காந்தி கொலையில் இன்னும் பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை. இது குறித்து ஏற்கனவே 1966ஆம் ஆண்டு மத்திய அரசு நியமித்த ஜெ.எல்.கபூர் விசாரணை ஆணையம், சதியைப் பற்றி முழுமையாக ஆராயவில்லை. எனவே காந்தி கொலை பற்றிய முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ‘அபினவ் பாரத்’ என்ற அமைப்பைச் சார்ந்த டாக்டர் பங்கஜ் ஃபாண்டிங் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இவர் ஒரு ஆய்வாளர். காந்தியார் உடலில் பாய்ந்தது மூன்று குண்டுகள் மட்டுமே என்ற அடிப்படையில் போலீஸ் விசாரணை நடத்தி நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுக்கு உள்ளான சாவர்க்கார்  போதுமான சாட்சியம் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டார்.

“காந்தியின் உடலில் மொத்தம் 4 குண்டுகள் பாய்ந்துள்ளன. இதில் 3 குண்டுகள் கோட்சேயின் துப்பாக்கியிலிருந்து வெடித்தவை. நான்காவது குண்டு கோட்சே துப்பாக்கியில் இருந்த குண்டின் வகையைச் சார்ந்தது அல்ல. அப்படியானால், கோட்சேவைத் தவிர, வேறு ஒரு நபர் காந்தியை சுட்டிருக்கிறாரா? அவர் யார்? இது குறித்து ஏன் விசாரணை நடத்தப்படவில்லை. 4ஆவது குண்டு கோட்சே துப்பாக்கியிலிருந்து வெடித்திருக்க வாய்ப்பில்லை. காரணம், 7 குண்டுகள் போடும் கோட்சே துப்பாக்கியிலிருந்து அவர் சுட்ட 3 குண்டுகளைத் தவிர, ஏனைய 4 குண்டுகளை காவல்துறை கைப்பற்றி விட்டது. காந்தி கொலை வழக்கில் நாட்டின் மிகப் பெரும் சதி மூடி மறைக்கப்பட்டிருக்கிறது” என்று பாண்டிங் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனுதாரார் சாவார்க்கரின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pin It