சமூக விடுதலையும், சமத்துவமும், நீதியும், நேர்மையும் சமய எல்லைகளுக்கு அப்பால்தான் சாத்தியமாகும்; சமயம் மேற்கூறிய கருத்தாடல்களுக்கு எதிராகவே செயல்படுகிறது என்பதும், சமூக சமத்துவத்தை உருவாக்க விரும்பும் எவரும் முதலில் அழித்தொழிக்க வேண்டியது - கருத்து முதல்வாதமான ‘சமயம்'தான் என்பதும் சமூக அறிவியல் இயங்கியலாகும். ஆனால், கேரளத்தில் இத்தகைய பொருள் முதல்வாத முடிவுகள் சமூக விடுதலையில் விதிவிலக்கானவை. அவை சமூக விஞ்ஞானிகளால், பதற்றப்படாமல் கவனத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டியவை.
ஏற்றத்தாழ்வை மூலமாகக் கொள்ளாத ஆன்மிக வழிகளின் ஊடாகக்கூட, சமத்துவ சமூகத்தை நிர்மாணிக்க முடியும்; சாதி வர்க்க ஆணாதிக்க ஒழிப்புகள் கூட சாத்தியமாகக் கூடும் என்பதற்கு, கடந்த இரு நூற்றாண்டுகளில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய மகராசன் வேதமாணிக்கத்தின் (1757 - 1827) சீர்திருத்தக் கிறித்துவ ஆன்மிக வழி, அய்யா வைகுண்டரின் (1809 - 1851) ஆன்மிக வழி, நாராயண குருவின் (1856 - 1928) ஆன்மிக வழி ஆகியவைகளே சமூகப் புரட்சியோடு பொருத்தப்பாடு கொண்டு, சமூக ஏகாதிபத்தியமாய் வியாபித்திருந்த இந்துத்துவத்தை எதிர்த்து - சமூக நீதி இயக்கங்கள் ஆனது கேரள வரலாற்றில் புரட்சிகர பக்கங்களாகும். இதில், கேரளத்தின் மறுமலர்ச்சியில் இந்து அடைகாப்புக்குள் அடங்காமலும், தனித்ததொரு ஆன்மிக வழியை முன்னெடுக்காமலும், கம்பீரமான வீரம் செறிந்த வழியே அய்யன்காளியின் (1863 - 1941) வழியாகும்.
கேரளத்தில் பவுத்தத்தை பார்ப்பனியம் வெற்றி கொண்ட பிறகு, "கி.பி. 8 ஆம் நூற் றாண்டின் இறுதியிலிருந்து பார்ப்பனர் ஆதிக்கம் முழுமையாக நிலைபெற்ற பிறகு, மநுஸ்மிருதியிலிருந்து மேலும் சமூகக் கொடுமைகளை உள்ளடக்கிய ஆதிசங்கரனின் ‘சங்கரஸ்மிருதி' என்ற சமூகச் சட்ட நூலின் அடிப்படையில் முளைத்த 64 ஆச்சாரங்கள் மூலம் பார்ப்பனிய சமூக அமைப்பு நிலை நிறுத்தப்பட்டது. இது, சமூக ஏற்றத்தாழ் வையும், சாதிவேறுபாட்டையும், ஆணாதிக்கத்தையும், பொருளாதாரச் சுரண்டலையும் அடிப்படையாகக் கொண்ட மனிதாபிமானமற்ற வஞ்சக அமைப்பாக இருந்தது'' (Sankarasmirti, Edited by K. Maheswaran (Nair), Swantan Books, Thiruvananthapuram, 2002).
"கேரள வரலாற்றாய்வுகள்' எனும் நூலின் ஆசிரியர் குஞ்சன் பிள்ளை இவ்வாறு குறிப்பிடுகிறார் : ""நம்பூதிரிப் பார்ப்பனர்கள் அல்லாத மன்னர்கள், நம்பூதிரிப் பார்ப்பனர்களின் புதல்வர்களாக இருக்க வேண்டும் என்பது அக்காலத்தில் எழுதப்படாத சட்டமாகி விட்டது. அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்களுக்கு நம்பூதிரிப் பார்ப்பனர்கள் ஸ்மிருதிகளைப் பற்றிய பாடங்களைக் கற்றுத் தந்தனர். அரச குடும்பப் பிள்ளைகள் எதிர்காலத்தில் மன்னர் பதவியேற்கவே அவ்வாசையுடன் வளர்ந்தனர். இதனால்தான் நம்பூதிரிப் பார்ப்பனர்கள் சாதி ஆதிக்கத்தையும் ஸ்மிருதி ஆதிக்கத்தையும் வடபுலத்தைவிட, தென்புலத்தில் கேரளத்தில் மிக அதிக வலிமையோடும், செயல்பூர்வமாகவும் நிறுவி நிலைநாட்ட முடிந்தது.''
