Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

பெரியார் முழக்கம்

புட்டபர்த்தி சாய்பாபா மரணத்துக்குப் பிறகு சீரடி சாய்பாபா திட்டமிட்டு பிரபலமாக்கப்பட்டு வருகிறார். புட்டபர்த்தி உயிருடன் வாழ்ந்த காலத்திலேயே ‘இவர் மோசடிக்காரர்; சீரடி பாபாதான் உண்மையான கடவுள் அவதாரம்’ என்று பேசியவர்களும் இருந்தார்கள். 

‘பாபா’க்கள் என்ற மனிதர்களுக்கு, ‘கடவுள் அவதாரம்’ என்ற முகமூடியைப் போட்டு, அவர்கள் ‘அற்புதங்களை’ நிகழ்த்தும் ஆற்றல் பெற்றவர்கள் என்ற கதைகளை உருவாக்கிப் பரப்புகிறார்கள். ‘அவதாரங்கள்’ எடுத்த ‘கடவுள்கள்’ இனியும் வர மாட்டார்கள். மக்களிடம் அவதார மகிமைகளைத் தொடர்ந்து பேசி ஏமாற்ற முடியாது என்பதால், அவ்வப்போது சில மனிதர்களைப் பிடித்து ‘அவதாரமாக’ தோளில் தூக்கி ஆடும் செப்படி வித்தைகள் நடக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் ‘கல்கி’ அவதாரம் எடுத்து வந்திருக்கிறார் என்று ஒரு பார்ப்பனர் விளம்பரப்படுத்தப் பட்டார். ஒரு கட்டத்தில் அவர் மோசடிக்காரர் என்ற உண்மை அம்பலமான பிறகு, ‘கல்கி’ அவதாரக் கூச்சல், பஜனைகள் முடிவுக்கு வந்தன.

துவாரக பீட பார்ப்பனர் சங்கரச்சாரி சுகபோனந்த சரசுவதி சில ஆண்டுகளுக்கு முன் சீரடி சாய்பாபாவை இந்துக்கள் வணங்கக் கூடாது; அவர் ‘இந்து’வும் அல்ல; அவதாரமும் அல்ல என்று அறிவித்தார். உடனே சீரடி சாய்பாபா பக்தர்களும், சங்கராச்சாரி சீடர்களும் ஒருவரையொருவர் வீதிகளில் தாக்கிக் கொண்டனர். இப்போது சீரடி ‘சாய்பாபா’வுக்கு கோயில் கட்டுகிறார்கள். அவரது ‘பஜனை பாடும்’ வாகனங்கள் நகரங்களில் பாடல் களோடு வலம் வருகின்றன. கார்களில், ஆட்டோக்களில், வீடுகளில் சீரடி ‘சாய்பாபா’ படத்தைப் பார்க்க முடிகிறது.

சீரடி சாய்பாபா அறக்கட்டளைக்கு பல கோடி சொத்துகள் குவிந்து கிடக்கின்றன. வாரத்துக்கு ஒரு நாள் கோயிலுள்ள பகுதிகளில் இலவச உணவு வழங்கப்படு கிறது. உயர் பதவிகளிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் சிலர் தங்களின் பதவிச் செல்வாக்கை மூலதனமாக்கி இந்த ‘பாபா’க்களின் ‘அற்புதங்களை’ நூலாக எழுது கிறார்கள். திரைப்பட தயாரிப்பாளர்களும் நடிகர்களும் இந்த ‘பாபா’க்களை மக்கள் செல்வாக்குப் பெற்றவர்களாக உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

‘அமர்-அக்பர்-அந்தோணி’ என்ற ஒரு பிரபலமான இந்தி திரைப்படம் வந்தது. படத்தின் இறுதிக் காட்சியில் சீரடி சாய்பாபாவின் மிகப் பெரும் சிலைக்கு முன் கண் பார்வையற்ற தனது தாய்க்கு பார்வைக் கிடைக்க வேண்டும் என்று அக்பர் உச்சக் குரலில் பாடுவார்; உடனே பாபா சிலையின் கண்களிலிருந்து வண்ணமயமான ஒளி வீசும்; ‘எனக்குப் பார்வை வந்துவிட்டது; பாபா அருள் கிடைத்து விட்டது’ என்று தாய் உணர்ச்சி மேலிட மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்; பார்வையாளர்கள் அப்படியே மெய்மறந்து போவார்கள்.

