(ஜாதி அமைப்பையும் ‘மனுதர்மத்தை’யும் இலட்சியங்களாகக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். - நாக்பூரில் இந்துக்களுக்குள் பாகுபாடு கூடாது என்று பேசியிருப்பதை முன் வைத்து ‘தமிழ் இந்து’ நாளேட்டில் ‘சமஸ்’ எழுதிய கட்டுரை இது. “ஆர்.எஸ்.எஸ். வலிமையான பண்பாட்டு சக்தி” ஜாதியை ஒழிக்க ஆர்.எஸ்.எஸ்.சால்தான் முடியும் என்பது போன்ற கட்டுரையாளரின் கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனியத்துக்கு ஆதாரமான பல செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன. மாறுபட்ட கருத்துகளையும் வெட்டி விடாமல் கட்டுரையை முழுமையாக வெளியிடுகிறோம்.)

‘ஜாதிய வன்முறைகள் நடக்கும் போதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். ஏன் வாய்மூடி இருக்கிறது?' என்ற கேள்வி பொதுவாக எழுவதில்லை. சாதிய அமைப்புக்கு எதிராக எப்போதுமே பேசுவதில்லை என்பதால் தான்.

‘இப்போது ஏன் பேசுவதில்லை' என்ற கேள்வி யும் எழுவதில்லையோ என்றும் தோன்றுகிறது. இந்தியாவை நிலைகுலைய வைத்த எந்தச் சம்பவத்தின்போதும் ஆர்.எஸ்.எஸ். வாய் திறந்து பேசியதாகவோ, களத்தில் போய் நின்றதாகவோ தெரியவில்லை. சுதந்திர இந்தியாவை அதிரவைத்த கீழவெண்மணி சம்பவத்தின்போது - 44 தலித்துகள் உயிரோடு தீயிட்டு எரிக்கப்பட்டபோது - ஆர்.எஸ்.எஸ். என்ன செய்தது? சுந்தூரில் 8 தலித்துகள் கொன்றழிக்கப்பட்டபோது என்ன செய்தது? பதானில் 21 தலித்துகள் கொல்லப்பட்ட போது என்ன செய்தது? சுதந்திர இந்தியாவின் மிக அவமானகரமான நிகழ்வு என்று அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனால் குறிப்பிடப்பட்ட, 58 தலித்துகள் கொல்லப்பட்ட லக்ஷ்மண்பூர் பதே சம்பவத்தின்போது என்ன செய்தது?

சில நிகழ்ச்சிகள் ஞாபகத்தில் இருக்கின்றன. 2002இல் டெல்லி வஸந்த்குஞ்சில் வேதக் கல்வி நிறுவன அடிக்கல் நாட்டு விழாவுக்கு அத்வானி வந்தபோது, இந்நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் வசித்துவந்த தலித் குடும்பங்களை வெளி யேற்றினார்கள். ‘வேதக் கல்வி நிறுவனம் தொடங் கும் சமயத்தில் தலித்துகள் அங்கு இருந்தால், புனிதம் கெட்டுவிடும்’ என்றார்கள். அத்வானியோ, ஆர்.எஸ்.எஸ்.ஸோ இதற்கு ஆட்சேபித்ததாக நினைவில்லை. அதே வருஷத்தில்தான் துலினா சம்பவமும் நடந்தது. இறந்துகிடந்த ஒரு மாட்டின் தோலை உரித்துக்கொண்டிருந்த ஐந்து தலித் துகளை அடித்தே கொன்றார்கள்.

குற்றவாளிகள் ‘விஷ்வ ஹிந்து பரிஷத்' தொண்டர்கள் என்ற செய்தி வந்தபோது, “எத்தனை மனித உயிர்களையும் விட உயர்வானது ஒரு பசுவின் உயிர்” என்று அந்தப் படுகொலையை நியாயப்படுத் தினார் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கிரிராஜ் கிஷோர். ஆர்.எஸ்.எஸ். இதைக் கண்டித்ததாக நினைவில்லை. அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்து மதத்தின் மிகப் பெரிய விரோதி ஜாதி. இந்துக்களை இந்து மதத்திலிருந்து விரட்டும் மாபெரும் தீயசக்தியும் அதுதான். இந்து மதத்தைக் காப்பதையே தன் பிரதான கடமையாகச் சொல்லிக் கொள்ளும் ஒரு அமைப்பு நூற்றாண்டை நோக்கி நகரும் தருணத்திலேனும் அதன் உண்மையான எதிரியை அங்கீகரிக்க வேண்டுமா, இல்லையா?

