தேசாபிமானம் தேசபக்தி என்பவைகள் சுயநலச் சூழ்ச்சி என்றும், தனிப்பட்ட வகுப்பு மக்கள் தங்கள் வகுப்பு நலத்துக்கு ஆக பாமர மக்களுக்குள் புகுத்தப்படும். ஒரு (வெறி) போதையென்றும் பல தடவை நாம் சொல்லி வந்திருக்கிறோம். மற்றும், ‘தேசாபிமானம் என்பது காலிகளுக்கு ஏற்பட்ட கடைசி ஜீவன் மார்க்கம்’ என்று மேனாட்டு அறிஞர் ஒருவர் கூறிய ஆப்த மொழி என்றும் பல தடவை எடுத்துக்காட்டி இருக்கிறோம். இவற்றை எந்த ஒரு தேச பக்தனும், தேசாபி மானியும் இதுவரை மறுக்கவே இல்லை என்பதோடு இவ்வாப்த வாக்கியங்கள் நிறைந்த ஆங்கிலப் புத்தகங்கள் பாடப் புத்தகங்களாகவும் வைக்கப்பட்டு வந்திருக்கின்றன.

இனியும் யாருக்காவது இவற்றில் சந்தேகங்கள் இருக்குமானால், இன்றைய அபிசீனியா, இத்தாலி யுத்த மேகங்களையும், இடியையும், மின்னலையும் பார்த்தால் கண்ணாடியில் முகம் தெரிவது போல் விளங்கும். மற்றம் தேசாபிமான விஷயமாயும், தேசக் காவலர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற சர்வதேச பாதுகாப்புச் சங்கத்தின் யோக்கியதையைப் பார்த்தாலும் தெரியும். இளைத்தவனை வலுத்தவன் கொடுமைப்படுத்து வதும், ஏமாந்தவனைத் தந்திரசாலி ஏமாற்றுவதும் தான் இன்று ஆஸ்திகர்களுடைய கடவுள்களின் இரண்டு கண்களாகவும், தேசபக்தர்கள் தேசாபி மானிகள் என்பவர்களின் ஜீவ நாடியாகவும் இருந்து வருகின்றன.

இந்த இரண்டு காரியங்களுக்குத்தான் அதாவது இம்சித்தல், ஏமாற்றுதல் ஆகிய இரண்டு காரியங் களுக்காகவும் அவை நிரந்தரமாகவும், ஒழுங்காகவும் பக்தியாகவும் நடைபெறுவதற்காகவேதான் உலகில் கடவுள், மதம், மோட்சம், நரகம், சாஸ்திரம், புராணம், அரசு, பிரதிநிதித்துவம், சட்டசபை, சட்டம், போலீசு, நீதிபதி, சிறைக்கூடம், சத்தியம், நீதி, ஒழுக்கம், ஒழுங்குமுறை, யோக்கியம், பரிசுத்தம், பெரியவர் வாக்கு, மகாத்மாக்கள் சேவை, தெய்வத் தன்மை பொருந்தியவர்கள், அவதாரம் என்பன போன்ற சர்க்கரை பூசிய பாஷாணங்கள் இன்று உலகில் கற்பிக்கப்பட்டு இருந்து செல்வாக்குப் பெற் றோ, பெறாமலோ காப்பாற்றப்பட்டு வருகின்றன. இந்திய தேசாபிமானம், தேசபக்தி என்பதுஇன்று ஒரு சாதாரண மனிதராகிய காந்தியாரிடம் அதாவது மகாத்மா என்பவரிடம் மக்கள் வைத்திருக்கும் - வைக்கும் பக்தி அபிமானம் ஆகியவற்றைப் பொருத்தே இருக்கிறது.

எவனாவது காந்தியாரை முட்டாள் என்று சொல்லிவிட்டாலோ அல்லது அவர் நம்மைப் போல சாதாரண மனிதர்தான் என்று சொல்லி விட்டாலோ அதுவே இன்று எந்த மனிதனையும் தேசத் துரோகி என்றும், தேசாபிமான மற்றவர்கள் என்றும் சொல்லி விடுவதற்கும் பரீக்ஷீப்பதற்கும் போதுமான கருவியாய் இருக்கிறது. இன்று இந்தியாவிலுள்ள தேசாபிமானம் பணச் செலவினாலும், பார்ப்பனப் பிரச்சாரத்தாலும் ஏற்படுவதே ஒழிய மற்றபடி மக்கள் சமூகத்துக்கு பொதுவாக உள்ள ஏதாவது ஒரு குறையையோ தேவையையோ உத்தேசித்து ஏற்பட்டதல்ல. பார்ப்பான் தன்னை மனித சமூகத்தில் இருந்து பிரித்துக் கொண்டு, தான் மாத்திரமே மேல் சாதிக்காரன் என்றும் மற்றவர்கள் தனக்குத் தொண்டு செய்யவே கடவுளால் பிறப்பிக்கப்பட்டவர்கள் என்றும் சொல்லுகிறவன்.