‘சீரடி சாய்பாபா - ஒரு கடவுள்’ என்று பம்பாய் திரைப்பட உலகம் சிலாகிக்கிறது. ஒவ்வொரு படத்தின் தொடக்க விழாவும் அவர் ‘ஆசிர்வாதம்’ பெற்றே பம்பாய் பட உலகம் தொடங்குகிறது. சீரடிக்குப் போனால் ஒவ்வொரு நாளும் திரைப்பட நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்களைப் பார்க்கலாம். இத்தனைக்கும் ‘கருப்புப் பணம்’ கொழிக்கும் துறை, பம்பாய் திரைப்பட உலகம்!

சீரடி பக்தர்கள் சிந்திக்கவே மறுப்பவர்கள். அவர் மீதான கண்மூடித்தனமான பக்தி உணர்ச்சியில் உறைந்து கிடப்பவர்கள். “நான் இருபது ஆண்டுகளாக பாபா பக்தர்; எனது பிரச்சினைகள் தீர்ந்து விட்டன; அவர் ஆசி கிடைத்தால் போதும்; எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும்” என்று உணர்ச்சிகளைக் கொட்டுவார்கள். இவர் களிடம் விவாதம் செய்வதற்கான வாய்ப்புகளே இல்லை.

கோவிந்த் ரகுநாத் தபோல்கர் என்பவர் ஓய்வு பெற்ற நீதிபதி. இவர் சீரடி பாபா நிகழ்த்திய ‘அற்புதங்’களை பட்டியலிட்டு ஒரு நூல் எழுதியிருக்கிறார். எந்த அறிவியல் விளக்கமும் அதில் கிடையாது. அறிவியல் கேள்விகளுக்கும் இடமில்லை.

“நான் ஒரு நீதிபதியாக இருந்தவன்; எனவே இதில் எழுதியிருப்பது எல்லாம் உண்மையில் நடந்த சம்பவம்” என்று தான் வகித்த பதவியை, பாபாவின் அற்புதங்களை நம்ப வைக்க வெட்கமின்றி பயன்படுத்து கிறார். கடந்த 50 ஆண்டுகளில் இந்த நூலை பாபா அறக் கட்டளை 20க்கும் மேற்பட்ட பதிப்புகளை வெளியிட்டுள்ளது.   ஒவ்வொரு பக்தரும் இந்த நூலை வாங்கி வைத்துக் கொண்டு, “நான் 20 முறை படித்து விட்டேன்; 30 முறை படித்து விட்டேன்” என்று பெருமை  பேசுவது வழக்கமாகி விட்டது.

தாதா சாகிப் கால்ரடே என்ற பெண்ணின் மகனுக்கு உடம்பு முழுதும் சீழ் வடிந்ததாம்; வலி தாங்க முடியாமல் துடித்த மகனை பாபாவிடம் அழைத்துப் போனாராம்; பாபா, ‘கவலைப்படாதே’ என்று கூறி, தனது உடைகளை அகற்றினாராம்; அப்போது மகனின் உடல் முழுதும் இருந்த புண், பாபா உடலுக்கு மாறி விட்டதாம். ‘தனது சீடர்களின் துயரங்களை துன்பங்களை தானே சுமப்பவர் பாபா’ என்று அந்த நூலில் நீதிபதி எழுதி வைத்திருக்கிறார்.

“என்னுடைய மருமகள் பிரசவத்தின்போது உயிருக்குப் போராடினார். பாபா கோயிலுக் குப் போய் அங்கிருந்த விபூதியை வயிற்றில் தடவிய வுடன் சுகப் பிரசவம் நடந்தது” என்று ஒரு சீடர் கூறினாராம். சீரடி (மகாராஷ்டிரா மாநிலம்) ஒரு சிறிய கிராமம். இங்குள்ள சீரடி சாய்பாபா கோயிலைச் சுற்றி அர்ச்சனைப் பொருள்கள் வியாபாரம் சூடு பிடித்து நிற்கிறது.