கேரளத்தின் சமூக உச்சியில் பார்ப்பனர்களும், பார்ப்பனர்களுக்கு அடுத்த படிநிலையில் சத்ரியர்களும், சத்ரியர்களுக்கு அடுத்த படிநிலையில் சூத்திரர்களான நாயர்களும் வெள்ளாளர்களும் மூவர்ண ஆதிக்கச் சாதிகளாக, ‘சவர்ணர்'களாக சமூக அமைப்பை அடக்கி ஆண்டனர். இவர்களுக்கு அடங்கியவர்களாக, தீண்டத்தகாதவர்களாக, தாழ்த்தப்பட்ட சாதிகளின் தொகுப்பின் கீழ் அடுக்கில் ‘அவர்ணர்'களாக சாம்பவர்களான பறையர்களும், மள்ளர்களான புலையர்களும் ஏனைய இம்மண்ணின் மக்களாக இருந்தனர். அவர்ணர்களின் மேலடுக்கில் பாண்டிய நாட்டிலிருந்தும், ஈழத்திலிருந்தும் குடியமர்ந்த சாணார்களாக நாடார்களும், தீயர்களாக ஈழவர்களும் இருந்தனர். அவர்ணர்களில் பறையர்களும் புலையர்களும் அடிமைச் சாதிகள். சாணார்களும் தீயர்களும் ஊழியச் சாதிகள். கேரளத்தில் இந்த அவர்ணர்களின் எழுச்சியே சமூகப் புரட்சியாகும்.
கேரளம் இந்து ராச்சியங்களாகவே இருந்தன. இந்து மநுதர்மமே, இன்னும் கூடுதலான விதிகளுக்கு ஆதிசங்கரனின் சூழ்ச்சியால் உள்ளாக்கப்பட்டு சமூக பொருளாதார அரசியல் வடிவங்களின் வழிகாட்டும் விதிகளாகயிருந்தது. பெண் ஆண் சம உரிமையும், சாதிக் கலப்பும், தீண்டாமைக்குட்பட்ட உழைக்கும் வெகுமக்களின் பொது இடப் புழக்கமும் இந்து முடியரசுகளுக்கு வெறுப்பையே தோற்றுவித்தன. மேலும், உயர்த்தப்பட்ட சாதி ஆண் மய்யவாத கலாச்சாரத்தின் உச்சகட்டமாக தாழ்த்தப்பட்ட சாதிப்பெண் நிலை கீழாக்கம் இருந்தது.
கேரளத்தின் அடிப்படை மக்களிடையே அழுகிக் கிடந்த சமூக வாழ்வை தூய்மைப்படுத்தியதில் ஈழவர்களின் வழிகாட்டி நாராயண குருவுக்கு முழு பங்கு உண்டு. கேரள மறுமலர்ச்சியின் பெருமைகள் யாவும் அவர்ணர்களான தாழ்த்தப்பட்ட - தீண்டத்தகாத சாதிகளையே சாரும். கேரளத்தைப் பீடித்திருக்கும் சமூக நோய்களுக்கான மருத்துவம் அவர்ணர் X சவர்ணர் என்ற முரணின் தீர்வில் அடங்கியிருந்த நிலையில் கொடுமை, ஒடுக்குமுறை, அநீதி, பேராசை ஆகியவற்றிற்கு எதிரான எழுச்சியை அறவழியில் கட்டமைத்தவர் நாராயண குரு. மறுக்கப்பட்ட மனிதத் தன்மைக்குள் மீண்டும் நுழைந்த நாராயண குரு அவர்களுக்கு, மனிதத் தன்மையை மீளுறுதிப் பெற தோழமையானவரே குமாரன் ஆசான்.
