குமைந்து வெளியேறும் கண்ணீர்
கோபத்தால் மாறுகிறது நெருப்பாய்
அணைக்கவியலா வெம்மையில்
எழுகின்ற பக்கமெல்லாம் தெரிகிற
உயிரின் வலியில் துவழ்கிறது மனம்
எதனினும் தணியாத தாகம்
உயிரைக் குடித்தே முடிகிறது
தொடுவானின் செஞ்சிவப்பாய் மாறி
கனறுகிறது ரத்தம் தோய்ந்த நிலம்
தீத்துண்டமாய் வெளியில் தகிக்கிறது
உயிரினைப் பறிகொடுத்த உடல்
அடித்து அடித்தே விரட்டும் ஆதிக்கம்
கொன்றே ஓய்கிறது இறுதியில்
வாழும் போதே துரத்தி ஒதுக்கி
ஒடுக்கி நுணுக்கி மதியாத கைகள்
செத்த பின்பு என்ன செய்யும்?
செத்த எலி ஒன்றை தூக்கி
வீசுதலைப் போல
வீசுவதைத் தவிர
மண் வீழ்ந்த வித்தொன்று
முட்டி மோதி கிளம்பும் நாளில்
பெரும்பாறைகளும் தூளாகலாம்
ஈழப்போராளிகளின் நினைவிடம்
புதைப்பதை விதைப்பதாகவே
நம்ப முடிகிற வாழ்வில்
பிறப்பும் இறப்பும்
வெறும்
எண்ணிக்கையாவதில்லை...
இவர் வந்தார்
அவர் சென்றார் என
முடித்துவிட
இயற்கை எழுதிய
முடிவுரையா இது?
ரத்தம் தோய்ந்ததாக
தசைகள் இறுகியதாக
எலும்புகள் உடைபட்டதாக
நரம்புகள் அறுந்ததாகவுமின்றி
வேறெப்படி எழுதிவிட முடியும்
விடுதலைப் போரின்
வரலாற்றை...
More articles by யாழன் ஆதி
- தலித் படுகொலைகளின் இன்னொரு அத்தியாயம் (01 ஜூன் 2016)
- மாற்றுப்பாதை - 33 (14 ஜன 2016)
- மாற்றுப்பாதை 33 - திருமகன் (28 ஆக 2015)
- மாற்றுப்பாதை - சி. முத்துக்கந்தன் (05 நவ 2014)
- தலித் மக்கள் மீதான இலக்கிய வன்மம் (02 ஏப் 2014)