காந்தி 1948ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பிறகு உடனடியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை அகற்றியதாக காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வேதனை தெரிவித்தார். தேசத் தந்தை குறித்த நினைவகமான காந்தி நினைவகத்திலிருந்து காந்தி சுடப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அகற்றப்பட்டது குறித்து துஷார் காந்தி அரசைக் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பான ட்விட்டர் பதிவில் அவர், “அதிர்ச்சியடைந்தேன்! ஹென்றி கார்ட்டியர் பிரெஸானின் காந்தி கொலையுண்ட பிறகான புகைப்படங்கள் காந்தி நினைவகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. பிரதான் சேவக்கின் உத்தரவின் பேரில் இந்த முக்கியப் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளன. காந்தியைக் கொன்றவர்கள் வரலாற்று ஆதாரத்தை அழிக்கின்றனர். ஹே ராம்!” என்று ட்வீட் செய்து வேதனை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தன்னை ‘பிரதான் சேவக்’ என்று அழைத்துக் கொண்டதையே துஷார் காந்தி தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். காந்தி ஸ்மிருதியின் தலைவர் பிரதமர்தான், இதுவும் தர்ஷன் சமிதியும் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பாகும்.

இன்னொரு ட்வீட்டில் துஷார் காந்தி இந்தியில் குறிப்பிடும்போது, இந்தியா மாறுகிறதோ இல்லையோ, வரலாற்றை மாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது என்று சாடினார். துஷார் காந்தியின் ட்வீட்டுக்கு பண்பாட்டு அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் பதிலளிக்கையில், விமர்சனங்களைக் கண்டு தான் அஞ்சவில்லை ஆனால் பொய்கள் பரப்பப்படுவது துரதிர்ஷ்டமானது என்றார். மேலும் துஷார் காந்தி தவறான தகவலை அளிக்கிறார், காந்தியின் இந்தப் புகைப்படங்கள் மங்கலாகி விட்டதால் டிஜிட்டலாக்கி திரையில் தெரியுமாறு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Pin It