கையால் மலமள்ளும் வழக்கத்தை ஒழிப்பதற்குத் தடையாக நிற்பது - தொழில் நுட்பக் குறைபாடுகளோ, நிதி பற்றாக்குறையோ அல்லது சட்ட ரீதியான செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாததோ அல்ல. சமூக ஒதுக்குதல் மற்றும் பொருளாதார சுரண்டல் என்ற அடித்தளத்தின் மீது கட்டப்பட்டுள்ள - நமது ஜாதி உளவியலே இவ்வழக்கத்தை ஒழிப்பதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இந்திய குடிமைச் சமூகம், ஜாதி உளவியலில் இருந்து விடுதலை பெறாதவரை - கையால் மலமள்ளுவதை ஒழிக்கவே முடியாது.
- பெசவாடா வில்சன்

News-Cutting“குழந்தைகளுக்கு தெரியக் கூடாது''

“இந்தியாவில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர், மனிதக் கழிவை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் தான் அதிகபட்சமாக மனிதக் கழிவை அகற்றும் தூய்மைத் தொழிலாளர்கள் 22 ஆயிரத்து 822 பேர் இருக்கிறார்கள்'' என்று சமூக நீதி இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், நாடாளுமன்றத்தில் 23.10.2008 அன்று தெரிவித்திருக்கிறார். ஆனால் சட்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், மத்திய சமூக நீதி அமைச்சகத்திற்கு 14.10.2008 அன்று எழுதியுள்ள கடிதத்தில், சபாய் கரம்சாரி அந்தோலன்' அறிக்கையை குறிப்பிட்டு, “இந்தியாவில் 13 லட்சம் மக்கள் மனிதக் கழிவை அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் 16.10.2008 அன்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு பொது நல வழக்கில் அளித்துள்ள இடைக்காலத் தீர்ப்பில், “பாதாள சாக்கடைக்குள் இனி மனிதர்கள் இறங்கி அடைப்பை நீக்குவது தடை செய்யப்படுகிறது'' என்று கூறியுள்ளது. உயர் நீதிமன்ற ஆணையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். ஆனால் உள்ளபடியே நீதிமன்றத் தீர்ப்புகளை அவமதிப்பது தனி மனிதர்களல்ல; அரசுகள் தான். 1993 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கையால் மலமள்ளுவதை தடை செய்யும் சட்டத்தை, இன்றளவும் மத்திய அரசின் ரயில்வே துறை நாள்தோறும் அலட்சியப்படுத்தியே வருகிறது. ஆனால், அத்துறை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைத்தான் என்ன?

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில், பாதாள சாக்கடையில் இறங்குவோர்க்கு எல்லாவித பாதுகாப்பு உறைகளும் கொடுப்பதாகவும், சாக்கடையை ஆய்வு செய்வதற்காகத் தான் மனிதர்கள் இறக்கப்படுகிறார்கள் என்றும் ‘சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்' வாய் கூசாமல் பொய் சொல்கிறது. இவ்வாரியத்தில் ஆனால், ஒப்பந்தப் பணியாளராக இருக்கும் சின்னக் கண்ணன் இதை மறுத்து ‘குமுதம் ரிப்போர்ட்டர்' (30.10.2008) இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளது, அரசு எந்திரத்தை அம்பலப்படுத்துகிறது: “சும்மா போ சார்! எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் தான் பாதாள சாக்கடைக்குள் இறங்குறோம். அவ்வப்போது விஷவாயு தாக்கி இறக்கிறோம். முகமூடி,
ஹெல்மெட், கையுறை எல்லாம் தலைமை அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது . கடந்த 78ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வாரியத்தின் 153 டிப்போக்களில் 320 பேர் வேலை பார்க்கிறோம்.

ஒப்பந்ததாரரின் கீழ் இருந்தாலும் எங்களை தினமும் வேலை வாங்குவது வாரிய அதிகாரிகள்தான். எங்களுக்கு ஈ.எஸ்.அய்., பி.எப்., காப்பீடு, என்று எந்த வசதியும் கிடையாது. பாதாள சாக்கடைக்குள் இறங்கும்போது தாளமுடியாத நாற்றம், மூச்சுத் திணறல், கூடவே எலிகளின் தொல்லையும் இருக்கும். ஆறு மீட்டருக்குக் கீழ் ஆக்ஸிஜன் தேவைப்படும். அப்போது உடம்பெல்லாம் எரிச்சல் ஏற்படும். இருந்தும் வலியைப் பொறுத்துக் கொண்டு வேலை செய்வோம். ஒவ்வோர் ஆண்டும் புது ஒப்பந்ததாரர்கள் வரும்போது எங்களுக்குத் தேர்வு நடக்கும். நாங்கள் பாதாள சாக்கடைக்குள் இறங்கத் தகுதியானவர்களா என்பதை முடிவு செய்யும் தேர்வு அது.

சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்திற்குள் இருக்கும் கழிவுநீர் கிணற்றின் அருகில் அத்தனை தொழிலாளர்களையும் வரச்சொல்வார்கள். அந்தக் கிணறு அண்ணா சாலை, ராயப்பேட்டை, பகுதிகளின் கழிவுகள் ஒட்டுமொத்தமாக வந்து சேரும் இடம். அங்கே ஒப்பந்ததாரர் முன்னிலையில், ஒவ்வொருவரும் ஆறு மீட்டர் ஆழமுள்ள அந்தச் சாக்கடைக் கிணற்றில் இறங்கி, மூச்சடக்கி, முப்பது விநாடிகள் மூழ்க வேண்டும், நாற்றம் தாங்காமல் யாராவது பத்து விநாடிகளில் வெளியே வந்து விட்டால். அவர்களுக்கு வேலை கிடையாது.

இந்த வேலையில் நிரந்தரப் பணியாளர்கள் 800 பேர் இருக்கிறார்கள். இவர்களில் 300 பேருக்கு மூக்கில் ரத்தம் வடிதல், சாக்கடைக்குள் இறங்கும்போது இடுப்பு எலும்பு இறங்குவது எனப் பலவித சிரமங்கள் இருக்கின்றன. எந்திரங்களின் மூலம் கழிவு அகற்றுவதாக அதிகாரிகள் சொல்வது சும்மா பேருக்குத்தான். இவர்கள் அறிமுகப்படுத்திய ‘மான்சர்' என்ற எந்திரத்தின் முனையை நாம் தான் சாக்கடைக்குள் மூழ்கி குழாய்க்குள் பொருத்த வேண்டியிருக்கும். அப்படிப் பொருத்திய பிறகுதான் எந்திரம் வேலை செய்யும். சாக்கடையில் அடைத்திருக்கும் மண்ணை அகற்ற ‘ஷில்ட்மேன்' என்ற எந்திரம் இருக்கிறது.

Cleaning-manஅய்ம்பது சதவிகித மண்ணைத் தான் அந்த எந்திரம் எடுக்கும். மிச்சத்தை நாங்கள் தான் இறங்கி எடுக்க வேண்டும். சாக்கடைக்குள் இறங்கும் எங்களுக்கு காலரா, புற்றுநோய் எனப் பல நோய்கள் பரவ வாய்ப்புள்ளன. நீதிமன்றத்தின் தடையாணை, மகிழ்ச்சியைத் தருகிறது. எங்களுக்கான மாற்று வேலையை அரசு தர வேண்டும்.
வீட்டில் குழந்தைகளுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக, பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் போய்த்தான் வேலை பார்க்கிறோம். அரசு எங்களைக் கண்டு கொள்ளாவிட்டால் எப்படி?'' நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

ஜாதி சார்புள்ள மதச்சார்பற்ற தமிழன்!

‘ஜாதி, மதம் தடையில்லை' என்று வெளிவரும் திருமண விளம்பரங்களில்கூட - (‘எஸ்.சி. / எஸ்.டி. நீங்கலாக') என்று அறிவிப்பு வெளிவருவது குறித்து, ‘தலித் முரசு' இதழில் 6 ஆண்டுகளுக்கு முன்பே ஓர் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதேபோல தற்செயலாகப் பார்க்க நேர்ந்தபோது, ‘தினத்தந்தி' (15.10.2008) நாளேட்டில், இவ்வாறு இரு விளம்பரங்கள் வெளிவந்துள்ளன. திருமண விளம்பரங்களில், தாங்கள் என்ன பணி செய்கிறோம், எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்ற தகவல்கள் எல்லாம் பின்னால்தான் வரும். முதலில் இடம் பெறுவது ஒருவருடைய ஜாதி. அதற்குப்பிறகுதான் பணி, ஊதியம், நிறம்'... எல்லாம். இத்தகைய திருமண விளம்பரங்கள் லட்சக் கணக்கில் வெளிவருகின்றன. தமிழர்களின் உள்ளுணர்வை எதிரொலிக்கின்றன.

