நான், ஜாத்பட்தோடக் மண்டலுக்காக, சாதியைப் பற்றி தயார் செய்திருந்த உரையைப் பற்றி தன் ‘அரிஜன்' ஏட்டில் எழுதியதன் மூலம் ‘மகாத்மா' என்னைக் கவுரவித்தமைக்கு எனது பாராட்டுகள். எனது உரை மீதான அவரது மதிப்புரையை வாசித்தபோது, சாதி பற்றி நான் தெரிவித்திருந்த கருத்துகளுக்கு ‘மகாத்மா' முற்றிலும் வேறுபடுகிறார் என்பது தெளிவாயிற்று. சிறப்பான காரணங்கள் இருந்தால் தவிர, பொதுவாக என் எதிராளிகளோடு சர்ச்சையில் இறங்கும் வழக்கம் எனக்கு இல்லை.

எனது எதிராளி ஒரு ‘அனாமதேய அல்பாத்மா'வாக இருந்திருந்தால், நானும் போனால் போகிறது என விட்டிருப்பேன். ஆனால், ‘மகாத்மா'வே என் எதிராளியாக இருப்பதால், அவர் முன்வைத்துள்ள வழக்கை நான் சந்திக்க முயன்றாக வேண்டும் என்றே கருதுகிறேன். அவர் எனக்கு செய்துள்ள கவுரவத்துக்காக அவரை நான் பாராட்டுகிற அதே நேரத்தில் அதைப் படித்தபோது, எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது என்பதையும் கூறியாக வேண்டும். விளம்பரத்தைத் தேடும் ஆசை எனக்கு இருப்பதாக ‘மகாத்மா'வே குற்றம் சாட்டி உள்ளதால் ஏற்பட்ட அதிர்ச்சி அது. என்னை யாரும் "மறந்துவிடக் கூடாது' என்பதற்காகவே கூட்டத்தில் வாசிக்கப்படாத அந்த உரையை நான் வெளியிட்டேன் என்று அவர் எழுதி உள்ளார். ‘மகாத்மா' என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.

அந்த உரையை வெளியிட்டதில் என் நோக்கம், இந்துக்கள் தங்களின் தற்போதைய நிலையைப் பற்றி சிந்திக்குமாறு தூண்டி விடுவது தான். நான் ஒருபோதும் விளம்பரத்துக்கு ஏங்குகிறவன் அல்ல. சொல்லப்போனால், நான் விரும்புகிற அல்லது எனக்குத் தேவைப்படுகிற அளவுக்கும் மேலாகவே அது எனக்குக் கிடைத்துள்ளது. ஆனால், ஒரு வேளை விளம்பரம் சம்பாதிக்கும் உள் நோக்கத் தோடுதான் நான் அந்த உரையை வெளியிட்டேன் என்றே கொண்டாலும், யார் என் மீது கல்லெறிய முடியும்? அதுவும் ‘மகாத்மா' போல கண்ணாடி வீட்டுக்குள் வசிப்போரால் கண்டிப்பாக முடியாது.

2

உள்நோக்கம் இருக்கட்டும், என் உரையில் நான் எழுப்பிய கேள்விக்கு ‘மகாத்மா' என்ன பதில் சொல்லி இருக்க வேண்டும்? முதலாவதாக நான் எழுப்பி உள்ள பிரச்சனைகளை ‘மகாத்மா' முற்றாகப் புறக்கணித்து விட்டார். என் உரையில் நான் இந்துக்களை அவதூறு செய்திருக்கிறேன் என்று கூறும் ‘மகாத்மா' அதைப்பற்றிப் பேசாமல் வேறு எதையோ பேசிச் செல்கிறார். என் உரையைப் படிக்கும் எவரும் இதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

சாதிக்கான மத அங்கீகாரம் ஒழிக்கப்பட வேண்டும்

என் உரையில் நான் மெய்ப்பிக்க விரும்பிய முக்கிய கூற்றுகளைப் பின் வருமாறு வரிசைப்படுத்தலாம்:

1. சாதி, இந்துக்களைச் சீரழித்துள்ளது.

2. நால்வர்ண அடிப்படையில் இந்து சமூகத்தைப் புனர்நிர்மாணம் செய்வது சாத்தியமல்ல. ஏனென்றால், வர்ணமுறை ஓட்டைப் பானையையும் ஒழுகும் மூக்கையும் போன்றது. அது தன் சொந்த தன்மையைக் கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சக்தி அற்றது. யார் தன் வர்ணத்தை மீறினாலும், அவருக்கு எதிராகப் போகிற ஒரு சட்டத்தின் துணை அதற்கு வேண்டும். இல்லை எனில், அது தன் உள்ளார்ந்த போக்கின் காரணமாக சாதி அமைப்பாகக் குறுகிவிடும்.

3 வர்ணமுறையின் விளைவாக மக்கள் அறிவைப் பெறும் வாய்ப்பு மறுக்கப்படுவதால், அவர்களின் தரம் கெடுகிறது. ஆயுதம் தாங்கும் உரிமை மக்களுக்கு மறுக்கப்படுவதால், அவர்கள் காயடிக்கப்படுகின்றனர். எனவே, நால்வர்ண அடிப்படையில் இந்து சமூ கத்தை மறுசீரமைப்பது தீங்கு விளைவிப்பதாகும்.

4. எந்த மதம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற கொள்கைகளை அங்கீகரிக்குமோ - அந்த மதத்தின் அடிப்படையில் இந்து சமூ கம் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

5. இந்த நோக்கத்தை எட்ட வேண்டுமானால், சாதிக்கும் வர்ணத்துக்கும் உள்ள மத அங்கீகாரம் ஒழிக்கப்பட வேண்டும்.

6. சாஸ்திரங்களுக்கு உள்ள தெய்வீக அதிகாரத்தைத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே சாதி - வர்ணத்தின் புனிதத் தன்மையை ஒழிக்க முடியும்.

மகாத்மா எழுப்பி உள்ள கேள்விகளுக்கும், உரையின் இந்த மய்யமான வாதப் போக்குக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கிறது.

3

ஞானிகளின் அறிவுரை பயனற்றவை


‘மகாத்மா'வின் கூற்றுகளின் உட்பொருளை ஆராய்வோம். ‘மகாத்மா' கூறும் முதல் செய்தி, நான் மேற்கோள் காட்டும் நூல்கள் அதிகாரப்பூர்வமானவை அல்ல என்பதாகும். சாஸ்திரங்களை நான் முற்றும் அறிந்தவன் அல்ல என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால், நான் மேற்கோள் காட்டியவை எல்லாம், சமஸ்கிருத மொழியிலும் இந்து சாஸ்திரங்களிலும் வல்லவர் என்று எல்லோராலும் ஏற்கப்பட்ட காலஞ்சென்ற திலகரின் நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும். அடுத்ததாக, ‘சாஸ்திரங்களுக்கு ஞானிகளே பொருள் கூற வேண்டும்; பண்டிதர்கள் கூறக்கூடாது. ஞானிகள் புரிந்து கொண்ட வகையில், சாஸ்திரங்கள் சாதியையோ தீண்டாமையையோ ஆதரிக்கவில்லை' என்கிறார்.

நான் ‘மகாத்மா'விடம் கேட்க விரும்புவது, சாஸ்திரங்கள் இடைச்செருகல்களாகவும் வேறுபாடான முறையில் ஞானிகளால் பொருள் கூறப்பட்டதாகவும் இருந்தால் என்ன பலன்? பொது மக்களைப் பொறுத்தவரை அசல், இடைச்செருகல் இரண்டும் ஒன்றுதான். ஏனென்றால், அவர்களுக்கு சாஸ்திரங்களின் உட்பொருளைத் தெரிந்து கொள்வதற்கான படிப்பு கிடையாது. அவர்கள் தமக்குச் சொல்லப்பட்டதை அமைதியாக நம்பி வந்துள்ளார்கள். அவர்களுக்கு சொல்லப்பட்டதெல்லாம், சாதியையும் தீண்டாமையையும் கடைப்பிடிப்பது மதக் கடமை என்பதற்கு சாஸ்திரங்களே ஆதாரம் என்பதுதான்.

