நம் காலத்தின் மிகக் குறிப்பான, பெரும் செல்வாக்கு செலுத்தக்கூடிய அரசியல் சிந்தனையாளர் நோம் சோம்ஸ்கி. அவருடைய முக்கிய நூல் ‘மேலாதிக்கம் அல்லது எஞ்சிப் பிழைத்தல்'. அய்க்கிய நாடுகள் அவையின் கூட்டத்தில் 20.9.06 அன்று இந்தப் புத்தகத்தின் ஸ்பானிய மொழிபெயர்ப்புப் பிரதியை உயர்த்திப் பிடித்து, உலக நாடுகளின் தலைவர்களை எல்லாம் வாசிக்கும்படி பரிந்துரைத்தார், வெனிசுவேலா அதிபர் ஹூயுகோ சாவேஸ் (‘தலித் முரசு' அக்டோபர், 2006 பார்க்கவும்). நோம் சோம்ஸ்கி, மாசசூட்ஸ் கல்லூரியின் மொழியியல் துறையில் பணியாற்றியவர். அமெரிக்க ரவுடி அரசு முதல் ஏராளமான அரசியல் மற்றும் மொழியியல் நூல்களை எழுதியிருக்கிறார். அவர் தற்பொழுது பல பல்கலைக்கழகங்களில் உரையாற்றி வருகிறார். வியட்நாம் போர் நடந்த காலம் தொடங்கி, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் பல பாதிப்புகளையும் மாற்றங்களையும் உருவாக்கி இருக்கிறது, சோம்ஸ்கி உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும்!

Noam Chomsky
ரஷ்யா, கியூபா, ஈராக், ஆப்கானிஸ்தான், கொசோவா, இஸ்ரேல், லிபியா, ஈரான், வடகொரியா என உலகின் நிலப்பரப்பெங்கும் அமெரிக்கா செய்து வந்த, செய்து கொண்டிருக்கிற அட்டூழியங்களைப் படிப்படியாக கொள்கைகளின் உருவாக்க நிலைகளிலிருந்து நடைமுறைப்படுத்தும் நிலைவரை, நம்முன் பெரும் நுட்பமான சித்திரமாக விவரிக்கிறார் சோம்ஸ்கி. அமெரிக்க கொள்கை உருவாக்கங்கள் எத்தகைய பலவீனமான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தொடங்குகிறது; எத்தனை தடுமாற்றங்களை, குழப்பங்களை, தெளிவின்மைகளைக் கடந்து அது உருப்பெறுகிறது; அமெரிக்கா எந்தளவுக்கு சுயநலம் மிக்க நாடு, அதன் கொள்கைகளின் மறைவில் இருக்கும் சதித் திட்டங்கள் எவை என ஏறக்குறைய கடந்த 50 ஆண்டு காலத்தை அரசியல் நுண்ணறிவுடன் கரம் பிடித்து அழைத்துச் செல்கிறார் நோம் சோம்ஸ்கி.

நம் குருதியை உறைய வைக்கும் நிகழ்வுகளும், திருப்பங்களும் புத்தகமெங்கும் விரவிக் கிடக்கின்றன. ரஷ்ய அமெரிக்க பனிப்போர், 1962 இல் தவிர்க்கப்பட்ட அணு ஆயுதப் போர், இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சனை, லிபியா - சிரியா தாக்குதல்கள் என பிரமிக்க வைக்கும் தகவல் தொகுப்பாக இந்நூல் உள்ளது. அமெரிக்க அரசை மட்டும் விமர்சிக்காமல், பல உலக நாடுகளின் கொள்கைகளும் எப்படி நெளிவு சுழிவுடன் மாற்றம் பெறுகின்றன என எடுத்துரைக்கிறார்.

தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டமைப்பை அமெரிக்கா ஏற்படுத்தியபோது, சொந்த நலன்களுக்காகப் பல நாடுகள் அதில் விருப்பத்துடன் இணைந்தன. ரஷ்யா அதில் இணையும்போது, அவர்கள் செசன்யாவில் நிகழ்த்தும் வன்கொடுமைகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்கிவிடலாம் என நினைத்ததும், சீனாவுடன் அதன் வட்டார செல்வாக்கை நிலைநிறுத்த தன் ஆயுத பலத்தைப் பயன்படுத்தும் திறவுகோலாகவும் இதைக் கருதியது. இஸ்ரேல் இன்னும் மூர்க்கமாக பாலஸ்தீனத்தை அழித்தொழிக்கலாம் என மகிழ்ந்தது. புத்தகம் நெடுகிலும் சதித் திட்டங்கள் மற்றும் சுயநல நோக்கங்கள் கொண்ட நாடுகளை அமெரிக்காவுடன் ஒரே வரிசையில் நிர்வாணமாக நிறுத்துகிறார் சோம்ஸ்கி. அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தங்கள் செய்ய மறுத்த நாடுகள் எவ்வாறு மிரட்டப்பட்டன; கியூபா மற்றும் லத்தின் அமெரிக்கா மீது கடந்த நூற்றாண்டு முழுவதும் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள், உலகத் தீவிரவாதக் குழுக்களுக்கு அமெரிக்கா செய்யும் பண, ஆயுத உதவிகள் மற்றும் உலகமயத்தின் மூலம் ஏராளமான நாடுகள் அடிமைப்படுத்தப்பட்ட விதத்தை விவரிக்கிறார்.

இந்த உலகின் தெற்கு காப்பாற்றப்பட வேண்டும் என்கிற அவரது கவலையை நம் கவலையாக உருமாற்றுகிறார் சோம்ஸ்கி. உலகம் முழுவதும் உலக மயத்துக்கு எதிராக மக்கள் தெருக்களில் திரண்டு நிற்பது நம்பிக்கையளிப்பதாகக் குறிப்பிடுகிறார். பரந்துபட்ட மக்கள் இயக்கங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இன்னும் பலமான அணி சேர்க்கை எதிரியை வீழ்த்த அவசியம் தேவை. இருப்பினும், ஏராளமான வாய்ப்புகள் இன்னும் இருக்கின்றன. அரசு வன்முறைகளுக்கு எதிராக மனித உரிமை குழுக்கள் வெளிப்படுத்தி வரும் எதிர்ப்பை புதிய புரட்சி எனக் குறிப்பிடுகிறார் சோம்ஸ்கி. உலக மக்களிடையே இரக்கமும் அன்பும் சகோதரத்துவமும் வளர்ந்து அது விவாதங்களாக உருப்பெற வேண்டும் எனக் குறிப்பிடும் அவர், பெர்ட்ரன்ட் ரசலின் வரிகளுடன் புத்தகத்தை முடிக்கிறார்: ‘‘நம் புவி, காலத்தின் வழியே தீங்கிழைக்காத பல பட்டாம்பூச்சிகளை மலரச் செய்தது. ஆனால், அது இப்போது நீரோக்களை, செங்கிஸ்கான் மற்றும் ஹிட்லரை உருவாக்கியுள்ளது. இது கொடுங்கனவாக இருக்க வேண்டும்; அல்லது இந்த பூமி உயிர்களை அரவணைக்கும் தன் தகுதியை இழந்துவிடும். பிறகு முற்றான அமைதி திரும்பிவிடும்.''

நோம் சோம்ஸ்கி அடிப்படையில் மொழியியல் அறிஞர். மொழியியல் துறையில் ஏராளமான ஆய்வு நூல்களை அவர் உலகுக்கு அளித்துள்ளார். மொழி அதன் உள்கட்டுமானம், மக்களின் மனங்களில் அது பதிவாகியுள்ள முறை, பண்பாடு, மாற்று இலக்கணம் சமூகம் மற்றும் பிற நிறுவனங்களின் மீது மொழியின் செல்வாக்கு; மொழியினுள் திணிக்கப்பட்டு இயல்பாய் படிந்துள்ள அரசியல் என மொழியியல் புரட்சியை நிகழ்த்தியவராக அறியப்படுபவர் சோம்ஸ்கி. அவரது சமூக, அரசியல் அவதானிப்புகள் தான் அவரை உலகெங்கும் உள்ள மக்களிடம் அறிமுகம் செய்து செல்வாக்கு ஏற்படக் காரணமாக இருந்தது. உலக நாடுகளை வைத்து அமெரிக்கா நடத்தும் பாவைக் கூத்தை பார்த்தது போல் உள்ளது, புத்தகத்தைப் படித்து முடிக்கும் தருணம். நம் காலத்து உலக அரசியல் சூழலை விளங்கிக் கொள்ள, ஒவ்வொரு அரசியல் போராளியும் படிக்க வேண்டிய நூல் இது. அமெரிக்க அரசாங்கத்தின் மீது மட்டும் அல்ல; ஒவ்வொரு தனிநபர் மீதும் செல்வாக்கு செலுத்துகிற நூலிது.

