Tribal girl
கலையும், திறமையும் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால், அதை வெளிப்படுத்தும் விதத்திலும், காட்சிப்படுத்தும் வகையிலும் கலைஞனின் உணர்வு மட்டுமின்றி, புறச்சூழல்கள் காரணங்கள் யாரை முன்நிறுத்துகிறதோ, அவர்களே வெளிச்சத்திற்கு வருகிறார்கள். கணினி உள்ளிட்ட நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை, முதலில் நேரடியாக ஆதிக்க சாதியினர் அனுபவித்து விட்டு பல ஆண்டுகள் கழித்தே பிறர் அனுபவிக்கும்படியான சமூக, அரசியல் நடைமுறைகள், இன்னும் புழக்கத்தில் உள்ளன.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் வெற்றி மலையில் உள்ள ‘ஏகலைவா முன்மாதிரிப் பள்ளி' பழங்குடி மாணவர்கள், ‘டிஜிட்டல்' புகைப்படக் கலையைக் கற்றுக் கொள்ளும் வகையில் பழங்குடியினர் நலத்துறையும், சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியும் இணைந்து பயிற்சி ஒன்றை ஏற்பாடு செய்தது. பத்து நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் பதிப்புக்கலை, களிமண் சிற்பம், சாயம் போடுதல், புகைப்படக் கலை ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பழங்குடி நலத்துறை ஆணையர் கண்ணகி பாக்கியநாதன் மற்றும் சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி முதல்வர் சந்ரு ஆகியோர் இப்பட்டறையை முன்னின்று நிடத்தினர்.

புகைப்படக் கலைப்பயிற்சியை, ‘காஞ்சனை' திரைப்பட இயக்கத்தைச் சேர்ந்த ‘காஞ்சனை' மணி, ஆர்.ஆர். சீனிவாசன், குட்டி ரேவதி மற்றும் ஓவியக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் அளித்தனர். மாணவர்கள் மிக நுட்பமாகத் தங்களுடைய பயிற்சியினைப் பெற்றுக் கொண்டனர். ஆங்கில அறிவு, வழக்கமான கல்வி முறை, நகரங்களின் பாதிப்பு ஆகியன இல்லாத பழங்குடி மாணவர்கள், தங்களுடைய தனித்துவமான பார்வை மூலம் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர். இதற்கு அவர்களுடைய படைப்புகளே சான்று பகர்கின்றன. வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் நுண்கலைப் பயிற்சிகள், அவர்களுடைய தனித்த வாழ்வியலை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை என்பது கண்கூடு.
Old manGirl
Girls
Pin It