இன்றைய சமூகத்தின் பொதுவான ஏற்றத் தாழ்வுகள், குறிப்பாக ஆதிக்கம், அதன் தன்மை, இயங்கியல் ஒரு பக்கமும்; அதற்கெதிரான எதிர்வினைகளின் தன்மை, இயங்கியல் மறுபக்கமும்; இதற்கும் மேலாக, இவற்றை மாற்றியமைப்பதற்கான உத்திகளையும் சரிவரப் புரிந்து கொள்வதற்கு இந்த மூன்று கருத்துப் படிமங்களையும் பண்பாடு, கருத்தியல், அதிகாரம் சரிவர ஆராய்ந்து அறிந்து கொள்வது அவசியம். பொதுவாக, எல்லா சமூகங்களின் சலனங்களையும் புரிந்து கொள்வதற்கு இது முக்கியம் என்றால், சாதிய சமூகத்தின் சிக்கல்களை அவிழ்த்துப் பார்ப்பதற்கு இப்புரிதல் இன்றியமையாதது.

Ladies
ஏனெனில், சாதிய சமுதாயம் ஒரு பக்கம் பண்பாட்டில் ஊன்றி நிற்கும் சமுதாயமாகவும், மறுபக்கம் அதிகாரத்தின் உருவமாகவும் வெளிப்படுகிறது. இவ்விரண்டிற்குமிடையே பாலமாக விளங்குவது கருத்தியல். கருத்தியலின் பொதுவான தன்மைகள், ஆதிக்கம், அதன் எதிர்வினைகள் என்ற பிரிவு. இவை பற்றி சென்ற பகுதிகளில் ஓரளவுக்கு விவரிக்கப்பட்டது. இந்த இறுதிப் பகுதியில், இந்த மூன்று கருத்துப் படிமங்களின் பொதுத் தன்மைகளையும், அவற்றிற்கிடையிலான உறவுகளையும் பற்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

பண்பாடு என்பது பெரிதும் விவாதத்திற்குள்ளான தொரு கருத்துப் படிமமாகக் கொள்ளப்படுகிறது. இந்தச் சொல்லுக்கு நூற்றுக்கணக்கான வரையறைகள் கூறப்படுகின்றன. இவை யாவும் அந்தந்த ஆய்வாளர்களின் பின்னணியைப் பொருத்தும் அவர்களது தேவைகளைப் பொருத்துமே அமையும். சில காலம் வரை பண்பாடு என்ற சொல், சாதாரண மக்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றைச் சுட்டுவதாகக் கொள்ளப்பட்டது. பண்பட்டது என்ற பொருளில் கலை, இலக்கியம், நாசூக்கான மேல்மட்டத்தினரின் பழக்கவழக்கங்கள் இவற்றையே குறிப்பிடுவதாக இருந்தது. ஆனால், இச்சொல் பற்றிய இன்றைய புரிதல் அதற்கு மாறாகவே உள்ளது. பண்பாடு என்பது சாதாரணமானது; அது ஒரு வாழ்க்கை முறையின் முழுமையைச் சுட்டுவது. முழுமையை என்று கூறும்போது நடைமுறை, சொல், எழுத்துமுறை, சிந்தனை முறை, உறவு முறைகள் அனைத்தும் உள்ளடங்கும். இந்த வரையறுப்பையும் கடந்து வேறொரு அறிஞர், பண்பாடு என்பது ஒரு ‘போராட்ட முறை' என்று குறிப்பிடுகிறார். பண்பாடு என்ற சொல்லோடு, போராட்டம் என்ற சொல்லை இணைப்பதன் மூலம் முன்னதன் நிலையற்ற தன்மையையும், அதற்குள் நடக்கும் தீராத சலனங்களின் முக்கியத்துவமும் முதன்மைப்படுத்தப்படுகிறது.