இனி நூலின் ஒரு பகுதியைப் பார்ப்போம்:

‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரியல் துறையில் நம் காலத்து அறிவுஜீவியான எர்ஸ்ட் மெய்ர், ‘வேற்றுகிரக உயிரினங்களின் அறிவுத்திறம்' குறித்த அவரது அவதானிப்புகளை வெளியிட்டார். அப்படியான வேற்று கிரக உயிரினங்கள் இருக்கும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்பது அவர் கூற்று. மனித இனத்திற்கு மட்டும் குறிப்பாக இருக்கக்கூடிய மாற்றியமைக்கத்தக்க நுண்ணறிவின் அளவுகள் குறித்து அதில் நிறைய பேசப்பட்டிருந்தது. மெய்ரின் பார்வையில், இந்த பூமியில் உயிரினவகை வேறுபாட்டுத் தோற்றத்திலிருந்து அய்ம்பது லட்சம் கோடி உயிரின வகைகள் தோன்றியிருக்கின்றன. அதில் ஒரு வகை மட்டுமே தனக்கான நாகரிகத்தை உருவாக்கிக் கொள்ளும் அறிவுத் திறனைப் பெற்றது. அதுவும் கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு உள்ளாகவேதான். அதிலும் ஒரு சிறு இனப்பெருக்கக் குழு தான் பிழைத்து, அதன் வம்சாவளிகள்தான் நாம் எனப் பொதுவாகக் கருதப்படுகிறது.

மனித வடிவத்திற்குக் கிடைத்த இந்த அறிவாற்றல், அமைப்பு தேர்வினால் கிடைத்ததல்ல என்று யூகிக்கிறார் மெய்ர். பூமியில் உயிரின வரலாற்றுப்படி, நாம் ஆறறிவுடன் இருப்பது முட்டாளாக இருப்பதைவிட மேலானது என்கிறார் அவர். பொதுவான உயிரியல் இயங்குமுறைகள்படி பூச்சிகள், நுண்ணுயிர்கள் மனிதர்களைவிட எஞ்சிப் பிழைப்பதில் வெற்றி பெற்றவை. மெய்ரின் ஆய்வுப்படி, உயிரினங்களின் பொதுவான வாழும் காலம் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள். முட்டாள்தனமாக அல்லது கூர்த்த மதியுடன் இருப்பது சிறந்ததா என்கிற கேள்விக்கான பதில் கிடைக்கக்கூடிய காலகட்டத்தில் நாம் நுழைந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கேள்விக்கு விடை கிடைக்காமல் போகிற வாய்ப்புகள் அதிகம். அப்படி உறுதியான விடை கிடைத்தால், அந்த விடை இதுவாகத்தான் இருக்கும். பொதுவாக ஒரு லட்சம் ஆண்டுகளைத் தங்கள் ஆயுட்காலமாகப் பெற்ற இந்த மனிதர்கள், ‘உயிரியல் பிழை' உடையவர்கள். தங்கள் ஆயுட்காலத்திற்குள்ளாகவே தங்களை அழித்துக்கொள்ளும் தகுதியையும், அதற்கான நடைமுறைகளையும் அவர்கள் தொடங்கி விட்டார்கள்.

உலக வளிமண்டலத்துக்கு அப்பாற்பட்ட அந்த உயிரினத்தின் (புனைவான) அவதானிப்புப்படி இந்த உயிரின வகை தன்னை அழித்துக் கொள்ளும் ஆற்றல் பெற்று விட்டது. அதனை வரலாறு நெடுகிலும் அவர்கள் வெளிப்படுத்திய வண்ணமிருந்தார்கள். கடந்த நூறு ஆண்டுகளில் உயிர்கள் வாழ்வாதார சூழல், உயிர்ப் பொருள்களின் பன்மை, குளிர், கணக்கிடப்பட்ட காட்டுமிராண்டித்தனம் என எங்கும் அழிவின் அவலம் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்த தாக்குதல்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