ஆங்காங்கே ‘திருடர்கள் ஜாக்கிரதை’ என்ற எச்சரிக்கைப் பலகைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. ‘பாபா’ தனது சக்தியால் திருடர்களை தடுக்க முடியாதவராகி விட்டாரா? அல்லது திருடர்களை அவரால் திருத்தி நல்வழிப்படுத்த முடிய வில்லையா? இந்தப் பகுத்தறிவு கேள்விகளுக்கு எல்லாம்  அங்கே இடம் கிடையாது.

பாபா பற்றிய கதைகளை அங்கு சிலர் கூறுகிறார்கள். கதை இப்படி போகிறது. “1838ஆம் ஆண்டு ஒரு முஸ்லீம் பக்கீர் (புரோகிதர்) சீரடிக்கு வந்தார். அவர் பெயர் என்னவென்று தெரியவில்லை. உள்ளூரில் நகைத் தொழில் செய்யும் ஒருவர் அவருக்கு சாய்பாபா என்று பெயர் சூட்டினார்.

சீரடி ஒரு சிறிய கிராமம். வெகு சில மக்கள் பாழடைந்த வீடுகளில் ஏழ்மையில் வாழ்ந்தார்கள். பலர் விவசாயிகள். கிராமத்துக்குப் புதிதாக வந்த ‘சாய் பாபா’வின் நடத்தைகள் உள்ளூர் மக்களுக்கு நகைப்பாகவே இருந்தன. அவரை ஒரு ‘ஜோக்கர்’ போலவே மக்கள் பார்த்தார்கள்.

இப்போது அந்த கிராமத்தில் விவசாயம் இல்லை. சீரடி சாய்பாபா கோயில், அந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் ‘அர்ச்சனை’, ‘அபிஷேக’த்துக்கான பொருள்களை விற்கும் வணிக நிறுவனங்கள் பெருகி நிற்கின்றன.

“சிலையாக நிற்கும் பாபா எப்படி தரிசனம் வழங்குவார்?” என்ற கேள்விக்கு எவரிடமும் பதில் கிடையாது. காலை 9 மணி அபிஷேகத்துக்கு 5 மணியி லிருந்தே நீண்ட வரிசை நிற்கிறது. பகல் 12 மணிக்கு சத்ய நாராயணன் பூஜை, இரவு 10 மணிக்கு ஆரத்தி. ஒவ்வொரு கடைக்காரரும் இதைப் பட்டியலிட்டுக் கூறி பூஜை பொருள்களை விற்பனை செய்வதோடு, ‘பாபா ஆசி கிடைக்கட்டும்’ என்று கடைக்காரர்களே ஆசி வழங்குகிறார்கள்.

அரசியல் புள்ளிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் என்றால் கியூவில் நிற்க வேண்டாம். அவர்கள் நேரடியாகவே கோயிலுக்குள் போய் விடலாம். குறைந்தது ரூ.50000 நன்கொடை வழங்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. ‘பாபா’ சக்தியைவிட ‘பணத்தின்’ சக்தி இங்கே கூடுதலாக ‘அற்புதங்களை’ நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

சிறப்பு தரிசனங்களும் அதற்கான கட்டணங்களும் உண்டு. ‘சாய் அறக்கட்டளை’ இது குறித்து விளம்பரப் பலகைகளை வைத்திருக்கிறது. அறக்கட்டளை மிகப் பெரும் அரங்கத்தை ஆடம்பரமாகக் கட்டி, அரங்கத்தின் சுவர்களில் பாபாவின் அற்புதங்களைப் படங்களோடு விவரித்து பதிவு செய்திருக்கிறது. அதில் விவரிக்கப்பட்டுள்ள சில ‘அதிசயங்கள்’ கீழே தரப்பட்டுள்ளன:

• கிராமத்தில் ‘காலரா’ நோய் பரவியபோது பாபா... பாதிக்கப்பட்ட மக்கள் மீது ஒரு மாவுப் பொருளைத் தடவினார், உடனே ‘காலரா’ நோய் ஒழிந்துவிட்டது.

