"அவர் (தீண்டத்தகாதவர்) தீண்டத்தகாதவர்களைச் சாட்சியாகக் கொண்டு வந்தால், மாஜிஸ்ட்ரேட் அவர்களின் சாட்சியத்தை ஏற்க மாட்டார். அவர்கள் சொந்த அக்கறை யுள்ளவர்கள் என்றும், சுயேச்சையான சாட்சிகள் அல்ல என்றும் அவர் எளிதாகக் கூறிவிட முடியும்; அல்லது அவர்கள் சுயேச்சையான சாட்சிகளாயிருந்தாலும், தீண்டத்தகாதவர்களின் சாட்சியம் தமக்கு உண்மையாகத் தோன்றவில்லை என்று கூறி, அவர் (மாஜிஸ்ட்ரேட்) குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்து விட முடியும். உயர் நீதிமன்றம் தமது தீர்ப்பை மாற்றிவிடாது என்று அவருக்கு நிச்சயமாகத் தெரியும். ஆதலால், அச்சமின்றி இவ்வாறு விடுவிக்க முடியும்.''

- ‘தீண்டத்தகாதவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பவை' பகுதியில் ‘நிர்வாகத்தின் எதிர்ப்பு நிலை' என்ற தலைப்பிலான கட்டுரையில் டாக்டர் அம்பேத்கர்
(தொகுதி- 9;159)

Thinniyam victims

இந்திய ஆட்சி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்துக்களின் மனநிலையையும், தலித் விரோதப் போக்கையும் (அப்போது நீதித் துறை என்பது தனியாக இல்லை. நிர்வாகத் துறையின் ஒரு பகுதியினரே நீதிபதிகளாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்) அம்பலப்படுத்தும் வகையில் 1930களில் புரட்சியாளர் அம்பேத்கர், மேற்படி குறிப்பிட்டுள்ளார். இன்றைக்குப் பல பத்தாண்டுகள் கடந்து விட்ட போதிலும், இந்நிலை கிஞ்சித்தும் மாறாமல் இருப்பதை நாள்தோறும் காண்கிறோம். அதன் சமீபத்திய ஒரு வெளிப்பாடே, "திண்ணியம்' வழக்கில் 10.9.2007 அன்று வழங்கப்பட்டுள்ள அநீதியான தீர்ப்பு.

1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ‘பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்' - ‘நோக்கங்களும் காரணங்களும்' பகுதியில், இவ்வகுப்பினர் பல்வேறு சொல்லொணா வன்கொடுமைகளுக்கு சாதிய இந்துக்களால் உட்படுத்தப்படுகின்றனர் என்று குறிப்பிடுகிறது. அதில் ஒரு வன்கொடுமையாகக் குறிப்பிடப்பட்டிருப்பது, மனித மலத்தைச் தின்னச் செய்யும்- மனித இனத்தையே தலைகுனியச் செய்யும் வன்கொடுமையாகும். இதைப் படிக்கும் ஒருவர், இது ஒரு வக்கிரமான அதீதக் கற்பனையே என்று கூறியிருக்க இயலும். ஆனால், திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திண்ணியம் கிராமத்தைச் சேர்ந்த தலித்துகளான ராமசாமி மற்றும் முருகேசன் ஆகியோரை 30.5.2002 அன்று ஆதிக்க சாதியினர் "பீ' தின்ன வைத்த செய்தி, மேலவளவு படுகொலை ஏற்படுத்திய அதிர்ச்சியைப் போன்றே -மனித மனமுள்ளோரை பெருத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தலித்துகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக சட்டத்தை செயல்பட வைக்கும் தமது பணியை -இவ்வழக்கிலும் வழக்குரைஞர் பொ. ரத்தினமும், அவர் நண்பர்களும் தொடங்கினர்.

வழக்குரைஞர்கள் ரத்தினம், திருச்சி அலெக்ஸ், செபஸ்டின் ஆகியோர் திண்ணியம் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, ஊக்கமளித்து அந்த வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு, தக்க புகார் மனுவுடன் திருச்சி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிட்டனர்; செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தினர். வழக்கைப் பதிக்கச் செய்தனர்.

"திண்ணியம் வழக்கு' என்று பொதுவாக அனைவராலும் குறிப்பிடப்பட்டபோதும், அவ்வழக்கு ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரு வன்கொடுமை நிகழ்வுகள் குறித்த இரு வழக்குகளே!

