ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றுவிட்டது. 10 ஆண்டுகாலம் தேடித்தேடி, கடைசியாக பாகிஸ்தானில் அபோடாபாத் என்ற நகரில், பாகிஸ்தான் ராணுவ பயிற்சிப்பள்ளி அமைந்துள்ள மிக முக்கியமான இடத்திற்கு அருகில் சுமார் 5 ஆண்டுகாலமாக மிகப்பெரிய வீடு எடுத்து “பதுங்கியிருந்த” ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றுவிட்டது.
தனது தேசத்தில் உலக வர்த்தக மையக் கட்டடத்தை விமானம் கொண்டு மோதித் தகர்த்து சுமார் 3 ஆயிரம் மக்களை கொன்ற, அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான பின்லேடனை கொல்வதற்கு முன்பு, அவரைக் கொல்லப்போவதாகக் கூறி ஆப்கானிஸ்தானத்திலும், இராக்கிலும் சுமார் 10 லட்சம் மக்களை கொன்று குவித்தது அமெரிக்கா.
“நாம் நம்மையே கேட்டுக் கொள்வோம். இராக்கிய தேசத்தின் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் உள்பட 6 லட்சம் பேரை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த குற்றவாளி ஜார்ஜ் டபிள்யு புஷ்சின், வீட்டிற்குள் திடீரென ஒருநாள் இராக்கிய கமாண்டோ படைவீரர்கள் புகுந்து, அவரைப் படுகொலை செய்து, அவரது உடலை அட்லாண்டிக் பெருங்கடலில் வீசியெறிந்துவிட்டுப்போனால் நமது நாட்டு மக்களின் உணர்வு எப்படியிருக்கும்?” என்று எழுதுகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த மிகச்சிறந்த அரசியல் விமர்சகரான பேராசிரியர் நோம் சாம்ஸ்கி. பாகிஸ்தானில் தங்கியிருந்த பின்லேடனை, பாகிஸ்தானுக்கேத் தெரியாமல் அதிரடியாக அந்நாட்டுக்குள் புகுந்து விமானத் தாக்குதல் நடத்தி கொலை செய்து, உடலை எடுத்துச்சென்று பசிபிக் பெருங்கடலில் வீசிவிட்டு சென்றார்கள் அமெரிக்க ராணுவ கமாண்டோக்கள்.
அடுத்த நிமிடமே தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் பாரக் ஒபாமா. மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால், பின்லேடனை கொன்றதை நியாயப்படுத்தி, அரசியல் சுதந்திரமிக்க நாடான பாகிஸ்தானுக்குள் புகுந்து கொன்றதை நியாயப்படுத்தி பேட்டியளித்தார், உலகின் மிகப்பெரிய “ஜனநாயக” நாட்டின் இந்த ஜனாதிபதி. பின்லேடனைப் போன்றவர்கள் பாகிஸ்தானில் மேலும் கூடாரமடித்திருப்பது தெரியவந்தால், அபோடாபாத்தில் நடத்திய விமான தாக்குதலைப்போல பல தாக்குதல்களை அந்நாடு எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
பாகிஸ்தானின் துரதிர்ஷ்டம். விடுதலை அடைந்து சுமார் 64 ஆண்டுகளில் கிட்டத்தட்ட அனைத்து ஆண்டுகளுமே அமெரிக்காவுடன் மிக நெருங்கிக் குலாவியதன் பலனை அனுபவிக்கத் துவங்கியிருக்கிறது, பின்லேடனைப் போலவே!உலக வரைபடத்தில் ஆசியாவின் மிக முக்கியமான கேந்திரத்தில் அமைந்திருக்கிற ஓர் அற்புத தேசம் ஆப்கானிஸ்தான். இயல்பாகவே இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளோடு மிக நெருங்கிய நட்பும் வரலாற்றுத் தொடர்பும் கொண்ட நாடு. பல்வேறு இனக் குழுக்களைக் கொண்ட முஸ்லிம் மக்கள் நிறைந்த ஆப்கானிஸ்தானத்தில், அண்டை நாடான சோவியத் ரஷ்யாவின் அரசியல் தாக்கம் இயல்பாகவே ஏற்பட்டது. 1980-களில் நஜிபுல்லா தலைமையில் அமைந்த ஜனநாயக அரசை, உடனடியாக ஒழித்துக்கட்டுவதற்காக அமெரிக்காவால் ஆப்கானிஸ்தானத்தில் உருவாக்கி, ஊட்டி வளர்க்கப்பட்டார்கள் தலிபான்கள். இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளான தலிபான்கள், அமெரிக்காவின் நாசகர உளவு அமைப்பான சிஐஏவின் முழுமையான உதவியோடு நஜிபுல்லாவை மிகக் கொடூரமாக படுகொலை செய்தார்கள். ஜனநாயக ஆட்சி ஒழிக்கப்பட்டது. இப்பிரதேசம் முழுவதிலும் தீவிரமத அடிப்படைவாதத்தை முன்வைத்து பயங்கர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக தலிபான்களுக்கு உரமூட்டவும் சிஐஏவால் உருவாக்கப்பட்டவர்தான் ஒசாமா பின்லேடன்.
