பத்தாண்டுகளுக்கு முன்பு....
Maancholai
வாழ்ந்த நம்பிக்கையோடும் ஆவேச முழக்கங்களோடும் படையெடுத்து வருகிறது ஒரு மக்கள் கூட்டம். அவர்கள் நடையில் புதியதொரு வேகம். உடலில் புதிய தெம்பு. அதுவொரு போராட்டப் பேரணிதான் எனினும் ஒன்றுபட்டிருப்பதனால் உண்டாகும் பலனை எல்லோரும் உணர்ந்திருந்ததால், ஒரு கொண்டாட்டத்தைப் போலவே அதன் தொடக்கம் இருந்தது. போக்குவரத்து இடைஞ்சல் என பொது மக்களும், அமைதியை சீர்குலைப்பதாக அரசும் போராட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டன. குரல் கொடுக்கும், களமிறங்கி நியாயம் கேட்கும் தலைவனின் பின்னால் அணிவகுப்பது எத்தனை மகிழ்ச்சியானது. அவர்கள் பசியை மறந்திருந்தார்கள். தூக்கத்தைத் துறந்திருந்தார்கள்!
கைக்குழந்தைகளை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு, மாதவிலக்கு இன்னல்களைப் பொறுத்துக் கொண்டு பெண்கள் நீண்ட தூரம் நடந்து வந்திருந்தார்கள். இத்தனைக்கும் திரண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் தங்கள் சொந்தப் பிரச்சனைக்காகவோ, தேவைக்காகவோ வரவில்லை. எங்கோ மலை மேல் தேயிலை பறிக்கும் சக மனிதனின் உரிமைகளை மீட்டெடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. தங்கள் சமூக வாழ்வின் மிக உன்னதமான நாளாக அது இருக்கும் என மக்கள் எதிர்பார்த்திருக்கக் கூடும். ஆனால், நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஒற்றுமையுணர்வையும் தகர்த்தெறிந்த மிக மிக துயரமான நாளாக அந்நாள் மாறிப் போனது.
1999 சூலை 23 அன்று பேரணியில் நடத்தப்பட்ட தடியடிக்கும், வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டுகளுக்கும் பயந்து உயிர் தப்பிக்க ஓடிய மக்கள், காவல் துறையால் தாமிரபரணி ஆற்றுப் பக்கமாக குறி வைத்து தள்ளப்பட்டனர். ஆற்றில் விழுந்தவர்களை விடாது பாய்ந்து அடித்தது போலிஸ். நீரில் மூழ்கடிக்கப்பட்டும் அடித்தும் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். செத்துப் போனவர்களுக்கு இது பத்தாம் ஆண்டு நினைவு நாள். எல்லா காயங்களையும் வடுக்களாக காலம் மாற்றிவிடுகிறது. ஆனால் சில, எப்போதும் ரத்தம் கசியும் நினைவுகளாகவே தங்கிவிடுகின்றன. பேரிழப்புகளையும் பெருந்துயர்களையும் கடந்து மாஞ்சோலை எப்படி இருக்கிறது?
“ஒரு நாளா ரெண்டு நாளா, நூறு வருஷம் ஓடிப் போச்சு. அஞ்சாறு தலைமுறையா இந்தக் காட்டுலதான் கெடக்கோம். எங்க வாழ்க்கைய எழுதணும்னா உங்க பேனாவ நீங்க கண்ணீர்லதான் நெரப்பணும்” - இருதய மேரி சொல்வது உண்மைதான்! மேற்குத் தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை மக்களின் வாழ்க்கை ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்து தொடங்குகிறது. அப்போதெல்லாம் நிலங்கள் பெருமளவில் ஜமீன்தார்கள் வசம் இருந்தன. மாஞ்சோலைப் பகுதியின் சுமார் 8,500 ஏக்கரை 1929இல் ‘பாம்பே பர்மா டிரேடிங்' நிறுவனம் குத்தகைக்கு எடுத்தபோது அது சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமாக இருந்தது. எப்போதும் குளிரும், எப்போதாவது வெயிலும் அவ்வப்போது மழையும் கலந்த மாஞ்சோலையின் தட்பவெப்பம், பணம் கொட்டும் பெரும் பயிர்களை விளைவிக்க ஏதுவாக இருந்தது. 99 ஆண்டுகள் குத்தகைக்கு நிலம் கைமாறிய போது மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக மாஞ்சோலை இருந்தது. காட்டை செப்பனிட்டு விவசாய நிலமாக மாற்ற இந்நிறுவனத்திற்குப் பெருமளவில் ஆட்கள் தேவைப்பட்டனர்.