திண்ணியம் ஊராட்சி மன்றத் தலைவராக ராஜலட்சுமி, 1996- 2001 காலகட்டத்தில் பதவி வகித்தார். இருப்பினும் அவரது கணவர் சுப்பிரமணியன்தான் அவர் சார்பாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இவர்கள் கள்ளர் சாதியை சார்ந்தவர்கள். சுப்பிரமணியன் ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியர். அதே கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா, தனது தங்கை பானுமதிக்காக இலவசத் தொகுப்பு வீடு ஒன்றை ஒதுக்கிக் கொடுக்க சுப்பிரமணியன் கேட்டிருந்தபடி ரூ. 2000 தந்திருக்கிறார். ஆனால், ராஜலட்சுமியின் பதவிக்காலம் முடியும் வரையிலும்கூட பானுமதிக்கு வீடு ஒதுக்கப்படவில்லை.

பலமுறை நேரில் திரும்பக் கேட்டும் அப்பணத்தைக் கொடுக்காததால், 20.5.2002 அன்று காலை 10.30 மணியளவில் தன்னிடமிருந்த பறையை அடித்தபடி, தான் கொடுத்த பணத்தை சுப்பிரமணியனிடமிருந்து திரும்பப் பெற்றுத்தரும்படி ஊர் மக்களைக் கேட்டுக் கொண்டார். அப்படி தன் பணம் திரும்பத் தரப்படவில்லை என்றால், தான் அந்த ஊருக்கு வெட்டியானாகச் செயல்பட முடியாது என்ற தனது தீர்மானத்தையும் பறையடித்தபடியே தெரிவித்துள்ளார். ராமசாமியும் முருகேசனும் அவருடன் துணையாகச் சென்றிருக்கின்றனர்.

தனது அதிகாரம் தலித்துகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது கண்டு கொதித்துப்போன சுப்பிரமணியன், கருப்பையாவை ஊரிலுள்ள பேருந்து நிழற்குடை அருகே மாலை 5 மணியளவில் அழைத்து வரச் செய்திருக்கிறார். சுப்பிரமணியனுடன் அங்கு அவர் மனைவி ராஜலட்சுமி, அவர்களின் மகன் பாபு, ராஜலட்சுமியின் சகோதரி கீதாமணி, சுப்பிரமணியனின் மாமா சோமசுந்தரம், சுப்பிரமணியனின் மாமனார் தியாகராஜன், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் சேட்டு மற்றும் அண்ணாத்துரை ஆகிய அனைவரும் வெறியுடன் கருப்பையாவைத் தாக்கியுள்ளனர். காலால் எட்டி உதைத்ததுடன் செருப்பால் கருப்பையாவை அடித்துள்ளனர். கருப்பையாவின் சாதி குறித்து இழிவாகப் பேசி தாக்கியுள்ளனர். தன் மகனை மன்னித்து விடும்படி கெஞ்சிய கருப்பையாவின் வயதான தாயார் அம்மாசலத்தையும் செருப்புக் காலால் மிதித்துள்ளனர், அந்த சாதி வெறியர்கள். இந்த வன்கொடுமைக்கு மேற்குறிப்பிட்ட 8 நபர்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 149, 323, 417, 355 உடனிணைந்த பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம் 1989 இன் பிரிவுகள் 3(1) (X) மற்றும் 3(1)(X) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேற்கூறிய வன்கொடுமையின் தொடர்ச்சியாக, மறுநாள் (21.5.2002) கருப்பையா பறையடித்து தனது கோரிக்கையை முன்வைத்தபோது, அவருடன் துணை சென்ற ராமசாமியும் முருகேசனும் ‘வாத்தியார்' சுப்பிரமணியன் தங்களைத் தேடிக் கொண்டிருப்பதை அறிந்து பயந்து கொண்டு, தாங்களே சென்று சரணாகதியாகிவிட்டால் குறைந்த ‘தண்டனை'யுடன் தப்பித்துவிடலாமெனக் கருதி, மதியம் 2 மணியளவில் சுப்பிரமணியனின் வீட்டிற்குச் சென்றிருக்கின்றனர். தன் மனைவியிடமிருந்து நெருப்பில் காய்ச்சிய இரும்புக் கம்பியை வாங்கிய சுப்பிரமணியன், கருப்பையாவை தூண்டிவிட்டது யார் என்று கேட்டுக் கொண்டே, முருகேசனின் பின்னங்கழுத்தில் மூன்று முறை சூடு போட்டிருக்கிறார். அதேபோல், ராமசாமியின் இடது முழங்கால் மூட்டில் சூடு போடப்பட்டது. பின்னர், அவ்விருவரையும் சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிக் கொண்டே கொடியரசு, அசோகன் ஆகியோர் காலால் கொடூரமாக உதைத்துத் தாக்க, கீழே விழுந்த முருகேசனின் கீழ்வரிசைப் பல் ஒன்று உடைந்து விழுந்துள்ளது. தாக்குதலில் காயம்பட்ட இருவரும் தேம்பியழுதிருக்கிறார்கள்.