நாராயண குருவும் குமாரன் ஆசானும் இழிவுக்கும் ஏழ்மைக்கும் எதிராக, உயிர்ப்பும் வியப்பும் மிக்க எதிர்ப்பண்பாட்டுக் கூறுகளை கேரளத்தில் உண்டு பண்ணிக் கொண்டே இருந்தார்கள். ஓர் ஆழ்ந்த சோகத்திற்குள் புதைந்து நசுங்கிக் கிடந்த தீயர்களாக ஈழவர்கள் மத்தியிலேயே அபூர்வமாக அவர்கள் ஒருங்கிணைந்து, சமநீதிக்கான உலகத்தை ‘சிறீ நாராயண தர்ம பரிபாலன யோகம்' மூலம் உருவாக்க முற்பட்டபோது தான் - ஊழியச் சாதியினர் மட்டுமல்ல, அடிமைச் சாதியினரும் மடிந்து கிடந்த தமது கால்களை நிமிர்த்தி எழுந்து நிற்கத் தொடங்கினார்கள். புறக்கணிக்கப்பட்ட நடைபாதைகளின் வெடிப்புகளில் பூக்கும் பூக்களைப் போல, சாதி ஆதிக்கத்திற்கு எதிராக வெடித்துக் கிளம்பினார்கள். மிகவும் இழிவானவர்களாக பாவிக்கப்பட்ட அவர்கள் எத்தனையோ நூற்றாண்டுகளின் இடைவெளியில், நாராயண குருவாலும், குமாரன் ஆசானாலும் மீண்டும் மனித இனத்திற்குள் நுழைந்தார்கள். பார்ப்பனியத்தால் இறுகிப்போன வாழ்க்கை முறையை உடைத்தெறிந்தார்கள்.
குமாரன் பிறந்த ஊர் திருவனந்தபுரத்திலிருந்து 30 மைல் தொலைவில் அமைந்திருந்த ‘காயிக்கர' என்னும் சிற்றூர். தாய் கொச்சு பெண்ணு என்றழைக்கப்பட்ட காளியம்மா; தந்தையார் நாராயணன், ஒரு சிறு வணிகர். கயிறு, கொப்பரை முதலிய எளிய பொருட்களை விற்பவராக இருந்தார். காளியம்மா நாராயணனின் இரண்டாவது மக்கட் செல்வமாய், இன்றைக்கு 134 ஆண்டுகளுக்கு முன்பு, 1873 இல் குமாரன் பிறந்தார். குமாரன், நாராயண குருவுக்கு 18 ஆண்டுகள் இளையவர் ஆவார்.
சொந்த ஊரில் குடிப்பள்ளிக் கூடத்தில் கல்வி பயிலத் தொடங்கிய குமாரன், துண்டத்தில் ஆசான் மற்றும் கொச்சுராமன் ஆகியோரிடம் மருத்துவம் மற்றும் சமஸ்கிருதம் பயின்றார். ஆயுர்வேத வைத்தியரானார். 1887 இல் தம் சொந்த ஊரிலேயே 14 ஆவது வயதில் ஆசிரியர் பணியை ஏற்றார். வயதிற்கு மீறிய அறிவும், ஆற்றலும், ஆளுமையும் பெற்ற தால்தான் ஆசிரியர் பணிக்கு வரவேற்கப்பட்டார். இருப்பினும், ஆசிரியர் பணிபுரிய 18 வயது ஆக வேண்டும் என்ற விதி இருந்ததால், ஒரு மொத்த வணிகரிடம் எழுத்தராகப் பணியில் அமர்ந்தார்.
தன்னுடைய 16 ஆவது வயதில் ‘விஞ்ஞான சந்தாயினி' எனும் சமஸ்கிருதப் பள்ளியில் சேர்ந்தார். படிப்பிலிருந்த ஆர்வம் கருதியும், அவருடைய ஏழ்மையைக் கண்டும், கட்டணமின்றியே குமாரனுக்கு கல்வி புகட்ட ஆசிரியர் முன் வந்தார். குமாரன் பாடல்கள் இயற்றுவதில் ஈடுபட்டு விடலைப் பருவத்திலேயே நல்ல வெற்றியும் கண்டார். சிறந்த கவிஞரென பெயரெடுத்தார். குமாரனின் 18 ஆவது வயதில் அவருக்கு இன்ப அதிர்ச்சியைத் தரும் நிகழ்வு நடந்தேறியது. அது, நாராயண குரு குமாரனைத்தேடி வந்து சந்தித்த பெருமையைத் தந்தது.