சமவெளியில் புல்லும் புதருமாக இருக்கும் நிலத்தைப் பதமாக்கி, விவசாயத்துக்கு நேர்படுத்துவதற்கே பெரும் உடலுழைப்பும் மன உறுதியும் தேவைப்படுகையில் சிந்தித்துப் பாருங்கள், ஒரு காட்டை சீர்படுத்துவதற்கு எவ்வளவு பாடுபட வேண்டும். அதிலும் வசதி வாய்ப்புகள் எதுவுமற்ற அந்நாட்களில் பெரிய பெரிய மரங்களை வேரோடு பிடுங்குவதும், பெரும் பாறைகளை பெயர்த்தெடுப்பதும் எத்தனை பெரிய சவாலாக இருக்கும்! விஷச் செடிகளும், பாம்புகளும், பூச்சிகளும் விலங்குகளும் மண்டிக் கிடக்கும். கால் வைக்கிற இடமெல்லாம் அட்டை அப்பும். உணவு, உறைவிடம், மின்சாரம், போக்குவரத்து என உயிர் வாழ்வதற்கான எந்த அடிப்படையும் இல்லாத இந்த மலைப் பகுதிக்கு, இவ்வளவு கடுமையான வேலையை ஏற்க நெல்லையைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து தனியாளாகவும், குடும்பம் குடும்பமாகவும் வந்து சேர்ந்தனர் தலித் மக்கள்.
ஏன்? “ஒட்டப்பிடாரம், மானூர், உக்கிரக்கோட்டை, அழகிய பாண்டியபுரம், சீதக்குறிச்சி, அருளாட்சி, வல்லநாடு இப்படி நெறைய ஊர்கள்ல இருந்து சனங்க நெறைய பேரு வந்தாங்க. இந்த ஊருகள்ல ஜாதி ஆதிக்கம் நெறைய உண்டு. அடிமை வாழ்க்கைன்னா அப்படியொரு அடிமை வாழ்க்கை. அய்யா சாமினு கும்பிடு போடணும். இந்த ஊர்கள்ல எங்களுக்கு நெலமுமில்ல, வேலையும் இல்ல. பசியிலயும் அடிமைத்தனத்துலயும் கஷ்டப்பட்டுக் கெடந்தோம். அப்போதான் மலை மேல வேலைவாய்ப்பிருக்குன்னாங்க. அதோட மலையில் நாயுடு இல்ல, கள்ளர் இல்ல, நாடார், கோனார்னு நம்மள அடிமைப்படுத்துகிற வேற எந்த ஜாதிக்காரங்களும் இல்ல. நாம மட்டுந்தான் இருக்கப் போறோம்னு சொன்னாங்க. தங்குறதுக்கு வீடும் கூலியும் குடுத்துடுவாங்கன்னு சொன்னதும் சனமெல்லாம் மேல கிளம்பிட்டுது” என்று சொல்லும் இம்மானுவேலின் பூர்வீகம், மணியாச்சிக்கு அருகில் உள்ள அய்வரன்பட்டி.
