முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களுக்கு உறுதி

பெரியார் வழியில் இந்த சட்டமன்றம் சமூக நீதிக் குரலை தொடர்ந்து ஒலிக்கும்

நூறு ஆண்டுகளுக்கு முன் வகுப்புரிமை சட்டத்தை அறிமுகப் படுத்திய இந்த சட்டமன்றத்தில் பெரியார் வழியில் சமூக நீதிக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றம் நூறு ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறது. ‘சென்னை மாகாண’ சட்டசபைக்கு பிரிட்டிஷ் ஆட்சியில் 1920ஆம் ஆண்டு முதன்முதலாக தேர்தல் நடந்தது. அதில் நீதிக்கட்சி என்ற பார்ப்பனரல்லாதார் இயக்கம் (தென்னிந்திய நல உரிமைச் சங்கம்) வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. 1921இல் முதல் மாகாண சட்டமன்ற கவுன்சில் தொடங்கியதிலிருந்து நூற்றாண்டு காலம் முடிவடையும் வரலாற்று நிகழ்வோடு சட்டமன்றத்தில் கலைஞர் படத்திறப்பு விழாவை தமிழக அரசு நடத்தியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலைஞர் படத்தைத் திறந்து வைத்தார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சட்டப் பேரவைத் தலைவர், துணைத் தலைவர் பங்கேற்றதோடு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் சென்னை மாகாண கவுன்சில் என்று அன்றைக்கு அழைக்கப்பட்ட சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சமூக சீர்திருத்த சட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமையுடன் நினைவு கூர்ந்தார். “கலைஞரின் படத்தைப் பார்க்கும்போது சர். பிட்டி தியாகராயர், டி.எம். நாயர், டாக்டர் நடேசனார் தொடங்கி, இனமானப் பேராசிரியர் வரையிலான பல மாபெரும் தலைவர்களின் முகங்களை நான் காண்கிறேன்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

விழாவுக்குப் பிறகு தமிழக முதல்வர் வெளியிட்ட ‘டிவிட்டர்’ பதிவில் முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“நூறு ஆண்டுகளுக்கு முன் வகுப்பு வாரி இடஒதுக்கீட்டை அறிமுகப் படுத்திய இந்தச் சட்டமன்றத்தில் சமூக நீதிக்கான குரல் தொடர்ந்து ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ஏற்றத் தாழ்வுகள் மிகுந்த இந்தியச் சமூகத்தில் சமூகநீதிக்கு சோதனை வரும் போதெல்லாம் நாட்டை வழி நடத்த வேண்டிய வரலாற்றுக் கடமை தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு என்றுமே உண்டு.

தந்தை பெரியார் காட்டிய வழியில் தொடர்ந்து அந்தக் கடமையை செய்திடுவோம் என்ற உறுதியை நாட்டு மக்களுக்கு இன்று நான் அளித்திட விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நீதிக் கட்சி ஆட்சியில் அன்றைய மாகாண சட்டமன்ற கவுன்சில் நிறைவேற்றிய சில முக்கிய சமூக சீர்திருத்த சட்டங்கள்.

• நாட்டிலேயே முன்னோடியாகப் பெண் களுக்கு வாக்குரிமை (10.05.1921).

• பஞ்சமர் என்ற சொல் நீக்கி ஆதிதிராவிடர் என்றழைக்கும் அரசாணை (25.3.1922).

• கல்லூரிகளில் எல்லாத் தரப்பு மாணவர் களையும் சேர்க்க குழுக்கள் அமைக்கும் அரசாணை (20.5.1922). கல்வி மறுக்கப்பட்ட பிராமணரல்லாத குழந்தைகளைத் தொடக்கப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை (21.6.1923). புதிய பல்கலைக் கழகம் காண சட்டம் இயற்றப்பட்டது. பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாக இது காரணமாயிற்று.

• தாழ்த்தப்பட்ட மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாகச் சேர்ப்பதற்கான நடவடிக்கை (24.9.1924).

• குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டிவிட்டு, தேவரடியார் என்று முத்திரை குத்தும் முறைக்கு முடிவு கட்டும் சட்டம் (1.1.1925).

• கோயில்களில் கொள்ளையை முடிவுக்குக் கொண்டு வர இந்து சமய அறநிலையச் சட்டம் (27.01.1925).

• சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பிராமணரல்லாத மாணவர்களைச் சேர்ப்பதற்கான உத்தரவு (15.9.1928).

• எஸ். முத்தையா முதலியாரின் முயற்சியால் முதல் இடஒதுக்கீட்டுச் சட்டம் (13.9.1928). வகுப்புவாரி ஒதுக்கீட்டுக்கான அரசாணை (27.2.1929).

- என்பவை குறிப்பிடுவதானவை.

அவாளின் தரம் இப்படித்தான்: சட்டசபை நிகழ்வில் முதல்வர் பெயரையே இருட்டடித்த ‘தினமலர்’

‘தினமலர்’ என்ற பார்ப்பன நாளேடு, தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நூற்றாண்டு விழா - கலைஞர் படத்திறப்பு நிகழ்வை ‘சிறுமைப்படுத்தி’ செய்தி வெளியிட்டு தனது ‘தரம்’ இவ்வளவு தான் என்று காட்டியிருக்கிறது.

அனைத்து ஏடுகளும் முதல் பக்கத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த இந்த செய்தியை - இரண்டாம் பக்க ‘மூலையில்’ இடம் ஒதுக்கி வெளி யிட்டிருக்கிறது. ‘சட்டசபை நூற்றாண்டு விழா; கலந்து கொண்ட ஜனாதிபதி’ என்ற தலைப்பில் வெளி வந்துள்ள செய்தியில், படம் திறக்கப்பட்ட கலைஞர் குறித்து, குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ நிகழ்த்திய உரையில் ஒரு வரி கூட இடம் பெறவில்லை. குடியரசுத் தலைவர், ஆளுநர் படங்கள் மட்டுமே இடம் பெறுவது போல ஒரு படத்தை வெளியிட்டுள்ளது. முதல்வர் படம் தவறியும் இடம் பெற்று விடக்கூடாது என்பதில் குறியாக இருந்து படத்தை வெளியிட்டிருக்கிறது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விழாவில் பங்கேற்றோர் என்றோ பேசினார் என்றோ ஒரு வரி கூட இடம் பெறவில்லை. அவரது பெயரை இருட்டடித்து, தனது ‘தரம்’ எவ்வளவு கேவலமானது என்பதை உணர்த்தியிருக்கிறது, ‘தினமலர்’.

Pin It