அன்றைக்கு சிதைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் இன்று வரையிலும் எழுந்திருக்கவே முடியவில்லை. பின்லேடனின் மரணத்தை, அமெரிக்காவால் நிகழ்த்தப்பட்ட ஒரு படுகொலை என்று எழுதியுள்ள கியூபத் தலைவர் பிடல் காஸ்ட்ரோ, “பின்லேடன் என்ற நபர் பல்லாண்டு காலமாக அமெரிக்காவின் நண்பராக இருந்தவர்; அந்த நாடுதான் அவருக்கு ராணுவப் பயிற்சி அளித்தது; சோவியத் ஒன்றியத்தின் எதிரி; சோசலிசத்தின் எதிரி” என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் அவர் கொல்லப்பட்ட விதமும், நிராயுதபாணியாக இருந்த ஒரு மனிதனை, அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், அதுவும் வேறு ஒரு நாட்டிற்குள் அத்துமீறிப் புகுந்து சுற்றிவளைத்து படுகொலை செய்வது பயங்கரமானதே என்றும் பிடல் காஸ்ட்ரோ கூறுகிறார்.
தலிபான்களையும், பின்லேடனையும் பயன்படுத்தி ஆப்கானிஸ்தானத்தை சீரழித்த அமெரிக்கா, பின்னர் பின்லேடனைத் தேடுவதாகக் கூறிஅந்நாட்டை தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டது. தற்போது அமெரிக்காவுக்குத் தேவை பாகிஸ்தான்.
ஆசிய பிராந்தியத்தில் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய முப்பெரும் நாடுகளை மிரட்டுவதற்கு ஆப்கானிஸ்தானைவிடவும் மிகப்பொருத்தமானதொரு வலுவான தளம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குத் தேவைப்படுகிறது. அமெரிக்காவின் மனதில் இருக்கிற அந்த தளம் பாகிஸ்தான். அமெரிக்காவோடு மிக நெருங்கிய தொடர்புகொண்டுள்ள அதே நேரத்தில், அமெரிக்காவின் இஸ்லாமிய எதிர்ப்பு போர்களால் கொந்தளித்து நிற்கிற முஸ்லிம் மதஅடிப்படைவாத சக்திகளுக்கும் பணியவேண்டிய நிலையில் இருக்கிறது பாகிஸ்தான். பின்லேடனை அழிப்பதற்காக தனது நாட்டின் மீது விமானத்தாக்குதல் நடத்திய அமெரிக்காவை கடுமையாக எதிர்க்க முடியாமலும், அடுத்தடுத்து ஆண்ட ராணுவ ஆட்சியாளர்களால் ஊட்டி வளர்க்கப்பட்ட மத அடிப்படைவாத பயங்கரவாதிகளை ஒடுக்க முடியாமலும் தவிக்கிறது இந்தியாவின் அண்டைநாடு.
பரிதவித்து நிற்கும் பாகிஸ்தானை குறிபார்த்து அடிக்க தருணம் பார்த்து காத்திருக்கிறது ஏகாதிபத்திய கழுகு. இந்த பின்னணியில் தான் பாகிஸ்தானுக்கு சீனாவும், ரஷ்யாவும் ஆதரவாக இருக்கின்றன. மும்பை தாக்குதல் உட்பட பாகிஸ்தானிய ராணுவ அரசியலின் இழிசெயல்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்க முடியாது என்ற போதிலும், ஏகாதிபத்தியக் கழுகின் கைகளில் சிக்கிவிடும் அபாயத்திலிருக்கும் பாகிஸ்தான் மக்களுக்கு இந்தியர்களின் ஆதரவே பெரும் ஆறுதலாக இருக்கும்.