பார்ப்பனர்கள் ‘தேவர்’கள், அவர்கள் கொடுங்கோன்மையை எதிர்த்தவர்கள் ‘அசுரர்’கள் - இப்படித்தான் புராணங்களுக்கு பார்ப்பனர்கள் கற்பனை வடிவம் கொடுத்தார்கள். ‘தேவ-அசுர’ப் போராட்டம் என்பது ஆரியர்-திராவிடர் போராட்டம் தான். 

தீபாவளி - திராவிடன் ‘நரகாசுரன்’ என்ற அசுரனை ‘மகாவிஷ்ணு’ எனும் பார்ப்பன அவதாரம் சூழ்ச்சியாக கொன்ற நாள். கொன்ற நாளை கொண்டாடி மகிழச் சொன்னார்கள் பார்ப்பனர்கள். நமது மக்களும் ‘இழிவை’ சுமந்து கொண்டாடுகிறார்கள்.

ஆனால், கேரள மக்கள் கொண்டாடும் ‘ஓணம்’ - இதற்கு நேர் எதிரானது. ஓணம் ‘மாவலி’ என்ற அசுரனை வரவேற்கும் பண்டிகை. கேரளத்தை ஆண்ட ‘மாவலி’ என்ற திராவிட மன்னன் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். அதை சகிக்க முடியாத தேவர்களாகிய பார்ப்பனர்கள் விஷ்ணுவிடம் முறையிட விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து மாவலியை அழித்தான். எப்படி அழித்தான்?

“வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணு, மாவலியிடம் மூன்றடி நிலம் வேண்டும் என்று யாசகம் கேட்டான். இதற்குப் பின்னால் அடங்கியுள்ள சதியை புரிந்து கொண்ட மாவலியின் குரு சுக்கிராச்சாரி, ‘யாசகம்’ தர வேண்டாம் என்று மாவலியை எச்சரித்தார். ஆனாலும் மாவலி இரக்க உணர்வோடு யாசகம் கேட்பதை மறுக்கக் கூடாது என்று கூறி மூன்றடி நிலம் தர முன் வந்தார். குள்ளமான உருவத்தில் வந்த மகாவிஷ்ணு, திடீரென ‘விஸ்வரூபம்’ (பெரிய உருவத் தோற்றம்) எடுத்தான். ஒரு காலடியை பூமியிலும், இரண்டாவது காலடியை வானத்திலும் வைத்தான். மூன்றாவது அடிக்கு இடம் கேட்டான். மாவலி, மூன்றாவது  அடியை தனது தலைமீது வைக்கச்சொன்னார். இதற்காகவே காத்திருந்த விஷ்ணு, மாவலி தலைமீதுகால் வைத்து அழுத்தி அப்படியே பாதாளத்துக்கு தள்ளினார். அப்போது மாவலி, ‘ஆண்டுக்கு ஒரு முறை தனது குடிமக்களை சந்திக்க வரவேண்டும்’ என்று கேட்கவே விஷ்ணுவும் வரம் தந்தார்” என்பது கதை.

இப்புராணக் கதையின்படி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் ‘திருவோண நட்சத்திர’ நாளில் மாவலி மன்னனை வரவேற்பதே ‘ஓணம்’. அதற்காகத்தான் வீடுகளில் ‘கோலம்’ போடுகிறார்கள். ‘அசுரனை’ அழிக்க வேண்டும் என்பதே வேதகாலத்திலிருந்து இன்று வரை பார்ப்பனர்கள் இறுமாப்பு. இந்து காலண்டரில் அசுரர்களை மதிக்கும் ஒரே பண்டிகை ஓணம் மட்டும்தான்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரப்பூர்வ ஏடான ‘கேசரி’, ‘ஓணம், வாமன அவதாரத்தை மதிக்கும் நாளாகக் கொண்டாட வேண்டும். மாவலியை வரவேற்கும் நாளாகக் கொண்டாடக் கூடாது’ என்று எழுதியது. பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் ‘ஓணம்’  வேண்டாம்; ‘வாமன அவதார’ விழா தான் வேண்டும் என்று பதிவிட்டார்.,

தீபாவளியை கொண்டாடச் சொல்லும் பார்ப்பனர்கள், ‘ஓணம் வேண்டாம்; வாமன அவதாரத்தை’ கொண்டாடுங்கள்’ என்று கூறுவதன் காரணத்தை தமிழர்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டாமா?

எனவேதான் பெரியார் சொன்னார், ‘தீபாவளி -  தமிழர்களுக்கு புராணப்படி துயர நாள். ஆரியத்தால் திராவிடன் வீழ்த்தப்பட்ட நாள். அதை கொண்டாடாதீர்கள்’ என்றார்.

மானமுள்ள தமிழர்கள் தீபாவளி கொண்டாடலாமா?

Pin It