ஞானிகளை எடுத்துக்கொண்டால், வெறும் பண்டிதர்களின் நூல்களைவிட அவர்களின் அறிவுரை என்னதான் வேறுபாடாகவும் உயர்வானதாகவும் இருந்தாலும் - அவை அறவே பயனற்றவையாக உள்ளன. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு: 1. எந்த ஞானியுமே ஒருபோதும் சாதி அமைப்பைத் தாக்கியதில்லை. மாறாக, அவர்கள் சாதி அøமப்பைத் தீவிரமாக நம்பியவர்கள். அவர்களில் பெரும்பாலோர், அவரவர் சார்ந்த சாதியின் உறுப்பினர்களாகவே வாழ்ந்து இறந்தவர்கள். ஜயன்தேவ் என்பவர், தன் பார்ப்பன அந்தஸ்தில் எந்த அளவுக்குத் தீவிர பற்றுக் கொண்டிருந்தார் தெரியுமா? பைதானைச் சேர்ந்த பார்ப்பனர்கள் அவரைத் தம்முடன் இணைத்துக் கொள்ள மறுத்ததும் - பார்ப்பன சமூகத்தால் தன் பார்ப்பன அந்தஸ்து அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகள் செய்தார். ஞானி ஏகநாதரும் அப்படித்தான்.

‘தர்மாத்மா' என்று அவரைப் பற்றி ஒரு திரைப்படம் வந்துள்ளது. அதில் தீண்டத்தகாதோருடன் உண்டு குடிக்கவும், அவர்களைத் தொடவும் துணிச்சல் பெற்றிருந்த வீரராக அவர் காட்டப்படுகிறார். ஆனால், அவர் அப்படிச் செய்தது - சாதியையும் தீண்டாமையையும் எதிர்த்ததனால் அல்ல. அதனால் உண்டாகும் தீட்டை, கங்கா நதியின் புனித நீரில் கழுவி முற்றிலும் போக்கிக் கொள்ள முடியும் என்பதால்தான்.

சாஸ்திரங்களின் அதிகாரத்தைக் கண்டிக்க வேண்டும்

நான் ஆய்வு செய்த வரையில், ஞானிகள் ஒருபோதும் சாதிக்கும் தீண்டாமைக்கும் எதிராக இயக்கம் நடத்தியவர்கள் அல்ல. மனிதருக்கிடையிலான போராட்டம் பற்றி அவர்கள் கவனம் செலுத்தவில்லை. மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான உறவின் மீதே அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். எல்லா மனிதர்களும் சமம் என்று அவர்கள் அறிவுறுத்தவில்லை. கடவுளின் திருமுன் எல்லாரும் சமம் என்றே அறிவுறுத்தினார்கள். இது முதலில் சொன்னதில் இருந்து மிகவும் மாறுபட்டதும், அறவே ஆபத்தில்லாததும் ஆன நிலைப்பாடாகும். இதை அறிவுறுத்துவதில் யாருக்கும் கஷ்டமில்øல; நம்புவதில் ஆபத்துமில்லை.

ஞானிகளின் அறிவுøரகள் பயனற்றதாகிப் போனதற்கு இரண்டாவது காரணம், சாதியை ஞானிகள் மீறலாம். ஆனால், வெகுமக்கள் மீறக் கூடாது என்று பொது மக்களுக்குச் சொல்லப்பட்டிருப்பதுதான். எனவே, ஞானிகளின் வழியில் நடக்க ஒருபோதும் முடியாது. ஞானி எப்போதும் வழிபடத் தகுந்த புனிதர். மக்கள் எப்போதும் சாதியையும் தீண்டாமையையும் தீவிரமாக நம்பி கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது? ஞானியின் புனிதமான வாழ்க்கையும் அருமையான அறிவுரையும் - மக்களின் வாழ்வையும் நடத்தையையும் சாஸ்திரங்களின் வழியிலிருந்து மாற்றவில்லை.

எனவே, படித்த சிலரை விடவும் பாமரரான பலரை விடவும் வித்தியாசமான முறையில் சாஸ்திரங்களைப் புரிந்து கொள்ளும் பல ஞானிகளும், ஒரு ‘மகாத்மா'வும் இருக்கிறார்கள் என்கிற விசயம், எந்த ஆறுதலையும் தருவதில்லை. சாஸ்திரங்களை குறித்து மக்கள் வேறுபட்ட கருத்தை வைத்திருக்கிறார்கள் என்பது ஒரு நிச்சயமான உண்மை. இதைக் கணக்கில் கொண்டேயாக வேண்டும். மக்களின் நடத்தையை தொடர்ந்து ஆட்சி செய்யும் சாஸ்திரங்களின் அதிகாரத்தைப் பறிப்பதை தவிர, வேறு எப்படி இந்தப் பிரச்சனையை கையாள முடியும் என்பதை ‘மகாத்மா' சிந்திக்கவில்லை.

சாஸ்திரங்களின் அறிவுரைகளில் இருந்து மக்களை விடுவிக்கும் பயனுள்ள வழியாக - ‘மகாத்மா' எந்தத் திட்டத்தை முன்வைத்தாலும், ஒரு நல்ல மனிதனின் தூய வாழ்க்கை அவனுக்கு மட்டுமே பயன்பட முடியும் என்பதை அவர் ஒப்புக் கொண்டாக வேண்டும். ஆனால், இந்தியாவிலோ ‘புனிதர்'களையும் ‘மகாத்மா'க்களையும் வழிபடுகிறார்களே ஒழிய, அவர்களின் வழி நடப்பதில்லை என்கிற போக்கு பாமரர்களிடம் இருப்பதால் - அவருடைய திட்டத்தால் பெரிய பலன் ஒன்றும் ஏற்படப் போவதில்லை.

4

இந்து மதத்தில் மோசமான எடுத்துக்காட்டுகளே அதிகம்


‘மகாத்மா' முன்வைக்கும் மூன்றாவது வாதம் - சைதன்யர், ஜயன்தேவ், துக்காராம், திருவள்ளுவர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்கள் கடைப்பிடித்த ஒரு மதம், நான் கூறியது போல் தகுதியற்றதாக இருக்க முடியாது. ஒரு மதத்தை அது உருவாக்கிய மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளைக் கொண்டு மதிப்பிட வேண்டுமே தவிர, அது உருவாக்கிய மிக மோசமான எடுத்துக்காட்டுகளைக் கொண்டு மதிப்பிடக் கூடாது' என்பதாகும். இந்த வாசகத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இதைக் கூறுவதன் மூ லம் அவர் எதை நிரூபிக்க விரும்புகிறார் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரு மதத்தை நல்ல எடுத்துக்காட்டுகளைக் கொண்டே மதிப்பிட வேண்டும்; மோசமான எடுத்துக்காட்டுகளைக் கொண்டு அல்ல என்று கூறிவிட்டாலே, விஷயம் முடிந்து விடுமா? அப்படி இருக்க முடியாது என்றே நான் கருதுகிறேன்.

பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. அந்த மோசமான எடுத்துக்காட்டுகள் ஏன் மிக அதிக எண்ணிக்கையிலும், நல்ல எடுத்துக்காட்டுகள் மிகக் குறைந்தும் காணப்படுகின்றன? இந்தக் கேள்விக்கு இரு சாத்தியமான பதில்களே இருக்க முடியும்:

1. அந்த மோசமான மனிதர்கள், தம் இயல்பிலேயே வக்கிரபுத்தி படைத்தவர்கள். சாஸ்திரங்களைக் கற்பதற்கு லாயக்கற்றவர்கள். எனவே, அவர்கள் மத லட்சியத்தை நெருங்கவே முடியாமல் இருப்பவர்கள்.