Noam Chomsky
மனித வாழ்வின் மீதான மிகப்பெரும் கேள்விகள், 2003 ஆம் ஆண்டு கவலையுடன் நிலைகொள்ளத் தொடங்கியது. 2002 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் அணு ஆயுதப் போர் உருவாவதற்கான எல்லா சாத்தியங்களும் இருந்தன. 40 ஆண்டுகளாக அது தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்டை வெளியின் ராணுவ மயமாக்கலுக்குத் தடை விதிக்கும் அய்.நா.வின் முயற்சிகளுக்குத் தடைகளை ஏற்படுத்தி அதைக் கைவிடச் செய்தது ஜார்ஜ் புஷ் அரசாங்கம். இது, மனித இனத்தின் மீதான மிகப் பெரும் தாக்குதல். உலக நாடுகள் எல்லாம் கூடி ‘உயிரியல் போர்முறை' குறித்த விரிவான உரையாடலில் ஈடுபட்டனர். இந்தப் பேரழிவின் ஆபத்து குறித்துப் பேச அதற்குத் தடை விதிக்கும் தருணத்தில், அமெரிக்க அரசு இந்த முயற்சியையும் தகர்த்துவிட்டது. ஈராக் மீது உயிரியல் போர் தொடுக்க எல்லா ஏற்பாடுகளையும் முடித்து விட்டது புஷ் அரசு. கடுமையான எதிர்ப்பையும் பொருட்படுத்தாது இந்தப் போர் தயாரிப்பு நடந்தது.

ஈராக்கில் பணி செய்து அனுபவமுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் மதிக்கத்தக்க மருத்துவ நிறுவனங்கள் எச்சரிக்கை செய்தன. இத்தகைய படையெடுப்பு, மனித இனப் பேரழிவை நிரந்தரத் தன்மை கொண்டதாக செய்துவிடும். ஆனால், இந்த எச்சரிக்கைகள் மிகச் சிறிய அளவில்தான் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றன. இது, முற்றாக புஷ் அரசால் நிராகரிக்கப்பட்டது. உயர் மட்ட அமெரிக்க படைப் பிரிவு, பேரழிவு ஆயுதங்களால் அமெரிக்கா தாக்கப்படவுள்ளது எனக் கூறியது. அதனால் ஈராக் மீது படையெடுப்பது அவசியமாகிவிட்டது என்பதை வலியுறுத்தியது. பல்வேறு அறிவு சார் குழுக்கள், ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்தனர். பெருகும் பேரழிவு ஆயுதங்கள், உலக தீவிரவாதப் போக்குகள் எனப் பல்துறை தகவல்கள் அடங்கிய எச்சரிக்கைகளை எதேச்சதிகாரத்துடன் நிராகரித்தது புஷ் அரசு.

அமெரிக்க உலக மேலாதிக்கத்தை சவால் விடக்கூடிய அல்லது இடையூறு செய்கிற எதையும் பலத்தைப் பயன்படுத்தி அப்புறப்படுத்தும் தனது பிரகடனத்தை 2002 செப்டம்பர் மாதத்தில், தேசிய பாதுகாப்புக் கொள்கையாக அறிவித்தது புஷ் நிர்வாகம். இந்தப் புதிய கொள்கை நிரந்தரமானது. இந்தப் புதிய பிரகடனம், உலகை கவலையில் ஆழ்த்தியது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கிற மேட்டுக்குடியினர்கூட, தங்கள் அய்யத்தைப் பதிவு செய்தனர். செப்டம்பர் மாதத்தில் புதிய பிரச்சார இயக்கத்தைத் தொடங்கியது புஷ் நிர்வாகம். அதன் மூலம் சதாம் உசேன் தான் (இரட்டை கோபுர தாக்குதல்) 9/11 தாக்குதல்களை நிகழ்த்தியவர்; அவர்தான் அமெரிக்காவிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குபவர், அவர் பல புதிய தாக்குதல் திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார் என்று உலக மக்களிடையே தகவல்களைப் பரவலாக்க முயன்றனர். இந்தப் பிரச்சாரம் அமெரிக்க காங்கிரசின் இடைத் தேர்தலை மய்யம் கொண்டது. அந்தத் தேர்தலில் மக்கள் மனங்களை திசை திருப்ப திட்டமிட்டது போல் பயனும் அளித்தது. அமெரிக்க அரசு தேர்தல் பலன்களை மட்டும் பெறவில்லை. மாறாக, அமெரிக்க பொதுப் புத்தி உலகப் போக்குகளிலிருந்து விடுபட்டு, அரசாங்கத்தைத் தன் பிரகடனப்படி ஈராக் மீது படையெடுத்து அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்டும்படி இசைவளித்தது. இது, செயல் திட்டமாக மாற உரிமம் வழங்கப்பட்டது.