அறிவில் நாட்டம் செலுத்திய குமாரனை வலிய வந்து சந்தித்ததில், நாராயண குருவுக்கு குமாரனின் ஆற்றலில் நம்பிக்கை மேலும் கூடியது. நாராயண குருவினுடைய தன்னலம் துறந்த சமூக நலப் போக்கில் குமாரனுக்கு ஈடுபாடு பிறந்தது. சிறுமைப் பிழைப்பைப் போற்றாது, சமூக வாழ்வான பெருமை வாழ்வைப் போற்றிய இருவரும் தோழர்கள் ஆயினர். இனி நமக்கு சமூக வாழ்க்கையே என்று முடிவெடுத்த குமாரன், குரு தங்கியிருந்த அருவிப் புரம் சென்று உறையலானார். ஆசிரியராகத் திகழ்ந்த காலத்திலேயே ஆசான் என்று பெயர் பெற்ற குமாரன் ஆசான், நாராயண குருவை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு முதல் மாணவருமானார். குருவோடு பல ஊர்கள் சென்று, மக்களின் முன்னேற்றத்திற்கு இயைந்த ஆன்மிகக் கருத்துகளை குமாரன் ஆசான் பரப்பினார்.
ஈழவ மக்களின் சமூக முன்னோடியும், ஈழவ மக்களுக்கான அமைப்பு, தலைமை குறித்து தீவிரமாகச் சிந்தித்து வந்தவருமான டாக்டர் பி. பல்பு பெங்களூரில் இருந்தார். அவரை 1895 இல் நாராயண குருவும், குமாரன் ஆசானும் சந்திக்கச் சென்றனர். ஈழவர் முன்னேற்றத்திற்கான வழிவகைகள் இம்மூவராலும் ஆராயப்பட்டன. அறிவின் வலிமை உணரப்பட்டது. சமூகத்திற்கென உழைக்க இளைஞர் ஒருவரை தேர்ந்தெடுத்து ஆளாக்குவதென டாக்டர் பி. பல்பும், நாராயண குருவும் உடனடிச் செயலில் இறங்கினார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த இளைஞர் குமாரன் ஆசான். குமாரன் ஆசானை மேலும் படிக்க வைப்பதென எடுக்கப்பட்ட முடிவிற்கு டாக்டர் பி. பல்பு முன்னுதாரணமாக உதவிட முன்வந்தார். டாக்டரின் குடும்பத்தோடு தங்கிய குமாரன் ஆசான், பெங்களூர் சிறீ சாம் ராஜேந்திர சமஸ்கிருதக் கல்லூரியில் சேர்ந்தார் (1895). இச்சமஸ்கிருதக் கல்லூரி பார்ப்பனர் மற்றும் ஆதிக்கச் சாதியினரின் தனிச் சொத்தாகவே திகழ்ந்தாலும், மைசூர் திவானாகயிருந்த சர்.கே. சேஷாத்திரி (அய்யர்), டாக்டர் பி. பல்புவிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்ததால், ஒரு விதி விலக்காக குமாரன் ஆசானுக்கு கல்லூரியில் இடம் கிடைத்தது.
குமாரன் ஆசான் அளவை இயலை (Logic - தர்க்க சாஸ்திரம்) விருப்பப்பாடமாகக் கொண்டு ‘நியாய வித்வான்' தேர்விற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். இறுதித் தேர்வில் ஆசான் முதலிடத்தை நிச்சயமாகப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலைமையில், கல்லூரியில் சாதிவெறி கொழுந்து விட்டெரிந்தது. கீழ் சாதி ஒருவன் எப்படி கல்வி பயிலலாம் என்று அநாகரீக கிளர்ச்சி தலை தூக்கியது. முடிவில் குமாரன் ஆசானைக் கல்லூரியிலிருந்து நீக்கும் நிலைக்கு சாதிவெறியர்களால் திவான் கட்டாயப்படுத்தப்பட்டார். ஆசான் கல்லூரியிலிருந்து விரட்டப்பட்டார். இறுதித் தேர்வை அவரால் எழுத முடியவில்லை. குமாரன் ஆசானை கல்லூரியிலிருந்து நீக்கியது டாக்டர் பி. பல்புவிற்கு சாதி ஆதிக்கத்தை வெகு மூர்க்கமாகவே துலாம்பரப்படுத்தியது. ஈழவச் சமூகத்தில் பல திறப்புகளை வெளிச்சப்படுத்த முடிவான டாக்டர் பல்பு, தனது நம்பிக்கையை இழக்கவே இல்லை. அவர் அய்ரோப்பாவிற்கு மருத்துவ மேல்படிப்புக்குச் செல்ல வேண்டிய நிலைமையிலும், ஆசானை ஆளாக்கும் பொறுப்பை சென்னையிலுள்ள தன் நண்பர் நஞ்சுண்டராவிடம் ஒப்படைத்தார். குமாரன் ஆசான், டாக்டர் நஞ்சுண்டராவின் வீட்டிலேயே தங்கி, ஒரு பண்டிதரிடம் பாடம் பயின்று வந்தார்.