• சாய்பாபாவை சீரடிக்கு அழைத்து வந்த சந்த்பாய் என்பவர், ‘குழாய் சுருட்டு’ பிடிப்பதற்கு நெருப்பைத் தேடியபோது கிடைக்கவில்லை, பாபா ஒரு புல்லைத் தொட்டவுடன் அதிலிருந்து நெருப்பு வந்தது. அந்த நெருப்பைக் கொண்டு சுருட்டைப் பற்ற வைத்தார்.

• பாபாவின் கால் பாதத்திலிருந்து ஒரு ஆறு உருவாகி ஓடத் தொடங்கியது.

• தண்ணீர் நிறைந்த குளத்தின் கரையில் பாபா நின்று கொண்டிருந்தார். அப்போது குளத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளக்குகள் எரியத் தொடங்கின.

இப்படி ‘சாய்பாபா’வின் அற்புதங்களாக சுவற்றில் படத்துடன் எழுதி வைத்திருக்கிறார்கள். சிந்திக்காத மக்கள் கூட்டம், அப்படியே உணர்ச்சி வயப்பட்டு, இந்தக் கட்டுக் கதைகளை நம்புகிறது. உண்மையில் ‘சீரடி சாய்பாபா’ என்று சித்தரிக்கப்பட்டுள்ள படமே மோசடியானது. அது கற்பனையாக வடிவமைக்கப்பட்டது. “சாய்பாபாவின் உண்மையான புகைப்படம் எங்கேயும் கிடையாது” என்று சாய் பாபா அறக்கட்டளை அதிகாரிகளே ஒப்புக் கொள்கிறார்கள்.

1914ஆம் ஆண்டு பாபா பற்றி வெளி வந்த ஒரு நூலில் தேசாய் என்ற மாவட்ட ஆட்சித் தலைவர் பாபாவை காமிராவில் படம் பிடித்தார் என்று ஒரு குறிப்பு வருகிறது. ஆனால் இந்தக் குறிப்பை உறுதிப்படுத்தும் சான்று ஏதும் இல்லை. 1922ஆம் ஆண்டு பாபா அறக்கட்டளை ஒரு புகைப்படத்தை வெளியிட்டது. அதுவும் உண்மையான புகைப்படம் இல்லை. இந்தப் படத்துக்கும் ஒரு ‘அற்புத’ கட்டுக் கதையைத்தான் அவர்களால் கூற முடிந்தது.

சீரடி சாய்பாபாவுக்கு அதிகமாக சீடர்களைக் கொண்ட மாநிலம் குஜராத் என்று கூறப்படுகிறது. சீரடி கோயிலில் தரிசனத்துக்கு நிற்கும் நீண்ட ‘கியூ’ ஆமை வேகத்தில் நகருகிறது. 10 நிமிடத்துக்கு ஒரு முறை, “போலோ சாய்நாத் மகாராஜாக்கி ஜேய், ஜோர்சோ போலோ சாய்போலோ” என்று சத்தம் போட்டுக் கொண்டே நிற்கிறார்கள். ஒவ்வொருவர் கையிலும் பூஜை தட்டும் பூக்களும் அர்ச்சனைப் பொருள்களும் இருக்கின்றன.

நெற்றியைச் சுற்றி காவித் துண்டு ஒன்றைக் கட்டிக் கொள்கிறார்கள். ‘கியூ’வை முந்தி செல்ல குறுக்கு வழியில் பக்தர்கள் முயற்சிக்கும்போது, கியூவில் நிற்கும் கூட்டம் ஆத்திரத்துடன் ‘ஜெய் பாபா’ முழக்கங்களையே மீண்டும் மீண்டும் எழுப்புகிறது.

“பாபா உன்னைத் தண்டிப்பார்” என்று சிலர் கூச்சலிடுகிறார்கள். திருப்பதியைப் போல இங்கும் லட்டு விற்பனைகள் உண்டு. அந்த ‘லட்டு’வை சீடர்கள், பாபா சிலையின் காலடியில் வைத்து, பிறகு ‘பிரசாதமாக’ சாப்பிடுகிறார்கள். காலில் ‘லட்டு’ வைத்து வணங்கும்போது பாபா தனது சீடர்கள் செய்த பாவங்களையெல்லாம் அழித்து விடுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் சராசரியாக இந்த கோயிலுக்கு 4 ஆயிரம் பக்தர்கள் வருகிறார்கள். ஆங்காங்கே நன்கொடைகளுக்கான சீலிடப்பட்ட பெரிய பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் போடப்படும் நன்கொடை களுக்கு இரசீதுகள் ஏதும் கிடையாது.