அக்டோபர் 2002 வாக்கில் உலகின் கவலையை யாராலும் மறுக்க இயலவில்லை. சதாம் உசேனின் ஆபத்தைவிட, கண்மூடித்தனமான அமெரிக்க தாக்குதல்களால்தான் உலகை அச்சுறுத்தும் பெரும் ஆபத்து என்ற கூற்று அங்கீகாரம் பெறத் தொடங்கியது. கொடூரனின் அதிகாரங்களைப் பறித்திடுங்கள் எனக் குரல்கள் வரத் தொடங்கின. அய்.நா. ஆய்வாளர்களின் அறிக்கைகளைப் பொருட்படுத்தாது தாக்குதலுக்குத் தயாரானது அமெரிக்க அரசு. டிசம்பரில் அமெரிக்கப் போர் திட்டத்திற்கு 10 சதவிகித ஆதரவு மட்டுமே உள்ளது எனப் பத்திரிகைகள் தெரிவித்தன. இரண்டு மாதங்கள் உலகம் முழுக்க ஏராளமான மக்கள் தெருக்களில் களமிறங்கி, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். பூமியில் இரண்டு வல்லரசுகள் உள்ளன; அய்க்கிய அமெரிக்கா மற்றும் உலக மக்களின் பொதுக் கருத்து (இங்கே அய்க்கிய அமெரிக்கா என்பது, அரசு அதிகாரத்தைக் குறிக்கிறது. அமெரிக்க பொதுமக்கள் அல்லது மேட்டுக்குடியினரின் கருத்தைக்கூட அல்ல).

2003 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அமெரிக்க அரசு பீதியின் உச்சத்தில் இருப்பதாகவும், அதன் அரசியல் தலைமை, மக்களிடையே நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் கோடிகாட்டியது. அத்தியாவசிய தேவைகள்கூட கிடைக்காமல் மக்கள் பரிதவிக்கும் சூழலில், அவர்களுக்கு ஜனநாயகம்தான் உடனடித் தேவை என ஒப்பீடுகள் வெளியாயின. அக்கறையுள்ள ஜனநாயகவாதிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கவலையுடன் சூழலை எதிர் நோக்கினர். பேரக் குழந்தைகளிடம் இந்த உலகை விட்டுச் செல்வதில் பல சிக்கல்கள் எழுந்து வருவதை உணர்ந்தவர்களை, நடந்து வரும் நிகழ்வுகள் கவலையுறச் செய்தது. மரபான அமெரிக்க கொள்கைகளிலிருந்து விலகி விளிம்புக்குச் சென்றுவிட்டது, புஷ்ஷின் தீவிரவாதக் கொள்கைகள். வரலாற்றின் பல கவலைக்குரிய நிகழ்வுகளை இந்தக் கொள்கை முடிவுகள் ஏற்படுத்தவிருக்கிறது. மேலாதிக்கம் அல்லது எஞ்சிப் பிழைத்தலும், நம் தேர்வுக்காக முன்னே நிற்கிறது. வரலாற்றில் மிகச் சில தருணங்களில்தான் இந்தக் கேள்வியை நாம் நெருக்கமாக எதிர்கொள்கிறோம்.

இந்த குழப்பம் நிறைந்த சூழலில் உலகின் மீது மேலாதிக்கம் செலுத்துகிற வல்லரசின் கொள்கைகள், முடிவுகள், பிரகடனங்கள் - கிரகத்தில் வசிக்கும் எல்லா தனி நபர்களின் நுண்ணியப் பார்வையின் கீழ் வருகிறது. குறிப்பாக, அமெரிக்க பொது மக்கள் இதை உற்று நோக்க வேண்டும். பலருக்கு அசாதாரண சுதந்திரமும், அனுகூலமும் இருக்கிறது. அதை இந்தப் புவியின் எதிர்காலத்தை மாற்றியமைக்க பொறுப்புடன் சங்கடம் நிறைந்த காலம் கோருகிற நேரத்தில் பயன்படுத்த வேண்டும்.''
Pin It