ஏற்கனவே பறையடித்தது போல, ஊருக்குள் பறையடித்துச் சென்று மன்னிப்பு கேட்கச் சொல்லி ஆணையிட்டிருக்கிறார் சுப்பிரமணியன். அதன்படி முருகேசனும் ராமசாமியும் அவ்வாறே செய்து முடித்து, மீண்டும் சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். அவர்களைப் பார்த்து அங்கே தயாராக எடுத்து வைக்கப்பட்டிருந்த "பீ'யைத் தின்னச் சொல்லி சுப்பிரமணியன் மிரட்டியிருக்கிறார். "பீ' தின்னால்தான் மீண்டும் அவர்கள் இதுபோன்ற செயலைச் செய்யத் துணிய மாட்டார்கள்; இதுதான் அவர்களுக்குச் சரியான பாடம் என்று ‘வாத்தியார்' சுப்பிரமணியன் கறுவியிருக்கிறார். அவர்களிருவரும் தயங்கவே, அவர்களுக்கு மீண்டும் சூடு போட, அவரது மனைவியை நெருப்பில் காய்ச்சிய இரும்புக் கம்பியைக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறார். சூழ்நிலைக் கைதிகளான இருவரும் பயந்து கொண்டு, ஒருவருக்கொருவர் வாயில் ‘பீ'யைத் திணித்துக் கொண்டுள்ளனர். "ஒவ்வொரு பறையனுக்கும் இப்போதுதான் புத்திவரும். எவனும் என்னை எதிர்த்து இனிமேல் எதுவும் செய்ய பயப்படுவான்'' என்று சுப்பிரமணியன் வீரம் பேசியிருக்கிறார். இந்த வன்கொடுமைக்குக் காரணமான மேற்குறிப்பிட்ட நால்வர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 324, 235, 355, 307 உடனிணைந்த பிரிவு 114 மற்றும் உடனிணைந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 3(1), 3(i) (x) மற்றும் 3(2) (v) ஆகியவற்றின் கீழ் தனியொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்குகளின் பிணைப்பு கருதி, விசாரணை ஒன்றாக மேற்கொள்ளப்பட்டது. வழக்குகளின் முக்கியத்துவம் கருதி பாதிக்கப்பட்டோர் தரப்பில் இவ்வழக்குகளை பாதிக்கப்பட்டோர் விரும்பிய வழக்குரைஞர் ஒருவரை சிறப்பு அரசு வழக்குரைஞராக நியமிக்க, வழக்குரைஞர் ரத்தினம் உள்ளிட்டோரின் கோரிக்கை மனு மற்றும் வலியுறுத்தலின்படி எஸ்.கே. மணி நியமிக்கப்பட்டார். அவருடைய சிறப்பான வழிநடத்துதலின்படி, பாதிக்கப்பட்டோரும் பெரும்பாலான சாட்சிகளும் அரசுத் தரப்பு வழக்கை முழுமையாக ஒத்துரைத்து (corroboration) சாட்சியமளித்தனர். இருந்தபோதிலும், இவ்விரண்டு வழக்குகளிலும் முதலாம் குற்றஞ்சாட்டப்பட்டவரான சுப்பிரமணியனுக்கு மட்டுமே முதல் வழக்கில் பிரிவு 323 இன் கீழ் (சாதாரண காயம் விளைவித்தல்) மட்டுமே 2000 ரூபாய் அபராதமும், இரண்டாம் வழக்கில் 3 மாத சிறைத்தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சுப்பிரமணியன் மீதான மற்ற பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்தும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும்-அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர். வன்கொடுமைகளுக்கே சிகரமான வன்கொடுமையான "பீ' தின்ன வைத்த குற்றத்திற்கு தண்டனை ஏதுமின்றி விடுவித்திருக்கிறது, விசாரணை நீதிமன்றம்!

