Moonநறுக்கி எறிந்த நகத்தைப் போல
இருக்கும் நிலாவே - நீ
நகர்ந்து நகர்ந்து போவ தெங்கே?
சொல்லு நிலாவே.

ஓடம் போல வானில் ஊர்ந்து
செல்லும் நிலாவே - நான்
உன்மேல் ஏறிக்கொள்ள லாமோ?
சொல்லு நிலாவே

கொம்பைப் போலக் கூர்மையாக
இருக்கும் நிலாவே - என்னைக்
குத்திக் கீழே தள்ளுவாயோ?
சொல்லு நிலாவே

வில்லைப் போல வளைந்திருக்கும்
வெள்ளை நிலாவே - நீ
வேட்டையாட உதவு வாயோ?
சொல்லு நிலாவே.

பறங்கிக் கீற்றைப் போல வானில்
தெரியும் நிலாவே - உன்னைப்
பக்குவம் செய்துண்ண லாமோ?
சொல்லு நிலாவே.

உடைந்து போன கண்ணாடி போல்
இருக்கும் நிலாவே - என்
உருவத்தை நீ காட்டுவாயோ?
சொல்லு நிலாவே!

-அழ. வள்ளியப்பா
Pin It