மலையின் புவியியல் தன்மை மற்றும் தட்பவெப்பம் பற்றி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இப்படி கிளம்பி வந்தவர்கள் அடர் காட்டைப் பார்த்ததும் அரண்டு போனார்கள். திரும்பிப் போய்விடலாம் என்று நினைக்காதோரும் முயலாதோரும் இல்லை. ஆனால் நடுத்தீவில் மாட்டிக் கொண்ட நிலைதான். மேலே வேலைக்காக வந்தவர்கள் அவ்வளவு எளிதாக அதை மறுத்து கீழே போய் விடமுடியாது. எங்கு திரும்பினாலும் மரங்களும் பூச்சிகளும் விலங்குகளும் தான் நிறைந்திருந்தன. இவற்றோடு பழக்கப்படாத குளிர், நச நசவென்று மழை. தப்பித்தல் அவ்வளவு எளிதல்ல. சாலை என்ன பாதை கூட கிடையாது. இரவாகிவிட்டால் வீடுகளில் எரியும் சிம்னி விளக்கையும் வானத்தில் உலா வரும் நிலாவையும் தவிர, சின்ன ஒளியைக் கூட பார்க்க முடியாது. கொடுமைகளைத் தாங்க முடியாமல் சிம்னி விளக்கு துணையோடு இரவோடு இரவாக காட்டு வழியாகவே தப்பித்துப் போனவர்களும் உண்டு. ஆனால் அப்படிப் போனவர்கள் மீண்டும் மலைக்கு திரும்ப வேண்டியிருந்தது. காரணம், சமவெளியில் காட்டு விலங்குகளையும் விஷப் பூச்சிகளையும் விட இரண்டு மிகமோசமான கொடுமைகள் இருந்தன: அவை சாதியும், வறுமையும். இவ்விரண்டும் கீழே வந்தவர்களை மீண்டும் மேலே துரத்தின.
“சுத்திலும் இருக்கிற தேயிலைக் காட்டைப் பாருங்க. எவ்ளோ அழகாயிருக்கு! இதுக்காக நாங்க பட்ட கஷ்டங்கள கணக்குல வைக்க முடியாது. ஆரம்பத்துல இங்க தேயிலை பயிரிடல கொய்னா மரந்தான். இந்த மரத்தோட பட்டை மருந்துக்கு பயன்படும். நல்ல விலைக்குப் போகும். அதோட ஏலக்காயும், காப்பிக் கொட்டையும் பயிரிட்டோம். பயிர் செய்றதுன்னா அது சாதாரண காரியமில்ல. காடு அப்போ தாருமாறா கிடந்தது. காட்டு மரங்கள வெட்டி சாச்சு, பாறைகளை உருட்டி நிலத்தை சமமாக்கணும். உடம்பு முழுக்க அட்டைப்பூச்சி அப்பி ரத்தத்த உறிஞ்சும். எல்லாத்தையும் பிடுங்கி எறிஞ்சுட்டாக் கூட, உடம்புல எப்பவும் ரெண்டு மூணு அட்டைப்பூச்சி இருந்துட்டே இருக்கும். முதல்ல அருவருப்பா இருந்துச்சு, பயமா இருந்துச்சு. போகப் போக எல்லாமே பழகிப்போச்சு” என்கிறார் இம்மானுவேல்.
இவ்வளவு இன்னல்களையும் சமாளித்து இந்த மக்கள் பார்த்த வேலைக்கு கொடுக்கப்பட்ட கூலி, ஆண்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டரை அணா; பெண்களுக்கு ஓர் அணா. பத்துக்குப் பத்து அளவிலான கூரை வீடுகளில் அய்ந்தாறு குடும்பங்கள் சேர்ந்திருக்க வேண்டும். வேலைக்குப் போக வேண்டியது; ஆங்காங்கே அடுப்பு மூட்டி சமைக்க வேண்டியது; அங்கேயே அப்படியே படுத்து உறங்க வேண்டியது. இப்படியே ஆண்டுகள் உருண்டோடின. ‘நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்' என நிறுவனம் கிடு கிடுவென வளர்ந்தது. இது தவிர ஈட்டி, தேக்கு, சுருளி, சந்தனம், காட்டு மா போன்ற மரங்களை உள்குத்தகைக்கு விட்டு நல்ல லாபம் பார்த்தது இந்நிறுவனம். சொற்ப கூலிக்காக நிலங்களை செப்பனிடுவதையும், விதைப்பதையும் அறுவடை செய்து கொடுப்பதையும் ஒரு கடமையைப் போல செய்து கொண்டிருந்தனர் மக்கள்.