பண்பாடு பற்றிய நேற்றைய வரையிலான அதன் நிலையான கருத்து வேறுபாடற்று, அதற்குட்பட்ட எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, விவாதத்திற்கு அப்பாற்பட்ட தன்மைகளையே வலியுறுத்தி நின்றன. ஆனால், இன்றைய பொருள் அவ்வாறின்றி பண்பாடும் பல வகைப்பட்டது; பல கோணங்களில் நின்று புரிந்து கொள்ளக் கூடியது; என்றுமே மாறிக் கொண்டிருப்பது; கருத்து வேறுபாடுகளை உள்ளடக்கியது என்று அறிவிக்கிறது. இம்மாதிரியான பொருள் விளக்கத்தின் மாறுதலை, நேற்றையது, இன்றையது என்று பிரிக்காமல், ஆதிக்கத்தினுடையதும், அடித்தளத்திலுள்ளதுமான பொருள் விளக்கங்கள் என்றும் கொள்ளலாம். ஏனெனில், இன்றும் கூட பண்பாட்டு மாறுதலுக்கு எதிரான சமுதாய சக்திகள், முழுமையான, ஒருங்கிணைக்கப்பட்ட விளக்கத்தையே முன்வைக்கின்றன. இதனையே அடித்தள எதிர்வினைகள் ‘யாருடைய பண்பாடு' என்று வினா எழுப்பும் போது உரிய பதில் கிடைப்பதில்லை. இத்தருணத்தில் தான் பண்பாட்டுக்கும் அதிகாரத்திற்கும் ஆழமான தொடர்பு இருப்பதாக இன்றைய வரையறைகள் வலியுறுத்துகின்றன. அதிகாரம் என்ற கருத்துப்படிமத்தின் பொருளும் அதன் வரையறையும் கூட, காலத்திற்கேற்ப மாறி மாறி வருகின்றன.

சமூக அறிவியலின் தொடக்க காலங்களில் அதிகாரம் என்பது வர்க்க அதிகாரமாகவே கொள்ளப்பட்டது. அதாவது, சமூக வர்க்கங்களிடையே எழும் மோதல்களும் மோகங்களுமே அதிகாரம் வெளிப்படும் வழியாயிருக்கிறது என்று கருதப்பட்டது. சமூகத்தின் பிற துறைகளில் அதிகாரம் வெளிப்படுவது இல்லையென்றோ, அவ்வாறு வெளிப்படும் அதிகாரம், சமூகத்தைத் தக்க வைப்பதிலோ, மாற்றுவதிலோ பெரும்பங்கு கொள்வதில்லை என்று கருதப்பட்டது. ஆனால் சில காலங்களுக்குள் அதிகாரத்தின் மற்ற பரிமாணங்களும் முதன்மைப்படுத்தப்பட்டன: அதிகாரம் வர்க்க சூழலில் மட்டும் எழுவதில்லை; சமூக நிலையும் அதற்கு அடித்தளமாக அமைகிறது. இது மட்டுமின்றி, அரசியல் கட்சிகள் மூலமாகவும் அதிகாரம் வெளிப்படும் என்று உணரப்பட்டது.

இந்தக் கருத்து, சமூகத்திலும் சமூக உறவுகளிலும் அதிகாரம் வகிக்கும் பங்கு அதிகமானது என்ற புரிதலையே காட்டுகிறது. அதாவது, முன்பு எந்தெந்தத் துறைகளில் வழக்காடு, மரபு அல்லது பண்பாட்டு வழியே செயல்பாடுகள் தோன்றுகின்றன என்று எண்ணப்பட்டனவோ, அவை யாவும் உண்மையிலேயே அதிகாரம் மூலமாகவே இயங்குகிறது என்ற மாற்றுப் புரிதலையே சுட்டுகிறது. இதையும் கடந்து, அண்மைக்காலத்தில் அதிகாரம் பற்றிய புதியதொரு உணர்வு எழுந்திருக்கிறது. அதிகாரம், சமூக தனிமனிதர்களுக்கிடையிலோ அல்லது குழுக்களுக்கிடையிலோ உறவுகளுக்கான அடிப்படை, அதாவது காற்று அல்லது நீர் போல் அதிகாரம் உட்புகாத சமூக உறவுகளே இல்லையென்று கூறலாம். அதிகாரம் என்னும் சூழ்நிலைக்கு உட்பட்டே மனித உறவுகள் வெளிப்படுகின்றன, செயல்படுகின்றன. எல்லா சமூக உறவுகளிலும் ஒரு முக்கிய அம்சமாக விளங்குவது, இயங்குவது அதிகாரம் என்று கொள்ளப்படுகிறது. இது மட்டுமின்றி ஒரு சமூகத்தின் உறவுகளின் மூலம் உருவாக்கப்பட்ட கட்டுக்கோப்பையும் நிர்ணயிப்பது–அதிகாரத்தின் நெளிவு சுளிவுகளே. அதிகாரத்தின் வெளிப்பாடுகளிலும் செயல்பாடுகளிலும் ஏற்படும் வேறுபாடான கட்டமைப்பே ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

