந்திரம்

எரியும் வயிற்றை
இறுக்கிப் பிடித்து
குமுங்கிக் கதறுகிறது
மானுடம் தினம்தினம்

- யாழன் ஆதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.