பிரதான கோயிலுக்குள் பாபா சிலையின் காலை நேரடியாக தொட்டு பக்தர்கள் வழிபடலாம்! கியூவில் நிற்கும் பாபா சீடர்கள் திடீரென்று தரையில் உருண்டு தலையில் அடித்துக் கொள்கிறார்கள். “ஏதோ ஒரு சக்தி தங்களுக்குள் பாபா வழியாக புகுந்து விடுகிறது” என்று அதற்கு காரணம் கூறுகிறார்கள். (இது ஒரு வகை மன வியாதி. அதற்கான மனநல மருத்துவரிடம் சென்றால் விளக்கி கூறி விடுவார்)

பாபாவின் சிலையை நேரடியாக வணங்கலாம்; ஆனால் அர்ச்சனைக்காக கோயிலில் வைக்கப்பட்டுள்ள பாபா சிலையை பார்ப்பனர்கள் மூலமே வணங்க முடியும். ஆம்! சீரடி சாய்பாபா கோயில்களுக்கும் இப்போது பார்ப்பன அர்ச்சகர்கள் வந்து விட்டார்கள். (பாபா பிறப்பில் ஒரு முஸ்லீம் என்றாலும், பார்ப்பனர்களுக்கு வருமானம் தானே முக்கியம்!) சீரடியில் அர்ச்சகர்களிடம் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த அர்ச்சனைத் தட்டை தருகிறார்கள். அவர், அதை பாபா சிலையின் காலடியில் வைத்து உடனே எடுத்து தருகிறார். சில பக்தர்கள் காலடியில் சில நிமிடம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்கு அர்ச்சகர்களுக்கு கூடுதலாக பணம் தரவேண்டும்.

சீரடி கோயிலில் 24 அர்ச்சகர்கள் இரண்டு ‘ஷிப்டு’ களாக வேலை செய்கிறார்கள். இவர்கள் வேதப் பள்ளிகளில் ‘வேதம்’ பயின்ற பார்ப்பனர்கள். முஸ்லிம் பாபாவுக்கு சமஸ்கிருத வேத மந்திரங்களையே ஓதுகிறார்கள். சாய் பாபா சிலை இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘மார்பிள்’ கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

சிலைக்கு வெள்ளி, தங்க முலாம் பூசப்பட்டு, சிவப்பு நிற உடை போர்த்தப்பட்டு, காவி வண்ணத்தில் நகைகள் அணிவிக்கப்பட்டுள்ளன. கழுத்தில் வைர நெக்லஸ். ஆனால், தேங்காய் உடைப்பதற்கு மட்டும் அனுமதி இல்லை. அதற்கு பதிலாக மலர்களால் பூஜைகள் நடக்கின்றன.

சீரடி சாய்பாபாவுக்கான சிலை வணக்கம் நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது. உண்மை யிலேயே இப்படி ஒரு பாபா இருந்திருக்கிறாரா? என்பதே கேள்விக்குறிதான். சில கும்பல் வணிக நோக்கத்துக்காக திட்டமிட்டு உருவாக்கியதே ‘சீரடி சாய்பாபா’ என்ற கற்பனை பாத்திரம் என்றே கருத வேண்டியிருக்கிறது.

