கயர்லாஞ்சியில் நடைபெற்ற மானுடக் கொடுமையைப் படித்த பிறகு சில நிமிடங்களுக்கு மனம் உறைந்து போனது. இரண்டு மூன்று நாட்களாக மனம் குழந்தைகளைப் பறிகொடுத்த தாய்க்கோழியின் பதைப்போடும், அவலத்தோடும் அலைந்தபடி இருந்தது. ஓயாத சிந்தனைகள். சில தோழர்கள் ஆத்திரமும், கோபமும், துக்கமும் பீறிட சில நாட்களுக்கு இருந்ததாக என்னிடம் சொன்னார்கள். ஒரு பெரும் உணர்வெழுச்சிக்குப் பிறகு ‘ச்சீ... நீங்களும் மனிதர்களா' என்று அத்திசையில் காறி உமிழ்ந் தவாரே மரக்கட்டையைப் போல உறைகிறது ஒரு சாரார் மனம். எந்தச் சலனமும் இன்றி கல்லாகிக் கிடக்கிறது மறு சாரார் மனம்.
அந்தக் கல்மனங்களின் விகிதம் இந்தியாவில் மிக அதிகம். அந்த மனங்கள்தான் அக்கொடுமையினை வேடிக்கையும் பார்ப்பவை. நாடு முழுமையும் இந்த மனங்களே மனிதர்களாகப் பெருக்கெடுத்து உலவுவதை கற்பனை செய்கிறபோது, சகிக்க முடியாமல் மருகுகிறது மனம். தலித் மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக நம் நாட்டில் இழைக்கப்பட்டு வரும் கொடூரங்களுக்கு இணையானதாக, அக்கொடூரங்கள் குறித்து நிலவும் மவுனம் இருக்கிறது. இந்த மவுனம் ஒரு அசட்டை!
புத்திஜீவிகள், ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று தம்மைப் பீற்றிக் கொள்ளும் ஊடகங்கள், ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம் என எல்லா மட்டத்திலும் இந்த மவுன அசட்டை உறைந்து கல்லாய் இறுகியிருக்கிறது. நாம் வெட்கப்படுவதற்கு இதை விடவும் வேறு காரணம் எதுவும் தேவையில்லை. நாகரிகச் சமூகம், பண்பாட்டுப் பெருமிதம் கொண்ட சமூகம் என்று நாம் சொல்லிக் கொள்ள எந்த அருகதையும் இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத நாடு என்று மார் தட்டிக் கொள்ளும் இந்தியா, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தம் சொந்த மக்கள் மீது சாதியெனும் போரினைத் தொடுத்துக் கொண்டேயிருக்கிறது. இது ஒரு அவமானம்.
அன்றாடம் தலித் மக்கள் சாவது குறித்து இங்குள்ள எவருக்கும் கவலையில்லை. அவர்கள் மனிதத் தன்மையற்று கொல்லப்படுவதும், தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவதும் யாருக்கும் ஆத்திரத்தையோ, அதிர்ச்சியையோ தரவில்லை. குற்றுயிருடன் சாலையோரத்தில் கிடக்கும் மனிதனின் குரலைப் பொருட்படுத்தாமல் கடக்கிறார்கள் யாவரும். ஒரு சமாரியனுக்கான அவனின் காத்திருப்பு நீண்டு கொண்டேயிருக்கிறது.
நாகரிக சமூகமும் வெட்கித் தலை குனியும்படியான கயர்லாஞ்சி படுகொலைகளுக்குப் பிறகு கூடிய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில், அப்படுகொலைகளுக்கென நாடாளுமன்றம் கொந்தளித்திருக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம் சிலர். ஆனால், தென் ஆப்பிரிக்காவுடனான இந்திய கிரிக்கெட் அணியின் மோசமான ஆட்டம் பற்றியே அனல் பறக்கும் விவாதங்கள் அங்கே எழுந்தன. முதல் ஆட்டத்தில் இந்தியா தோற்றவுடன், தோல்விக்கான காரணத்தை ஆராயவும், வீரர்களுக்கு ஆலோசனை வழங்கவும் வெங்சர்க்கார் என்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். நாளேடுகள் பலவற்றிலும் செய்திகளும், அலசல்களும், அறிக்கைகளும், கருத்துப்படங்களும் வந்தன.
