கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் பற்றி வாய் வலிக்க கதறும் இந்து சமூகமும் ஊடகங்களும், தலித் மக்களுக்கான நிதியில் மய்ய, மாநில அரசுகள் செய்து வரும் ஊழல் பற்றி மறந்தும் வாய் திறப்பதில்லை. காமன்வெல்த் விளையாட்டில் நடைபெற்ற ஊழல் பற்றி மாதக் கணக்கில் பக்கம் பக்கமாய் பேசிய பத்திரிகைகள், இத்திட்டத்திற்கென தலித் நிதியிலிருந்து மய்ய அரசு எடுத்த 670 கோடி ரூபாய் பற்றி ஒரு வரி விவாதிக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்த பிறகே உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், நாடாளுமன்றத்தில் இது குறித்து வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். அது மட்டுமல்ல, அதை நியாயப்படுத்தியும் பேசினார். தேசிய எஸ்.சி./எஸ்.டி. ஆணையம் இச்செயலை வன்மையாகக் கண்டித்தும்கூட, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊழலுக்கு எதிராக முழங்கும் பரிசுத்தவான்களின் கூட்டம், அதிலும் வர்ணாசிரம அளவுகோலையே வைத்திருக்கிறது!

ஓர் அரசு, மக்களுக்காக உருவாக்கும் நிதித் திட்டத்தை (பட்ஜெட்), உள்ளபடியே எல்லா மக்களுக்கானதாகவும் உருவாக்குவதில்லை. மக்கள் தொகையில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள மேல்தட்டு வர்க்கத்தினருக்கு நன்மை பயக்கும் வகையில், பல்வேறு உத்திகளோடுதான் நிதித் திட்டம் தயாரிக்கப்படுகிறது. இப்பொதுத் திட்டங்களால் தலித்துகளுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. மூன்று லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் செலவழித்து போடப்படும் நெடுஞ்சாலைகளால், தலித்துகள் எத்தகைய மேம்பாட்டை அடைந்துவிட முடியும்? ஏற்றுமதியாளர்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வரிச் சலுகையாக அளிக்கப்படுவதில், தலித்துகளுக்கான ஏற்றம் எங்கிருக்கிறது?

எனவேதான், 1979 இல் நடுவண் அரசு, தலித் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தை உருவாக்கியது. அரசின் ஒவ்வொரு துறையிலும் பொது மக்களுக்கென என்ன செய்யப்படுகிறதோ, அதுபோக கூடுதலாக ஒரு பங்கு – தலித் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட வேண்டும். இப்பங்கு, இம்மக்களின் மக்கள் தொகை சதவிகிதத்திற்கு இணையாக இருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு

கடந்த 14 ஆண்டுகளில் (1995 – 2010) இத்திட்டத்தில் தலித் மக்களுக்கு அளிக்க மறுத்த தொகை : 14 ஆயிரத்து 298 கோடி ரூபாயாகும் (Tamilnadu State (Budjget Link book) Annual Plan 1996-2010, Govt. of Tamilnadu). ஆ. ராஜா, தலித் என்பதால் பழிவாங்கப்படுகிறார் என்கிறார் முதல்வர். ஆனால், தலித் மக்கள் இந்த அரசால் ஏன் பழிவாங்கப்படுகிறார்கள்? தலித்துகள் ராஜாவாக இல்லாததாலா?

இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத் தின் வழிகாட்டு நெறிமுறைகளை மதிக்காமலும், அதை மீறியுமே செயல்பட்டு வந்திருக்கின்றன. 2008 – 09 நிதி நிலை ஆண்டில் மய்ய அரசு தலித்துகளுக்கு மறுத்துள்ள தொகை : 29 ஆயிரத்து 801 கோடி ரூபாயாகும். இச்செயல், திட்டமிட்ட புறக்கணிப்பாகக் கருதப்பட்டு, இதற்கு காரணமானவர்கள் இச்சமூகக் குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டும். மேலும், இந்நிதித் திட்டத்தில் ஒதுக்கி செலவு செய்வதாகக் காட்டும் தொகைக்கும், தலித் மக்களின் முன்னேற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. சிறப்பு உட்கூறு திட்டம் மட்டும் கடந்த 30 ஆண்டுகளில் சரிவர செயல்படுத்தப்பட்டிருக்குமானால், சேரி இந்தியா, வறுமையின் பிடியிலிருந்தே விடுபட்டிருக்கும்!

தலித் மக்களுக்காக நடத்தப்படும் 1,565 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளும் சேரியைப் போலவே காட்சியளிக்கின்றன என்பது, டிசம்பர் 21, 2010 அன்று அண்ணா சாலையை மறித்து, 5 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நிலைகுலைந்த பிறகுதான் – பொதுச் சமூகத்திற்கும் ஊடகங்களுக்கும் உறைத்தது. தமிழக அரசு, சிறைக் கைதிகளுக்கு ஒரு நாளைக்கு 25 முதல் 30 ரூபாயும், போலிஸ் நாய் ஒன்றுக்கு 65 ரூபாயும், கல்லூரியில் படிக்கும் தலித் மாணவனுக்கு 18 ரூபாயும் ஒதுக்குகிறது. இதிலிருந்துதான் இந்நாட்டு மேல்தட்டு மேதாவிகளின் திட்டமிடுதல்கள் எந்த லட்சணத்தில் இருக்கின்றன என்பது அம்பலமாகி இருக்கிறது.

தலித்துகள் முன்னேற கல்வியை முன்நிபந்தனையாக்கும் இந்து சமூகம், அவர்களுக்கு அதே கல்விக்கான ஆதாரத்தை மறுக்கும் ஜாதியத்தை தோலுரிக்க வேண்டும். தலித் கட்சிகளும், இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும் ஓயாமல் திட்டமிட்டாலும் – துயரங்களின் புள்ளிவிவரங்களை வெளியிட்டாலும் – தலித்துகளுக்கான நிதியை வழங்க எந்த அரசும் முன்வரப் போவதில்லை. இந்நிலையில், இந்துக்களாக இருந்து கொண்டு (தாழ்த்தப்பட்டவர்களாக) வாழ்நாள் முழுவதும் கோரிக்கைகளை முழங்கிக் கொண்டு இருக்கப் போகிறோமா? இல்லை, இந்துக்களாக இருப்பதிலிருந்து விடுதலையை வென்றெடுக்கப் போகிறோமா?

Pin It