மோசடி செய்து கைதான பாபா அறக்கட்டளை உறுப்பினர்கள்

சீரடி என்ற ஒரு கிராமத்திற்கு ஒரு ‘பக்கிர்’ (இஸ்லாமிய மதகுரு) வந்து அங்கே ஒரு சிதைந்து கிடந்த மசூதியில் தங்கி, ‘அல்லா’வின் பெயரை உச்சரித்தார் என்று கதை கூறுகிறார்கள். ஆக, அவர் ஒரு ‘இந்து’ இல்லை. அவர் ‘மன நோய்’க்காரர்போல சட்டையைக் கிழித்துக் கொண்டு கஞ்சாவை குழாயில் புகைத்துக் கொண்டிருந்தாராம். ஆற்றங்கரைகளிலும் மலைகளிலும் சட்டையைக் கிழித்துக் கொண்டே அலைந்து திரிந்தார். பல நேரங்களில் வானத்தையே உற்று நோக்கிக் கொண்டிருப்பாராம். சில நேரங்களில் வீதிகளில் நடனம் ஆடுவாராம்.

பெண்கள் எதிரே வந்தால் அவர்களை ‘கெட்ட வார்த்தை’களால் திட்டுவாராம். பாபா அறக்கட்டளை வெளியிட்டுள்ள சுயசரிதையில் இந்தச் செய்திகள் எல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன. வாழ்நாள் முழுதும்  ஒரு சிதைந்துபோன மசூதியில் அல்லாவையே வழிபட்டு வந்த ஒருவருக்கு ‘இந்து’ என்ற அடையாளத்தைத் தருவதற்கு திட்டமிட்ட முயற்சிகள் நடந்தன. பாபாவைப் பற்றிய நூல்களை எழுதிய தபோல்கர் தேஷ்பாண்டே, தாஸ்கானோ (இவர்கள் பார்ப்பனர்கள்) போன்றவர்கள் இந்து மத அடையாள மாற்றத்தை உருவாக்குதில் முன்னோடியாக செயல்பட்டிருக்கிறார்கள்.

இந்து மத நம்பிக்கையாளர்கள் பாபாவை கடவுள் அவதாரம் என்கிறார்கள். சிலர் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவாமி இராமதாஸ் அவதாரம் என்கிறார்கள். சிலர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘அக்கல் கோட் மகாராஜா’வின் அவதாரம் என்கிறார்கள். ஆக, எந்த நிலையான அடையாளமும் இல்லாத ஒரு கற்பனை மனிதர் ‘சீரடி சாய்பாபா’. அவரது வரலாறு நூல்கள் என்று கூறப்படுபவை, ஒரே வரலாறாக இல்லை.

சந்திரசேகர் என்றவர், பாபா ‘வரலாற்றை’ எழுதிய ஒரு பார்ப்பனர், இன்னும் ஒரு படி மேலே போய் சாய்பாபா காது குத்தியிருந்ததை அவர் குளிக்கும்போது தான் நேரில் பார்த்ததாகவும், எனவே அவர் ஓர் ‘இந்து’ என்றும் எழுதியிருக்கிறார். ‘இராம நவமி’க்கும் சாய்பாபாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், ‘ராமநவமி’ கிருஷ்ண ஜெயந்தி நாள்களில் சாய்பாபா வழிபாடும் பூஜைகளும் நடத்தப்படுகின்றன.

உண்மையில் சீரடி சாய்பாபாவுக்கு ஒரு முஸ்லீம் சீடர்கூட கிடையாது. இஸ்லாம் மதம் உருவ வழிபாட்டை ஏற்கவில்லை. சாய்பாபா சிலை வணக்கத்தை அவர்கள் எப்படி ஏற்பார்கள்? ‘சீரடி சாய்பாபா’ இந்து-முஸ்லீம்கள் அனைவருக்குமான ‘மதச் சார்பற்ற’ கடவுள் என்பது மோசடி பிரச்சாரம்.

இஸ்லாமிய பாபாவை இந்துவாக்கிய பார்ப்பனர்கள்

ஒரு முஸ்லீமும் அங்கே வழிபட வருவதில்லை. ஒரு முஸ்லீம் மதகுரு கூட கோயிலில் பணியாற்றவில்லை.