மனித உயிர்களைக் காட்டிலும் உயர்வாகப் போய்விட்டிருக்கிறது இந்த நாட்டில் கிரிக்கெட். தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்படும் அரசின் பிரதிநிதியைப் போல், மனித உயிர்கள் பலியான இடத்துக்கு யாரும் அனுப்பப்படவில்லை. அங்கு பிரதமரோ, அமைச்சர்களோ, உயர் அதிகாரிகளோ போகவில்லை. ஒரு சில தலித் இயக்கங்களைத் தவிர வேறு எவரும் அக்கொலைகளைக் கண்டிக்கவில்லை.
நீதித்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பொதுநல நோக்கில் தாமாகவே, செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நீதி வழங்கவும், நெறிகாட்டவும் முனையும் நீதிமன்றங்கள், கயர்லாஞ்சி கொலைகளுக்கு எதையும் செய்யவில்லை. நாடாளுமன்றத்துக்கு கிரிக்கெட்டைப் பற்றி இருக்கும் கவலையைப் போல் அதற்கும் ஒரு கவலை உண்டு. காஷ்மீரிலுள்ள பண்டிட்டுகளின் நலன் குறித்து வெள்ளை அறிக்கை தர வேண்டும் என்று காஷ்மீர் அரசைப் பணித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ‘காஷ்மீர் பண்டிட்டுகளை உள்நாட்டு ஏதிலிகள்' என்று அறிவிக்க வேண்டும் என்று சிலர் கேட்டிருக்கிறார்கள்!
நிலைமைகள் இவ்வாறு இருக்க, நாடு முழுக்கவும் ஆங்காங்கே தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து வருவதை செய்திகள் நமக்கு காட்டுகின்றன. இந்தக் கொடுமைகளைக் கண்டித்துப் பேசி, கவனத்தைக் கோரியிருக்கிறார் சோனியா காந்தி: ‘‘கடுமையான சட்டங்கள் பல இருந்த போதிலும், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிரான கொடுமைகள் இன்னும் தொடர்ந்து கொண்டு இருப்பது வருத்தமளிக்கிறது.
தலித்துகளுக்கும் பெண்களுக்கும் என்னென்ன உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து அவர்களுக்கு நீங்கள் விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். அவர்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்து நிறுத்தும் காவலர்களாக நீங்கள் செயலாற்ற வேண்டும். நாட்டில் உள்ள தலித் மக்களுடன் மற்ற வகுப்பினர் நட்புடன் திகழ வேண்டும். வன்முறை மற்றும் மிருகத்தனமான கொடூரத் தாக்குதலில் இருந்து தலித் மக்களைக் காப்பாற்ற, அவர்களின் பாதுகாவலர்களாக மற்ற வகுப்பினர் செயல்பட வேண்டும்'' (‘தினமணி' 26.11.06).
இந்தியாவை ஆளும் அரசின் இயக்கு விசையாக இருப்பவரிடமிருந்து வரும் ஒப்புதல் வாக்குமூலம் இது. தலித் மக்கள் மீதான வன்முறைகளை மட்டும் சோனியா கண்டிக்கவில்லை. மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமையை ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். சோனியா போன்ற உயர்மட்ட அரசியல்வாதிகள் அறிக்கை விடுகிறார்கள். ஆனால், மாநில அளவிலான அரசியல்வாதிகள் இந்தக் கொடுமைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, அண்மையில் சென்னை நகரின் மேயர் அவர்கள் 29.11.2006 அன்று, சென்னை வேளச்சேரியில் தேங்கியிருந்த கழிவு நீரை அகற்றும் பணியை மேற்பார்வையிடுவதைச் சொல்லலாம் (புகைப்படம் பார்க்க).