குற்றவியல் வழக்குகளில் உள்ள அடிப்படை-அரசுத் தரப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்பதே. அப்படி அரசுத் தரப்பு தகுந்த சாட்சியம் மற்றும் ஆதாரத்தை நீதிமன்றத்தில் விசாரணையின்போது அளிக்கும்போதே அரசுத் தரப்பில் கூறியுள்ளவாறு குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற அளவில், குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு குறிப்பான வகையில் சாட்சியம் பெற வேண்டும்; அல்லது தங்கள் தரப்பில் சாட்சியம் அளிக்கலாம். அரசுத் தரப்பு தம் பொறுப்பை சரிவர நிறைவேற்றியபின், குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு பொறுப்பை சரிவர நிறைவேற்றவில்லை எனில், அரசுத் தரப்பு குற்றத்தை நிரூபித்ததாகவே சட்டப்படி கருதப்படும். திண்ணியம் வழக்குகளைப் பொருத்தவரையில், அரசுத் தரப்பு சாட்சிகள் அனை வரும் குற்றத்தின் உள்நோக்கம், குற்றம் நிகழ்ந்த இடம், குற்றச் செயல்களின் தன்மை, குற்றம் புரிந்தவர்கள் மற்றும் அவர்களின் குறிப்பான குற்றச் செயல்பாடு ஆகியவற்றைத் தெளிவாக நீதிமன்றத்தின் முன் சாட்சியமளித்துள்ளனர்.

ஆனால், விசாரணை நீதிமன்றம், இவ்வழக்குகளில் தன் முன் வழங்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை முற்றாகப் புறக்கணித்துவிட்டு, இந்த அநீதியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. பொதுவாக இதுபோன்ற நேர்மையற்ற தீர்ப்புகள், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட சாட்சியத்தில், வெளிப்பார்வைக்கு முரண்பாடாகத் தோன்றும் பொறுத்தமற்ற, முக்கியத்துவமற்ற செய்திகளை மலைபோல் பெரிதாக்கிக் காட்டி, சாட்சிய முரண்பாடுகளின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதாக அமையும். ஆனால், திண்ணியம் வழக்குகளில் இந்தக் குறைந்த அளவிலான முரண்பாட்டைக்கூட சுட்டிக் காட்ட முடியவில்லை நீதிமன்றத்தால்! எனவே, குறையுடையதாக உள்ள சாட்சியங்களைப் பற்றி ஒரு சிறிய அளவிலான விவாதம்கூட இல்லாமல் விடுதலை வழங்கப்பட்டிருப்பது, மோசடியான மற்றுமொரு வன்கொடுமை.

இந்த வழக்கும், இந்தத் தீர்ப்பும் ஏதோ வழக்கமான ஒன்று அல்ல என்பதை விசாரணை நீதிபதி உணர்ந்தே இருந்திருக்கிறார். இத்தீர்ப்பில், ‘இது போன்றதொரு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கைப் புலன் விசாரணை அதிகாரி சரிவர செய்யத் தவறியுள்ளார்' என்று குறிப்பிடுவதிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம்.

"இரு வழக்குகளிலும் சம்பவம் குறித்துப் பேச, பாதிக்கப்பட்ட நபர்களும் அவர்களின் மனைவிமார்களுமே உள்ளனர். சுதந்திரமான தனிப்பட்ட சாட்சிகளாக விசாரிக்கப்பட்ட இவர்களைத் தவிர, வேறு இருசாட்சிகளும் இவர்களின் சாதியைச் சார்ந்தவர்களே என்பதால், அவர்களை சுதந்திரமான சாட்சிகளாகக் கருத முடியாது'' என்று விசாரணை நீதிபதி குறிப்பிட்டு, சாதி வெறியர்களை விடுவித்தது நீதிபதியின் சாதிய மனப்பாங்கைத் தெளிவுபடுத்துகிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், விசாரணை நீதிபதி குற்றம்சாட்டப்பட்டவர்களின் சாதியின் மற்றொரு பிரிவைச் சார்ந்தவர்.