இதற்கிடையில் இந்தியா விடுதலையடைந்தது. நாட்டின் விடுதலை மாஞ்சோலை தொழிலாளர்களை துயர வாழ்விலிருந்து விடுவிக்கவில்லை. வெள்ளையர்களிடமிருந்து விடுதலை என்பது ஒரு செய்தி என்ற அளவில் கூட இம்மக்களை அந்நேரத்தில் பாதிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், சுதந்திரத்துக்குப் பிறகு தான் தங்கள் வாழ்க்கை மிக மோசமாகிப் போனதாகவே சொல்கிறார்கள். 1948இல் எஸ்டேட் ஒழிப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன் அடிப்படையில் ஜமீன்தார் உரிமை நீக்கப்பட்டது. எஸ்டேட் தமிழக அரசின் கைக்கு மாறியது. பாம்பே பர்மா நிறுவனத்தின் உரிமமும் இதோடு ரத்தாகியிருக்க வேண்டும் என்றாலும், தமிழக அரசு சில விதிகளைத் தளர்த்தி நிறுவனத்தை இயங்கச் செய்தது. 1950களில் தான் மாஞ்சோலையில் தேயிலை பயிரிடப்படுகிறது. அதுவரை வளர்த்த மரங்களை வெட்டி சாய்த்து மீண்டும் நிலத்தை சீர்படுத்தும் பணியை செய்தனர் மக்கள்.
மாஞ்சோலை - காக்காச்சு; மணிமுத்தாறு; ஊத்து - குதிரை வெட்டி என மாஞ்சோலை மூன்று எஸ்டேட்டுகளாகப் பிரிக்கப்பட்டு, தலா 323 ஏக்கர் நிலப்பரப்பில் தேயிலை விதைக்கப்பட்டது. இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் வேலை செய்வதற்குப் பெருமளவில் ஆட்கள் தேவைப்பட்டனர். இதனால் மீண்டும் கிராமங்களிலிருந்து மக்களை கொண்டு வரவேண்டி வந்தது. கங்காணிகள் என்று அழைக்கப்படும் ‘சூப்பர்வைசர்'கள் இந்தப் பொறுப்பை ஏற்று சம வெளியிலிருந்து சொந்த பந்தங்களை தேயிலைத் தோட்டத் தொழிலுக்கு அழைத்து வந்தனர். கங்காணிகளுக்கு இதற்கு கமிஷன் உண்டு. இதனால் அவர்களுக்குள் பெரும் போட்டியே நிலவியது. பெருமளவில் மக்கள் மாஞ்சோலைக்கு வந்தது இந்த காலகட்டத்தில்தான்.
“மாஞ்சோலைக்கு நான் 1948இல் வந்தேன். எங்க ஊரு கண்டாக்குமாடன். தெக்குப்பட்டியில இருந்து நெறைய பேர கங்காணிகள் மலைக்குக் கூட்டி வந்தாங்க. ஊர்ல ஆடுகள் மேய்க்கிற வேலைய பாத்துட்டிருந்தேன். இங்க நல்ல கூலியும், சொந்தமா வீடும் குடுப்பாங்கன்னு சொன்னாங்க. ஆனா 58ல எனக்கு கூலி 6 அணா. மலையில் வாழ்றது ரொம்ப கடுசான விசயம். இந்த குளிர சமாளிக்க அதிகாலையில வேலைக்குப் போகணும். மலைச் சரிவுல தேயிலைப் பறிக்க எறங்குறப்பெல்லாம் உயிர கையில புடிச்சுக்கணும்” என்று சொல்லும் ஞானம்மாவின் வயது 70.
