தாலாட்டு

BlackFatherArtயாரேனும் உன்னைத் தன் பிள்ளையாகப்
பெற விரும்பக் கூடும்
ஆனால், நீ என் குழந்தை

யாரேனும் உன்னை விலையுயர்ந்த பாயில்
பேணி வர விரும்பக்கூடும்
ஆனால், நீ என் குழந்தை

யாரேனும் உன்னை ஒட்டகக் கம்பளம்
ஒன்றில் அமர்த்த விரும்பக் கூடும்
ஆனால், நீ என் குழந்தை

நான் உன்னை கிழிந்த பழைய
பாயொன்றில் தான் பராமரித்து வந்தாக வேண்டும்

யாரேனும் உன்னைத் தன் பிள்ளையாகப்
பெற விரும்பக்கூடும்
ஆனால் நீ என் குழந்தை

சோம்பேறி

கோழி கூவியதும்
அந்த சோம்பேறி தன் உதடுகளைச்
சப்புக் கொட்டியவாறு கூறுகிறான்
‘ஆக, மீண்டும் பகல் வெளிச்சம். அப்படித்தானே'

அவன் தனது பாரமான உடலை மறுபக்கமாக
திருப்பிக் கொள்வதற்கு முன்பாக
தன்னை நீட்டிக் கொள்வதற்கு முன்பாக
கொட்டாவி விடுவதற்கும் முன்பாக
விவசாயி வயலை அடைந்தாகி விட்டது

நீர் வாய்க்கால் தண்ணீர் நதியை வந்தடைந்தாகி விட்டது
நூற்பவர்கள் பருத்தியை நூற்றுக் கொண்டிருக்கிறார்கள்
நெசவாளி தன் துணியை சரி செய்து கொண்டிருக்கிறார்
கொல்லர் குடிசையில் நெருப்பு கனன்று கொண்டிருக்கிறது

அந்த சோம்பேறிக்குத் தெரியும் ‘சூப்' எங்கே
அதிகமான இனிப்புச் சுவையோடு இருக்குமென்று
அவன் வீடு வீடாய்ச் செல்கிறான்
இன்று படையலுக்கு பலி எதுவும் இல்லையெனில்
அவன் மார்பெலும்பு துருத்திக் கொள்ளும்!

ஆனால், இலவச வள்ளிக் கிழங்கைக் கண்டாலோ
அவன் தன் சட்டைப் பொத்தான்களைக் கழற்றத்
தொடங்குகிறான்
விழாத் தலைவர் அருகில் நெருங்கிச் செல்கிறான்

இருந்தாலும் அவனுடைய சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல!
அவனுடைய மனைவிகள் பருவமடைந்துவிட்டால்
பணக்கார மனிதர்கள் அவனுக்கு
உதவி செய்வார்கள் அவர்களை முடிக்க!

- யொரூபா
- தமிழில்: லதா ராமகிருஷ்ணன்
நூல் : "கறுப்புக் குரல்கள்'

படிப்பறிவு

ஓசூர் அருசில் உள்ள கொல்லப்பள்ளி ‘கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா'வில், ஆகஸ்டு மாதம் 29 முதல் 31 வரை மாணவர்களுக்கு ‘சிறார் சித்திர முகாம்' நடைபெற்றது. பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட பெண் குழந்தைகளே இங்கு படிக்கின்றனர். ஓவியர்கள் மாரிமுத்து, கார்த்திகேயன் மற்றும் சண்முக சுந்தரம், மணி, (யூமா வாசுகி) இளையராஜா, சீனிவாசன் ஆகியோர் இம்முகாமை முன்னின்று நடத்தினர். இம்முகாமில் மாணவர்களால் வரையப்பட்ட படங்களில் ஒருவருடைய கருத்துப் படத்தை மட்டும் இங்கே வெளியிடுகிறோம். 30க்கும் மேற்பட்டஇக்குழந்தைகளின் ஓவியங்களை தனி நூலாகவே ஆக்கலாம். ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

Pin It