நீதிபதிகளெல்லாம் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள்; சாதியைப் பொருட்படுத்தாமல் நீதி வழங்குபவர்கள் என்பது கற்பனைச் சித்திரமே! இது போன்ற கற்பனையை இந்திய நீதித்துறையேகூட ஏற்றுக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இந்தியா முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் ‘முஸ்லிம் தீவிரவாதிகள்' என திட்டமிட்டு பத்திரிகைகளால் அடையாளப் படுத்தப்படுவோருக்கு எதிராக நடைபெறும் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதிகளில், எவரொருவரும் முஸ்லிமாக தப்பித் தவறிகூட இருப்பதில்லை. முஸ்லிம் நீதிபதியாக இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு விட வாய்ப்புண்டு என்று கருதப்படுவதாலேயே இது தற்செயலாகக்கூட நிகழ்வதில்லை. ஆனால், இந்து மதவாதிகளும், (போலி) சாமியார்களும் குற்றம் சாட்டப்படும்போது இந்து நீதிபதியே விசாரிக்கலாம். இது பற்றி யாரும் கேள்வி எழுப்பக் கூடாது. அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த இரு நிகழ்வுகளை இங்கே சுட்டுவது பொருத்தமாக இருக்கும்.

காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜெயேந்திரரின் பிணை மனு தன்னிடம் வந்தபோது, தன்னை அவரது பக்தர் என்று பிணை உத்தரவிலேயே ஒப்புக் கொண்ட ஓர் இந்து நீதிபதி இவ்வழக்கை விசாரித்தபோது, எவரும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான அப்துல் நாசர் மதானி வழக்கு விசாரணை 7 ஆண்டுகள் நடைபெற்றும் தனக்கெதிராக எந்த சாட்சியமும் நீதிமன்றத்தில் பதிவாகவில்லை என பிணை மனு தாக்கல் செய்யப்பட்டு, அப்போது பிணை மனுக்களை விசாரித்த நீதிபதி முஸ்லிம் என்பதால், இந்து வெறியர்கள் அந்த முஸ்லிம் நீதிபதி மதானியின் பிணை மனுவை விசாரிக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றத்திற்கே (குறிப்பாக அந்த நீதிபதிக்கே) எழுதியதால், அந்தப் பிணை மனு விசாரணை வேறொரு (இந்து) நீதிபதிக்கு மாற்றப்பட்டு, அவரால் தள்ளுபடியும் செய்யப்பட்டது.

திண்ணியம் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க, விசாரணை நீதிபதி ஏழு காரணங்களை முன் வைக்கிறார். ஆனால், தீர்ப்பிலேயே பதிவு செய்யப்பட்டுள்ள இவ்வழக்குகளின் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மிக மேலோட்டமாகப் பார்த்தாலே இவை பொருத்தமற்றவையாகவும் பொய்யுரையாகவும் உள்ளது நன்கு விளங்கும்.

முதல் காரணம், புகார் அளிப்பதில் தாமதம் என்பது. இவ்வழக்கில் வன்கொடுமை நடந்து 10 நாட்கள் வரை பாதிக்கப்பட்டவர்கள் உடல் ரீதியாகவும், கூடுதலாக மன ரீதியாகவும் துன்புற்றிருக்கிறார்கள். ஆனால், இதுபோன்ற வன்கொடுமையை உடனடியாக வெளியில் சொல்லவில்லை என்று விசாரணை நீதிபதி கூறுகிறார். "பீ' தின்ன வைத்ததைப் போய் எங்காவது ‘பெருமை'யுடன் சொல்லிக் கொள்ள முடியுமா? பொது அறிவுள்ள எவரும் இதைப் புரிந்து கொள்ள முடியும். புகார் அளிப்பதில் தாமதம் என்பது, எவ்விதத்திலும் இவ்வழக்கைப் பாதிக்கவில்லை. தாமதத்திற்கான உடல் ரீதியான, மன ரீதியான, சமூக ரீதியான காரணங்கள் சாட்சியத்தில் விளக்கப்பட்டுள்ள நிலையில், இது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எந்த விதத்திலும் சாதகமான அம்சம் அல்ல. ‘பீ' தின்ன வைத்த வன்கொடுமை, தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டது இதுவே முதல் முறை. இந்தப் பின்னணியில், புகார் அளிப்பதில் ஏற்பட்ட தாமதம் அதற்கான காரணத்தை விளக்கியுள்ள சூழ்நிலையில் ஏற்கக் கூடியதே.