இத்தகு கொடுமைகளைப் பற்றிப் பேசுவதோடு நின்றுவிடாமல், அரசின் சார்பில் எவ்வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதைச் சொல்ல வேண்டிய கடமை ஆட்சியாளர்களுக்கு இருக்கின்றது. ஆனால், வெறுமனே மக்களுக்கு அறிவுரை புகட்டுவதிலும், வருத்தம் தெரிவிப்பதிலும்தான் காலங்கள் கழிகின்றன. எந்த அரசும் சாதி ஒழிப்பை, வன்கொடுமைத் தடுப்பை ஒரு போர்க்கால அடிப்படையிலான செயல்பாடாக முடுக்கிவிட்டதேயில்லை, அதற்கான சூழல்கள் நிலவினாலும்கூட.
கயர்லாஞ்சியைத் தொடர்ந்து தொடர்ச்சியாக சில நாளேடுகளில் வெளியான செய்திக் கட்டுரைகள், மகாராட்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் சாதியக் கொடுமைகளை அம்பலப்படுத்துகின்றன. அம்மாநிலத்தின் கோன்டியா மாவட்டத்தில் கோஹோல்கான் எனும் கிராமத்தில் புத்த விகார் கட்டுவதற்கும், அம்பேத்கரின் சிலையை நிறுவுவதற்கும் தலித் மக்களால் வாங்கப்பட்ட நிலத்தை, தலித் அல்லாத கிராம மக்கள் பொதுப் பயன்பாட்டுக்கு வேண்டுமென கேட்டுப் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அரசு நிர்வாகமும் துணை போயிருக்கிறது. இதை எதிர்த்ததால், தலித் மக்கள் சமூக விலக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். நாக்பூரைச் சுற்றியுள்ள கிட்டிகாதன் கவுளிபுரா போன்ற கிராமங்களில், கயர்லாஞ்சிக் கொடுமையை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை காவல் துறை கடுமையாக ஒடுக்கியிருக்கிறது. அந்த வன்கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுத்த தலித் மக்கள், காரணமின்றி கைது செய்யப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளனர். தலித் இளைஞர்களை காவல் துறை ‘நக்சல்கள்' என்று பொய்யாக வழக்குப் பதிந்து சிறையில் தள்ளியிருக்கிறது.
பீகாரின் முசாபர் நகர் மாவட்டத்தில் நவீனச் சமூகம் கேட்டறியாத கொடுமை, ஒரு தலித் பெண்ணுக்கு எதிராக நடந்தேறியுள்ளது. தனது நிலத்தில் புல் அறுத்ததினால் நிலத்தைத் தீட்டுப்படுத்தி விட்டார் என்று கூறி ரந்தீர் என்ற சாதிவெறியன், ஒரு தலித் பெண்ணின் மூக்கை அறுத்திருக்கிறான் (‘தினமணி', 26.11.06). கர்நாடக மாநிலத்தில் உள்ள பிஜபூர் மாவட்டத்தில், கட்கோல் கிராமத்தைச் சேர்ந்த எண்பது தலித் குடும்பத்தினர் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், பொது நீர் நிலையில் குடிக்க நீர் எடுத்ததுதான். 2002 இல் தொடங்கி இந்த ஆண்டு வரை, அம்மாநிலத்தில் மட்டும் சுமார் 3,594 வழக்குகள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வோராண்டும் பதிவாகும் வழக்குகளின் சராசரி எண்ணிக்கை 1300. ஆனால், இவ்வழக்குகளில் தன்டனை பெறுகிறவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். கடந்த அய்ந்தாண்டுகளில் சாதிவெறியுடன் 92 தலித்துகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட தலித் பெண்களின் எண்ணிக்கையும் இதைப் போலவே நூறை எட்டுகிறது (‘இந்து', 26.11.06).
