செயல்படு செல்வமே

காலையில் விழிக்கப் பழகிடு
கவனமாய்ப் படிக்க முயன்றிடு
விளையாட்டு பற்பல பயின்றிடு
விடுமுறை நாளைக் களித்திடு

அடிமை வாழ்வை மறந்திடு
அன்பாய் என்றும் நடந்திடு
பிடிவாதத்தை ஒழித்திடு
பிழையிலா எழுத்தைக் கற்றிடு

நல்லதைச் செய்திட நாடிடு
நல்லோர் சொல்வதைக் கேட்டிடு
செல்வம் பெருக்க உழைத்திடு
செருக்கதை நீயும் விட்டிடு

நூல்கள் சொன்னதை அறிந்திடு
மாண்பாய் நற்பேர் எடுத்திடு
நலிந்தோருக்கு உதவிடு
இன்பஞ் சிறக்க வாழ்ந்திடு

-செயவாணன்
நூல் :’இனிய மழலை முத்துக்கள்'மழைகொட்டும் மழை கொட்டுதே
குளத்தில் தவளை கத்துதே
மின்னல் மின்னி வெட்டுதே
மேகம் இடித்துக் கொட்டுதே

தும்பில் தண்ணீர் வருகுதே
துள்ளி மீன்கள் துடிக்குதே
மண்ணும் குளிர்ந்து மணக்குதே
மரஞ்செடிகள் செழிக்குதே

எங்கும் வெள்ளம் ஓடுதே
எங்கள் வீடும் ஒழுகுதே
ஏரி குளங்கள் நிறையுதே
எல்லாப் பஞ்சமும் நீங்குதே

-அருப்புக்கோட்டை அழகிரி
நூல் :’சிந்திக்க வைக்கும் சிறுவர் பாடல்கள்'
Pin It