இரண்டாவது காரணம், வன்கொடுமைக்கான உள்நோக்கம் நிரூபிக்கப்படவில்லை என்பது. பாதிக்கப்பட்டோர் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதன் உடனடி காரணம், அவர்கள் ஊர் தெருக்களில் பறையடித்துச் சென்று, இலவசத் தொகுப்பு வீடொன்றை கருப்பையாவின் சகோதரிக்கு 2000 ரூபாய் பெற்றுக் கொண்டும் ஒதுக்கீடு செய்யவில்லை என்பதே. ஆனால், இலவசத் தொகுப்பு வீடு கட்டப்பட்டதா, அதை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் யாருக்குண்டு, அப்படி குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பணம் (கையூட்டு) பெற்றுக் கொண்டு ஒதுக்கீடு செய்யாத போது, அதிகாரிகளுக்கும் காவல் துறைக்கும் ஏன் புகார் கொடுக்கவில்லை? என்றெல்லாம் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். பணத்தைத் திருப்பிக் கேட்க பறையடித்து அவமானப்படுத்தியதற்கு, ‘பீ' தின்ன வைக்கப்பட்ட தண்டனையை நியாயப்படுத்துவதாக தீர்ப்பு அமைந்துள்ளது. ‘குற்றம் நடந்ததை நிரூபித்தாலே போதும், உள்நோக்கத்தை எல்லா வழக்குகளிலும் நிரூபிக்க வேண்டியதில்லை' என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. அவற்றையெல்லாம் வசதியாக மறந்தும் மறைத்தும் விட்டது விசாரணை நீதிமன்றம்.

மூன்றாவது காரணம், அரசுத் தரப்பு வழக்கில் சுதந்திரமான சாட்சிகள் ஒத்துழைக்காதது என்பது. இதுகுறித்து முன்னரே விவரிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பின் வழக்கை, முழுமையாகவும் தெளிவாகவும் பாதிக்கப்பட்டோரும் மற்றவர்களும் சாட்சியுரைத்தும்கூட, எந்த அடிப்படையுமின்றி, விசாரணை நீதிபதி மிகவும் பொதுப்படையாக இவ்வாறு கூறியுள்ளதற்கு, சாதியம் தவிர வேறு எந்த அடிப்படையும் இல்லை.

நான்காவது காரணம், மருத்துவ சாட்சியம் வலுவற்றும், சம்பவத்தில் ஏற்பட்ட காயங்களைக் குறித்தும் போதுமானதாக இல்லை என்பது. சம்பவம் நிகழ்ந்து 10 நாட்கள் கழிந்த நிலையிலும் இருந்த காயத்தின் தன்மைகளை மருத்துவ சாட்சியம் உறுதிப்படுத்தியுள்ளது. சூடுபோட்ட தழும்புகள், உடைபட்ட பல், வலது முழங்கை காயம் என காயங்கள் பற்றி மருத்துவ சாட்சியம் பகர்ந்துள்ளது. குறிப்பாக, கருப்பையாவின் காயம் 10 நாட்களுக்கு முன் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் காயங்களின் தன்மை பற்றி குறிப்பிடும்போது, காயச் சன்றிதழில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு, சாட்சியங்களையும் ஆதாரங்களையும் முற்றாகப் புறக்கணித்து மோசடியாக அமைந்துள்ளது.

அய்ந்தாவது காரணம், புகார் தருவதில் வழக்குரைஞர்களின் பங்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் தங்கள் உரிமைகளை அறிந்து கொண்டு, வழக்குரைஞர்களால் தயாரிக்கப்பட்டதாலேயே புகாரை ஏற்க முடியாது என்றால், வழக்குரைஞர்களால் தயாரிக்கப்படுகின்ற அனைத்து மனுக்களையும் நீதிமன்றங்கள் ஏற்க மறுக்க முடியுமா? அப்படி மறுப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? மேலும், பாதிக்கப்பட்டோர் கூறியவற்றையே வழக்குரைஞர்கள் புகாராகத் தயாரித்தனர் என்றும்; அவர்கள் கூறாதவை ஏதும் புகாரில் இடம் பெற்றிருந்தன என்பது போல் எந்தச் சாட்சியமும் இல்லாதபோது, இக்காரணமும் சட்டப் படி ஏற்கத்தக்கதல்ல. ‘புகார் தயாரிக்க பாதிக்கப்பட்டோருக்கு உதவிய வழக்குரைஞர்களுக்கு தனிப்பட்ட வகையிலோ, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்தக் கேடு எண்ணமும் இல்லை என்பதை நீதிமன்றம் தெளிவாக உணர்ந்திருப்பதாக' தீர்ப்பில் ஒருபுறம் குறிப்பிட்டுக் கொண்டே, மறுபுறம் அதே காரணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாகவும் விசாரணை நீதிமன்றம் திரித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