இன்று மாஞ்சோலையில் இருக்கும் எல்லா வளங்களையும் வசதிகளையும் உருவாக்கியது இந்த மக்களே! வாகனங்கள் வந்து போகும் சாலைகளையும், வசிக்க வீடுகளையும், குடி தண்ணீர், மின்சார இணைப்புகளை - இப்படி நிறுவனத்தாருக்கும் தங்களுக்கும் தேவையான அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் தலித் மக்களே உருவாக்கினர். 1952இல் தொழிற்சாலைக்கு ஜெனரேட்டர் வந்துவிட்டது என்றாலும் மின்சாரம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது 70களில்தான். ஆரம்பப் பள்ளிக் கூடமும், சின்னதாக ஒரு மருத்துவமனையும், ஒரேயொரு பேருந்து மட்டும் வந்து போகுமளவிற்கு நிலைமை மாறியது. ஓட்டு வீடுகள் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளாக மாறின. கும்பல் கும்பலாக குடும்பம் நடத்திய நிலைமை மாறி குடும்பத்துக்கு ஒரு வீடு என வழங்கப்படுகிறது. இந்த வீடுகள் நிறுவனங்களுக்கு சொந்தமானவை.
மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், மற்ற இன்றியமையாத பொருட்கள் எல்லாமே கீழிருந்துதான் வந்தாக வேண்டுமென்பதால் நிறுவனமே மளிகைக் கடை நடத்தியது. அரிசி, பயறு வகைகள், கோதுமை மாவு, கப்பைக் கிழங்கு, கருப்பட்டி போன்றவை இங்கு கிடைக்கும். வாரம் ஒரு முறை காசு கொடுத்து இங்கே வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். தவிர, வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை மக்கள் வீட்டு முன்பு இருக்கும் நிலத்தில் அவர்களே பயிரிட்டு பயன்படுத்தி வந்தனர். 1970களில் இருந்த 55 ரூபாய் கூலியில் காசு மிச்சம் பிடிக்க முடிந்தவர்கள் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்தனர். காலப்போக்கில் சிலர் டீக்கடைகள், சின்னதாக மளிகைக் கடைகளும் கூட நடத்தினர்.
இவையெல்லாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் நிகழ்ந்த சின்னச் சின்ன மாற்றங்களே தவிர வளர்ச்சியல்ல. மக்களுக்கு மிக மிக அடிப்படையான தேவைகளை நிறைவு செய்வதன் மூலம் அவர்கள் வெளியேறி போய்விடாமலிருக்கவும், நாகரிக வளர்ச்சியில் கல்வி, வேலைவாய்ப்பு என சிதறிவிடாமல் இருக்கவும் இந்த மாற்றங்களை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியது நிறுவனம். இதனால் ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடிக்கும் குழந்தைகள் அதைக் கடந்து போகவில்லை. அரை ரேட்டுக்கு தேயிலை பறிக்கப் பழகி அப்படியே முழு நேரத் தொழிலாளியானார்கள். இதனால்தான் தலைமுறைகளைக் கடந்து அடிமை வாழ்க்கை தொடர் கதையானது. நாடு விடுதலையடைந்து சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின்னர் தான் பாம்பே பர்மா நிறுவனத்தின் நிர்வாகம் வெள்ளையர்களிடமிருந்து கைமாறியது. ஆனால் அதன் பின்னர் நிலைமை இன்னும் மோசமடையவே செய்தது.
“ஆக்கி சாப்பிடுவதற்காக கூலி மட்டுந்தான் நிறுவனம் குடுக்குது. மத்தபடி எந்த உரிமையும் எங்களுக்கில்ல. குழந்தைகள படிக்க வைக்கிறதுக்கு நிர்வாகம் எந்த உதவியும் செய்றதில்ல. சாப்பாட்டுக்கு தவிர எந்த செலவும் செய்யாமதான் குழந்தைகளைப் படிக்க வைக்கிறோம். நிறுவன மருத்துவமனையில் முதலுதவி மட்டுந்தான் பண்ணிக்கிட முடியும். மத்ததுக்கெல்லாம் கீழதான் ஓடணும். ஆத்திர அவசரத்துக்குப் போறதுக்கு போக்குவரத்தும் சரியில்ல. ஒரு ஆம்புலன்ஸ் இருக்கு. அதுவும் பேருக்குதான். 18 வயது வரைக்குந் தான் இலவச ட்ரீட்மெண்ட். நிறுவனம் எங்களுக்காக என்ன செஞ்சாலும் அத சம்பளத்துல பிடிச்சுக்கும். மூணு பஸ்ல ஒண்ணு ரிப்பேரானாக் கூட கஷ்டந்தான். இங்கே பாத்தா தண்ணி கஷ்டம் இல்லாத மாதிரி தெரியும். ஆனா நிறுவனத்திற்கு ஒரு நீச்சல் குளம் இருக்கு. அது நெறஞ்சா தான் எங்களுக்கு தண்ணி விடுவாங்க. அதுவும் குறிப்பிட்ட நேரம்தான். அதுக்குள்ள எல்லா வேலையையும் முடிச்சுக்கணும்” என்கின்றனர் மக்கள்.