2. மத லட்சியமே முற்றிலும் தவறானது. பெரும்பான்மையினரின் வாழ்க்கையில் ஒரு தவறான போக்கை ஏற்படுத்தியதற்கு அதுவே காரணம். நல்லவர்கள் நல்லவர்களாக இருப்பதற்கு, இந்தத் தவறான லட்சியத்துக்கு எதிரான நிலைப்பாட்டை அவர்கள் மேற்கொண்டதே காரணம்.

இந்த இரண்டு விளக்கங்களில் முதல் விளக்கத்தை நான் ஏற்கத் தயாரில்லை. ‘மகாத்மா' கூட இதை ஏற்க மாட்டார் என்றே நினைக்கிறேன். மூன்றாவதாக ஒரு விளக்கத்தை ‘மகாத்மா' தராதவரை என்னைப் பொறுத்து இரண்டாவது விளக்கமே - தர்க்க ரீதியானதும் அறிவுப் பூர்வமானதும் ஆக இருக்கும்.

இரண்டாவது விளக்கமே ஒரே சரியான விளக்கம் என்றால், ஒரு மதத்தை அதில் உள்ள நல்ல எடுத்துக்காட்டுகளைக் கொண்டே மதிப்பிட வேண்டும் என்கிற ‘மகாத்மா'வின் வாதம், நம்மை எங்கே இட்டுச் செல்லும்? தவறிப்போன பெரும்பான்மையினர் தவறான லட்சியத்தை மேற்கொண்டதால்தான் அப்படி ஆனார்கள் என்று, அவர்கள் மேல் பரிதாபப்படுவதற்குதான் இட்டுச் செல்லும். வேறு எதற்கும் பயன்படாது.

5

நல்ல மனிதன் செய்யும் குண்டு வெடிக்காதா?


இந்து மதப் பெரியார்களை பெரும்பாலானவர்கள் பின்பற்றி நடந்தால் மட்டுமே, அந்த மதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது ஆகும் என்ற ‘மகாத்மா'வின் வாதம் - மற்றொரு காரணத்தாலும் தவறானது ஆகும். சைதன்யரைப் போன்ற புகழ் பெற்ற மனிதர்களை எடுத்துக்காட்டாகக் காட்டுவதன் மூலம் ‘மகாத்மா' என்ன சொல்ல வருகிறார்? தாழ்ந்த சாதி இந்துக்களிடம் பழகும் முறையில் ஓர் உயர் ஒழுக்க நெறியைப் பின்பற்றுமாறு - உயர் சாதி இந்துக்களை ஏற்றுக் கொள்ள வைத்துவிட்டால், இந்து மதத்தின் அமைப்பில் எந்த அடிப்படை மாற்றமும் செய்யாமலேயே - இந்து சமூகத்தை சகிப்புத் தன்மை மிக்கதாக, மேலும் மகிழ்ச்சி உடையதாக மாற்றிவிட முடியுமென ‘மகாத்மா' சொல்ல வருவதாகவே எனக்குப் படுகிறது.

இந்த வகையான கருத்தை நான் முற்றாக எதிர்க்கிறேன். தங்கள் வாழ்க்கையில் ஓர் உயர்ந்த ச மூக லட்சியத்தைக் கடைப்பிடிக்க முயல்கிற சாதி இந்துக்களை நான் மதிக்கிறேன். இப்படிப்பட்ட மனிதர்களே இந்தியாவில் இல்லாது போனால், இந்தியா இன்னும் மிக மோசமான ஒரு நாடாகவே இருக்கும். இருந்தாலும், சாதி இந்துக்களின் சொந்த குணங்களை உயர்த்துவதன் மூலம் - அவர்களை நல்ல மனிதர்களாக மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அனைவரும், தங்களுடைய ஆற்றலை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவித மாயையைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே எனக்குப் படுகிறது.

ஆயுதங்கள் தயாரிப்பவனுடைய சொந்த குணாம்சங்களே அவனை நல்லவனாக்கி விடுமா? (எடுத்துக்காட்டாக ஒரு நல்ல மனிதன் தயாரிக்கும் குண்டு வெடிக்காமல் இருக்குமா? அவன் தயாரிக்கும் விஷப்புகை, கொல்லாமல் இருக்குமா?) அது சாத்தியமில்லை என்று ஏற்றுக் கொண்டால், சாதிய உணர்வுகளால் நிரம்பிய ஒருவனின் சொந்த நல்ல குணங்கள் மட்டும் எப்படி அவனை நல்லவன் ஆக்கிவிடும்? அதாவது, சாதியத்தால் நிரம்பிய மனிதனை, அவனது சக மனிதர்களை நண்பர்களாகவும் சமமானவர்களாகவும் நடத்துகிற மனிதனாக இருக்க முடியுமா? அவன் தனக்குத் தானே உண்மையானவனாக இருக்க வேண்டுமெனில், தனது சக மனிதர்களை தன்னை விட உயர்வாகவோ, தாழ்வாகவோ மட்டுமே அவர் நடத்த இயலும். குறைந்தபட்சம் தனது சாதியினரைவிட்டு வேறாகவாவது நடத்த வேண்டும்.

‘நல்ல இந்து' - "நல்ல முதலாளி' இருக்க முடியுமா?

தன் சக மனிதர்களை உறவினராகவோ, சமமானவர்களாகவோ ஓர் இந்து நடத்துவான் என்று எதிர்பார்க்கவே முடியாது. உண்மையில், தன் சாதியைச் சாராத அனைவரையும் ஓர் இந்துவானவன் தன்னிலிருந்து பிரித்து அந்நியனாகவே பார்க்கிறான். அவர்களுக்கு எதிராக எந்த விதமான சூழ்ச்சிகளையும் மோசடிகளையும் வெட்கமின்றி மேற்கொள்ளலாம் என நினைக்கிறான். ஆக, உயர்ந்த இந்து - தாழ்ந்த இந்து என்று இருக்க முடியும். ‘நல்ல இந்து' என்று இருக்கவே முடியாது. அவனுடைய சொந்த குணாம்சத்தில் உள்ள ஏதோவொரு குறைபாட்டின் காரணமாகவே அவன் அப்படியிருக்கிறான் என்று இதற்குப் பொருளல்ல. அவனுடைய சக மனிதர்களுடன் அவன் கொள்ளும் உறவின் அடிப்படையில்தான் குறைபாடு உள்ளது.

மனிதர்களுக்கிடையிலான உறவுகள், அடிப்படையிலேயே தவறானதாக இருக்கும்போது, அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்கள் என்பவை - பின்பற்றத்தக்கதாக இருக்க முடியாது.

ஓர் அடிமைக்கு அவனுடைய முதலாளி - சற்று மேலானவனாகவோ, மோசமானவனாகவோ இருக்கலாம். ஆனால், நல்ல முதலாளி என்பவன் இருக்க முடியாது. ஒரு நல்ல மனிதன் முதலாளியாக இருக்க முடியாது. அதுபோலவே, ஒரு முதலாளி நல்ல மனிதனாக இருக்கவும் முடியாது. உயர்ந்த சாதிக்கும் தாழ்ந்த சாதிக்கும் இடையிலான உறவு முறைக்கும் இது பொருந்தும். ஒரு தாழ்ந்த சாதிக்காரனுக்கு, ஓர் உயர் சாதிக்காரன் இன்னொரு உயர் சாதிக்காரனோடு ஒப்பிடும்போது, சற்று மேலானவனாகவோ, மோசமானவனாகவோ இருக்கலாம். ஓர் உயர் சாதிக்காரன் தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதற்கு - ஒரு தாழ்ந்த சாதிக்காரனை வைத்திருக்கும்வரை, அவன் நல்லவனாக இருக்க முடியாது.

