கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

முகநூலில் ஜாதி வெறியைப் பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறைக் கண்காணிப் பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. செய்தி விவரம்:

சமூக வலைத்தளங்களான முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றில் தீரன் சரவணன் குருசாமிக் கவுண்டர் என்ற நபர், தான் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை என்ற அமைப்பைச் சார்ந்தவர் என்று கூறிக் கொண்டு கொங்கு இனத்தைச் சார்ந்த பெண்களைக் காதலித்தால் பஸ், லாரியை ஏற்றிக் கொலை செய்வோம் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மேற்படி நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 29.02.2016 அன்று ஈரோடு கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

மாவட்டச் செயலாளர் சண்முகப் பிரியன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர்கள் குமார், சென்னிமலை செல்வராசு, மாநகரச் செயலாளர் சிவானந்தம், சிவக்குமார், மோகன்ராஜ், விடுதலை வேங்கைகள் கட்சி நிறுவனர் தமிழின்பன் ஆகியோர் மனு அளித்தனர்.

மருத்துவர் பெரியார் செல்வியின் சீரியத் தொண்டுக்கு ஆளுநர் பாராட்டு

அழுத்தமான பெரியாரியல்வாதியும், கோவை கே.ஜி. மருத்துவமனை மருத்துவருமான மருத்துவர் பெரியார் செல்விக்கு 25.02.2016 மாலை 6 மணிக்கு கோவை ‘லீ மெரிடன்’ விடுதி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘போற்றுதலுக் குரிய செயற்பாட்டாளர்’ (Doctor of Excellence) என்ற விருதினை தமிழக ஆளுநர் ரோசைய்யா வழங்கினார்.

பெரியார் செல்வியை அறிமுகப் படுத்திய மருத்துவமனை நிறுவனத் தலைவர் டாக்டர் பக்தவச்சலம், ஆளுநரிடம் “She doesn’t believe in god, but acts like a god” (இவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை; ஆனால் கடவுள் போல் செய லாற்றுவார்) என அறிமுகப்படுத்தியதோடு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பெரியார் செல்விக்கு பெயர் வைத்ததையும் நினைவுகூர்ந்தார்.

மருத்துவர் பெரியார் செல்வி, கவிஞரும், பொறிஞருமான அ.பா. சிவா வின் வாழ்விணையர் ஆவார்.

ஜெ.என்.யு. மாணவர்களை ஆதரித்து குடியாத்தத்தில் கழகம் ஆர்ப்பாட்டம் !

வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 29.02.2016 அன்று மாலை மாலை 4 மணியளவில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கழக பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந் நிகழ்வில் கழக மாவட்ட அமைப்பாளர் இரா.ப.சிவா, மா.பெ.பொ.கட்சி சீனி.பழனி, மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர் சுந்தர், அம்பேத்கர் தொழிலாளர் இயக்கம் மேயர் சுந்தர், கழகத் தோழர்கள் பார்த்தீபன், நவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கழகத் தோழர் கோடீஸ்வரன் நன்றி யுரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழமை அமைப்பு தோழர்கள் உள்பட 40 தோழர்கள் கலந்துகொண்டனர்.