கோயிலுக்கு அருகே ஒரு பெரிய வேப்ப மரம் இருக்கிறது. அந்த வேப்ப மரத்தின் தழைகள் இனிக்கும் என்று அறக்கட்டளை பிரச்சாரம் செய்கிறது. ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை. அந்த மரத்திலிருந்து தழைகளைப் பறிப்பதற்கு தடை போடப்பட்டுள்ளது. ஆனால், கீழே விழும் தழைகளை எடுத்துச் சாப்பிடலாம். அந்த தழைகளை சாப்பிடும்போது கசக்குமானால் அவர்கள் ‘பாவம்’ செய்திருக்கிறார்கள் என்று அர்த்தமாம்! அவருக்கு கடவுள் ஆசி கிடைக்கவில்லை என்று அதற்கும் கதையை உருவாக்கி விட்டார்கள்.

சந்தோர் சாவடி என்று ஒரு இடம் உண்டு. அங்கே ஒரு மரப்பெட்டியைச் செய்து அதில் ‘இங்கே பாபா உறங்குகிறார்’ என்று எழுதி வைத்துள்ளார்கள். உன்னிப்பாக கவனித்தால் அந்த மரப்பெட்டி 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு முன்புதான் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற உண்மை தெரியும். அந்த இடத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்புப் பலகை இருக்கிறது. பாபா வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு தடை இருந்திருக்க நியாயமில்லை. மனுஸ்மிருதி உருவான பிறகு பார்ப்பனர்கள் செய்த ஏற்பாடாக இருக்கலாம் என்று தெரிகிறது.

சீரடி சாய்பாபா காலத்தில் வாழ்ந்த அப்துல் பாபா என்பவரின் வீடு சீரடி  கோயில் அருகே இருக்கிறது. அந்த வீட்டில் ஒரு முதுமையானவர், சீரடி சாய்பாபாவைப் போலவே மற்றொரு பாபாவின் புகைப்படங்களை விற்பனை செய்கிறார். அங்கே இருக்கும் புனித நூல் மற்றும் சில பொருள்களைக் காட்டி, இவை அப்துல் பாபா பயன்படுத்தியவை என்று கூறுகிறார். இந்த முதியவரின் பெயர் ரகீம் பாபா. இவரிடமும் பக்தர்கள் வந்து ‘ஆசி’ பெறுகிறார்கள்.

“நீங்கள் சீரடி பாபாவை பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டால், “நான் பொய்சொல்ல மாட்டேன்; இது குறித்து எதையும் பேச விரும்பவில்லை. இப்போது இங்கே நடப்பது எல்லாம் வியாபாரம்தான். சீரடி சாய்பாபாவின் உண்மையான புகைப்படம் யாரிடமாவது இருக்கிறதா? அவர் காலத்தில் வாழ்ந்தவர் அப்துல் பாபா. அவரது உண்மையான புகைப்படம் என்னிடம் இருக்கிறது; இது தவிர எனக்கு வேறு ஏதும் தெரியாது” என்று கவலையுடன் பதிலளிக்கிறார்.

சீரடியில் பாபா அறக்கட்டளை நவீன மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறது. வியாதிகளை குணமாக்கும் ‘அற்புத சக்தி’ பாபாவுக்கு இருந்தால், மருத்துவமனையை ஏன் கட்ட வேண்டும்? சாய்பாபா சீடர்கள் நடத்தும் ‘ஷாம்தாஸ் அறக்கட்டளை’ ஹாங்காங் நாட்டில் நவீன மருத்துவமனையை கட்டியிருக்கிறது. உலகம் முழுதுமிருந்தும் புகழ் பெற்ற மருத்துவ நிபுணர்கள் அங்கே பணியாற்றுகிறார்கள். 

ஆக - ‘சீரடி சாய்பாபா’ என்ற பெயரில் ஒரு ‘வர்த்தக வலைப் பின்னலை’ உருவாக்கிக் கொண்டு மக்களின் நம்பிக்கையை மூலதனமாக்கி சுரண்டல் வியாபாரம் நடத்தி வருகிறார்கள்.