ஒரு தாழ்ந்த சாதிக்காரனுக்கு தனக்கு மேலே ஓர் உயர்ந்த சாதிக்காரன் இருக்கிறான் என்ற உணர்வு இருப்பது நல்லதாக இருக்க முடியாது. வர்ணத்தையும் சாதியையும் அடிப்படையாகக் கொண்ட சமூகம், தவறான உறவு முறையை அடிப்படையாகக் கொண்ட சமூகமே. இதைப் பற்றி நான் என் உரையில் கூறியுள்ளேன். என் வாதங்களை முறியடிப்பதற்கு ‘மகாத்மா' முயற்சி எடுப்பார் என்று நம்பினேன். அதற்கு மாறாக, அவர் (நால்வர்ண அøமப்பின் மீது தனக்கு உள்ள நம்பிக்கையானது, எதன் அடிப்படையில் ஏற்பட்டது என்பதை விளக்காமல்) தனது நம்பிக்கையைப் பற்றி மட்டுமே கூறிக்கொண்டிருக்கிறார்.

6

‘மகாத்மா' தான் சொல்வதை நடைமுறையில் கடைப்பிடிக்கிறாரா? பொதுத் தன்மையை விளக்கும்போது தனிப்பட்ட விஷயங்களைக் கூறக்கூடாது. ஆனால், ஒரு கோட்பாட்டை (doctrine) அறிவுறுத்திக் கொண்டு அதை மதக்கோட்பாடாகவே (dogma) வைத்துக் கொண்டிருக்கிற ஒருவர், தான் சொல்வதை எந்த அளவுக்கு நடைமுறையில் கடைப்பிடிக்கிறார் என்று அறிய ஆவலாகத்தான் இருக்கிறது.

அந்த லட்சியம் அடைவதற்கு முடியாதது என்பதால்கூட, அந்த லட்சியத்தை நடைமுறையில் கடைப்பிடிப்பதில் அவர் தோல்வியடைந்திருக்கலாம்; அல்லது அதை நடைமுறைப்படுத்த முடியாததற்கு அவருக்குள் உள்ள போலித்தனம் காரணமாக இருக்கலாம். எப்படியும் ‘மகாத்மா' தான் ஏற்றுக் கொண்டுள்ள கோட்பாட்டை, தன் சொந்த வாழ்க்கையிலாவது எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்த முயன்றார் என்பதைப் பற்றி நான் விமர்சித்தால், என்னை நீங்கள் குறை சொல்லக் கூடாது.

ஏன் பரம்பரைத் தொழிலைச் செய்ய வேண்டும்?

‘மகாத்மா' பிறப்பால் ஒரு பனியா. அவரது முன்னோர்கள் தம் வணிகத் தொழிலை விட்டு அமைச்சர்களானார்கள். அவரது சொந்த வாழ்க்கையிலே கூட அவர் தன் எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் போது, அவர் வணிகத்தை விட்டு விட்டு சட்டத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். பிறகு, சட்டத்தை விட்டு விட்டு பாதி முனிவராகவும், பாதி அரசியல்வாதியாகவும் மாறினார். அவருடைய முன்னோர்களின் தொழிலான வணிகத்தில் அவர் ஈடுபடவே இல்லை. அவரது இளைய மகன் (தன் அப்பாவை அப்படியே பின்பற்றுகிறவர்) ‘வைசிய'னாகப் பிறந்துவிட்டு, பார்ப்பனப் பெண்ணை மணந்து கொண்டார். ஒரு பத்திரிகை பெருமுதலாளிக்கு சேவை செய்யப் போய் விட்டார். தன் முன்னோர்களின் தொழிலைத் தேர்ந்தெடுக்காததற்காக, அவரை ‘மகாத்மா' கண்டித்ததாகத் தெரியவில்லை.

ஆனால், ஒரு லட்சியத்தை அதன் மோசமான முன்னுதாரணங்களைக் கொண்டு மதிப்பிடுவது தவறுதான். ஆனால், ஒரு முன் உதாரணம் என்ற வகையில் ‘மகாத்மா' ஒன்றும் மற்றவர்களிடம் இருந்து மோபட்டவராக இல்லை. லட்சியத்தை அடைவதில் அவர் தவறி இருந்தால் கூட, அந்த லட்சியம் எட்டுவதற்கு அசாத்தியமானது; சராசரி மனிதர்களின் இயல்புகளுக்கு எதிரானது என்று சொல்லியிருக்க முடியும்.

கார்லைல் ஒரு செய்தியைப் பற்றி சிந்திக்கும் முன்பே பேசத் தொடங்கி விடுவாராம். சாதியைப் பற்றி ‘மகாத்மா' கருத்துக் கூறுவதும் அப்படித்தானே இருக்கிறது? அப்படி இல்லாவிட்டால், எனக்குத் தோன்றிய சில கேள்விகள், காந்திக்கு ஏன் தோன்றாமல் போனது? ஒரு மனிதன் எப்போது தன் பரம்பரைத் தொழிலை தன் தொழிலாக விரும்பி ஏற்றுக் கொள்வான்? பரம்பரைத் தொழில் ஒருவனது தகுதிக்குப் பொருந்தாது, ஆதாயம் தராது என்ற நிலையில் கூட அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

ஒழுக்கக் குறைவானது என்று கருதப்படுகிற ஒரு தொழிலை, பரம்பரைத் தொழில் என்பதற்காக மேற்கொள்ள வேண்டுமா? பரம்பரைத் தொழிலைத்தான் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்றால், ஒருவனுடைய தாத்தா விபச்சாரத் தரகராக இருந்தால், பேரனும் அப்படியே இருக்க வேண்டும் என்றாகிறது. ஒரு பெண்ணின் பாட்டி விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டார் என்பதற்காக, அந்தப் பெண்ணும் அதையே மேற்கொள்ள வேண்டும் என்றாகிறது. என்னைப் பொறுத்த மட்டிலும், பரம்பரைத் தொழிலையே ஒருவர் மேற்கொள்ள வேண்டும் என்ற அவரது லட்சியம், நடைறைப்படுத்த முடியாத லட்சியமாகும். தார்மீக ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாத லட்சியமும் ஆகும்.

7

‘மகாத்மா' பார்வையில் பார்ப்பனர்கள்


ஒரு பார்ப்பனர் தன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனராக இருப்பதே சிறப்பு என்று ‘மகாத்மா' கருதுகிறார். நிறைய பார்ப்பனர்கள் அப்படியொன்றும் தம் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனர்களாகவே நீடிக்க விரும்புவதில்லை. இது ஒருபுறம் இருக்க, தம் பரம்பரைத் தொழிலான புரோகிதத்தில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களைப் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது? அவர்கள் ஏன் இன்னமும் அதில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்? பரம்பரைத் தொழிலே உத்தமம் என்ற கோட்பாட்டின் மீதுள்ள நம்பிக்கையாலா? அல்லது கீழ்த்தரமான வழியிலேனும் பணம் சம்பாதிக்கும் நேõக்கத்தாலா?

இத்தகைய கேள்விகளை ‘மகாத்மா' கேட்டுக் கொள்வதாகத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக ‘தமக்கு மனமுவந்து அளிக்கப்படும் தானத்தில் வாழ்ந்து கொண்டு, தம்மிடமுள்ள ஆன்மீக செல்வத்தை மனமுவந்து வழங்குபவர்களே - உண்மையான பார்ப்பனர்கள்' என்று கூறுவதுடன் திருப்தியடைந்து விடுகிறார். இப்படித்தான் ஒரு பிறவிப் பார்ப்பனப் புரோகிதர், ‘மகாத்மா'வின் கண்களுக்கு ஆன்மீக செல்வத்தைப் பெற்றிருப்பவராகத் தோன்றுகிறார்.