இப்படி தொடர்ந்து கொண்டிருக்கும் வன்கொடுமைகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் எதுவும் இல்லை. அந்த உயிர்கள் அறிக்கைகளாகவும், எண்ணிக்கைகளாகவும், எழுத்துகளாகவும் சுருங்கிப் போகின்றன. பின்னர் ஒரு பெருமூச்சாய், ஒரு கசப்பான நினைவாய், ஒரு நினைவு நாளாய் அல்லது ஒரு வீரவணக்க நாளாய் மாறிப் போகின்றன. தலித் அமைப்புகளின் அணுகுமுறையிலும், செயல்பாட்டாளர்களின் உத்திமுறையிலும், தலித் மக்களின் கருத்தியலிலும் பெரும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வோர் வினைக்கும் அதற்கிணையான, சமமான எதிர்வினை உண்டு என அறிவியலில் படிக்கின்ற நியூட்டனின் மூன்றாவது விதி, தலித்துகளின் சமூக அறிவியலில் மட்டும் ஏன் பொய்த்துப் போய்விடுகிறது எனத் தெரியவில்லை!
‘கோச் கார்ட்டர்' என்ற ஓர் ஆங்கிலப் படத்தினை கடந்த மாதம் பார்க்க நேர்ந்தது. சாமுவேல் எல். ஜாக்சன் நடித்திருக்கும் அப்படத்தை தாமஸ் கார்ட்டர் இயக்கியிருக்கிறார். மார்க் குவான், ஜான் காடின் ஆகிய இருவரும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதிய கதையின் திரைவடிவம்தான் அப்படம்.
ஆப்பிரிக்க - அமெரிக்க மாணவர்கள் கூடைப்பந்து விளையாடுவதில் மிகத் திறமை யானவர்களாகத் திகழ்கிறார்கள். அமெரிக்காவில் மிகப் புகழ் பெற்ற கூடைப் பந்தாட்ட குழுக்கள் பல இருக்கின்றன. அதில் இருக்கும் சிறந்த வீரர்கள் பலரும் அமெரிக்கர்களான கருப்பின மக்கள்தான். ஆப்பிரிக்க - அமெரிக்க மாணவர்களுக்கென பல கூடைப் பந்து குழுக்கள் உயர் நிலைப் பள்ளி அளவிலும், கல்லூரி அளவிலும் இருக்கின்றன. அப்படி ஓர் உயர் நிலைப் பள்ளியினுடைய பயிற்சியாளராக சாமுவேல் ஜாக்சன் நியமிக்கப்படுகிறார். விளையாடுவதுடன் நின்று விடும் கருப்பின மாணவர்களைத் திருத்துவது அவரின் நோக்கம். மெல்ல தன் எண்ணங்களை செயல்படுத்தத் தொடங்குகிறார் சாமுவேல். கூடைப் பந்தாட்டக் குழுவில் இருக்கும் மாணவர்களுக்குப் படிப்பு அவசியம் வேண்டும் என்பது அவருடைய விருப்பம். அம்மாணவர்களுக்குப் படிப்பு இல்லை. நூலகங்கள் எங்கிருக்கின்றன எனத் தெரியவில்லை. பலருக்குப் பெண் தோழிகள் உண்டு. ஒரு மாணவனுக்கு குழந்தை கூட இருக்கிறது! அம்மாணவர்கள் படிப்பிலும் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற சாமுவேலின் கருத்து பெற்றோர்களாலும், பள்ளி நிர்வாகத்தாலும் எதிர்க்கப்படுகிறது.
‘‘படிக்கும் காலங்களில் விளையாட்டிலும் பிற செயல்களிலும் மட்டும் கருப்பின மாணவர்கள் ஈடுபடுவதால், அவர்களின் எதிர்காலம் சிதைந்து விடுகிறது. பிற்காலங்களில் பெரும்பாலானவர்கள் வறுமைக்கும் குற்றங்களுக்கும் இரையாகத் தள்ளப்படுகின்றனர். அமெரிக்கச் சிறைகளில் வாடும் பெரும்பாலான குற்றவாளிகள் கருப்பின மக்கள்தான். இந்த நிலை மாறவேண்டும் என்றால், பந்துக்கு மாற்றாக புத்தகங்களை அவர்கள் கருத வேண்டும்'' என்கிறார் சாமுவேல்.