நாக்பூரில் கடந்த ஆண்டு நடத்திய மூன்று நாள் மாநாட்டில் ஒரு முக்கியமான முழக்கத்தை அறிவித்தது ஆர்.எஸ்.எஸ். “இந்துக்கள் அனைவருக்கும் ஒரே கிணறு, ஒரே கோயில், ஒரே இடுகாடு!” அப்போதுதான் அம்பேத்கரைச் சுவீகரித்துக் கொள்ளும் இன்றைய திட்டங்களும் திட்டமிடப் பட்டன. கூடவே, தீண்டாமை ஒழிப்பு, ஜாதி வேறுபாடு ஒழிப்பு ஆகியவற்றுக்கு இனி பிரதான கவனம் அளிக்கவிருப்பதாகவும் கூறியது ஆர்.எஸ்.எஸ். இந்து மதத்திலிருந்து வெளியேறு பவர்களைத் தடுக்கவும் வெளியேறியவர்களை மீண்டும் மதத்துக்குள் கொண்டுவரவுமான உத்திகளில் ஒன்றாகவே இந்தச் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன.

ஆக, இந்து மதத்துக்குள் ஜாதி தொடரும் வரை, சமத்துவத்தைக் கொண்டுவராத வரை இந்து மதத்தின் சாபக்கேட்டுக்கு விமோசனமே இல்லை எனும் நிலைப்பாட்டை நோக்கி ஆர்.எஸ்.எஸ்ஸும் நகர்வதாகத் தெரிந்தது. காலம் கடந்த ஞானோதயம் என்றாலும், வெளிப் பார்வைக்கு இவையெல்லாமே கூட பெரிய மாற்றங்களாகத் தோன்றின. ஏனென்றால், ஜாதிய அமைப்பை ஆரம்பக் காலம் தொட்டு போற்றிவந்த அமைப்பு அது.

இன்றைக்கு அம்பேத்கரின் பிராபல்யத்தை வீதிக்கு வீதி கொண்டுசெல்லப்போவதாகக் கூறும் ஆர்.எஸ்.எஸ். ஜாதிய அமைப்பைப் பொருட்படுத்த வில்லை என்ற காரணத்துக்காகவே அன்றைக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வெறுத்து ஒதுக்கியது. இந்திய அரசியல் நிர்ணய சபை நமது அரசியலமைப்புச் சட்டத்தை இறுதி செய்திருந்த வேளையில், ஆர்.எஸ்.எஸ்.ஸின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘ஆர்கனைசர்’ தலையங்கத்தில் இப்படிக் குறிப்பிட்டிருந்தது: “நமது புதிய அரசி யலமைப்புச் சட்டம் நமது தொன்மையான பாரதத்துக்கே உரித்தான, தனித்துவமான அரசியலமைப்புச் சட்டத்தைத் துளியும் பொருட்படுத்தவில்லை. ஸ்பார்டாவின் லிகர்கஸ், பாரசீகத்தின் சாலோன் போன்ற சட்டங்களுக்கெல்லாம் முன்னால் எழுதப் பட்டது மனுநீதி. இன்று வரை மனுவின் சட்டங்கள் உலகின் பல்வேறு தரப்பாலும் உயர்ந்து பார்க்கப்படுகிறது. ஆனால், நம் அரசியல் சட்ட மேதைகளுக்கோ அது எந்த விதத்திலும் பொருட்டில்லாததாகி விட்டது.”

ஆர்.எஸ்.எஸ்.ஸின் சிந்தாந்தப் பின்புலத்தை வடிவமைத்த எம்.எம்.கோல்வால்கர் இதையே வேறு வார்த்தைகளில் சொன்னார், “மேலைநாடு களின் வெவ்வேறு அரசியலமைப்புச் சட்டங் களிலிருந்து இங்கொன்றும் அங்கொன்றுமாக உருவி சிக்கலானதும் கலவையானதுமாக உருவாக்கப்பட்டிருக்கிறது நமது அரசியலமைப்புச் சட்டம். இது நம்முடையது என்று சொல்வதற்கு ஓர் அம்சமாவது அதில் இருக்கிறதா?” ஜாதிய அமைப்பின் வேறுபாடுகளை ஒரு விஞ்ஞானபூர்வ சமூகக் கட்டமைப்பின் வெளிப்பாடுகளாகப் பார்த் தார் கோல்வால்கர். “சமூக நல்லிணக்கத்துக்கான பிணைப்புச் சக்தி ஜாதியமைப்பு.”