வைதீக பார்ப்பனரைப் பற்றிய இன்னொரு படப்பிடிப்பையும் கவனிப்போம். பார்ப்பான் - காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் பூசாரி; அழிக்கும் கடவுளான சிவனுக்கும் பூசாரி; அன்பின் தத்துவத்தை மனித குலத்துக்குப் போதித்த மாபெரும் ஆசானாகிய கயை புத்தருக்கும் பார்ப்பான் பூசாரியாக இருக்க முடிகிறது. தினமும் மிருக ரத்த பலிகேட்கும் காளிக்கும் அவன் பூசாரியாக இருக்க முடிகிறது. ‘சத்ரிய' கடவுளான ராமனுக்கும் அவன் பூசாரி. சத்ரியரை ஒழித்துக் கட்டுவதற்காகவே அவதாரம் எடுத்த பரசுராமனுக்கும் பூசாரி; படைப்புக் கடவுளான பிரம்மனுக்கும் பார்ப்பான் பூசாரியாக முடியும். ஆன்மீக உலகில் பார்ப்பானின் ஆதிக்கத்தை ஏற்காத அல்லாவைத் தொழும் ‘பிர்'களுக்கும் பார்ப்பான் பூசாரியாக முடியும். உண்மை வாழ்க்கையில், இப்படி இல்லை என்று யாரும் கூற முடியாது.

மதத் தொழிலை விபச்சாரமாக்கும் பார்ப்பனர்கள்

மாறாக, இது உண்மைதான் என்றால், ஒரு நேர்மையான மனிதன் எதிரெதிரான குணங்களைக் கொண்ட எல்லா தேவ, தேவிகளுக்கும் பக்தனாக இருக்க முடியாது. எனில், அப்படி இருக்கிற பார்ப்பனரின் இந்தத் திறமையைப் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த அசாதாரணமான நிகழ்வையே இந்துக்கள் தம் மதத்தின் மாபெரும் சிறப்பாக, அதன் சகிப்புத் தன்மை - பரந்த நோக்கு என்பதாகக் கூறுகிறார்கள்.

இப்படி எளிமையாகச் சொல்லப்பட்டாலும், இந்த சகிப்புத் தன்மையும் பரந்த மனப்பாங்கும் - உண்மையில் வெறும் அசிரத்தையையும் கட்டுப்பாடின்மையையுமே குறிக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால், இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் வேறுபாடு காண்பது கடினம். ஆனால், உள்ளடக்கத்தில் அவையிரண்டும் முற்றிலும் வெவ்வேறு ஆனவையாகும். நெருங்கி ஆராய்ந்து பார்த்தால்தான் இது விளங்கும். வெவ்வேறு விதமான கடவுள்களையும் வழிபடுவது, சமரசத்தன்மையைக் குறிக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளலாம்.

ஆனால், அதுவே சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் நேர்மையின்மையையும் குறிக்க முடியும் அல்லவா? இந்த சகிப்புத் தன்மை என்பது, உண்மையில் நேர்மை இன்மையே என்பது உறுதி. இது உறுதியானால், தன் காரியத்தை முடித்துக் கொடுக்கும் எந்த சாமிக்கும் பூசாரி ஆவதற்குத் தயாராக இருக்கும் ஒருவனிடம் - என்ன ஆன்மீகச் செல்வம் இருக்க முடியும் என்று நான் கேட்கிறேன். அப்படிப்பட்டவனிடம் எந்த விதமான ஆன்மீகச் செல்வமும் சற்றும் இருக்காது.

மேலும், அத்தகையவன் நம்பிக்கையோ விசுவாசமோ இல்லாமல் பரம்பரையாக, எந்திரத்தனமாகப் பெற்றதற்காக மட்டுமே புரோகிதம் என்ற உயர்ந்த தொழிலைக் கைக்கொள்வான் என்றால், அது நல்லவனுக்கு அடையாளமும் அல்ல. அதற்குப் பதிலாக சமயப் பணி என்ற உன்னதத் தொழிலை, விபச்சாரமாக்குகிறான் என்றே கூற வேண்டும்.

8

"சாதி அமைப்பே சிறந்தது'' - காந்தி


ஒவ்வொருவரும் தம் பரம்பரைத் தொழிலையே ஏற்க வேண்டுமென்ற கொள்கையை "மகாத்மா' ஏன் பிடித்துத் தொங்குகிறார்? இதற்கான காரணத்தை அவர் எங்கும் சொல்லவில்லை. இதைச் சொல்வதற்கு அவர் அக்கறை எடுத்துக் கொள்ளாவிட்டாலும், அப்படிக் காரணம் இருக்கத்தான் வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன் ‘யங் இந்தியா'வில் ‘சாதியா வர்க்கமா' என்ற தலைப்பில் அவர் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர், "வர்க்க அமைப்பைவிட சாதி அமைப்பே சிறந்தது. ஏனென்றால், சமூகத்தின் நிலையான தன்மையைப் பாதுகாக்க சாதியே மிகச் சிறந்த வழி'' என்று வாதிட்டார். ஒவ்வொருவரும் அவரவர் பரம்பரைத் தொழிலையே செய்ய வேண்டும் என்ற கொள்கையை ‘மகாத்மா' ஆதரிக்கக் காரணம் இதுதானா? அப்படியானால், சமூ க வாழ்வைப் பொறுத்து ஒரு தவறான கண்ணோட்டத்தை அவர் ஆதரிக்கிறதாகவே ஆகும்.

சமூகம் நீடித்திருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புகிறார்கள். அதற்காக தனிமனிதர்களுக்கிடையிலும், வர்க்கங்களுக்கிடையிலுமான உறவில் கொஞ்சம் அனுசரித்துத்தான் போகிறார்கள். ஆனால், இரண்டு நிலைமைகளை யாருமே விரும்புவதில்லை என்று உறுதியாகக் கூறலாம்.

1. எக்காலத்திலும் மாற்ற முடியாதபடி இறுகிப்போன உறவை யாரும் விரும்புவதில்லை. நிலையான தன்மை தேவைதான். ஆனால், மாற்றம் அவசியமாகிறபோதுகூட, அதை மறுக்கிற நிலையான தன்மை தேவையா?

2. தொடர்ந்து அனுசரித்துக் கொண்டே போவதை யாரும் விரும்புவதில்லை. அனுசரணைக்காகவே (adjustment) சமூக நீதியை இழந்து போவதையும் யாரும் விரும்புவதில்லை. சாதி அடிப்படையில் அதாவது, பரம்பரைத் தொழில் அடிப்படையில் சமூ க உறவு அனுசரிக்கப்படுவது, மேற்சொன்ன இரண்டு தீமைகளையும் தவிர்த்துவிடுகிறதா? இல்லவே இல்லை. சாதியம் மிகச் சிறந்த அனுசரணையாக இருப்பதற்குப் பதிலாக, மிக மோசமான அனுசரணையாகவே இருக்கிறது. ஏனென்றால், சமூக அனுசரணையின் இரண்டு விதிகளான நெகிழ்ச்சித் தன்மைக்கும் நடுநிலைத் தன்மைக்கும் அது எதிரானது.

9

சாதிக்கும் வர்ணத்திற்கும் வேறுபாடு இருக்கிறதா?