அமெரிக்காவின் குற்ற அறிக்கைகள் தரும் புள்ளி விவரங்களோடு சாமுவேலின் கருத்துகள் பொருந்திப் போகின்றன. இறுதியாகப் படிப்பிலும், விளையாட்டிலும் அம்மாணவர்கள் வெற்றி பெறுவதுடன் படம் முடிகிறது. கருப்பின மாணவர்களின் நிலையினையும் அவர்களின் சமூக நிலைமைகளையும் துல்லியமாய் சித்தரிக்கும் முயற்சியில் பெருவெற்றி பெறுகிறது இத்திரைப்படம். இப்படத்தைப் பார்த்த சில நாட்களுக்குப் பின்பு ‘நாகரிகக் கோமாளி' எனும் தமிழ்த் திரைப்படத்தை கிராம மக்களிடையே திரையிடும் ஒரு விழாவுக்குப் போயிருந்தேன்.
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் கிராமத்தில் நடந்த இவ்விழாவிற்கு தளபதி கிருஷ்ணசாமி இரவு பள்ளி கூட்டமைப்பும், அம்பேத்கர் மய்யமும் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். மிக நீண்ட அக்கிராமத்தில் நானும், தம்பி ரகசியனும் கால்கள் ஓயும் அளவுக்கு நடந்தோம். இரவு வீடுகளை அழுத்தியிருந்தது. தண்ணீரில் கொடூரமாய் ஒருவனை மூர்க்கமுடன் மூழ்க வைக்க அழுத்துவது போல் தெரிந்த அந்த இரவுக்கும், இருளுக்கும் பயந்து மக்கள் யாரும் வெளியே வராமல் இருப்பதைப் போலத் தோன்றியது. எங்கும் அமைதி. வீடுகளுக்குள்ளே தொலைக்காட்சிகளின் ஓசை. நிகழ்ச்சியின் தொடக்கமாக அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க ஊர்வலம் ஒன்று தொடங்கியது. இரவுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும், உணர்வாளர்களும் மட்டுமே அங்கு இருந்தனர். விழா தொடங்கியபோது மேடையின் எதிரில் வயதான சிலரும், கொஞ்சம் இளைஞர்களும், பெருவாரியான குழந்தைகளும் தெரிந்தார்கள். ‘நாகரிகக் கோமாளி' படத்தின் இயக்குநர் ராம்ஜியும் அதன் தயாரிப்பாளர் ஜெகந்நாதனும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
சீர்த்திருத்தம் செய்ய விரும்பும் ஒரு இளைஞரை மய்யமாகக் கொண்ட இப்படத்தில் அம்பேத்கர் பற்றிய ஒரு பாடல் இடம் பெற்றிருக்கிறது. மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய கருத்துகளைத் தனது அடிப்படைச் செய்தியாக இப்படம் கொண்டிருக்கிறது. ஒரே ஒரு திரையரங்கில் மட்டும் நூறுநாட்கள் ஓடியது இப்படம். மக்களிடையே வரவேற்பினைப் பெறவில்லை. ஆனாலும் இதுபோன்ற திரைப்பட முயற்சிகளை கைவிடப் போவதில்லை என்றார் ராம்ஜி. அன்று சில தடங்கல்களால் அப்படம் திரையிடப்படவில்லை. நிலவும் சமூகத் தடைகளைக் குறியீடு செய்வது போல! வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ‘கோச் கார்ட்ட'ருடன், ‘நாகரிகக் கோமாளி' போன்ற படங்களை ஒப்பிட முனைந்து கொண்டிருந்தது என் மனம். ஒருவேளை இந்த ஒப்பீடு, சிரிக்கும் படியாகவோ, பொருத்தப்பாடற்றதாகவோ கூட சிலருக்குத் தோன்றலாம். ஆனால், அவ்விதம் அசட்டை செய்துவிட விரும்பவில்லை நான்.