இவ்விளம்பரங்களில் ‘முஸ்லிம்' என்று சொல்பவர்களுக்குத்தான் ஜாதி இல்லை. பிற அனைத்து இந்துக்களுக்கும், கிறித்துவர்களுக்கும், தமிழர்களுக்கும் ஜாதி இருக்கிறது. ஆம், ஜாதி இல்லாதவர் முஸ்லிம்; ஜாதி இருப்பவர் தமிழர்! அப்படி எனில் ஜாதியை ஒழிக்க மதம் மாறலாமா? கூடாது. ஏனெனில் மதசார்பற்ற தமிழ் அடையாளம் போய் விடுமே. ஆனால் ஜாதி அடையாளம் போகாதே. அதனால் என்ன?

ஆவதும் அரசாலே, அழிவதும் அரசாலே?

மதுரையில் உள்ள உத்தப்புரத்தில் சில அடி சுவரை இடித்த பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று அரசியல் கட்சிகள் நினைத்தன. ஆனால், அதற்கு எதிராகவே எல்லாம் நடக்கிறது. சுவர் இடிக்கப்பட்டபோது இருந்த முக்கியத்துவம் இன்று ஊடகத்தில் இல்லை; எனவே அரசும் கண்டுகொள்ளவில்லை. இங்குள்ள கோயில் சுவருக்கு வெள்ளை அடிப்பதில் தலித் மக்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக மோதல் நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கு நிலை நாடடுகிறோம் என்ற பெயரில், காவல் துறை தலித் மக்களை மிகக் கொடூரமாகத் தாக்கியது. அதனால் ஊரில் உள்ள அனைத்து ஆண்களும் வெளியேறி வேறு இடங்களுக்குச் சென்று விட்டனர். காவல் துறை தலித் வீடுகளை சூறையாடியுள்ளது. இவ்வளவு நடந்த பிறகும் மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்க்கவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை கூட ஊருக்குள் அனுப்பாமல் மாவட்ட நிர்வாகம் தடுத்துள்ளது. இதற்கிடையில் அவ்வூரில் இறந்த பெண்ணை அடக்கம் செய்ய ஆண்கள் இல்லாததால், பெண்களே முன்னின்று அனைத்துப் பணிகளையும் செய்து புதைத்துள்ளனர். இறுதியில் 5.11.08 அன்று சுரேஷ் என்ற தலித் இளைஞர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

உத்தப்புரம் தலித் மக்கள் இனிவரும் காலங்களிலும் அச்சுறுத்தலையே சந்திக்க வேண்டி இருக்கும். இப்பிரச்சனையில் தொடர்ந்து தலையிடும் சி.பி.எம். கட்சி தமிழக அரசிடம் முறையிடுகிறது, மாவட்ட நிர்வாகம் செயலிழந்துவிட்டது என்றும், அமைதிக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றும் அது கூறுகிறது. இந்த அரசு தீண்டாமையைக் காப்பாற்றும் அரசாகத் தான் இருக்கிறது என்பதை, அவர்கள் மனு கொடுத்ததில் இருந்து இன்றுவரை மெய்ப்பித்திருக்கிறது! சாதிய சமூகப் பிரச்சனைக்கு அரசை மட்டும் சார்ந்து நிற்பதில் பயனில்லை. செயல்பட மறுக்கும் அரசிடம் மீண்டும் மீண்டும் விண்ணப்பம் தான் கொடுக்க முடியும். அல்லது பேரணியோ, ஆர்ப்பாட்டமோ செய்யலாம். அதையும் சி.பி.எம். செய்தது. ஆனால் அமைதியை ஏற்படுத்த முன் முயற்சி எடுக்காத அரசு, தலித்துகளை சுட்டுக் கொன்று அமைதியை ஏற்படுத்தப் பார்க்கிறது.

உண்மைப் பிரச்சினை என்ன? ஜாதி இருக்கலாம், தீண்டாமை மட்டும் இருக்கக் கூடாது என்றே அரசியல் கட்சிகள் விரும்புகின்றன. தீண்டாமையை ஒழிக்க அரசால் தான் முடியும் என்றும் அவை நம்புகின்றன. சாதியை ஒழிக்காத அரசு எப்படி அதன் விளைவை மட்டும் தடுத்துவிடும்? போராட்டம், ஆய்வு, அரசியல், சட்டம்... என எல்லாவற்றையும் பரிசீலித்துப் பார்த்த பிறகுதான் - பத்து லட்சம் மக்களுடன் இறுதித் தீர்வு என்று நாக்பூரில் போய் நின்றார் பாபாசாகேப் அம்பேத்கர். அவருடைய தீர்வை அலட்சியப்படுத்தி விட்டு எல்லோரும் அரசிடம் போய் மண்டியிடுகிறார்கள்


Pin It