"மகாத்மா இப்போது ரொம்பவும் முன்னேறி விட்டார். இப்போது அவர் சாதியை நம்புவதில்லை. வர்ணத்தையே நம்புகிறார்'' என்று சிலர் எண்ணலாம். ‘மகாத்மா' ஒரு தீவிர சனாதன இந்துவாக ஒரு காலத்தில் இருந்தார் என்பது உண்மையே. அன்று அவர் வேதங்களையும் உபநிடதங்களையும் புராணங்களையும் அவதாரங்கள், மறுபிறப்பு உட்பட இந்து சாஸ்திரங்களின் பெயரால் வழங்கப்படும் அத்தனையையும் நம்பினார்; சாதியை நம்பினார். ஒரு வைதீகனுக்கும் உரிய வேகத்தோடு அதைப் பேணி வந்தார். சமபந்தியையும் கலப்பு மணத்தையும் கண்டித்தார். சமபந்திக்கு எதிரான கட்டுப்பாடுகள் பெருமளவுக்கு - ‘மனோசக்தியை வளர்க்கவும், சமூக நன்மையைக் காக்கவும் உதவுகிறது' என்று வாதிட்டார்.

இந்த பத்தாம் பசலி அபத்தத்தை அவர் மறுத்து சாதி, "ஆன்மீக வளர்ச்சிக்கும் தேசிய வளர்ச்சிக்கும் தீங்கு பயப்பதாகும்'' என்று ஒத்துக் கொண்டுள்ளது நல்லதுதான். தன் மகனுக்கு வேறு சாதியில் திருமணம் செய்வித்ததும் இந்த மாறுதலைக் காட்டுகிறது. ஆனால், ‘மகாத்மா' உண்மையிலேயே முன்னேறியுள்ளாரா? ‘மகாத்மா' ஆதரிக்கும் வர்ணத்தின் தன்மை என்ன? சுவாமி தயானந்த சரஸ்வதியும், அவரது சீடர்களான ஆரிய சமாஜிகளும் பரப்பிவரும் வேதியக் கருத்தா அது? வேதத்தின்படி வர்ணம் என்பது, ஒருவனின் சுபாவத்துக்குப் பொருத்தமான பணியைத் தேடுவதாகும். ‘மகாத்மா'வின் வர்ணக் கருத்தோ, சுபாவத்தைப் பற்றி கவலைப்படாமல் பரம்பரைத் தொழிலை நாடுவதாகும். ‘மகாத்மா' புரிந்து வைத்துள்ள சாதிக்கும் வர்ணத்துக்கும் இடையில் - எந்த வேறுபாட்டையும் என்னால் பார்க்க முடியவில்லை. ‘மகாத்மா'வின் வரையறையின்படி பார்த்தால், சாதிக்கு இன்னொரு பெயர்தான் வர்ணம். ஏனென்றால், இரண்டின் நோக்கமும் பரம்பரைத் தொழிலை செய்யச் சொல்வதாகவே உள்ளது.

முன்னேறுவதற்குப் பதில் ‘மகாத்மா' பின்னடைந்திருக்கிறார். வேதங்கள் கூறும் வர்ணக் கருத்துக்கு தன் விளக்கத்தை அளித்ததன் மூலம், ஒரு மேன்மையான கருத்தைப் பரிகாசத்துக்கு உரியதாக்கி இருக்கிறார். வேதம் கூறும் வர்ணக் கோட்பாட்டை நான் மறுக்கிறேன். அதற்கான காரணங்களை என் உரையில் தந்துள்ளேன். அதே சமயத்தில், சுவாமி தயானந்தரும் இன்ன சிலரும் வேதத்தின் வர்ணக் கொள்கைக்குத் தரும் விளக்கம் அர்த்தமுள்ளதாகப் படுகிறது. தனிமனிதனை சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்துவதற்கு, பிறப்பை ஒரு தீர்மான காரணியாக அது கூறவில்லை. தகுதியையே அது அங்கீகரிக்கிறது. வர்ணம் பற்றிய ‘மகாத்மா'வின் கருத்து, வர்ணம் பற்றிய வேதத்தின் கருத்தை அபத்தப்படுத்துவதோடு, அதை வெறுக்கத்தக்கதாகவும் ஆக்குகிறது.

வர்ணமும் சாதியும் இரு வேறுபட்ட கருத்தாக்கங்களாகும். ‘ஒவ்வொருவருக்கும் அவரது தகுதிக்கு ஏற்ப' என்பதன் அடிப்படையில் வர்ணக்கோட்பாடும் – ‘ஒவ்வொருவருக்கும் அவரது பிறப்புக்கேற்ப' என்பதன் அடிப்படையில் சாதிக் கோட்பாடும் அமைந்துள்ளன. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு, வெண்ணைக்கும் சுண்ணாம்புக்கும் இடையிலான வேறுபாடு போல. உண்மையில் இரண்டும் ஒன்றுக் கொன்று முரணானதாகும். ஒவ்வொருவரும் தம் பரம்பரைத் தொழிலையே பின்பற்ற வேண்டும் என்பதை நம்புவாரானால், கண்டிப்பாக அவர் சாதி அமைப்பையே ஆதரிப்பவர் ஆகிறார். பிறகு வர்ண அமைப்பு என்று பேசும்போது, அவர் சொற்குற்றம் செய்பவராகவும் பெருங்குழப்பம் விளைவிப்பவராகவும் ஆகிறார்.

‘மகாத்மா'வின் குழப்பத்துக்குக் காரணம் - சாதி என்றால் என்ன, வர்ணம் என்றால் என்ன, இந்து மதத்தைக் காப்பதற்கு அவை இரண்டின் அவசியம் என்ன என்பது பற்றிய தெள்ளத் தெளிவான இலக்கணம் அவரிடம் இல்லாமல் இருப்பதேயாகும். இந்து மதத்தின் சாரம் சாதி அல்ல என்ற தன் கருத்தை மாற்றிக் கொள்ள, ஏதாவது மாயக் காரணத்தைக் கண்டுபிடிக்க மாட்டேன் என்று அவர் கூறியிருக்கிறார். அப்படியே செய்வார் என்று நம்பலாம். அப்படி எனில், வர்ணமே இந்து மதத்தின் சாரம் என்று அவர் கருதுகிறாரா? இந்தக் கேள்விக்கு யாரும் தீர்மானமான பதில் ஒன்றும் கூற முடியவில்லை.

தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் ‘மகாத்மா'

‘சாதி அமைப்பு சரியானதே' என்ற ‘மகாத்மா'வின் கட்டுரையில், டாக்டர் அம்பேத்கரின் குற்றச்சாட்டு என்ற பகுதியை வாசிக்கும் எவரும் எதிர்மறையான பதிலையே தருவார்கள். அந்தக் கட்டுரையில், இந்து மதத்தின் சாரமான பகுதி வர்ணக் கோட்பாடே என்று அவர் கூறவில்லை. அதற்குப் பதிலாக, ‘இந்து மதத்தின் சாரம் சத்தியமே ஒரே கடவுள் என தெரிவிப்பதும், மனிதக் குடும்பத்தின் சட்டம் அகிம்சையே என்பதைத் துணிவுடன் ஏற்பதுமே' என்றே கூறுகிறார். ஆனால், திருவாளர் சான்ட் ராமுக்கு அவர் எழுதிய பதிலை வாசிப்பவர்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள்.

அந்தக் கட்டுரையில் அவர், "குரானை மறுக்கும் முஸ்லிம் எப்படி முஸ்லிமாக நீடிக்க முடியும்? பைபிளை மறுக்கும் கிறித்துவன் எப்படி கிறித்துவனாக நீடிக்க முடியும்? சாதியும் வர்ணமும் ஒன்றுதான் என்றால், இந்து மதத்தை வரையறுக்கும் சாஸ்திரங்களில் இருந்து பிரிக்க முடியாத பகுதியே வர்ணக் கோட்பாடு என்றால், சாதியை அதாவது வர்ணத்தை மறுக்கிற எவரும் எப்படி தன்னை இந்து என்று அழைத்துக் கொள்ள முடியும் என்று எனக்குத் தெரியவில்லை'' என்கிறார். ஏன் இந்தச் சொல்புரட்டு? ஏன் ‘மகாத்மா' மழுப்புகிறார்? யாரைத் திருப்தி செய்ய? முனிவரால் உண்மையை உணர முடியாமல் போய்விட்டதா அல்லது முனிவரின் வழிக்கு அரசியல்வாதி தடையாக நிற்கிறாரா?

