நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கையில் தமிழக முதல்வர் முன் வைத்த கோரிக்கைகள் ஏதும் இடம் பெறவில்லை. ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நிதிநிலையைப் பாராட்டி மகிழ்கிறார்.

1) நிதிநிலை அறிக்கைத் தயாரிப்புக்கான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர் இருவரும் தமிழகத்துக்காக ஏராளமான கோரிக்கைகளை முன் வைத்தனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிசைகளை அகற்றி இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளுடன் கூடிய வீடுகளைக் கட்ட கூடுதலாக ரூ.6000 கோடியை ஒதுக்க தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டார். (பிரதான் மந்திரி அவாஸ் - யோஜனா - கிராமின் என்ற திட்டத்தின்கீழ்) ஆனால் நிதி ஒதுக்கப்படவில்லை.

2) இயற்கைப் பேரிடர்கள் நிகழும் இடங்களில் அந்தப் பேரழிவுகளின் நேரடித் தாக்குதலிலிருந்து விடுவிக்க “பேரிடர் தடுப்பு பல்நோக்கு மின் மய்யக் கட்டமைப்பு” (Multi-hazard-resistant power transmission infrastructure)அமைக்க, நிதி நிலை அறிக்கையில் ரூ.7077 கோடி நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி இருந்தார்; ஒதுக்கப்படவில்லை.

3) சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட பகுதியை விரைந்து முடிக்கத் தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

4) சென்னை புறநகர் இரயில் சேவைத் திட்டத்தை விரிவாக்க நிதி ஒதுக்கீடு எதிர்பார்க்கப்பட்டது; அதுவும் ஒதுக்கப்படவில்லை.

5) வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணங்கள் செய்யவும், பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புகளால் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கும் நிதியை வழங்குவதற்கு சிறப்பு உதவியாக ரூ.1000 கோடியை ஒதுக்குமாறு துணை முதல்வர் பன்னீர்செல்வம் கேட்டிருந்தார். அதுவும் ஒதுக்கப்படவில்லை.

6) கடந்த முறை மோடி ஆட்சியின்போதே முன் வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகளுக்கு கடந்த மோடி ஆட்சியில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையிலும் கண்டு கொள்ளவே இல்லை.

7) 2019-2020ஆம் ஆண்டுக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.5 இலட்சத்து 20 ஆயிரத்து 295 கோடி 19 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.32,551.42 கோடி மட்டுமே கிடைக்கும். அதுவும் மத்திய அரசு விதிக்கும் வரிகளின் வழியாகக் கிடைக்கும் இலாபம் தான். ஜி.எஸ்.டி. வரியால் 2018-2019ஆம் ஆண்டுக்கு நடுவண் அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கப் போவது ரூ.30,638.87 கோடி மட்டுமே.

8) பொதுத் துறை நிறுவனங்களில் 51 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கப் போவதாக நிதி நிலை அறிக்கை கூறுகிறது. இதனால் நெய்வேலி மற்றும் சென்னை பெட்ரோலியம் தனியார் மயமாகப் போகிறது. ஏற்கெனவே போராடிப் பெற்ற சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க நடுவண் அரசு டெண்டர் கோரியுள்ளதால், தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள்.

Pin It