ஒரே சமூகத்துள் இயங்கும் சமூகத்துக்கே உரித்தான அதிகாரப் படிமமே அச்சமூகத்தின் அடையாளமாகக் கொள்ளப்படுகிறது. சமூக உறவுகளிடையே காற்றைப் போல் நுழைந்து, அவைகளின் தன்மைகளை நிர்ணயிப்பதால் ஒரு சமூகத்துள் நிலவும் அதிகாரமே அச்சமூகத்தை மற்ற சமூகங்களினின்று வேறுபடுத்திக் காட்டுகிறது. சமூகத்திற்குச் சமூகம் வேறுபடும் அதிகாரத்தின் உள்வெளிப்பாடுகள், பல்வேறு காரண காரியங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன: இயற்கையான சுற்றுச் சூழல்களின் தனிக்கூறுகள், அச்சமூகத்தின் உற்பத்தி வழிமுறைகள், அதிகாரம் மூலமாகவே நிர்ணயிக்கப்பட்ட கடந்த கால பழக்க வழக்கங்கள், இன்னும் மற்ற சமூகங்களுடன் கொண்டுள்ள உறவு போன்றவை.

சமூக உறவுகளை நிர்ணயிப்பது அதிகாரமே என்று கூறும்போது அவ்வுறவுகள் எல்லாமும், எப்பொழுதுமே தீராத மோதல்களிலும் சச்சரவிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக எண்ண வேண்டியிருக்கிறது. ஆனால் அன்றாட வாழ்வில் நாம் காண்பதோ, மோதல்களும் பூசல்களும் அசாதாரணமாகவே தோன்றுகின்றன; சாதாரணமாக அல்ல. கண்டு இனங்கொள்ளும்படியான மோதல்கள் ஏற்படாத பட்சத்தில் நமது பொதுவான கணிப்பு என்னவென்றால், அவ்விடத்தில் அதிகாரம் வெளிப்படுவதில்லை, ஒத்தியைவே வெளிப்படுகிறது. ஆனால், சமூகத்தின் உற்பத்தி முறையும் அது தொடர்புடைய பிற செயல் முறைகளும் இடைவிடா மோதல்களின் நடுவில் இயங்குதல் இயலாது. ஆகையால் அடிப்படைச் செயல்பாடுகளான உற்பத்தியை முன்னிட்டு, சமூகத்தின் அனைத்துச் சக்திகளும் வெளிப்படையான மோதல்களை அதாவது அதிகார வெளிப்பாடுகளைத் தவிர்க்கின்றன. அன்றாட சமூக இயங்குதலை முன்னிட்டு அதிகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, சமூகங்கள் ஒத்தியைவானவையே என்னும் மேலுணர்வைக் கொடுக்கின்றன. ஆனால் எல்லா உறவுகளும் சமனமற்ற நிலையில் செயல்படுவதால் அதிகாரத்தை உள்ளடக்கியதே. நிலைமைகள் மாறும் பொழுதே அதிகாரத்தின் வெளிப்பாடுகள் வெடிக்கின்றன. புதியதொரு அதிகாரச் சமன்பாட்டிற்கு வழிகோலுகின்றன.