Maancholai
இதற்கிடையில் க்ரூப் காங்கிரஸ், அய்.என்.டி.யு.சி., ஏ.என்.டி.யு.சி., சி.அய்.டி.யு., தி.மு.க., அ.தி.மு.க. யூனியன்கள் ஒவ்வொன்றாகத் தோன்றின. “ரொம்ப கொடுமையான வாழ்க்கைங்க. அப்போல்லாம் மாசத்துல 30 நாளும் வேலை பாக்கணும். எஸ்டேட்டுக்குள்ள யாரும் வர முடியாது. இங்க இருந்து யாரும் போகவும் முடியாது. வாட்சர் வச்சு பிடிச்சிருக்காங்க. ராஜாஜி முதலமைச்சரா இருந்தப்போ அந்தந்த ஜாதிக்காரங்க அந்தந்த வேலையத்தான் பாக்கணும்னு குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்தாருல்ல! அப்போ பள்ளிக்கூடத்துலயே தோட்டம் வச்சுட்டாங்க.
பிள்ளைங்க பாதி நேரம் படிச்சு மீதி நேரம் தோட்ட வேலையப் பாத்துச்சுங்க. அந்த அளவுக்கு கெடுபிடி. 1951இல் தான் முதல் யூனியன் வந்துச்சு. அகில இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் யூனியன் தொடங்கினப்போ ஒரே தகராறு, பாளையம்கோட்டைய சேர்ந்த குமரகுருங்கறவர்தான் முதல் முதல்ல எஸ்டேட் கேட்டை உடைச்சு உள்ள வந்தார். அப்போ பெரிய சண்டை நடந்தது. யூனியன் வர்றது நிர்வாகத்துக்குப் பிடிக்கல. தொழிலாளர் வீடுகள்ல சாராயப் பாக்கெட்டை நிர்வாகமே பதுக்கி வச்சு போலிசை அனுப்பி கைது பண்ண வச்சது. குமரகுருதான் இது ஜனநாயக நாடு, யூனியன் ஆரம்பிக்க தொழிலாளர்களுக்கு உரிமையிருக்குன்னு வாதாடி கொண்டு வந்தார். அதுக்கப்புறம் ஒவ்வொரு யூனியனா வந்துடுச்சு” என்கிறார் ஜேம்ஸ்.
விடுதலைக்குப் பிறகு ஏறக்குறைய ஒவ்வொரு பத்தாண்டுகளில் ஒரு முக்கியமான வேலை நிறுத்தத்தை தொழிலாளர்கள் நடத்தி அதில் வெற்றியும் கண்டிருக்கின்றன. முதல் யூனியன் தொடங்கும் போது ஏற்பட்ட தகராறுதான் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்குமான முதல் நேரடி மோதல். அதன் பின்னர் 1968இல் நடந்ததை ‘இட்லி ஸ்டிரைக்' என்று குறிப்பிடுகிறார்கள். தொழிற்சாலையில் மொத்தம் மூன்று ஷிப்டுகள். இரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை வேலை பார்க்கிறவர்களுக்கு நிர்வாகத்தில் காலை உணவாக இட்லி வழங்கப்படுகிறது. அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணி ஷிப்டுக்குப் போகிறவர்களுக்கு காலை உணவு கிடையாது. அந்த ஷிப்டில் வேலை செய்கிறவர்கள் பட்டினியோடு வேலை பார்க்கும் நிலையை மாற்றி, அவர்களுக்கும் காலை உணவு கொடுக்க மக்கள் கோரிக்கை வைத்தனர். ஒரு வாரம் வேலை நிறுத்தம் நடந்த பிறகு நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.
