‘கவுரவக் கொலை’ என்ற பெயரில் ஜாதி வெறிக்கு குடும்பத்தினரே பெண்களை கொலை செய்யும் அளவுக்கு ஜாதியம் வெறி பிடித்து நிற்கிறது. இந்தக் கொலைகளையும் இந்தக் கொலைகளை தண்டனையாக அறிவிக்கும் ஜாதி பஞ்சாயத்துக்களையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலிமையடைந்து வருகிறது. தமிழ்நாடு அரசே கடுமையான ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு செவிமெடுக்கவில்லை. மோடி ஆட்சி இதற்கு ஒரு தனி சட்டம் இயற்ற முன் வந்து அதற்கான மசோதாவை மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டு அனுப்பியது. ஆந்திரா, கேரளா போன்ற தென் மாநிலங்கள் இந்த மசோதா குறித்து கருத்துகளைத் தெரிவித்து விட்டன. தமிழ்நாடு அரசோ எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அலட்சியம் காட்டுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 98 பேர் - இப்படி ‘கவுரவ’க் கொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இப்போது மீண்டும் இதேபோல் ஒரு கொலை நடந்திருக்கும் அதிர்ச்சியான செய்தி வெளி வந்திருக்கிறது.
இராமநாதபுரம் வட்டம் புத்தேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சக்தி மகள் ஷாலினி என்பவர் வன்னிக்குடி கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த முனியாண்டி மகன் சரவணன் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
16.11.15 அன்று இருவரும் புத்தேந்தல் கிராமத்தில் பேசிக் கொண்டிருந்தபோது ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சாதி வெறியர்கள் சரவணனை அடித்து உதைத்து இராமநாதபுரம் பி1 காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்பு, காவல்துறையினர் சரவணன் மீது வழக்குப் பதிவு செய்தனர். அப்பொழுது காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஷாலினி, நான் தான் சரவணனை அழைத்துப் பேசினேன். அவர் மீது எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளார். ஆனாலும் காவல்துறையினர் ஷாலினியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, சரவணனை சிறையில் அடைத்தனர்.
அதன் பின்பு புத்தேந்தல் கிராமத்தின் சாதி ஆதிக்க வெறியர்கள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என மூன்று குழுக்களாகப் பிரிந்து, இரவு சுமார் ஒன்றரை மணி வரை ஷாலினியை மிரட்டியுள்ளனர்.
பின்பு, வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட ஷாலினியின் தந்தை சக்தியின் சம்மதத்துடன் சாதி ஆதிக்க வெறியர்களால் 22.11.2015 அன்று இரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது.
ஜாதி வெறிக் கொலைக்கு காரணமான குடும்பத்தார், பஞ்சாயத்தார், காவல்துறையினர் அனைவர் மீதும் விசாரணை நடத்தி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.