குமாரன் ஆசான் மேற்கொண்ட படிப்பு முறையில் டாக்டர் பல்புவிற்கு நிறைவு ஏற்படாததால், குமாரன் ஆசானை கல்கத்தாவிற்கு அனுப்பி, அங்கு படிக்க ஏற்பாடு செய்தார். ஆசான் கல்கத்தாவிலிருந்த சமஸ்கிருதக் கல்லூரியில் "தர்க்க தீர்த்த' பட்டம் பெற பயின்றார். ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் படித்த ஆசானை, சக மாணவர்கள் புத்தகப் புழுவென பகடி செய்தனர். ஆசான், கல்லூரியில் தன் ஆசிரியரான நாத தர்க்க வாகீசன் என்பவரால் மிகவும் மெச்சப்பட்டார். கல்லூரியின் முக்கிய விழாக்களில் ஆசான் கவிதைகளை அரங்கேற்றினார். கல்கத்தாவில் இருந்து கொண்டே ‘ஒரு வங்க தேசிகன்' என்ற புனைப்பெயரில் மலையாள இதழ்களில் எழுதி வந்தார். 1900 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் கொள்ளை நோய் பரவியதால், குமாரன் ஆசான் இறுதித் தேர்வு எழுதுவதற்கு முன் காலவரையறையின்றி கல்லூரி மூடப்பட்டது. மேல் படிப்பு என்பது, ஆசானின் வாழ்வில் நிச்சயமின்மையின் குறியீடாகிப் போனது. கேரளத்தை விட்டு வெளி மாநிலங்களில் கல்வி கற்கச் சென்ற குமாரன் ஆசான், பட்டமேதுமின்றி திரும்ப வேண்டியதாயிற்று.
இருப்பினும் குமாரன் ஆசானுக்கு பெங்களூர், சென்னை, கல்கத்தா ஆகிய பெரு நகரங்களில் வாழ்ந்த காரணத்தால், பரந்த புதிய உலகைக் காண வாய்ப்பு கிட்டியது. அறிவு விரிந்து விசாலமடைந்தது. கன்னட, தமிழ், வங்காள இலக்கிய உலகை எட்டிப்பிடிக்க அவருக்கு வாய்ப்பு ஏற்பட்டது. வடமொழி அறிவும் ஆங்கில அறிவும் அதிக அளவில் பெறுவதற்கு இந்த (1895 - 1900) அய்ந்தாண்டுக் காலம் துணை செய்தது. வங்க இலக்கியத்தின் மீது ஆங்கிலத்தின் பாதிப்பை உணர்ந்த ஆசான், ஆங்கில மூலங்களை ஆவலுடன் பயின்று தேர்ச்சி பெற்றார். மேல்படிப்பு பெறச் சென்ற ஆசான், பார்வை விரிந்தவராய் கேரளத்திற்குத் திரும்பினார். கேரளத்தின் குறுகிய எல்லைக்குள்ளேயே புழங்கிய அவருக்கு, கல்விக்கான வலசைப்போதல் குன்றேறிய எட்டப் பார்வையை அளித்தது. ஒருவகையில் கிணற்றுத் தவளையாகப் பிறந்து வளர்ந்த அவர், கடற்பறவை யாய் தாயகம் திரும்பி விரிந்த வானம் கண்டு அதைச் சுமந்து வந்தார்.
- தொடரும்