ஆறாவது காரணமாக, அரசுத் தரப்பு வழக்கு விவரணைப்படி வன்கொடுமை நிகழ்ந்திருக்குமா என்பதாகும். அரசுத் தரப்பு வழக்கை மறுப்பதற்கு விசாரணை நீதிமன்றம் திண்ணியம் கிராமத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், தலித்துகள் சமமாக நடத்தப்பட்டனர் என்றும், அவ்வாறிருக்க பாதிக்கப்பட்டோர் பயத்தின் காரணமாக உடனடியாகப் புகார் கொடுக்கவில்லை என்பதையும் நீதிமன்றம் ஏற்க மறுத்தது. வன்கொடுமைக்குக் காரணமே பாதிக்கப்பட்டோர்தான் என்றும், முதல் குற்றம் சாட்டப்பட்டவரான சுப்பிரமணியனுக்கு எதிராகப் பறை அடித்து அவர் எரிச்சலடையும்படி நடந்து கொண்டதால்தான், அவர்களைக் கண்டிக்கும் விதமாகவே சுப்பிரமணியன் இவ்வாறு நடந்து கொள்ள நேரிட்டது என்று பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோடும் சாதி ஆதிக்க மனப்பான்மை யுடன் தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது.

கடைசியான ஏழாவது காரணம், புலன் விசாரணை குறைபாடுகள் என்று மிகப் பொதுப் படையாக உள்ளது. 1989 ஆம் ஆண்டின் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட இவ்வழக்கிற்குச் சற்றும் தொடர்பற்ற 1955 ஆம் ஆண்டின் குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் விதி 7(1)(d)இல் கூறப்பட்டுள்ளவை, புலன் விசாரணை அதிகாரியால் பின்பற்றப்படவில்லை என்று விசாரணை நீதிபதி எழுதியிருப்பது. இது, 1989 ஆம் ஆண்டின் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதிக்கு, வன்கொடுமை வழக்குகளின்பால் உள்ள ‘அக்கறை' எவ்விதம் அமையும் என்பதைத் தெளிவாக்குகிறது.

1989 ஆம் ஆண்டின் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட விதிகளின் பிரிவு 7(1), "வன்கொடுமைக் குற்றத்தை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரி-அவரது பட்டறிவு, வழக்கின் விளைவுகளைப் புரிந்து கொள்ளும் திறன், நேர்மை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு நியமிக்கப்பட வேண்டும்'' என்று கூறுகிறது. இவ்விதி பெரும்பாலும் காவல் துறையால் பின்பற்றப்படுவதில்லை. வன்கொடுமை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளே பல நிகழ்வுகளில் வன்கொடுமை இழைத்த குற்றவாளிகளின் ஆதிக்க சாதியைச் சார்ந்தவர்களாகவே அமைவது தற்செயல் அல்ல. இவ்விதி காவல் துறையாலும், இவ்விதியின் உள்ளடக்கம் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றங்களில் அமர்த்தப்படும் விசாரணை நீதிபதிகளாலும் நீதித்துறையாலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற தீர்ப்புகளைத் தவிர்க்க முடியும்.

அரசுத் தரப்பு வழக்கில் இவ்வளவு குறைபாடுகளைக் கண்டுள்ள விசாரணை நீதிமன்றம், மொத்த வழக்கையே சந்தேகித்த பிறகு முதல் குற்றம் சாட்டப்பட்டவரான சுப்பிரமணியனுக்கு மட்டும் மிகக் குறைந்த அளவிலான தண்டனையை வழங்கியிருப்பது, உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்யும்போது முழுமையாக விடுதலை பெறத்தான் என்றே தோன்றுகிறது. தீர்ப்பின் இறுதிப் பகுதியில், "சாட்சிகளின் கூற்றுப்படி இதுபோன்ற குற்றம் நிகழ்ந்திருப்பின், அது மிகத் தெளிவான கண்டனத்திற்குரியதாகும். ஏனெனில், இது போன்ற செயல்கள் மனிதத்தன்மையற்றதும், விலங்காண்டித்தனமானதும் தீவிர மற்றும் மிகக் கொடூரமான தண்டனைக் குரியவையுமாகும்'' என்று விசாரணை நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. இது, ‘பாதிக்கப்பட்டவர்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும்' என்ற சொற்றொடரையே குறையுடையதாக்குகிறது.