அரசியலைத் தீர்மானிக்கின்ற, மக்களின் கருத்து நிலையைத் தீர்மானிக்கின்ற, பண்பாட்டுப் பாதிப்பினை கண்ணெதிரிலே நிகழ்த்திக் கொண்டிருக்கிற திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் உருவாகி வரும் நமது நாட்டில், இங்கிருக்கிற ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை அலசுகின்ற படங்கள் மறந்தும் யாராலும் எடுக்கப்படுவதில்லை. இம்மாதிரியான விழிப்புணர்வுப் படங்கள் அற்ற நிலையில் முன்னெடுக்கப்படும் ‘நாகரிகக் கோமாளி' போன்ற திரைப்படங்கள் மக்களிடம் சென்றடையாததோடு, கருணையின்றி புறக்கணிக்கவும் படுகின்றன.
இதற்கு மக்களை காரணமாக சொல்லத் தோன்றும். ஆனால், அவர்கள் காரணமல்ல. இங்குள்ள மக்கள் சமூகம், எல்லாவற்றுக்கும் கவனமாகப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வகையில் ஒரு கருத்தியல் அடிமைச் சமூகமாக மாறி இயங்கிக் கொண்டிருக்கிறது. திரைப்படங்கள் குறித்த பார்வை, ரசனை, கருத்து உள்ளிட்ட எல்லாமே இப்படிதான் இங்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் ‘நாகரிகக் கோமாளி' போன்ற படங்கள் வெற்றி பெறாதது இயல்பானதுதான்.
பார்ப்பனியத்தையும், இந்து சனாதனத்தையும், மூடக் கருத்தியல்களையும் தனது அடித்தளமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டிருக்கும் திரைப்படத்துறையில், யார் நுழைந்தாலும் உள்வாங்கி செறிக்கப்படுகிறார்கள். தமிழ்த் திரைப்படத்தின் வரலாற்றுப் படிநிலைகளை நாம் பரிசீலித்தால், அது கடைசியாக ஓர் இடைநிலை சாதிய அம்சங்களுடன் கூடிய படத்தை உருவாக்கும் நிலைக்கு வந்து நிற்பதை அவதானிக்க முடியும். ஆனால், அதற்கும் கீழே இறங்கி ஒரு தலித் திரைப்படத்தை உருவாக்கும் நிலைக்கு திரைத்துறை வரவில்லை. தலித் கூறுகள் வணிக நோக்குடன் தொடக்கக் காலந்தொட்டே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அவர் தம் வலியும், வேதனையும், சிக்கல்களும் வீரியமாகத் திரைப்படங்களில் பதிவாகவில்லை; அலசப்படவில்லை. இப்படியான சூழலில் ஏக்கத்துடன் நாம் ‘கோச் கார்ட்டர்', ‘நாகரிகக் கோமாளி' போன்ற படங்களைப் பார்க்க வேண்டியுள்ளது.
எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் திரைப்படத் துறைக்குப் பல்வேறு சலுகைகள் அள்ளி வழங்கப்படுகின்றன. அவர்களை எப்போதுமே அரசுகள் தம் அருகில் வைத்துக் கொண்டுள்ளன. ஒரு சமூகக் கடமையாக அரசே நிதியுதவி செய்து, சாதியொழிப்பு மற்றும் சமூக சீர்திருத்தப் படங்களை உருவாக்குமெனில், ‘ஒரு தலித் படத்துக்கான' தொடக்கமாக அம்முயற்சி அமையும். அதன் பின்னால் பல படைப்பாளிகளும் தம்மை அப்பணியில் துணிந்து இணைத்துக் கொள்வார்கள்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
தலித் முரசு - டிசம்பர் 2006
மீள்கோணம்
- விவரங்கள்
- அழகிய பெரியவன்
- பிரிவு: தலித் முரசு - டிசம்பர் 2006