திராவிடர் விடுதலைக்கழகம், சென்னை மாவட்டத்தின் சார்பாக மக்களைப் பிரிக்கும் ''பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு'' 01.12.2015 செவ்வாய்க் கிழமை சென்னை மேற்கு மாம்பலம் சந்திர சேகர் திருமண மண்டபத்தில் தபோல்கர் - பன்சாரே - கல்புர்கி நினைவரங்கத்தில் நடைபெற்றது.

காலை முதல் மாலை வரை முழு நாள் மாநாடாக நடைபெற்ற இந்த சிறப்பான மாநாட்டில் கலை நிகழ்ச்சி, கருத்தரங்கம், பட்டி மன்றம், கருத்துரை ஆகியன இடம் பெற்றன.

praabhims 600சென்னையில் காலத்தின் அவசியம் கருதி பல்வேறு தடங்கல்களை முறியடித்து கழகத் தோழர்களின் பெரு முயற்சியால் இம்மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாநாட்டின் முந்தைய நாள் இரவிலேயே கடும் மழை பெய்தது. கடும் மழைக்குமிடையே தோழர்கள் மாநாட்டு பணிகளை மேற்கொண்டார்கள். காலையிலேயே மாநாடு துவங்கும் நேரத்திலேயே கடும் மழை இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கழக மாநாட்டின் கருத்துரைகளைக் கேட்க தோழர்கள், தோழமை அமைப்புகள், பொது மக்கள் வருகை என 200க்கும் மேற்பட்டோரால் அரங்கம் நிறைந்தது.

காலை 10 முதல் நிகழ்வாக சம்பூகன் கலைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தோழர்கள் நாத்திகன், திருப்பூர் சங்கீதா, கவிஞர் கனல்மதி ஆகியோர் ஜாதி ஒழிப்பு பகுத்தறிவுப் பாடல்களை பாடினர். அடுத்த நிகழ்வாக கருத்தரங்கம் நடை பெற்றது.

''பார்ப்பனீயம் பதித்த இரத்தச் சுவடுகள்'' எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நெறிப்படுத்தினார். வழக்கறிஞர் துரை. அருண் வரவேற்புரையாற்றினார்.

வடசென்னை மாவட்ட தலைவர் ஏசு.குமார், தென் சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன் ஆகியோர் இக்கருத்தரங்கிற்கு முன்னிலை வகித்தார்கள்.

'பெண்ணியத்தில்' எனும் தலைப்பில் பேராசிரியர் சரசுவதி, 'புராணங்களில் எனும் தலைப்பில்' தந்தை பெரியார் திராவிடர் கழக பேச்சாளர் சீனி.விடுதலை அரசு, 'அரசியலில்' எனும் தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தைச் சார்ந்த முனைவர் சுந்தரவள்ளி, 'வரலாற்றில்' எனும் தலைப்பில் மார்ச்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த வாலாசா வல்லவன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

தொடர்ந்து மாநாட்டையொட்டி ‘புராணங்கள் வரலாறுகளில் பார்ப்பன பயங்கரவாதம்’ என்ற கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தொகுத்த நூல் சிறப்பு வெளியீடாக வெளியிடப் பட்டது. ஆதித் தமிழர்  பேரவை பொதுச் செயலாளர் நாகராசன் வெளியிட, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நூலை பெற்றுக் கொண்டார்.

1 மணியளவில் மதிய உணவு இடைவேளை. தோழர்களுக்கு மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது. உணவு இடைவேளைக்குப்பிறகு சம்பூகன் கலைக் குழுவினரின் இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து பட்டிமன்றம் துவங்கியது.

ஒலி பெருக்கி இல்லாமல் நடந்த பட்டிமன்றம்

'மக்களை பிளவு படுத்துவதில் விஞ்சி நிற்பது மதவாதமா?ஜாதியவாதமா?' எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில் கழகப் பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன்  நடுவராக இருந்தார்.

பட்டிமன்றம் துவங்கிய உடன் பலத்த மழை காரணமாக மின்தடை ஏற்பட்டு விட்டது. ஜெனரேட்டையும் இயக்க முடியாத அளவிற்கு மழை நீர் மண்டபத்தின் முன் தேங்கி விட்டது. ஆனாலும் பட்டி மன்றத்தில் பேசிய தோழர்கள் ஒலிபெருக்கி இல்லாமலேயே மிகவும் உரத்த குரலில் பேசி தங்கள் வாதங்கள், கூடி இருந்த அனைவருக்கும் கேட்கும் வகையில் சென்றடையச் செய்தனர்.

''மதவாதமே ''எனும் தலைப்பில் கழக வழக்கறிஞர் திருமூர்த்தி, மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி வாதங்களை எடுத்துரைத்தனர்.

''ஜாதியவாதமே'' எனும் தலைப்பில் திருச்சி புதியவன், கு.அன்பு தனசேகர் வாதங்களை எடுத்துரைத்தனர்.

நடுவர் பால்.பிரபாகரன் மக்களை பிளவுபடுத்து வதில் விஞ்சி நிற்பது 'ஜாதியவாதமே' என தீர்ப்பளித்தார்.

இராவணன் நன்றியுரை வழங்க பட்டிமன்றம் நிறைவுற்றது.

கடும் மழையையொட்டி முத்துரங்கன் சாலையில் ஏற்பாடு செய்த பொது மாநாட்டை இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. மாநாட்டில் பங்கேற்க விருந்த அனைத்து அமைப்புகளின் தலைவர்களுக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆதித் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் நாகராஜன் உரையைத் தொடர்ந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி 10 நிமிடம் மட்டும் நிறைவுரை யாற்ற மாநாடு நிறைவடைந்தது.

மாநாட்டின் நிறைவாக தோழர்கள் அனைவரும் மின்சாரம் இல்லாத அந்த சூழலில், சிறிய பேட்டரி வெளிச்சத்தில் ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்த காட்சி உணர்ச்சிபூர்வமாக இருந்தது. மாவட்ட செயலாளர் உமாபதி நன்றி கூற, 7 மணியளவில் மாநாடு நிறைவடைந்தது.

Pin It