பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பாக கோவையில் கடந்த 9.2.2020 அன்று நீலச் சட்டை பேரணி ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.

காவல்துறை அனுமதி மறுப்பின் காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த நிகழ்வு பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்புத் தோழர்களின் இடையறாத முயற்சியால் நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெறப்பட்டு பேரணியும் மாநாடும் திட்டமிட்டபடி நடந்துள்ளது.

kolathurmani 600 copyஇந்தப் பேரணியும் மாநாடும் பொதுமக்களின் பார்வையை ஈர்த்து விடக்கூடாது என்று அரசும் காவல் துறையும் பேரணி துவங்கும் போதும் மாநாடு நடைபெறும் பொழுதும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்திய வண்ணமே இருந்தார்கள்.

பேரணி நடைபெறும் 9.2.2020 முந்தைய நாள் மதியம் திடீரென காவல்துறை ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்த பேரணி செல்லும் பாதைக்கு அனுமதி மறுத்து குறுகலான சாலையில் பொதுமக்களின் பார்வை படாத இடத்தில் ஊர்வலப் பாதையை மாற்றி அமைத்தது. 

கோவையில் அனைத்து இயக்கங்களும் கட்சிகளும் பொதுக் கூட்டங்கள் நடத்தும் 

வ.உ.சி. பூங்கா மைதானத்தில ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்துவதற்கு முதலில் அனுமதி அளித்த காவல்துறை திடீரென அந்த அனுமதியை ரத்து செய்துவிட்டு குறுகலான பாலசுந்தரம் சாலையில் மக்கள் பார்வை படாதபடி மாநாடு நடத்த இடத்தை மாற்றி அமைத்தது. 

இவ்வளவு தடைகளுக்கும் பிறகும் இவற்றை யெல்லாம் முறியடிக்கும் வகையில் அனைவரையும் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பேரணி மிக சிறப்பாக நடந்தது. ஆயிரக்கணக்கானோர் நீலச் சட்டையில் ஜாதி ஒழிப்பு முழக்கங்களோடு அணி வகுத்து வந்தனர். பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பில் பங்கு பெற்றிருக்கக் கூடிய அனைத்து அமைப்புகளின் தோழர்களும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உற்சாகமாக பேரணியில் பங்கேற்றனர்.திருச்சியில் நடைபெற்ற கருஞ்சட்டை பேரணி போல பெரும் திரளான எழுச்சியான பேரணியை நடத்திக் காட்ட வேண்டும் என்கிற முனைப்போடு செயல்பட்ட கூட்டமைப்பின் தோழர்களின் உழைப்பிற்கு பெரும் வெற்றி கிட்டியுள்ளது.திருச்சி கருஞ்சட்டை பேரணி தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தது போலவே கோவை நீலச்சட்டை பேரணியும் பெருமளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

காவி பார்ப்பன பயங்கரவாத அரசு சமூக நீதிக்கும் மதச் சார்பற்ற தன்மைக்கும் பேராபத்தை விளைவித்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் கோவையில் பெரும் திரளாகவும் எழுச்சியுடனும் நடைபெற்ற இந்த நீலச்சட்டை பேரணி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பேரணி யாக அரசியல் நோக்கர்களால் கருதப்படு கிறது 

பிற்பகல் 3 மணி அளவில் கோவை அவிநாசி சாலை அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்ட பேரணி காவல்துறை திட்டமிட்டு உருவாக்கிய பல்வேறு குழப்பங்களையும் முறியடித்து பல்லாயிரக் கணக்கான தோழர்கள் சீராகவும் ஒற்றுமையுடனும் இப்பேரணியில் கட்டுப்பாட்டுடனும் கலந்து கொண்டனர்.

பேரணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்கொளத்தூர் மணி தலைமை தாங்கினார் ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் பேரணியைத் துவக்கி வைத்தார். அந்தப் பகுதியே நீல வண்ணம் பாய்ச்சியது போன்று பார்க்கும் இடமெல்லாம் நீல நிறமே நிறைந்திருந்தது.

பறை இசை சிலம்பம் ஆகியவற்றோடு உற்சாக மாய் நடைபெற்ற இப்பேரணியில் புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார் கருத்துக்கள் முழக்கமிடப்பட்டன. 

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இப்பேரணி முடிவில் மகளிர் பாலிடெக்னிக் அருகில் உள்ள பாலசுந்தரம் சாலையில் அமைக்கப்பட்டிருந்த ஜாதி ஒழிப்பு மாநாட்டு மேடைக்கு வந்தடைந்தது. 

ஆறு மணி அளவில் ஜாதி ஒழிப்பு மாநாடு துவங்கியது. மாநாட்டிற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார்.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வளவன், பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு ஒருங்கிணப்பாளர் பொழிலன், தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், காந்தி கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் விடுதலை தமிழ் புலிகள் தலைவர் குடந்தை அரசன், ளுனுஞஐ தெஹலான் பாகவி, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜிவாஹிருல்லா உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே காவல் துறை அப்பகுதிகளில் இருக்கும் தேநீர்க் கடைகள், உணவகங்கள், மருந்துக் கடைகள் ஆகியவற்றை மூடச் செய்து மாநாட்டில் கலந்து கொண்ட தோழர்களுக்கு ஏதும் கிடைத்துவிடாமல் செய்தனர். ஆனாலும் மாநாடு மிகச் சிறப்பாக கட்டுப்பாடுடன் நடைபெற்றது.

மிகுந்த எழுச்சியுடனும் பெரும் திரளாகவும் தோழர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டின் நிறைவில் போராட்ட அறிவிப்பு செய்யப்பட்டது.

வர்ணபேதத்தை கற்பித்து பிறப்பின் அடிப்படையில் உள்ள ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்தி நிலைபெறச் செய்ய அடிப்படை ஆதாரமாக இருக்கக்கூடிய மனு சாஸ்திரத்தை எரிக்கும் போராட்டம் வரும் 2020, மே 20ஆம் தேதி புதன்கிழமை பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த நாளன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று மாநாட்டின் நிறைவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் இனப் பிரிவினர், இஸ்லாமியர், பிற்படுத்தப்பட்டோர், முற்போக்கு சிந்தனையாளர்கள் என அனைவரும் நீலச் சட்டை அம்பேத்கர் படத்துடன் ‘ஜாதி ஒழிப்பு’ எனும் சமூக விடுதலைப் போருக்கு ஆயத்தமாகிவிட்டதை தமிழகத்துக்கு அறிவித்தது இந்தப் பேரணி. அம்பேத்கர், பெரியாரை எதிர் எதிர் துருவங்களாக நிறுத்தி பிரித்தாலும் சூழ்ச்சி, கபட நாடகங்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெறாது என்பதையும் இப்பேரணி உணர்த்தியது.

செய்தி : பரிமள ராஜன் 

(கழக முகநூல் பிரிவு பொறுப்பாளர்)

Pin It