இவ்வழக்குகளைப் பொருத்தவரையில், இந்த வன்கொடுமை அரங்கேறிய பிறகு ஊடகங்களில் செய்தி தெரிந்து மனித உரிமை ஆர்வலர்களும், தலித் உரிமைப் போராளிகளும்- இயக்கங்களும் பெரிய அளவிலான கண்டனத்தைப் பதிவு செய்தனர். பின்னர், வழக்குரைஞர்களும் ஒரு சில ஆர்வலர்களும் தொடர் நடவடிக்கைகளில் பங்கேற்று, இந்த அளவில் வழக்கைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். இருப்பினும், தலித் இயக்கங்களின் பங்கேற்பு தொடர் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு அமையாததாலேயே-இதுபோன்ற ஒரு தீர்ப்பை தார்மீக அச்சமின்றி வழங்கியுள்ளது விசாரணை நீதிமன்றம். இத்தீர்ப்பு அண்மையில் இதே போன்றே "பீ' தின்னவைக்கப்பட்ட மதுரை சமயநல்லூர் சுரேஷ்குமார் வன்கொடுமை வழக்கிலும் தொடர்ந்துவிடாமலிருக்க உறுதி செய்ய வேண்டியது, ஒவ்வொரு சமூகப் போராளியின் கடமையாகும்.

இரட்டைக் குவளை உடைப்புப் போராட்டம் -நவம்பர் 26

தமிழ் நாடு முழுவதும் தோழர்களைத் திரட்டி, முழு பலத்துடன் நவம்பர் 26 அன்று, ஒட்டன்சத்திரம் பகுதி ‘பண்டு' கிராமங்களில் இரட்டைக் குவளை உடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்துள்ளார். 2.10.07 அன்று ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற இரட்டைக்குவளை ஒழிப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை நடைமுறையிலுள்ள கடைகளின் பெயர்ப் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

இதுநாள் வரை உறங்கிக் கிடந்த தமிழக அரசின் தீண்டாமை ஒழிப்பு காவல் துறை, எந்தப் பணிக்காக சம்பளம் வாங்குகிறதோ, அந்தப் பணியை தற்பொழுது செய்யத் தொடங்கியிருக்கிறது. காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, காவல் துறையின் அனைத்துப் பிரிவுகளுக்கும் – பெரியார் தி.க. வெளியிட்ட 130க்கும் மேற்பட்ட பட்டியலை அளித்துள்ளது. இப்பட்டியலை வைத்துக்கொண்டு அதிலுள்ள தேநீர்க்கடைகள் அனைத்திற்கும் ஆய்வுக்குழு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளது. இறுதியில், ‘எங்குமே இரட்டைக் குவளைகள் இல்லை' என்றும், ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் அறிவித்து 27.10.07 "தினகரன்' நாளிதழில் செய்தி வெளியானது.

உடனே ஒட்டன்சத்திரம் பெரியார் நம்பி, திண்டுக்கல் தாமரைக்கண்ணன், வலையப்பட்டி நாகராஜ் ஆகியோர் ஆய்வுக்குழுவைச் சந்தித்தனர். இன்னும் இரட்டைக்குவளை நடைமுறையிலுள்ள கடைகளின் புதிய, விரிவான பட்டியலை அளித்து- ஆய்வுக் குழு அறிவித்த செய்தி தவறானது என்றும், தேநீர்கடைகளில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதை நேரில் நிரூபிக்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதற்குப் பிறகு வருவாய் ஆய்வாளர், "வரும் நவம்பர் 26க்குள் உறுதியாக இப்பகுதியில் இரட்டைக்குவளை முறை ஒழிக்கப்படும். நீங்கள் போராட வேண்டிய அவசியம் கண்டிப்பாக வராது'' என்று உறுதியளித்திருக்கிறார். ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. "நவம்பர் 25 வரை அரசின் கடமை. 26 முதல் அது பெரியார் திராவிடர் கழகத்தின் கடமை. எனவே நவம்பர் 26 அன்று, ஒட்டன்சத்திரம் பண்டு கிராமங்களை நோக்கித் திரளுங்கள்! திண்டுக்கல் கிளைச்சிறை காத்திருக்கிறது'' என்று பெரியார் தி.க. தலைவர் த.செ. மணி அறிவித்திருக்கிறார்.
Pin It