பணக்காரர்களாய் முதலாளிகளாய் இருக்கிறவர்களோ அவர்களுக்கும் அது போலவே தாங்கள் மற்ற சாதாரண மக்களிடம் தமக்கு இஷ்டமான வேலை வாங்கிக் கொண்டு தமக்கு இஷ்டமான கூலி கொடுக்கவே கடவுள் தங்களை சிருஷ்டித்துத் தமக்கு செல்வத்தைக் கொடுத்து மற்ற மக்களைத் தொழில் செய்ய சிருஷ்டித்து இருக்கிறார் என்றும் கருதிக் கொண்டிருக்கிறவர்கள். இவ்விரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசமெல் லாம் பார்ப்பான் கூலி கொடுக்காமல் வேலை வாங்கிக் கொள்ள உரிமையுள்ளவன் என்பதும் பணக்காரன் ஏதாவது கூலி கொடுத்து வேலை வாங்க வேண்டும் என்பதும் தவிர மற்றப்படி மற்ற ஜனங் களைவிட தாங்கள் மேலானவர்கள் என்பதிலும் இந்நிலை கடவுளால் அளிக்கப்பட்டது என்பதிலும் வித்தியாசமான அபிப்பிராயமில்லவே இல்லை. இப்படிப்பட்ட இந்தஇரண்டு கூட்டத்தாரும் சேர்ந்துதான் இந்தியாவின் தேசாபிமானத்துக்குக் கர்த்தாக்களாய் இருக்கிறார்கள்.

எப்படி என்றால் பணக்காரன் பணத்தை பல லட்சக்கணக்காய் கொடுக்கிறான்; பார்ப்பான் தந்திரத்தை பிரயோகிக்கிறான். இருவரும் சேர்ந்து கூலிகளைப் பிடித்து தேசாபிமானப் பிரசாரம் நடத்தி அதற்கு செல்வாக்கை உண்டாக்கி விடுகிறார்கள். ஆகவே இந்த இரண்டு கூட்டத்தார்களாலும் இவர்களுடைய கூலிகளாலும் நடத்தப்படும் தேசாபிமானம் பாமர மக்களுக்குப் பயன்படுமா அல்லது இந்த மூன்று கூட்டத்தையும் வெளியாக்கி அவர்களை ஒழிக்க முயற்சிக்கும் ‘தேசத் துரோகம்’ பாமர மக்களுக்குப் பயன்படுமா என்பதை அறிஞர்கள் யோசிக்க வேண்டும்.

இன்று நம்முடைய பொது ஜனங்கள் அல்லது பாமர ஜனங்கள் என்பவர்களின் யோக்கியதை நாம் அறியாததல்ல. அவர்கள் ஆண்களில் 100க்கு 90 தற்குறிகள். பெண்கள் 100க்கு 98 தற்குறிகள். அதோடு மாத்திரமல்லாமல் 100க்கு 50 பேர்களுக்கு மேல் ஜீவனத்துக்கு வேறு எவ்வித மார்க்கமும் இல்லாமல் எந்தக் காரியத்தையும் செய்தாவது ஜீவனம் நடத்த வேண்டும் என்கின்ற கவலையும் பசிப்பிணியும் உள்ளவர்கள். எனவே இந்த நாட்டில் நன்மை - தீமை, யோக்கியன் - அயோக்கியன், சுயநலக்காரன் - பொதுநலக்காரன், சூழ்ச்சிக்காரன் - உண்மையானவன் என்கின்ற தன்மைகளை கண்டுபிடிக்க சரியான அறிவும் யோக்கியதையும் பொது மக்களுக்கு எப்படி உண்டாகும்?

ஆகவே, யாரோ ஒரு சில நபர்கள்தான் உண்மையாகவும், கவலையாகவும், உழைக்கக் கூடியவர்களாகவோ உண்மையை எடுத்துச் சொல்லக் கூடியவர்களாகவோ கிடைக்கலாம். ஆனால் அவர்கள் பொது ஜனங்களால் ‘மகாத்மா’ என்றோ தேசாபிமானி என்றோ தேசபக்தர் என்றோ தேசியவாதி என்றோ கருதப்படக் கூடியவர்களாய் இருக்க முடியாது என்பதோடு அவர்கள் “தேசத் துரோகியாயும்” மதத்துரோகியாயும் நாஸ்திகர்களாயும்தான் இருக்க முடியும். அதோடு மாத்திரமல்லாமல் பொது ஜனங்களால் காசவு கேட்கவும் துன்புறுத்தப்படவும் வேண்டியவர்களாகவும் இருக்கக் கூடும்.

எப்படி இருந்தாலும் முடிவில் “தேசத் துரோகிகள்” எனப்படுபவர்களும், நாஸ்திகர்கள் எனப்படுபவர்களும் தான் வெற்றி பெறுவார்களே தவிர, அவர்கள் தான்வெற்றி பெற்றாக வேண்டுமே தவிர மற்றபடி இந்த ஜாலவித்தையான தேசபக்தி வெற்றியடையவோ, மக்களுக்குப் பயன்படவோ போவதில்லை என்பது உறுதி.

Pin It