இந்தியாவின் குடியரசு தின விழாவில் பங்கேற்க, இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மோடி ஆட்சி சிறப்பான வரவேற்பு அளித்தது. மரபுகளை மீறி, விமான நிலையம் சென்று மோடி, ஒபாமாவை வரவேற்றார். மோடி விதவிதமான ஆடைகளை அணிந்து, ஒபாமா நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ‘ஒபாமா-மோடி’யின் நெருக்கமான நட்பு குறித்து ஊடகங்கள் புகழ்ந்து எழுதின.

கடந்த மாதம் 27ஆம் தேதி டெல்லியில் ஸ்ரீகோட்டையில் இளைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய ஒபாமா, மோடியின் வரவேற்பு மாயைகளில் தாம் மூழ்கிடவில்லை என்பதை இடித்துக் காட்டி பேசினார். “இந்தியாவின் வெற்றி, அது மதத்தின் அடிப்படையில் பிளவுபடாதபோது தான் தொடர்ந்து நீடிக்கும். பாரம்பர்ய அடிப்படையில் மதப் பிளவுகளை உருவாக்கும் முயற்சிகளை எதிர்த்து நிற்க வேண்டும்” என்று பேசினார்.

இந்திய அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவு மத சுதந்திரத்தை வலியுறுத்தியதையும் அவர் எடுத்துக் காட்டினார். இந்திய ஆளும் வர்க்கம் அதிர்ச்சியடைந்தது. ‘இந்தப் பேச்சு மோடி ஆட்சிக்கு எதிரானது’ என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. மோடி கருத்து ஏதும் தெரிவிக்காமல் அமைதி காத்தார்.

இந்த நிலையில் இந்திய வெளி விவகாரத் துறை வட்டாரங்கள் மேற்கொண்ட முயற்சியினால் வாஷிங்டன் வெள்ளை மாளிகை அதிகாரியிடமிருந்து ஒரு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. “ஒபாமாவின் கருத்து இந்திய ஊடகங்களில் திரித்து வெளியிடப்பட்டது” என்று அந்த அறிக்கை கூறியது. இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பரூதின், வெள்ளை மாளிகையிலிருந்து வெளிவந்த அறிக்கையை செய்தியாளர்களுக்கு எடுத்துக் காட்டி, மோடி ஆட்சியைக் காப்பாற்ற முயன்றார். இவ்வளவுக்கும் பிறகு, கடந்த பிப்.5 ஆம் தேதி வாஷிங்டனில் நடந்த ‘தேசிய வழிபாடு காலை உணவு நிகழ்வில்’ பங்கேற்றுப் பேசிய ஒபாமா, மேலும் வெளிப்படையாகவே மோடி ஆட்சியின் மதவெறிப் போக்கை சாடினார்.

“வியக்கத்தக்க அழகான முழுமையான அற்புதமான பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவிலிருந்து நானும் மிச்செல்லும் (ஒபாமா மனைவி) திரும்பியிருக்கிறோம். ஆனால், இந்த நாட்டில் பல்வேறு மத நம்பிக்கை கொண்ட மக்கள் மீது பிற மத நம்பிக்கையாளர்கள் குறி வைத்து தாக்குகிறார்கள். தங்களின் மத நம்பிக்கை பாரம்பர்யம் கொண்டதாக அவர்கள் நம்புகிறார்கள். மதச் சகிப்புத் தன்மை இல்லாத இந்த செயல்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட காந்திஜியை அதிர்ச்சி அடையச் செய்திருக்கும்” என்று ஒபாமா பேசியிருக்கிறார். ‘காசு கொடுத்து உதை வாங்கும் கதை’ என்று பெரியார் சுட்டிக் காட்டும் உவமைதான் நினைவுக்கு வருகிறது.

“மத சகிப்புத் தன்மை குறித்து ஒபாமா, இந்தியாவுக்கு அறிவுரை வழங்க வேண்டாம்” என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒபாமாவுக்கு பதிலளித்துள்ளார். வாஷிங்டனில் ஒபாமாவின் பேச்சு, எழுத்து வடிவில் தயாரிக்கப்பட்டு படிக்கப்பட்டதாகும். இது இந்திய அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ‘உலக நாடுகளின் மத சுதந்திரம்’ பற்றி அமெரிக்கா, கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவை ஆப்கானிஸ்தானோடு சேர்ந்து மதப் பதட்டம் நிறைந்த நாடகவே அறிவித்திருந்தது.

அடுத்த சில மாதங்களில் 2015ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்கா வெளியிட விருக்கிறது. 2013 மற்றும் 2014ஆம் ஆண்டு அறிக்கையில் முசாபர் நகர் கலவரம் மற்றும் 2002இல் நடந்த குஜராத் கலவரங்களை பதிவு செய்திருந்தது. இந்த நிலையில் ஒபாமா, எழுத்து வடிவில் இந்தியாவைப் பற்றி தயாரித்து பேசியுள்ளதால் வரவிருக்கும் அறிக்கையில் ‘மத சுதந்திரம்’ மறுக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெறக் கூடும். இதனால் அன்னிய முதலீடுகள், இந்தியாவுக்கு வருவதில் சிக்கல்கள் உருவாகும் என்று இந்திய அரசு வட்டாரங்கள் கவலை அடைந்துள்ளன.

‘நியூயார்க் டைம்ஸ்’ நாளேடும் இந்தியாவில் நடக்கும் மதவெறி செயல்பாடுகளை அழுத்தமாகக் கண்டித்து தலையங்கம் தீட்டியுள்ளது. மோடி, காந்தியை தூய்மையின் குறியீடாக திசை திருப்ப முயன்றார். ஆனால், ஒபாமா, மதவெறிக்கு எதிரானவரே காந்தி என்று கூறியிருப்பது மோடியின் திசை திருப்பலுக்கும் சரியான பதிலடியாக அமைந்து விட்டது.

Pin It