அதிகாரம் என்னும் கருத்துப்படிமத்தின் இவ்வகையான விளக்கத்திற்குள் பண்பாடு என்ற கருத்துப்படிமத்தை நிலை நிறுத்திப் பார்ப்போமானால் ஓர் உண்மை வெளிப்படும். அதிகாரம் என்னும் கருத்தும், பண்பாடு என்பதும் ஒரே பொருளைச் சுட்டுகின்றன. அதாவது இவை இரண்டும் ஒரே நாணயத்தின் இருபக்கங்களாகும். அதிகாரத்தின் அடிப்படையான உறவுகளை நிலைநிறுத்த வேண்டி, அவ்வுறவுகள் அதிகாரம் பற்றியவையல்ல என்று காட்ட வேண்டிய நிர்பந்தம், அதிகாரத்தினால் பயனடையும், தனிமனிதனுக்கோ, குழுக்களுக்கோ அல்லது வர்க்கங்களுக்கோ ஏற்படுகிறது. அத்தகைய காலகட்டத்தில்தான் பண்பாடு என்ற கருத்துப் படிமம் முன்னுக்குக் கொணரப்படுகிறது. இந்த இரண்டு கருத்துப்படிமங்களும் நேர்மாறான தன்மைகளை வலியுறுத்துவதைக் காணலாம்.

அதிகாரம், நிலையற்றதும், வர்க்க, குழு ஆதிக்கத்தையும் அதற்கு எதிர்வினைகளையும் பற்றியதாகக் கூறப்படுமெனில், பண்பாடு, நிலையானதாகவும் எல்லா வர்க்கங்களுக்கும் குழுக்களுக்கும் பொதுவாகி, அவற்றை ஒருமைப்படுத்தும் தன்மையுடையதாகவும் காட்டப்படுகிறது. இது மட்டுமன்றி அதிகாரத்திற்கு காரணியாக தனி மனிதனோ, குழுவோ, வர்க்கமோ சுட்டப்படும் என்றால், பண்பாட்டிற்குக் காரணியாக குறிப்பிட்ட சமூக சக்திகள் தனிமைப்படுத்திக் காட்டப்படுவதில்லை. பொதுவாக அதுவழிவழி வருவது என்றுதும், தன்னால் ஏற்பட்டது என்றுமே கூறப்படுகிறது.

இந்த மாதிரியான பண்பாட்டிற்கும் அதிகாரத்திற்குமான எதிரும் புதிருமான நிலை, கருத்தியலின் உருவாக்கமே என்பது சிந்திப்போருக்கு விளங்கும். சொல்லாடல்களில் தென்படும் மேலோட்டமான இந்த மாறுபாடுகளைக் கடந்து சிந்தித்தால், இவை இரண்டுமே சமனமற்ற உறவு முறைகளின் வரலாற்று வளர்ச்சியையே அடித்தளமாகக் கொண்டுள்ளன என்பது விளங்கும். சமனமற்ற அதிகாரத்தின் ஊடுருவல்களாக, அதிகாரத்தில் தோய்ந்து எழும் சமூக உறவுகள், அடிப்படைச் செயல்பாடுகளான சமூக உற்பத்தி, பரிமாற்றம், பயன்பாடு இவைகளை நிலைநிறுத்துவதற்காக தற்காலிகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, நாளøடவில் அவைகளின் அதிகாரத்தின் வேரூன்றிய தொடக்க நிலை மறக்கப்பட்டு, பழக்கவழக்கங்கள் மரபுகளாக மாறி யாராலும் உண்டாக்கப்படாத, ஆதி அந்தமற்ற பண்பாடாக வெளியேறுகின்றன.