‘சாய் பாபா’ அறக்கட்டளைதான் இதில் பெரும் கொள்ளை அடித்து வருகிறது. அறக்கட்டளை உறுப்பினர்கள், பக்தர்கள் வழங்கிய பணம், நகை, சொத்துகளை சுருட்டி ஏப்பம் விட்ட செய்திகள் வெளிச்சத்துக்கு வந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு அறக்கட்டளை குறித்து ஏராளமான புகார்கள் குவிந்ததால் கே.எஸ்.பதக் என்ற அய்.ஏ.எஸ். அதிகாரி நிர்வாக பொறுப்பாளராக  நியமிக்கப்பட்டார். ஏராளமான அளவில் மோசடிகள் நடந்தது கண்டறியப்பட்டு பல அறக்கட்டளை உறுப்பினர்களின் வீடுகள் சோதனையிடப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். சிலர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகி சிறைத்தண்டனையும் பெற்றார்கள்.

அரசியல் தலைவர்களும் சீரடிக்கு படை எடுக்கத் தொடங்கினார்கள். முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா சீரடிக்கு வந்தார். அடுத்த சில மாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டார். சரத்பவார் வந்தார், ஒத்த கருத்துள்ள கட்சிகளை ஒரே அணியில் திரட்ட, ‘பாபா’விடம் ஆசி கேட்டார்.

தோல்விதான் கிடைத்தது. சங்கர் ராவ் சவான், வசந்த் தாதா பட்டீல் ஆகியோரும் பாபாவிடம் ஆசி பெற வந்த கோரிக்கைகள் தோல்வியே கண்டன. பிரதமராக இருந்த பி.வி. நரசிம்மராவ், ‘பாபா’ தரிசனத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பியபோது அவரது அமைச்சர் பதவியே பறி போய்விட்டது. இவையும் ‘பாபா’வின் ‘அற்புதம்’ என்று அவரின் சீடர்கள் கூறினாலும் ஆச்சரியமில்லை.

சீரடி கிராமம் பெரிய கட்டிடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என்று பணம் கொழிக்கும் நகரமாகிவிட்டது.  இணைய தளங்கள் வழியாகவும் ‘பாபா’ வர்த்தகம் ‘களை’ கட்டி வருகிறது. “நீ என்னை நோக்கினால், நான் உன்னை நோக்குவேன்” என்ற செய்தியுடன் பாபா படம் இணைய தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. பக்தர்கள், இணைய தளம் வழியாக பாபாவை தரிசிக்கத் தொடங்கிவிட்டனர்.

இது குறித்து சமூக வலைதளங்களில் பல கற்பனைகள் வலம் வருகின்றன.  அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியரான வரஹ அப்பி கட்ல ((Varah Appikatla) என்பவர் ‘பாபா தரிசனம்’ கிடைத்தவுடன் ‘அய்.பி.எம்.’ நிறுவனத்தில் உயர் பொறுப்புக்கு உயர்ந்து விட்டாராம். அவர் பெரும் தொகையை நன்கொடையாக வழங்கி வருகிறாராம். 

சீரடி பாபாவின் சீடர்கள் கடுமையான உளவியல் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள் என்பதை அவர்களின் கதையை நேரில் சென்று அறியும்போது தெரிய வருகிறது. எதைக் கண்டாலும் அச்சப்படும் மனநிலைக்கும், குடும்பத்தில் உள்ளவர்கள் மீதே நம்பிக்கை இழக்கும் நிலைக்கும் ‘பாபா’ பக்தி சீடர்களிடம் உருவாக்கி வருவதாக மனநல ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். புட்டபர்த்தியைத் தாண்டி நிற்கிறது, சீரடி சாய்பாபா பக்தி. இது ஆபத்தானது.

பூனாவை சார்ந்த பிராபகர் கே. நானாவதி, ‘தி ரேடிக்கல் ஹுமானிஸ்ட்’ 

(ஜூலை, 2016) இதழில் எழுதிய கட்டுரையிலிருந்து...     தமிழில் : ‘இரா’

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 Ramesh 2016-09-23 16:15
Frauds like Putta Paruthi Sai Baba, Nithyananda, Aasaram Babu, Isha Yoga Jeans SathGuru, Double Sri (Sri Sri Ravishankar will fool innocent Indians even after 100 years. We Hindus foolishly believing each and every thing that is told in the name of Hinduism. Our revolutionary leaders like Periyar, Ambedkar have failed there sincere efforts to educate our fellow Indian. Brahmins are the root cause of all problems in India. Who will bell the cats?
Report to administrator

Add comment


Security code
Refresh