இத்தகைய குழப்பத்தால் ‘மகாத்மா' அவதிப்படுவதற்கு உண்மையான காரணத்தை இரண்டு இடங்களில் தேடலாம். ஒன்று ‘மகாத்மா'வின் உணர்ச்சி நிலை. அவர் எல்லாவற்றையும் குழந்தையைப் போல் எளிமைப்படுத்தியே பார்க்கிறார். குழந்தையைப் போலவே தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் திறன் உடையவர் அவர். குழந்தையைப் போலவே அவர், தான் நம்ப விரும்பும் எதையும் நம்பிவிடுகிறார். எனவே, சாதி மீது தன் நம்பிக்கையைத் துறக்க விரும்பியதும் அவர் துறந்து விட்டதைப் போலவே, வர்ணத்தின் மீது தான் கொண்டுள்ள நம்பிக்கைøய அவர் துறக்க விரும்பும் காலம் வரை நாம் காத்திருக்க வேண்டியதே.

‘மகாத்மா'வின் குழப்பத்துக்கு இரண்டாவது காரணம், அவர் - ‘மகாத்மா', அரசியல்வாதி என இரண்டு விதமாகவும் நடக்க விரும்புவதாகும். ‘மகாத்மா' என்ற முறையில் அவர் அரசியலை ஆன்மீகமயப்படுத்த விரும்புகிறார். அதில் அவர் வெற்றி பெற்று விட்டாரோ இல்லையோ, அரசியல் நிச்சயமாக அவரை வியாபார மயமாக்கி விட்டுள்ளது. முழு உண்மையை சமூகத்தால் தாங்க முடியாது. எனவேதான், முழு உண்மையைப் பேசக் கூடாது என்பதை அரசியல்வாதி அறிந்திருக்க வேண்டும். அவர் முழு உண்மையைப் பேசினால், அவருடைய அரசியலுக்கு அது பாதகமாகிவிடும்.

‘மகாத்மா' எப்போதும் சாதியையும் வர்ணத்தையும் ஆதரிக்கக் காரணம், அதை அவர் எதிர்த்தால், அரசியலில் தன் இடத்தை இழந்து விட நேரும் என அவர் அஞ்சுவதுதான். அவரது குழப்பத்தின் மூ ல காரணம் எதுவாக இருந்தாலும், ‘மகாத்மா' தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதையும், வர்ணம் என்ற பெயரால் மக்களுக்கு சாதியை கற்பித்து, அவர்களையும் ஏய்த்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் அவருக்குச் சொல்லியாக வேண்டும்.

10

சமூக நீதிதான் சரியான அளவுகோல்


இந்துக்களுக்கும் இந்து மதத்துக்கும் நான் பயன்படுத்தும் அளவுகோல் மிகவும் கடுமையானது. இந்த அளவுகோøல வைத்துப் பார்த்தால், இன்றுள்ள நமக்குத் தெரிந்த எல்லா மதங்களும் தோற்றே போகும் என்கிறார் ‘மகாத்மா'. என் அளவுகோலின் தரம் உயர்வானது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், அவை உயர்வானவையா, தாழ்வானவையா என்பதல்ல பிரச்சனை. அவை சரியானவையா என்பதே. சமூக நீதியின் அடிப்படையிலான சமூக அளவுகோலைக் கொண்டே - மக்களையும் அவர்களின் மதத்தையும் மதிப்பிட முடியும்.

மக்களின் நன்மைக்கு அவசியமானதே மதம் என்று கொள்ளப்பட்டால், வேறு அளவுகோலைப் பயன்படுத்துவதில் எவ்விதப் பொருளும் இல்லை. இந்துக்கள் மீதும் இந்து மதத்தின் மீதும் நான் பயன்படுத்தும் அளவுகோலே மிகச் சரியானது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். அதைவிட சரியான வேறு எந்த அளவுகோலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

நமக்கு தெரிந்த எல்லா மதங்களும் என் அளவுகோலின் முன் தோற்றுப் போகலாம் என்ற கருத்து உண்மையாக இருக்கலாம். ஆனால், இந்தக் கருத்து, ‘மகாத்மா'வை இந்துக்களின் தாøனத் தலைவன் என்பதாகவும் இந்து மதத்துக்கு ஆதரவாகவும் போய்விடக் கூடாது. அப்படிப் போனால் அதற்கும், ஒரு பைத்தியக்காரன் மற்ற பைத்தியக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பது அல்லது ஒரு குற்றவாளி மற்ற குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பது என்பதற்கும் வித்தியாசம் இருக்காது. நான் குற்றம் சாட்டும் நிலைமைகள் மீது எனக்கு ஏற்பட்டுள்ள வெறுப்புக்கு, இந்துக்களும் இந்து மதமுமே காரணம். இவர்கள் என் அளவுகோலை எட்டத் தவறிவிட்டனர் - அவ்வளவுதான் என்று ‘மகாத்மா' சொல்லிவிட முடியாது.

இந்த உலகம் மிகவும் குறைபாடுகள் கொண்ட உலகம். இதில் வாழவிரும்புபவன் அதன் குறைபாடுகளை சகித்துக் கொண்டுதான் வாழ வேண்டும் என்பதை நான் அறிவேன். நான் இருந்து வாழவேண்டிய இந்த சமுதாயத்தின் குறைபாடுகளைச் சகித்துக் கொள்ள நான் தயார். ஆனால், தவறான லட்சியங்களை வளர்க்கும் சமுதாயத்திலோ, சரியான லட்சியங்கள் இருந்தாலும் - அதன்படி சமூக வாழ்வை நடத்தாத சமுதாயத்திலோ எனக்குச் சம்மதமில்லை. இந்து மதமும் இந்துக்களும் தவறான லட்சியங்களை நாடுவதாலும், தவறான சமூக வாழ்வை நடத்துவதாலும்தான் நான் அவர்களை வெறுக்கிறேன். அவர்களின் சமூக நடத்தையிலுள்ள குறைபாடுகள் மீதல்ல என் சண்டை. அதைவிட அடிப்படையான அவர்களின் லட்சியங்களைப் பற்றியது.

11

பழமையை ஆதரிக்கும் வெட்கங்கெட்ட இந்து தலைவர்கள்


இந்து சமுதாயத்துக்கு ஒரு தார்மீக மறுமலர்ச்சி தேவைப்படுகிறது. இதைத் தள்ளிப் போடுவது அபாயகரமானதாகுமென்று தோன்றுகிறது. இந்தத் தார்மீக மறுமலர்ச்சியைத் தீர்மானித்துக் கட்டுப்படுத்த யாரால் முடியும் என்பதே கேள்வி. அறிவு மறுமலர்ச்சி பெற்றவர்களும், தம் அறிவு விமோசனத்தில் பிறந்த முடிவையே துணிவுடன் செயல்படும் நேர்மை கொண்டவர்களுமே - மேற்சொன்ன தார்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். இந்த அளவுகோலின்படி பார்த்தால், இன்றுள்ள முன்னணி இந்து தலைவர்கள் இந்தப் பணிக்குச் சற்றும் பயனற்றவர்கள் என்பது என் கருத்து.