ஜாதியத்துக்கு எதிரான அரிதான குரல்கள் ஹெட்கேவார் காலத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ்.ஸில் ஒலித்தாலும், ‘ஜாதிய அமைப்பு வேண்டும்; தீண்டாமை -ஜாதிய மோதல் கூடாது’ என்பதைத் தாண்டி அது நகர்ந்ததாகத் தெரியவில்லை. இந்தப் பின்னணியில் நாக்பூர் மாநாட்டு முடிவுகள் திரும்பிப் பார்க்க வைத்தன.

இன்றைக்கு இந்தியாவில் ஜாதியமைப்பை ஒழிப்பது என்று எந்த அமைப்பாவது சங்கல்பம் எடுத்துக்கொண்டு உழைத்து, பெரிய அளவிலான மாற்றங்களைக் கொண்டுவரவும் முடியும் என்றால், ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கே அதற்கான சாத்தியங்கள் அதிகம்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மோகன் பகவத்துக்கு அடுத்த நிலையில் இருக்கும் பையாஜி ஜோஷி எழுதியிருக்கும் சாதி தொடர்பான - ‘இந்து சர்மாகார் ஜாதி’, ‘இந்து கட்டிக் ஜாதி’, ‘இந்து வால்மிகி ஜாதி’ - மூன்று புத்தகங்கள் குறித்த ராம் புனியாணியின் கட்டுரையை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. “இஸ்லாமிய ஆட்சியாளர்களின் அடாவடிகளின் விளைவாகவே தீண்டாமையும் கீழ்த்தட்டு ஜாதிகள் ஒதுக்கப்படும் கொடுமையும் நிகழ்ந்தது” என்பது இந்தப் புத்தகங்கள் வாயிலாக ஜோஷி முன்வைத்திருக்கும் ‘கண்டுபிடிப்பு’. ராம் புண்ணியானி கேட்கிறார், “இந்தியாவின் வேதங் களின் வயது எத்தனை? இந்தியாவுக்கு முஸ்லிம் ஆட்சியாளர்கள் படையெடுப்புகளின் வயது எத்தனை? கி.பி. முதலாவது நூற்றாண்டில் தீண்டாமை அறிமுகமானது. ஓரிரு நூற்றாண்டு களுக்குப் பிறகு வந்த மனுவால் மனுநீதி வந்தது. அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே - அதாவது 11-வது நூற்றாண்டில்தான் - முஸ்லிம்களின் படையெடுப்பு நடந்தது. ரிக் வேத காலத்திலேயே சமூகம் நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டது. மனுநீதியின் காலத்தில் அது கட்டாயமான சாதி முறையாக உருவெடுத்தது. தீண்டாமை உரு வெடுத்தது.”

ஆர்.எஸ்.எஸ். மீதான நம்முடைய மதிப்பீடு என்ன; அதை நமக்குப் பிடிக்கிறதா, இல்லையா; அது நிலைத்திருக்க வேண்டிய சக்தியா, இல்லையா என்பதையெல்லாம் தாண்டி, அது இன்றைய சமூகத்தில் ஒரு வலிமையான பண்பாட்டு அரசியல் சக்தி. இது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு உண்மை, இந்து மதத்தைக் காப்பதே அதன் தலையாய நோக்கம் என்றால், அதற்கு சாதியை ஒழித்தாக வேண்டும் என்பது. ஆர்.எஸ்.எஸ். இந்த உண்மைக்கு முகங்கொடுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். ஒருபக்கம் தீண்டாமை ஒழிப்பைப் பேசுகிறது; மறுபக்கம் மனுநீதியைக் கையில் தாங்கியிருக்கிறது. ஒருவகையில், இந்து மதத்தின் கொடிய எதிரி அதன் கையில்தான் இருக்கிறது. ஆனால், எதிரிகளை வெளியே தேடிக் கொண்டிருக்கிறது அல்லது உருவாக்கிக் கொண்டிருக்கிறது!                         

Pin It