1978இல் தேயிலைக் கொழுந்து கிள்ளி போடுவதற்கு தொழிலாளர்கள் ட்ராலி போன்ற வண்டியை பயன்படுத்த வேண்டும் என நிர்வாகம் வற்புறுத்தியதை தொழிலாளர்கள் எதிர்த்தனர். மலையின் மேடு பள்ளங்களில் இந்த வண்டியை இழுத்துக் கொண்டு தேயிலை பறிப்பது கடினமான வேலை. அதனால் மாட்டோம் என மக்கள் மறுக்க, மூன்று பேரை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இதைக் கண்டித்து மக்கள் வேலை நிறுத்தம் செய்தனர். காலையில் எழுந்து நிறுவனத்தின் முன்பாக முழக்கம் போடுவது; வேலை நேரத்துக்கு தோட்டத்துக்குப் போய்விடுவது என ஆறு மாதங்கள் இந்த வேலை நிறுத்தம் நீடித்தது. அதன் பிறகு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் சேர்க்கப்பட்டார்கள். வண்டி திட்டமும் கைவிடப்பட்டது.
 
1988இல் நடந்தது ‘டைம் ஸ்டிரைக்'. சரியாக காலை 7.30 மணிக்கு எல்லோரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பீல்டில் நிற்க வேண்டும். பீல்டுகள் சில தூரமாகவும், சில பக்கமாகவும் இருக்கும் என்பதால் காலை 7.30க்கு எல்லோரும் ‘மஸ்டர்' என்றழைக்கப்படும் பொது இடத்தில் கூடி பிறகு பீல்டுக்கு போவதாக மக்கள் கோரிக்கை வைத்தனர். இது நிராகரிக்கப்பட்டது. தாமதமாகப் போனவர்கள் பணி நீக்கம் செய்யப்பட, வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அப்படியே கீழே இறங்கிவிட்டனர். இந்தப் போராட்டம் 32 நாட்கள் நீடித்தது. தாசில்தார், சப் கலெக்டர், காவல் துறையினர் முன்னிலையில் யூனியன் தலைவர்களோடு பேச்சு வார்த்தை நடந்தது. இதிலும் தொழிலாளர்களே வெற்றி பெற்றனர். அதன் பிறகு எட்டு மணிக்கு கூட மக்கள் வேலைக்குப் போயிருக்கிறார்கள்.
இதுவரை நடந்த அத்தனைப் போராட்டங்களிலும் வேலையும் பார்த்துக் கொண்டு வேலை நிறுத்தமும் செய்து மக்கள் தங்களின் குறைந்தபட்ச உரிமைகளை தக்க வைத்துக் கொண்டிருந்தனர். வேலை நேரம் காலை 7.30 முதல் மாலை 4 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் போராட்டக் காலத்தில் தொழிலாளர்கள் ஆறு மணிக்கெல்லாம் பொது இடத்தில் கூடி முழக்கம் போட்டு விட்டு பின் பணிக்குப் போய்விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். காரணம், ஒரு நாள் கூலி இல்லையென்றாலும் அது அவர்களின் அன்றாட வாழ்வைப் பெரிதும் பாதிக்கும். உழைப்புக்கேற்ற கூலி கிடைக்கவில்லையே என்ற உள்ளக் குமுறல் மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கு தொடக்கம் முதலே இருந்தது என்றாலும், வேலையைப் புறக்கணித்துவிட்டு ஒரு முழுமையான போராட்டத்தை நடத்த மக்கள் அதுவரை துணியாததன் காரணம் இதுவே.