அறிவு மறுமலர்ச்சியின் அரிச்சுவடியைக்கூட அவர்கள் கற்கவில்லை. அப்படிக் கற்றிருந்தால், பாமரப் பெரும்பான்மையைப் போலவே எளிமையாக அவர்கள் தமக்குத்தாமே மயங்கி நிற்கவும் மாட்டார்கள். மற்றவர்களின் ஆதிகால அறியாமையில் தமக்கு வசதியாகக் குளிர்காயவும் மாட்டார்கள். இந்து சமுதாயம் தகர்ந்து குட்டிச்சுவராகிக் கொண்டிருக்கிற நிலையிலும், இந்த தலைவர்கள் வெட்கமின்றி நிகழ்காலத்துடனான எல்லாவிதத் தொடர்பும் அற்றுப்போய்விட்ட - கடந்தகால லட்சியங்களை ஆதரித்து நிற்கிறார்கள். தாம் தோன்றிய காலத்தில் பொருத்தமாக இருந்திருக்கக் கூடிய லட்சியங்கள், இன்றைக்கு வழிகாட்டுவதாக இருப்பதற்குப் பதில் எச்சரிக்கைக்குரியதாக மாறி உள்ளன.

‘மகாத்மா'வின் அறிவு விபச்சாரம்

இந்து தலைவர்களுக்குப் பழமையான வடிவங்களில் இன்னும் மயக்கம் இருப்பதால், தம் சமுதாயத்தின் அடிப்படைகளை ஆராய அவர்கள் தயங்குகிறார்கள். எதிர்க்கிறார்கள். இந்து பொது மக்களோ, தம் நம்பிக்கைகள் எப்படி உருவாயின என்பதைப் பற்றி நம்பமுடியாத அளவுக்கு அக்கறை இன்றி இருக்கிறார்கள்.

எல்லாவற்றையும் விட மோசம், இந்த இந்து தலைவர்கள் அவர்களின் நீங்கா துணையான நம்பிக்கையை அகற்ற வேண்டும் என்று யாரேனும் எடுத்துச் சொன்னால், உள்ளுக்குள் பொங்குகிறார்கள். ‘மகாத்மா'வும் இதற்கு விதிவிலக்கல்ல. சிந்திப்பதில் நம்பிக்கையற்றவராக ‘மகாத்மா' காணப்படுகிறார். ஞானிகளைப் பின்பற்றுவதையே அவர் விரும்புகிறார். புனிதக் கருத்துகளுக்கு வணக்கம் செலுத்தும் வைதிகரைப்போல, எங்கே சிந்திக்கத் தொடங்கிவிட்டால் - தான் பற்றிக் கொண்டுள்ள லட்சியங்களும் நிறுவனங்களும் பாழாய்ப் போகுமோ என்று பயப்படுகிறார். அவரைப் பார்த்து பரிதாபப்படவே வேண்டியிருக்கிறது.

சுதந்திர சிந்தனையில் இருந்து பிறக்கும் ஒவ்வொரு செயலும், உலகம் நிலைத்தது என்ற தோற்றத்தின் ஒரு பகுதிக்கு உலை வைக்கிறது. ஆனால், ஞானிகளைச் சார்ந்து இருப்பது உண்மையான அறிவுக்கு இட்டுச் செல்ல முடியாது. ஞானிகளும் மனிதர்களே. பால்போர் பிரபு சொன்னதுபோல, "உண்மையைக் கண்டுபிடிக்கும் எந்திரம் என்ற வகையில் மனிதமனம் பன்றியின் முகத்தைவிட உயர்ந்தது அல்ல.'' அப்படியே "மகாத்மா' சிந்தித்தாலும் உளுத்துப்போன இந்து சமூக அமைப்புக்கு முட்டுக் கொடுக்கும் வேலையில் தன் மூளையை ஈடுபடுத்துவதன் மூலம் - அவர் அறிவு விபச்சாரம் செய்பவரே ஆகிறார். அதன் மிக செல்வாக்கான பிரதிநிதியும் அவரே. ‘மகாத்மா'வைப் போல் அல்லாமல் வெறுமனே சிந்திப்பதிலும் பின்பற்றுவதிலும் மட்டுமே திருப்தி அடையாத இந்து தலைவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் சிந்திக்கத் துணிபவர்கள் தம் சிந்தனையின் முடிவின்படி நடக்கத் துணிபவர்கள். ஆனால், கெடுவாய்ப்பாக சரியாக வழிகாட்ட வேண்டிய நிலைமை வரும்போது, இவர்கள் நேர்மையற்றவர்களாகவே ஆகிவிடுகிறார்கள். ஏறக்குறைய எல்லா பார்ப்பனருமே சாதிக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களாக இருக்கிறார்கள். புரோகிதம் செய்யும் பார்ப்பனரைவிட, செருப்பு விற்கும் பார்ப்பனர் அதிகமாகி வருகிறார்கள்.

நேர்மையற்ற படிப்பாளி வர்க்கத்தின் அயோக்கியத்தனம்

தம் பரம்பரைத் தொழிலான புரோகிதத்தைவிட்டு வணிகத்தில் இறங்கி உள்ளதோடு, சாஸ்திரங்களால் விலக்கப்பட்ட தொழில்களிலும் அவர்கள் இறங்கி உள்ளனர். இருந்தும் அன்றாடம் சாதியை மீறும் பார்ப்பனரில் எத்தனை பேர் - சாதிக்கும் சாஸ்திரங்களுக்கும் எதிராகப் பேசுகிறார்கள்? சாதியையும் சாஸ்திரங்களையும் தன் செயல் நோக்கும் மனசாட்சியும் ஆதரிக்காததால், சாதிக்கும் சாஸ்திரங்களுக்கும் எதிரான கருத்துகளைப் பரப்பும் ஒரு நேர்மையான பார்ப்பனர் இருந்தால், தினமும் சாதியை மீறிக் கொண்டும் சாஸ்திரங்களை மிதித்துக் கொண்டும் - அதே வேளையில் சாதிக் கோட்பாடுகளையும் சாஸ்திரங்களின் புனிதத்தையும் வெறித்தனமாக ஆதரிக்கும் பார்ப்பனர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்களே. ஏன் இந்த இரட்டைப் புத்தி? ஏனென்றால், மக்கள் சாதிநுகத்தடியில் இருந்து விடுபட்டு விட்டால், பார்ப்பன வர்க்கத்தின் அதிகாரத்துக்கும் அந்தஸ்துக்கும் அந்த மக்கள் ஆபத்தாகி விடுகிறார்கள் என்பதைப் பார்ப்பனர்கள் உணர்ந்துள்ளனர். தம் சிந்தனையின் பயனை மக்களுக்கு வழங்க மறுக்கும் இந்தப் படிப்பாளி வர்க்கத்தின் நேர்மை இன்மை, படு அயோக்கியத்தனமானதாகும்.

மாத்யூ அர்னால்டின் வார்த்தைகளில் சொன்னால், இந்துக்கள் "செத்துப்போன உலகத்துக்கும், இன்னும் பிறக்க சக்தியற்ற உலகத்துக்கும் இடையில் அல்லாடுபவர்கள்'' அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? தங்களின் வழிகாட்டியாக அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள ‘மகாத்மா'வோ சிந்தனையை நம்புகிறவர் அல்ல. எனவே, அனுபவ சோதனைக்குத் தாக்குப் பிடிக்கும் உருப்படியான உதவியை அவரால் தர முடியாது. மக்கள் அறிவாளி வர்க்கத்தை உதவிக்கு எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், இந்த அறிவாளி வர்க்கத்தினரோ நேர்மையற்றவர்களாக இருக்கிறார்கள்; அல்லது மக்களுக்குக் கல்வி தந்து சரியான வழிகாட்டும் அக்கறையற்றவர்களாக இருக்கிறார்கள். உண்மையாகவே நாம், ஒரு மாபெரும் சோக நிகழ்ச்சியின் பார்வையாளர்களாக இருக்கிறோம். இந்த சோகத்தின் முன்னிலையில், "ஓ இந்துக்களே! இதுதான் உங்கள் தலைவர்களின் லட்சணம்'' என்று அங்கலாய்க்க மட்டுமே நம்மால் முடிகிறது.


-பி.ஆர்.அம்பேத்கர்
Pin It