அண்மையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை 65 ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஈழத்தில் போர் முடிந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும் தங்களின் தாயகத்தை உறுதி செய்யாமல் நாடற்ற மக்களாக வாழ்கிறார்கள், ஈழத் தமிழர்கள். 1983ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரை அகதிகளாகத் தமிழகம் வந்தவர்கள் 95,000 பேர். இவர்களில் 60,000 பேர் மாநில அரசு நடத்தும் 107 அகதிகள் முகாம்களில் இருக்கிறார்கள். மாநில அரசு நடத்தும் இந்த முகாம்களுக்கு கணிசமான நிதி உதவியை மத்திய அரசு வழங்குகிறது. ஏனையோர் முகாம்களில் அல்லாமல் தங்கள் சொந்த செலவிலேயே தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வாழ்கிறார்கள். உள்ளூர் காவல் நிலையங்களில் அவ்வப்போது அவர்கள் தங்களைப் பற்றிய தகவல்களைத் தர வேண்டும்.

தமிழ்நாட்டிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தோட்டத் தொழிலாளர் களாக அழைத்துச் செல்லப்பட்ட பலர் தமிழ் ஈழப் பகுதிகளிலேயே தங்கி விட்டனர். 1983ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரத்தின்போது அகதிகளாக தமிழகம் வந்த  அவர்கள், தங்கள் மூதாதையர் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்கள் என்ற அடிப்படையில் தங்களுக்கு இந்தியக் குடி உரிமை கேட்கிறார்கள். அத்தகைய 65 பேர் தொடர்ந்த வழக்குதான் மதுரை உயர்நீதிமன்றத்தில் வந்த வழக்காகும். திருச்சி அகதிகள் முகாம்களில் உள்ள இவர்கள், இப்போது ‘தாயகமற்ற’ மக்களாகவே கருதப்படுகிறார்கள்.

1964 மற்றும் 1970ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே உருவான அகதிகள் உடன்படிக்கையின் கீழ் தங்களை இந்திய வம்ச வழியினராக அங்கீகரிக்க வேண்டும். தாங்கள் ஈழத்து குடிமக்கள் அல்ல என்பது இவர்களின் வாதம். ஆனால், மத்திய - மாநில அரசுகள் இவர்களை உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தமிழகம் வந்தவர்கள் என்று கூறுகின்றன. இவர்கள் குடி மக்களுக்கான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று உரிமை கோர முடியாது என்றும், அதே நேரத்தில் கட்டாயப்படுத்தி வெளியேற்ற மாட்டோம் என்றும் ஆட்சி கூறுகிறது. இந்த நிலையில் இந்திய குடிமக்களுக்கான உரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று மதுரை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இந்த மக்களுக்குக் கிடைத்த தார்மீக வெற்றியாகும்.

குடியுரிமை வழங்கும் பிரச்சினைக்கு அப்பால் பொதுவான அகதிகள் பிரச்சினையில் இந்தியாவில் கொள்கைகளோ அணுகுமுறைகளோ ஏதும் இல்லை. இந்தியா முழுமையிலும் அகதிகளாக 2.25 இலட்சம் பேர் புகலிடம் தரப்பட் டுள்ளனர். இவர்களில் 1.08 பேர் திபேத்தியர்கள்; 18,000 பேர் ரோகிங்கியா முஸ்லிம்கள்.

தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர் அகதி முகாம்களில் இப்போது 60 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் பிறந்தவர்களாக இருக்கிறார்கள். இதில் 90 சதவீதம் பேர் இளைஞர்கள். மருத்துவம் தவிர, உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் இவர்களுக்கு இருக்கிறது. ஆனாலும் பல பெரும் கம்பெனிகள் ‘அகதிகள்’ என்ற காரணம் காட்டி இவர்களை வேலைகளில் அமர்த்த மறுக்கின்றன. வெளி நாடுகளில் வேலைகளுக்குச் செல்ல வேண்டுமானால் இலங்கை அரசின் ‘கடவுச் சீட்டு’ (பாஸ்போர்ட்) வேண்டும். அதை இலங்கையில்தான் பெற முடியும். இந்தத் தடைகளால் பல இளைஞர்கள் சட்ட விரோதமான வழிமுறைகளில் தமிழ்நாட்டை விட்டு வெளிநாடு செல்ல முயற்சிக்கிறார்கள். முயற்சிகள் தோற்றுப்போய் அவர்கள் பிடிபட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

தாங்கள் இலங்கை நாட்டவரா? இந்தியரா? என்று இந்தியாவில் பிறந்து இங்கேயே படித்து வளர்ந்த இளைஞர்கள் தவிக்கிறார்கள். ஈழத்தில் தாங்கள் இருத்தலுக்கும், வாழ்வுரிமைக்கும் சாதகமான சூழல் இல்லை என்ற அச்சுறுத்தும் நிலையிலும்கூட தாயகம் திரும்பவே பலரும் விரும்புகிறார்கள். ஏற்கெனவே பலரும் திரும்பி விட்டனர். 2011-18ல் 7818 அகதிகள் நாடு திரும்பி யிருக்கிறார்கள். இது இலங்கை அரசு ஆவணம் தெரிவிக்கும் தகவல். இந்த ஆண்டு மட்டும் 367பேர் திரும்பியிருப்பதாக தமிழக அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டு அகதிகள் முகாம்களில் இருக்கும் 28,500 பேர் ‘நாடற்றவர்கள்’. அதாவது இலங்கை அல்லது இந்திய குடியுரிமை இல்லாதவர்கள். தமிழ் ஈழப் பகுதிகளில் தமிழர்கள் எண்ணிக்கைக் குறைந்து வருவதால் இலங்கை நாடாளு மன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஈழத் தமிழர்களுக்கான தமிழ் தேசியக் கூட்டணி உள்ளிட்ட  அரசியல் கட்சிகள் இது குறித்து இந்திய அரசுடன் பேச்சு வார்த்தைகளைத் தொடங்க வேண்டும்.

- ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஜூலை 3, 2019,  டி.இராமகிருட்டிணன் எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம்)