Uthappuram wall

ஆழத் தோண்டிய கடைக்காலில்
உறுதியாய் நிற்கிறது சுவர்
இந்தச் சுவரற்ற சித்திரங்கள் என
எவரும் இல்லை இங்கே
இடிப்பதாய்தான் சொல்வார்கள்
எல்லோரும் இச்சுவரை
இல்லையென்றால் எங்கிருக்கிறது
அப்படியொரு சுவரென கேள்விகள் நீளும்
அதுவொரு மாயச்சுவர் என்றும்
நீங்கள் தான் தேவையில்லாமல் ஏதேதோ
சொல்கிறீர்கள் என்றும் அறிவுறுத்தல் நிகழும்
சுவர்களின்றி வீடுகளேது
வீடுகளின்றி ஊர் ஏது
ஊரெனில் மக்கள் வசிப்பது
சுவரைத் தாண்டி இந்த மக்கள்
வேறெதையும் யோசிக்க மாட்டார்கள்
வேலியைத் தாண்டாத மந்தைகளாய்
இருப்பதில் கர்வத்தின் உச்சத்தில் கூச்சலிடுவர்
ஆனால் பாருங்கள்
ஒற்றைக் காலைத் தூக்கி
நாய்கள் சுவர் மீது ஒண்ணுக்கடிக்கின்றன
சுவர் எனின் என்ன
ஜாதி மயிர்தான்

-யாழன் ஆதி
Pin It