அண்ட வெளியில் வேதிவினைகள் ஓயாமல் நடைபெற்று வருகின்றன. இவ்வேதி வினைகளே சூரியனிலிருந்து நமக்குக் கிடைக்கும் வெப்பத்திற்கும், பூமியின் உருவாக்கத்திற்கும், அதில் இருக்கும் உயிர்களுக்கும் காரணம். இரவு வானத்தில் நம்மால் விண்மீன்களையும், விண்மீன் கூட்டங்களையும், விண்கற்களையும் பார்க்க முடியும். நிலவு என்று நாம் பெயர் வைத்து அழைக்கிற துணைக்கோள்களையும் பார்க்கலாம். பகலில் சூரியனைப் பார்க்க இயலும். தொலைநோக்கி என்கிற உபகரணத்தின் உதவியால் வானவெளியில் உள்ளவற்றை நெருக்கமாகப் பார்க்கலாம். மேகங்கள் இல்லாத இரவு வானத்தில் நாம் சுமார் 6000 விண்மீன்களைப் பார்க்கலாம். அய்யம் இருந்தால், இரவில் மல்லாந்து படுத்துக் கொண்டு எண்ணிப் பாருங்கள்!

விண்மீன்கள்

விண்மீனை நாம் பார்த்தால், அது இத்தினியூண்டு இருக்கிறது! ஆனால், அது ஹீலியம் ஹைட்ரஜன் ஆகிய வளிகளைக் கொண்ட மிக மிகப்பெரிய காற்றுப் பந்து. அதில் உள்ள காற்று எரிவாயு, அடுப்பில் இருக்கும் தீக்கொழுந்து போல எரிகிறது. ஈர்ப்பு விசை அந்த காற்றுப் பந்தை லட்டைப்போல உருண்டையாக வைத்திருக்கிறது! உங்களுக்கு ஒன்றைத் தெரியுமா? சூரியன் கூட ஒரு விண்மீன்தான். நமக்கு அருகிலேயே இருப்பதால் அது பெரிதாகத் தெரிகிறது. நமக்கு அருகில் என்றால் ஏதோ பூமிக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம்; 15,00,00,000 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. சூரிய ஒளி பூமியை வந்து அடைவதற்கு 8 நிமிடங்களையும் 20 வினாடிகளையும் எடுத்துக் கொள்கிறது.

கதிரவன்

ஒளிரும் தன்மை கொண்டவை விண்மீன்கள். ஒளிராதவை கோள்கள். விண்மீன்கள் கூட்டம் கூட்டமாக உள்ளன. அண்ட வெளியில் 88க்கும் மேற்பட்ட விண்மீன் கூட்டங்கள் இருக்கின்றன. இரவில் விண்மீன்கள் தெரியும் வானில் பார்த்தால் பலவிதமான உருவங்கள் தெரியும். புள்ளிகளை இணைத்தால் உருவம் தெரியும். புதிர் போல இருக்கும். நீங்கள் முயன்று பார்க்கலாம். இந்த விண்மீன் கூட்டங்களுக்கு ஒவ்வோர் நாட்டிலும் ஒரு விதமான பெயர் வழங்குகிறது. பொதுவான பெயர்களும் இருக்கின்றன. இந்த விண்மீன் கூட்டங்கள் இணைந்து சுற்றும் வெளியை நாம் பால்வீதி அல்லது பால் மண்டலம் என்கிறோம். உடுமண்டலம் என்றும் கூறலாம். உடு என்றால் விண்மீன் என்று பொருள்.

பிறகு பேசுவோம் குழந்தைகளே!
Pin It