ஆனால், அடுத்த பத்தாவது ஆண்டில் இந்த நிலைமை மாறியது. மாஞ்சோலை மக்கள் தங்கள் வாழ்வின் மிகத் துயரமான திருப்புமுனையாக இந்த தருணத்தைத்தான் குறிப்பிடுகிறார்கள். 1998இல் தேர்தல் பிரச்சாரத்துக்காக முதன் முதலாக மாஞ்சோலைக்குள் நுழைகிறது புதிய தமிழகம். அதுவரை எவ்வளவோ கட்சிகளும், யூனியன்களும் இருந்தும் கூட, மாஞ்சோலை மக்கள் புதிய தமிழகத்தின் பால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். ‘அது என்னவோ கடவுளே எங்கள காப்பாத்த வந்த மாதிரிதான் நாங்க நம்புனோம்' என்கிறார்கள். டாக்டர் கிருஷ்ணசாமியின் மேல் மக்களுக்கு உண்டான ஈர்ப்பும் நம்பிக்கையும் மிகக்குறுகிய காலத்தில் கவனிக்கத்தக்க வடிவங்களை எடுத்தது.
1998இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசித் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்துக்கு அந்தப் பகுதி முழுக்க சுற்றியவர் மாஞ்சோலைக்கு ஓட்டு கேட்டு வந்த போது டேனியல், அன்புநேசன் என்ற தொழிலாளர்கள் தாங்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பதாகவும், தங்களை மீண்டும் பணியில் சேர்க்க நிர்வாகத்திடம் பேசுமாறும் கோரிக்கை வைக்கின்றனர். தேர்தல் முடிந்தவுடன் வருவதாக வாக்குக் கொடுத்துவிட்டுப் போகிறார் கிருஷ்ணசாமி.
அதன்படி தேர்தலை முடித்து வரவும் செய்கிறார். நிர்வாகத்தை சந்திக்க டாக்டர் அனுமதி கேட்க அது மறுக்கப்படுகிறது. “உங்களுக்குத்தான் யூனியன் இருக்குல்ல. யூனியன் மூலமா வாங்க” என்று நிர்வாகம் தீர்மானமாகச் சொல்லவும், அது புதிய தமிழகத்தின் மத்தியில் பெரிய சலசலப்பை உண்டாக்குகிறது. அந்த சலசலப்பு அப்படியே பரவி மக்களையும் தொற்றுகிறது. இதனால், மாஞ்சோலையில் யூனியன் அமைக்க உத்வேகம் கொள்கிறது புதிய தமிழகம்.
"நாளொன்றுக்கு 150 ரூபாய் கூலியும், ஒன்றரை ஏக்கர் நிலமும் வாங்கித் தருவேன்” என்ற டாக்டரின் முழக்கம் மக்களைப் பெரிதும் ஈர்த்தது. தங்களைக் காக்க ஒரு தலைவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை மக்களிடம் போர்க் குணத்தைத் தோற்றுவித்தது. வீட்டுக்கு வீடு டாக்டரின் படம். மக்களின் மூளையிலும் உணர்வுகளிலும் புதிய மாற்றங்கள். அவர்கள் அந்நேரத்தில் எதற்கும் தயாராக இருந்தனர். சொற்பக் கூலிக்கு இப்படி மாரடிக்கிறோமே! இத்தனை தலைமுறையா உழைச்சுக் கொட்டியும் ஒரு காணி நிலம் சொந்தமா இல்லியே! என்ற மன அழுத்தம் டாக்டர் கிருஷ்ணசாமியின் உதவியால் வெடித்தெழுந்தது. இதனால் எல்லா யூனியன்களையும் கலைத்து விட்டு, புதிய தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்களும் இணைந்தனர்.
நம்பாதவர்கள் இழைக்கும் துரோகத்தையும், உண்டாக்கும் வலியையும் விட, நம்பியவர்கள் கொடுக்கும் காயத்துக்கு வீரியம் அதிகம் என்பதை மாஞ்சோலை மக்கள் அப்போது உணரவில்லை.
- அடுத்த இதழில் நிறைவடையும்
புகைப்படங்கள் : மீனாமயில்
Pin It