ஆக, மறக்கப்பட்ட அதிகாரத்தின் படிவங்களே பண்பாடு. நேற்றைய அதிகாரமே இன்றைய பண்பாடு. இதனை சமூகத்தின் இருசாரார், ஒரே செயல்பாட்டை இந்த இரு துருவங்களின் மூலம் பார்ப்பதைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். சாதி என்பது என்ன? அது அதிகாரத்தின் வடிவமா அல்லது பண்பாட்டின் வெளிப்பாடா? இந்தக் கேள்விகளுக்கு ஒரே வகையான பதில் கட்டாயமாகக் கிடைக்காது. சாதி, அதிகாரத்தின் உருவே. அதனைத் தவிர்த்து அதில் வேறொன்றுமில்லை என்று வாதிடுவோர் பலர். ஆனால் மற்றொரு புறம் சாதி என்பது பண்பாடு; வழிவழிவருவது; சமூக இயங்கியலில் வெளிப்படும் பல்வேறு தேவைகளுக்காகத் தானாக எழும்பிக் கட்டப்பட்டது என்பார் சிலர்.

அதிகாரத்திலிருந்து பண்பாட்டுக்கான மாற்றம் வரலாற்றின் வளர்ச்சியேயன்றி வேறல்ல. வரலாற்றின் மூலமாகவே இந்த உருவாக்கங்களையும் உருமாற்றங்களையும் இனங்கண்டு கொள்ளலாம். மேலும் அதே வரலாற்றிலேயே உருக்குலைப்புகளும் நிகழ்ந்திருக்கின்றன. அதிகாரத்திலிருந்து பண்பாட்டுக்கான மாற்றம் வரலாற்றின் முன்னோக்கி ஓடும் ஓட்டம் எனின், பண்பாட்டிலிருந்து அதிகாரத்திற்கு அறிவுப்பூர்வமான பின்னோக்கும் கண்ணோட்டத்தின் மூலம் சென்றுணரலாம். வரலாற்றுக்கு அப்பாற்பட்டதாக முன்னிறுத்தப்படும் பண்பாட்டை, வரலாற்றுக்குட்படுத்துவதன் மூலம் அதன் அதிகார ஊற்று தெளிவாகிறது. இன்றைய சமூக உறவுகளின் அதிகார தொடக்கங்கள் வரலாற்று மூலமாகவே வெளிப்படுகின்றன. அதிகார தொடக்கங்களைத் தெளிவுபடுத்தும் பணி இன்றைய ஆதிக்கத்தை உருக்குலைக்கும் செயல்பாட்டில் முதன்மையானது, இன்றியமையாதது. வரலாறும் வரலாற்று மயமாக்குதலும் அடித்தட்டு மக்களின் விடுதலைக்கான ஆயுதம் என்பதை உணர வேண்டும்.

இறுதியாக, கருத்தியல் அதிகாரம், பண்பாடு ஆகிய இந்த இரண்டுக்கும் அதிகாரம், பண்பாடு இடையே ஊசலாடும். அதிகாரத்தைப் பண்பாடாகக் காட்டுவது கருத்தியல் என்றால், அதையே உடைத்து அதன் உண்மை வடிவத்தை வெளிப்படுத்துவதும் கருத்தியல் செயல்பாடே. இன்றைய ஆதிக்கப் பண்பாட்டின் முகத்திரையைக் கிழித்து, அதன் அதிகார ஆணிவேர்களை அம்பலப்படுத்தி, அதனைத் தொடர்ந்து மாற்று ஆதிக்கத்திற்கும் மாற்றுப் பண்பாட்டிற்கும் வழிவகுத்து இட்டுச் செல்வது, ஓர் கருத்தியல் பணியே அன்றி வேறல்ல. கடந்த நான்கு இதழ்களில், சாதிய சமூகத்தின் கருத்தியல் சலனங்களை ஆராய வேண்டி, அதற்கான பொது அறிமுகமாக அடிப்படைக் கருத்தியல் படிமங்களில் சிலவற்றின் - கருத்தியல், பண்பாடு, அதிகாரம் வரலாறு - என சில பொதுத் தன்மைகள் முன்வைக்கப்பட்டன. இத்துடன் இவ்வறிமுகப்பகுதி முடிவடைகிறது. அதற்கடுத்து, இப்பொதுக் கருத்துகளுடன் சாதிய சமூகத்தை அணுகுவோம்.
Pin It